விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.33 லட்சம் பறிமுதல்: ரூ.4 லட்சம் பாத்திரங்களும் பறிமுதல்

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை நடத்திய வாகன தணிக்கையில் ரூ.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மினி லாரியில் கொண்டு

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை நடத்திய வாகன தணிக்கையில் ரூ.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான சில்வர் பாத்திரங்களும் விக்கிரவாண்டியில் பறிமுதல் செய்யப்பட்டன.
 விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள மதுரப்பாக்கத்தில் பறக்கும் படை அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் வியாழக்கிழமை காலை வாகனத் தணிக்கை நடைபெற்றது. அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அய்யூர் அகரத்தைச் சேர்ந்த ஹரிகரனிடம் சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி ரூ. 1,06 லட்சம் இருந்தது தெரிய வந்தது. விழுப்புரத்திலுள்ள வங்கி செலுத்த பணத்தைக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தை சுங்கச்சாவடியில் பறக்கும் படை அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை நடைபெற்றது.
 அந்த வழியாக காரில் வந்த புதுச்சேரியைச் சேர்ந்த சந்திரசேகர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்தப் பணம் திண்டிவனம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 சின்னசேலத்தை அடுத்துள்ள இந்திலி அருகே இரு சக்கர வாகனத்தில் உரிய ஆணவங்களின்றி சதீஷ்குமார்(34) என்பவர் கொண்டு சென்ற ரூ.4 லட்சத்தை பறக்கும் படை அலுவலர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 எலவனாசூர்கோட்டை அருகேயுள்ள எறையூரில், சென்னையைச் சேர்ந்த வியாபாரி அக்ஷிப் மார்டியா (24) காரில் எடுத்துச் சென்ற ரூ.3.26 லட்சத்தை பறக்கும் படை அலுவலர் ரங்கபாஷ்யம் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் பறக்கும் படை அலுவலர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து சேலத்துக்குச் சென்ற அரசுப் பேருந்தில் சோதனையிட்டதில், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் (55) உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1.10 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் சுந்தர்ராஜனிடம் ஒப்படைத்தனர்.
 கடலூர் மாவட்டத்தில் ரூ.22 லட்சம் பறிமுதல்: கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் 2 இடங்களில் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குறிஞ்சிப்பாடி பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படையினர் வட்டாட்சியர் எஸ்.சிவா தலைமையில் வடலூர்- கும்பகோணம் சாலையில் கருங்குழி அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ.19 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. விசாரணையில், தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பணம் என்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்டப்பட்ட பணம் நெய்வேலி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் கொள்ளுகாரன் குட்டை அருகே வட்டாட்சியர் என்.மணிவண்ணன் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, காரில் வந்த வை.தேவராஜ் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு பண்ருட்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்: விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தேர்தல் பிரிவு நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் நாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற மினி லாரியில் சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.4 லட்சம் மதிப்பிலான சில்வர் பாத்திரங்கள் திருநெல்வேலிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
 வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்களாக வழங்குவதற்காக அவை கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 இதுகுறித்து மினி லாரி ஒட்டுநரான திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள கபாலிபாறையைச் சேர்ந்த மாரியப்பனிடம் (36) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com