கடலூர்-விழுப்புரம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு: பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

விழுப்புரத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர் கடற்கரையோர நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக விழுப்புரம்-கடலூர் இடையே சுமார் 47

விழுப்புரத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர் கடற்கரையோர நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக விழுப்புரம்-கடலூர் இடையே சுமார் 47 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 
இதையடுத்து, அந்த ரயில் பாதையில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்களை இயக்க அனுமதி அளிப்பது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தெற்கு மண்டல ரயில்வே, பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் சிறப்பு ரயில் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விழுப்புரத்திலிருந்து புறப்பட்டனர். அவர்கள், சேர்ந்தனூர், திருத்துறையூர், பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரயில் நிலையங்கள் வழியாக கடலூர் 
துறைமுகத்துக்குச் சென்றனர். 
ரயில் பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பங்கள், மின் கம்பிகள், ரயில் நிலைய பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களையும் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் கடலூர் துறைமுகம்-விழுப்புரம் இடையே அதிவேகமாக மின்சார என்ஜின் மூலம் ரயிலை இயக்கியும் சோதனை மேற்கொண்டனர். 
மாலை 6 மணிக்கு கடலூர் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மின்சார ரயில், விழுப்புரத்துக்கு மாலை 6.40-க்கும் வந்தடைந்தது. இந்த ரயில் சுமார் 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின்போது, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com