அதிமுகவின் மக்கள் பணி: ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுகவின் மக்கள் பணி குறித்த ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.


அதிமுகவின் மக்கள் பணி குறித்த ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக நகர செயலர் ஜி.பாஸ்கரன் வரவேற்றார். அதிமுக அமைப்புச் செயலர் இரா.லட்சுமணன் எம்பி, பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தங்கஜோதி, தேமுதிக மாவட்ட செயலர் எல்.வெங்கடேசன், பாஜக மாவட்ட செயலர் சுகுமார், மாவட்டத் தலைவர் விநாயகம், புரட்சி பாரதம் மாவட்டத் தலைவர் வேலு, விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான பாமக வேட்பாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்டோர் பேசினர். 
கூட்டத்தில்  அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:  நாம் பெரிய அளவில் கூட்டணி அமைத்தாலும் கீழ்மட்ட தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் தேர்தலில் பலன் கிடைக்கும். அவர்கள் அப்படி இணைவார்களா என்ற அச்சம் இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் ஊர்வலத்தில் கூடிய தொண்டர்கள் கூட்டத்தால் அந்த அச்சம் விலகியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்ற அச்சம் உள்ளது. அவரது அருமை தற்போதுதான் எங்களுக்குத் தெரிகிறது. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய இந்தத் தேர்தலில் நாம் வென்றாகவேண்டும். எனக்குப் பிறகும் அதிமுக 100 ஆண்டுகள் மக்கள் பணி செய்யும் என்று இறுதியாக சொல்லிச் சென்ற அவரது வாக்கை நாம் நிறைவேற்றவேண்டும்.  நாம் 5 ஆண்டுகள் ஆட்சியை தொடர வேண்டும். நமது கூட்டணி தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இயற்கையான கூட்டணி. 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை.  அவரது தந்தையே அவரை கடைசி வரை அங்கீகரிக்கவில்லை.  நமது கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அமைச்சர். 
பாமக மாவட்ட செயலர் ஆர்.புகழேந்தி நன்றி கூறினார். அதிமுக இளைஞரணிச் செயலர் ஆர்.பசுபதி, ஒன்றியச் செயலர்கள் பேட்டை முருகன், ராமதாஸ்,  தேமுதிக நகரச் செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com