சர்வதேசச் சட்டமும் - உள்நாட்டுச் சட்டமும்

சர்வதேசச் சட்டமும் - உள்நாட்டுச் சட்டமும்

சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும்
(International law and Municipal Law)

    சர்வதசச் சட்டத்தை உள்நாட்டு நீதி அமைப்பு முறையில் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை எழும் போதும், உள்நாட்டுச் சட்டத்தை சர்வதேச நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்களில் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை எழும் போதும் சர்வதேச சட்டத்திற்கும் உள்நாட்டுச் சட்டத்திற்கும் இடையிலான உறவு குறித்த தெளிவான புரிதல் அவசியமாகிறது. எனவே இவ்விரண்டு சட்டத்துக்கும் இடையிலான உறவுக்கு கொள்கை முக்கியத்துவத்தை விட நடைமுறை முக்கியத்துவமே அதிகம் எனலாம்.

சர்வதேசச் சட்டத்திற்கும், உள்நாட்டுச் சட்டத்திற்கும் இடையிலான உறவு குறித்த கொள்கைகள் (Theories)


சர்வதேச சட்டத்திற்கும் உள்நாட்டுச் சட்டத்திற்கும் இடையிலான உறவு குறித்து விளக்கும் பல்வேறு கொள்கைகளில் ஒருமைத்துவம், இருமைத்துவம் ஆகிய இரு கொள்கைகள் முக்கியமானவையாகும்.

1. ஒருமைத்துவம் (Monism) 


    இக்கொள்கையின்படி சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் பொதுவான ஒரே சட்ட அமைப்புமுறையின் (Legal System) அங்கங்களாகும். அதாவது இருவிரு சட்டங்களும் ஒரே சட்ட அமைப்பு முறையின் இருவேறு அம்சங்களாகும். இக்கொள்கை சட்டத்தின் விதிகள், தனிநபர்களைக் கட்டுப்படுத்தினாலும் நாடுகள் அல்லது அரசு அல்லாத பிற தனியுருக்களைக் கட்டுப்படுத்தினாலும் அவ்விதிகளை உள்ளடக்கிய சட்டம் ஒரு ஒற்றை அலகே (Single Unit) என்று இக்கொள்கை கருதுகிறது. அதனாலேயே இக்கொள்கையை ஒருமைத்துவம் என்கிறோம்.


    இக்கொள்கையின்படி, உள்நாட்டுச் சட்டமாக இருந்தாலும் சர்வதேசச் சட்டமாக இருந்தாலும் இரண்டுமே இறுதியில் தனிநபர்களின் நடத்தைகளையே ஒழுங்குபடுத்துகின்றன. இவற்றில் சர்வதேசச் சட்டம், சர்வதேசத் தளத்தில் செயல்படுவதால், தனிநபர்களின் அத்தகைய நடத்தைகள் நாடுகளின் நடத்தையாகக் கருதப்படுகிறது. இது மட்டுமே இரண்டு சட்டங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடாகும். 


ஹெர்ஷ் லாதர்பாக்ட் 

அதனால் தான் பிரிட்டீஷ் வழக்கறிஞரும், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாயிருந்த ஹெர்ஷ் லாதர்பாக்ட் (Hersch Lauter Pacht) “இரண்டு சட்ட அமைப்பு முறைகளுக்கும் தனிநபர்களே அடிப்படை ஆதாரமாக இருக்கின்றனர். நாடுகளுக்காக உருவானதே சர்வதேசச் சட்டமேயொழிய சர்வதேசச் சட்டத்திற்காக நாடுகள் உருவாகவில்லை என்பது உண்மையே, ஆனால் அந்த நாடுகள் மனிதர்களுக்காக உருவானதேயொழியே, நாடுகளுக்காக மனிதர்கள் உருவாகவில்லை என்பதும் உண்மையே’ என்கிறார்.

அதாவது சர்வதேசச் சட்டம் நாடுகளுக்காக உருவானது இந்த நாடுகள் மனிதர்களுக்காக உருவானது. எனவே, சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் இறுதியில் மனிதர்களுக்கானது என்பதால் இவ்விரண்டு சட்டமும் ஒரே சட்ட அமைப்பு முறையைச் சார்ந்தவையே என்பது ஒருமைத்துவக் கொள்கையாளர்களின் மையக்கருத்தாகும்.

