ரூ.500 குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற தொழிலாளி!

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை வந்த தொழிலாளி, வைப்புத் தொகைக்கு ரூ.500 குறைந்ததால் மனு அளிக்காமல் திரும்பிச் சென்றார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை வந்த தொழிலாளி, வைப்புத் தொகைக்கு ரூ.500 குறைந்ததால் மனு அளிக்காமல் திரும்பிச் சென்றார்.
 விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் (தனி) போட்டியிட உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் புதுகாலனியை சேர்ந்த தொழிலாளி கே.அரசன் (45) சுயேச்சையாக போட்டியிட வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு வந்த அவர், வேட்பு மனுக்கான முன்மொழிவு உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து கொண்டு, வேட்பு மனுவை அளிக்கச் சென்றார். அப்போது, தனி தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ரூ.12,500 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதால், திகைத்து நின்ற அவர், போதிய தொகை இல்லாததால் மனு தாக்கல் செய்யாமல் வெளியே வந்தார்.
 இதுகுறித்து அரசனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
 விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தேன். ஆவணங்கள் தயாராக உள்ளன. வைப்புத் தொகை ரூ.12,500-க்கு, ரூ.500 குறைவாக உள்ளதால் மனு தாக்கல் செய்யவில்லை.
 நான் ஏற்கெனவே கடந்த முறை விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 811 வாக்குகள் பெற்றேன்.
 சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலும் போட்டியிட்டுள்ளேன். தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு ஆர்வம் இருப்பதால், தொடர்ந்து போட்டியிடுவேன்.
 வைப்புத் தொகை ரூ.12,500-ஐ வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.
 எனக்குத் தெரியாமல் எனது மனைவி ராசம்பாள் ரூ.500-ஐ எடுத்து செலவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. பணத்துடன் வந்து மனு தாக்கல் செய்வேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com