உழைக்கும் தொண்டர்கள் அதிகமுள்ள கட்சி திமுக: க.பொன்முடி

உழைக்கும் தொண்டர்கள் அதிகமுள்ள கட்சி திமுக என்று விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
உழைக்கும் தொண்டர்கள் அதிகமுள்ள கட்சி திமுக: க.பொன்முடி

உழைக்கும் தொண்டர்கள் அதிகமுள்ள கட்சி திமுக என்று விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
 மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசியதாவது:
 திமுக கூட்டணியில் விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலர் துரை. ரவிக்குமார், கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் பொன்.கௌதம சிகாமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை வெற்றிபெற வைப்பது தொண்டர்களின் கைகளில் உள்ளது. பாஜகவுடனான அதிமுக கூட்டணியை நடுநிலையாளர்களும், பொதுமக்களும் வெறுத்துப் பேசுகின்றனர். உழைக்கும் தொண்டர்கள் அதிகமுள்ள கட்சி திமுக. கள்ளக்குறிச்சி தொகுதியில், எனது மகன் கௌதமசிகாமணி போட்டியிடுவதால், விழுப்புரம் தொகுதியிலிருந்து கட்சியினர் யாரும் அங்கு செல்ல வேண்டாம். அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் அங்கு களப்பணியாற்றினாலே போதும், வெற்றி சாத்தியமாகிவிடும். இந்த தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ராகுல்காந்தி பிரதமராவது உறுதி. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராவதும் உறுதியாகும் என்றார்.
 இதையடுத்து, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி பேசியதாவது: கடந்த 1989-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் கருணாநிதியால், எனது தந்தை க.பொன்முடி அறிமுகப்படுத்தப்பட்டார்.
 அதேபோல, அவரது மகன் மு.க.ஸ்டாலின் மூலம் மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளராக நான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன். கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடைபெற்றுள்ளது.
 ராகுல்காந்தி பிரதமராவார் என்று வருங்கால தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளார். அதை நிறைவேற்றும் பொருட்டு, தேர்தலில் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் விழுப்புரம் (தனி) தொகுதி, விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் பேசியதாவது: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கே கட்சியினர் கூட்டம் எழுச்சியுடன் காணப்படுகிறது.
 இந்த மக்களவைத் தேர்தலில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில், தமிழகத்தின் வெற்றி இருக்கும். மத்தியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பை அனைவரும் வழங்க வேண்டும் என்றார்.
 கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலர்கள் கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, அங்கையற்கண்ணி, மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, துணைச் செயலர் மைதிலி ராஜேந்திரன், எம்எல்ஏ சீத்தாபதி, நிர்வாகிகள் சக்கரை, புஷ்பராஜ், ஜனகராஜ், விசிக நிர்வாகிகள் சிந்தனைச்செல்வன், பாமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து, வேட்பாளர்கள் இருவரும் விழுப்புரம் நகரில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com