வியென்னா பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியரான ஹென்றி கெல்சன் (Henry Kelsen) சர்வதேசச் சட்டமும் ஒரு சட்டமே என்று ஏற்றுக் கொண்டு விட்டால், சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒன்றிணைந்த சட்ட அமைப்பு முறையின் அங்கங்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது என வலியுறுத்துகிறார்.

இக்கொள்கையாளர்கள், சர்வதேசச் சட்டமும், உள்நாட்டுச் சட்டமும் அடிப்படையில் ஒரே சட்ட அமைப்பு முறையைச் சார்ந்தவை என்பதை நிரூபிக்க மற்றொரு வாதத்தையும் முன்வைக்கின்றனர். அதாவது, சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பலவும் உள்நாட்டுச் சட்டக் கோட்பாடுகளை ஒப்புமையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். உதாரணத்திற்கு நாட்டின் இறங்குரிமை (State Succession) பற்றிய சர்வதேசச் சட்ட விதிகள், உள்நாட்டுச் சட்டத்தில் உள்ள இறந்தவரின் வாரிசுகளின் (Legal Heirs) இறங்குரிமை பற்றிய விதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அதுபோல உள்நாட்டுச் சட்டத்தில் உள்ள பல சட்டக் கருத்தாக்கங்கள் சர்வதேசச் சட்டத்தில் இருந்து வருவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, நாடுகளின் ஆள்நில அதிகார வரம்பு (Territorial Jurisdiction), குடிமக்களின் குடியுரிமை (Citizenship), அகதிகளின் உரிமை (refugee rights), போன்ற உள்நாட்டச் சட்டம் சார்ந்த கருத்தாக்கங்களை சர்வதேசச் சட்ட விதிகளின் துணையின்றி புரிந்து கொள்ளவோ செயல்படுத்தவோ முடியாது. எனவே ஒருமைத்துவக் கொள்கையாளர்கள் உள்நாட்டுச் சட்டமும் சர்வதேசச் சட்டமும் ஒரே சட்ட அமைப்பு முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் இரண்டு அங்கங்கள் என்று கருதுகின்றனர். ரைட் (Wright), கெல்சன் (Kelson), ட்யுகெய்ட் (Duguit), லூதர்பாக்ட் (Lauter Pacht), ஸ்டார்க் (Starke) போன்றோர் ஒருமைத்துவக் கொள்கையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

ப்ளாக்ஸ்டோன் கோட்பாடு (Blackstonian Doctrine)

வில்லியம் ப்ளாக்ஸ்டோன்
    
18 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து சட்டவியலாளர் வில்லியம் ப்ளாக்ஸ்டோன் (William Blackstone) சர்வதேசச் சட்டம் இங்கிலாந்தின் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாகும் என்கிறார். அவர், நாடுகளின் சட்டத்திற்கெதிரான தனிநபர்களின் குற்றத்தைப் பொறுத்தவரை, நாடுகளின் சட்டம், இங்கிலாந்து பொதுச்சட்டத்தின் ஒரு பாகமாகும் என்கிறார். ப்ளாக்ஸ்டோன் வெளிப்படையாக ஒருமைத்துவம் பற்றிப் பேசவில்லை என்றாலும் அவரது கோட்பாட்டின் சாரம் ஒருமைத்துவமே ஆகும். ஆனால் ப்ளாக்ஸ்டோன் இங்கிலாந்தின் பொதுச் சட்டம் குறித்து மட்டும் தான் சர்வதேசச் சட்டம் இங்கிலாந்தின் பொதுச்சட்டத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறாரேயொழிய எல்லா நாடுகளுக்கும் பொதுவான கோட்பாடாக அதை முன்மொழியவில்லை. மேலும் சர்வதேச் சட்டத்திற்கு எதிராக குற்றம் புரியும் தனிநபர்கள் மீது இங்கிலாந்து நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க அதிகாரவரம்பு பெற்றுள்ளன என்ற அடிப்படையிலேயே இதை கூறுகிறார். சர்வதேசச் சட்டத்தை மீறும் அரசைப் பொறுத்து அவர் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2. இருமைத்துவம் (Dualism)


இருமைத்துவக் கொள்கைப்படி, உள்நாட்டுச் சட்டமும் சர்வதேசச் சட்டமும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரண்டு வெவ்வேறு சட்ட அமைப்பு முறைகளாகும். ஓப்பன்ஹீய்ம் (Oppenheim), ட்ரைபெல் (Trepel), அன்ஜிலோட்டி (Anzilotti) போன்றோர் இருமைத்துவக் கொள்கையாளர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாவர்.


ஓப்பன்ஹீய்ம், இவ்விரண்டு சட்டங்களும் வெவ்வேறு சட்ட அமைப்பு முறைகள் என்பதற்கு பின்வருவனவற்றை ஆதாரமாகக் கூறுகிறார்.


(i)    உள்நாட்டுச் சட்டமும் சர்வதேசச் சட்டமும் வெவ்வேறு மூலாதாரங்களில் இருந்து உருவாகின்றன.
(ii)    உள்நாட்டுச் சட்டம், நாடுகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட தனிநபர்களுக்கு இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்துகின்றது. ஆனால் சர்வதேசச் சட்டம், நாடுகளுக்கு இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்துகின்றது.
(iii)    சட்ட விதிகளை மீறுபவர்களை தண்டிக்கும் அதிகாரத்திலும் இவ்விரு சட்ட அமைப்பு முறைகளும் வேறுபடுகின்றன. உள்நாட்டுச் சட்டத்திற்கு உட்பட்ட தனிநபர்கள் அச்சட்டத்தை மீறும் போது அந்நாட்டின் இறையாண்மை அரசால் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்ட நாடுகள், அச்சட்டத்தை மீறும் போது அத்தகைய கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை.


ட்ரைபெல்-லும் இதே போன்று உள்நாட்டுச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் நாடுகளே உன்றும் உள்நாட்டுச் சட்டத்தின் மூலாதாரம் இறையாண்மை அரசின் தனி விருப்பம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரம் நாடுகளின் பொது விருப்பம் என்றும் வேறுபடுத்திக் காட்டுகிறார்.

அன்ஜிலோட்டி இவ்விரு சட்ட அமைப்பு முறைகளும் வெவ்வேறானவை என்பதற்கு பின்வருவனவற்றை காரணங்களாகக் காட்டுகிறார்.


(i)    உள்நாட்டுச்சட்டம் என்பது அதன் விதிகளுக்கு அதன் குடிமக்கள் கட்டாயம் கீழ்ப்படிய வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின்படி அமையப் பெற்றது ஆகும். ஆனால் சர்வதேசச் சட்டம் என்பது, உடன்படிக்கைகள் தரப்பினர்களால் கடைபிடிக்கப்பட வேண்டும் (acta sunt sevanda) என்ற முதுமொழியின் படி, சர்வதேச உடன்படிக்கைகள் நாடுகளால் மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின்படி அமையப் பெற்றதாகும்.
(ii)    இவ்விரண்டு சட்ட அமைப்புமுறைகளும் முற்றிலும் தனித்தனியானவை. எனவே அவற்றுக்கு இடையில் முரண்பாடுகள் எழுவதற்கு வாய்ப்பே இல்லை.

ஆனால் அன்ஜிலோட்டின் மேற்சொன்ன இரண்டு காரணங்களும் ஏற்புடையது அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாவது உடன்படிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை மட்டுமே சர்வதேசச் சட்டத்தின் ஒரே அடிப்படை அல்ல என்பது நிகழ்விலைச் சட்டக் கொள்கையாளர்களால் ஏற்கனவே ஏற்கப்பட்டுவிட்டது. இரண்டாவதாக, உள்நாட்டுச் சட்டத்திற்கும் சர்வதேசச் சட்டத்திற்கும் இடையே முரண்பாடுகள் எழ வாய்ப்பே இல்லை என்பதும் நடைமுறை உண்மைக்கு புறம்பானதாகும்.


அதுபோல, இருமைத்துவக் கொள்கையை மறுக்கும் ஸ்டார்க், இன்று சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் நாடுகள் மட்டுமல்ல, தனிநபர்களும் தான் என்று ஆகிவிட்ட நிலையில் இவ்விரண்டு  சட்ட அமைப்புகளும் வெவ்வேறானவை என்று கூற முடியாது என்று வாதிடுகிறார்.

எது சரியான கொள்கை?


பொதுவாக இயற்கைச் சட்டக் கொள்கையாளர்களே ஒருமைத்துவக் கொள்கையின் ஆதரவாளர்களாவர். இருமைத்துவக் கொள்கை, நிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர்களின் ஆதரவைப் பெற்றது. நிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர் அல்லாத சிலரும் இருமைத்துவக் கொள்கையை ஆதரிக்கின்றனர் என்பதும் உண்மையே. இயற்கை சட்டக் கொள்கையாளர்களின் ஆதரவை பெற்றிருப்பதால், ஒருமைத்துவக் கொள்கையே, சர்வதேசச் சட்ட வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து நெடுங்காலம் வரை செல்வாக்கு செலுத்தி வந்தது. அதன் பின்னர் நிகழ்நிலைச் சட்டக்கொள்கையின் செல்வாக்கு மேலோங்கிய போது கூடவே இருமைத்துவக் கொள்கையும் செல்வாக்குப் பெற்றது.


ஆனால் சர்வதேசச் சட்டத்தின் நடைமுறை மற்றும் முற்போக்கு வளர்ச்சி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது ஒருமைத்துவக் கொள்கையை சரியான கொள்கையாகத் தோன்றுகிறது. ஆனால் இக்கொள்கை தான் முழுக்க சரியானது என அறுதியாகக் கூறிவிடவும் முடியாது. ஏனெனில் ஒருமைத்துவக் கொள்கை, இவ்விரு சட்டங்களின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இல்லை. அதில் விடுப்பட்ட அம்சங்களையே இருமைத்துவக் கொள்கை ஆதாரமாக கொண்டுள்ளது.

நாடுகளின் நடைமுறை வழக்கங்களை வைத்துப்பார்த்தால், இவ்விரண்டு கொள்கைக்கும் இடைப்பட்டதொரு கொள்கையே சரியான கொள்கையாகத் தோன்றுகிறது. ஏனெனில், நாடுகளில் நடைமுறை வழக்கத்தில், சில சமயங்களில் சர்வதேசச் சட்டதிற்கு மேலான இடம் அளிக்கப்படுகிறது. வேறு சில சமயங்களில் உள்நாட்டுச் சட்டத்திற்கு மேலான இடம் அளிக்கப்படுகிறது.

சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் பொருத்துவது தொடர்பான கொள்கைகள் ( Theories on Application of International Law in Municipal Laws) 

சர்வதேசச் சட்ட விதிகளை உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் எவ்வாறு அமல்படுத்துவது அல்லது பொருத்துவது என்பதே நடைமுறைக் கேள்வியாகும்.

ஒருமைத்துவக் கொள்கையின்படி சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒரே சட்ட அமைப்பு முறையைச் சேர்ந்தவை என்பதால், சர்வதேசச் சட்டத்தின் விதிகள் அனைத்தும் தானாகவே உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு அங்கமாக ஆகிவிடும். எனவே அத்தகைய நிலையில் சர்வதேசச் சட்ட விதிகளை உள்நாட்டு அதிகார வரம்பில் பொருத்துவது பற்றிய கேள்வி எழவாய்ப்பில்லை. ஆனால் இருமைத்துவக் கொள்கையின் படி இவ்விரு சட்டங்களும் வேறுவேறு சட்ட அமைப்பு முறைகள் என்பதால், சர்வதேசச் சட்டத்தின் விதிகளை சட்ட அமைப்பு முறையில் இருக்கும் உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் தானாகவே பொருத்திவிடும் என்று கூற முடியாது. அத்தகைய சூழ்நிலையில் எவ்வாறு அதைப் பொருத்துவது அல்லது செயல்படுத்துவது என்ற நடைமுறைக் கேள்வி எழுகின்றது. இது குறித்து சட்ட வியலாளர்களிடையே நான்கு விதமான கொள்கைகள் நிலவுகின்றன. அவை:- 

1.    குறிப்பான ஏற்புக் கொள்கை 
2.    மாற்றமடைதல் கொள்கை 
3.    ஒன்றிணைக்கும் கொள்கை 
4.    அளிப்படைவுக் கொள்கை 

1.  குறிப்பான ஏற்புக் கொள்கை (Specific Adoption theory)


இருமைத்துவக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிகழ்நிலைச்  சட்ட கொள்கையாளர்களின் கருத்துப்படி, சர்வதேசச் சட்ட விதிகளை உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் நேரடியாக செயல்படுத்த முடியாது. எனவே, சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் செயல்படுத்த வேண்டுமானால், உள்நாட்டின் இறையாண்மை அரசால் அக்குறிப்பிட்ட சர்வதேசச் சட்டம் ஏற்று கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இதுவே குறிப்பான ஏற்புக் கொள்கையாகும். பொதுவாக சர்வதேச உடன்படிக்கைகளை உள்நாட்டில் செயல்படுத்துவதில் இக்கொள்கை பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேசச் சட்டம் முழுவதுக்கும் இக்கொள்கை பொருந்தாது. சர்வதேச வழக்காற்று விதிகள் எவ்வித குறிப்பான ஏற்பும் இல்லாமலேயே உள்நாட்டு நீதிமன்றங்களில் செயல்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

2. மாற்றமடைதல் கொள்கை (Transformation theory)
    

இக்கொள்கையின்படி, சர்வதேசச் சட்டம், உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பிற்குள் நேரடியாக செயல்படுத்தப்பட முடியாது என்பதுடன் குறிப்பாக ஏற்பு செய்வதாலும் செயல்படுத்தப்பட முடியாது. மாறாக அச்சர்வதேசச் சட்ட விதிகள், சட்டமியற்றல் மூலம் உள்நாட்டுச் சட்டமாக மாற்றப்பட வேண்டும். அப்போது தான் அச்சர்வதேசச் சட்ட விதி உள்நாட்டு நீதிமன்றத்தில் நிறைவேற்றத்தக்க சட்டமாக மாறும்.
    ஆனால் நடைமுறையில் இக்கொள்கை எல்லா சர்வதேசச் சட்ட விதிகளுக்கும் பொருந்துவதாக இல்லை. சர்வதேச உடன்படிக்கைகள் பலவும் உள்நாட்டுச் சட்டமாக மாற்றமடையாமலேயே உள்நாட்டு நீதிமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.


3. ஒன்றிணைக்கும் கொள்கை (Theory of Incorporation)
    

குறிப்பான ஏற்புக் கொள்கையும் மாற்றமடைதல் கொள்கையும், சர்வதேசச் சட்ட விதிகள் உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் நிறைவேற்றபட வேண்டுமானால், ஏதோவொரு வகையில் குறிப்பான ஏற்பு அல்லது உள்நாட்டுச் சட்டமாக மாற்றடைதல் மூலம் - உள்நாட்டுச் சட்டத்துடன் சர்வதேசச் சட்டம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் (incorporate) என்று கூறுகின்றன. எனவே இவ்விரு சட்டங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கூறும் கொள்கை ஒன்றிணைக்கம் கொள்கை எனப்படுகிறது.


4. அளிப்படைவுக் கொள்கை (Delegation theory)
    

இக்கொள்கையின்படி, சர்வதேசச் சட்டத்தின் அரசமைப்பு விதிகள், சர்வதேசச் சட்டத்தை எவ்வாறு தங்களது உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பிற்குள் நிறைவேற்றுவது என்பது குறித்த விதிமுறைகளை ஒவ்வொரு நாடும் வகுத்துக் கொள்ளலாம் என்று அளிப்படைவு செய்துள்ளது. எனவே சர்வதேசச் சட்டம், உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் நிறைவேற்றப்படுவதற்கு குறிப்பான ஏற்போ  உள்நாட்டுச் சட்டமாக மாற்றமடைவதோ தேவையில்லை. ஒவ்வொரு நாட்டின் அரசமைப்பின்படி அந்தந்த நாடுகளில் நிலவும் நடைமுறை  மற்றும் அமைப்பு முறையின்படி சர்வதேசச் சட்ட விதிகள், அந்நாட்டின் உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பிற்குள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இக்கொள்கை கூறும் சர்வதேசச் சட்டத்தின் அரசமைப்பு விதிகள் என்று எதுவும் உண்மையில் சர்வதேசச் சட்டத்தில் கிடையாது என்ற உண்மை இக்கொள்கையின் நம்பகத் தன்மையையே கேள்விக்குள்ளாக்கி விடுகிறது.

பெங்களுரு கோட்பாடுகள் (Bangalore Principles)
    

சர்வதேச மனித உரிமைகள் விதிகளை உள்நாட்டில் பொருத்துவது தொடர்பாக 1988 பிப்ரவரியில் பெங்களூருவில் நடைபெற்ற பொதுச் சட்ட நாடுகளின் சர்வதேச நீதிபதிகள் ஆய்வரங்கில் (Judicial Colloquium on Domestic Application of International Human Rights) பெங்களுரு கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இக்கோட்பாடுகளில் சர்வதேச மனித உரிமைகள் விதிகள் உள்நாட்டுச் சட்டத்தில் செயல்படுத்துவது தொடர்பாக சில கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. அக்கோட்பாடுகள் சர்வதேச சட்ட விதிகளை உள்நாட்டு அதிகார வரம்பிற்குள் நிறைவேற்றுவது குறித்த சர்வதேசப் புரிதல்களை மேலும் தெளிவுப்படுத்துவதாக அமைந்தது. அவற்றுள் சில:- 


(i)    சர்வதேசச் சட்ட விதிகள் சம்பந்தப்பட்டதொரு பொருள் குறித்து உள்நாட்டின் அரசமைப்புச் சட்டம் அல்லது செய் சட்டத்தில் உள்ள வகைமுறைகள் உறுதியற்றதாகவோ முழுமை பெறாததாகவோ (Uncertain and Incomplete) இருந்தால், உள்நாட்டு நீதிமன்றங்கள், அந்த வழக்குகளை தீர்மானிப்பதற்கு அது பற்றிய சர்வதேசச் சட்ட விதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.


(ii)    ஒரு நாட்டின் அரசமைப்பு, செய் சட்டம் அல்லது பொது சட்டத்தில் நிலவும் தெளிவின்மை அல்லது உறுதியற்ற தன்மையை போக்குவதற்காக அந்நாடு சர்வதேச அளவில் ஏற்றுக் கொண்ட சர்வதேசச் கடப்பாடுகளை அவை அந்நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தில் ஒன்றிணைக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் - உள்நாட்டு நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வது அந்நீதிமன்றத்தின் நீதிமுறைக்கு ஏற்புடையதே ஆகும்.


(iii)    இருந்தபோதிலும், உள்நாட்டுச் சட்டம் குழப்பத்திற்கு இடமின்றி தெளிவாக இருந்து, அந்நாடு சர்வதேச அளவில் ஏற்றுக் கொண்ட சர்வதேசச் கடப்பாடுகளுடன் முரண்படுவதாக இருந்தால், பொதுச் சட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் உள்நாட்டுச் சட்டத்தையே நிறைவேற்ற வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டுச் சட்டம் மேலோங்குவதால் அந்நாடு ஏற்றுக் கொண்ட சர்வதேசச் கடப்பாட்டை மீறும் நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்காக, அந்நீதிமன்றம் உடனடியாக அத்தகைய முரண்பாடு குறித்து அந்நாட்டின் உரிய அதிகார அமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

முடிவு
    

சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பிற்குள் நிறைவேற்றுவது குறித்து பலவேறு முரண்பட்ட கொள்கைகள் நிலவுகின்றன. அக்கொள்கைகளுக்கும் நாடுகளின் உண்மையான நடைமுறை வழக்கத்திற்கும் கூட முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே, சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டு அதிகார வரம்பிற்குள் செயல்படுத்துவது குறித்த நாடுகளின் உண்மையான நடைமுறை வழக்கத்தில் இருந்தே நாம் இது குறித்து சரியான முடிவுக்கு வரமுடியம்.

மேலோங்கும் சட்டம் எது? (Which Law will prevail)
    

சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பில் செயல்படுத்துவது குறித்த நாடுகளின் நடைமுறை வழக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால், இவ்விரு சட்டங்களும் முரண்படும் போது எந்தச் சட்டம் மேலோங்கி நிற்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். ஒரு சர்வதேச உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள சர்வதேசச் சட்ட விதிக்கு நேர் விரோதமாக உள்நாட்டு சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அந்த உள்நாட்டு நீதிமன்றம் எந்த சட்டத்தைப் பின்பற்றி தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.    

இருமைத்துவக் கொள்கையாளர்களின் கருத்துப்படி சர்வதேசச் சட்ட விதியை விட உள்நாட்டுச் சட்டமே மேலோங்கியதாக இருக்கும். அத்தகைய முரண்பாடு எழும் போது, உள்நாட்டு நீதிமன்றம் உள்நாட்டுச் சட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஏனெனில் இருமைத்துவக் கொள்கையின்படி உள்நாட்டுச் சட்டம் தனியான சட்ட அமைப்பு முறை ஆகும். அந்த சட்ட அமைப்பு முறைக்குள் அந்நாட்டின் இறையாண்மை அரசின் சட்டமே உயர்ந்த சட்டமாகும்.
    

ஆனால் இந்த விஷயத்தில் ஒருமைத்துவக் கொள்கையாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சில சட்டவியலாளர்கள், சர்வதேசச் சட்டமே மேலோங்கி நிற்கும் என்கின்றனர். கெல்சன் போன்ற வேறு சில சட்டவியலாளர்கள், அக்குறிப்பிட்ட பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து சில சமயம் சர்வதேசச் சட்டமும் சில சமயம் உள்நாட்டுச் சட்டமும் மேலோங்கியதாக இருக்கும் என்கின்றனர்.

தீர்வு 
    

ஸ்டார்க் இதற்குத் தீர்வாக அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில் (இந்தியாவில் உள்ள கூட்டாட்சி உண்மையான கூட்டாட்சி அல்ல என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்) மாநிலச் சட்டத்திற்கும் மத்திய சட்டத்திற்கும் எழும் முரண்பாடு, அரசமைப்புச் சட்டத்pன் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலா அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்க்கப்படுவது போல சர்வதேச அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உள்நாட்டுச் சட்டத்திற்கும் சர்வதேசச் சட்டத்திற்கும் இடையில் தனித்தனியான துறைகள் பிரிக்கப்பட்டு அதனதன் துறைகளில் அதுவே மேலோங்கிய சட்டமாக இருக்கலாம் என்கிறார். ஆனால் உண்மை நடப்பில் சர்வதேச அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்றே இல்லாத பொது ஸ்டார்க்-இன் தீர்ப்பு கற்பனை விருப்பமாக மட்டுமே ஆகிவிடுகிறது.

எட்வர்ட் காலின்ஸ் (Edward Collins) கூறியது போல, எந்தவொரு கொள்கையும் அனைத்தையும் உள்ளடக்கிய தீர்வைத் தரவில்லை என்பதால் இந்தச் சிக்கல் தீர்க்கப்படாமலேயே தொடர்ந்து கொண்டுள்ளது. பெங்களுரு கோட்பாடுகள் மனித உரிமை தொடர்பாக  மட்டுமானதாக இருந்தாலும், சர்வதேசச் சட்டத்தையும்  உள்நாட்டுச் சட்டத்தையும் சம அளவில் நிறுத்தி வைக்க முயற்சி செய்கின்றது. நாடுகளின் நடைமுறை வழக்கத்தில் சர்வதேச சட்டத்தின் மேலோங்கிய நிலை, உள்நாட்டுச் சட்டத்தின் மேலோங்கிய நிலை, இவ்விரண்டு சட்ட அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும் நிலை ஆகிய மூன்றும் கலந்தே காணப்படுகிறது பொதுவாக உள்நாட்டு நீதிமன்றங்கள், கூடுமான வரை சர்வதேசச் சட்டத்துடன் முரண்படாத வகையில் உள்நாட்டுச் சட்டத்திற்கு பொருள்விளக்கம் காண்பதன் மூலம் தீர்வுக்காண முற்படுகின்றன.
 

நாடுகளின் நடைமுறை வழக்கம் (State Practice)

பிரிட்டனின் நடைமுறை வழக்கம் (British Practice)
    

ப்ளாக்ஸ்டோனின் கோட்பாட்டின்படி, சர்வதேசச் சட்டம் முழுமையாக இங்கிலாந்து பொதுச் சட்டத்தின் ஒரு பாகமாகக் கருதப்பட்டாலும் இன்றைய நடைமுறை வழக்கத்தில் அது முழுமையாக பின்பற்றப்படவில்லை. சர்வதேசச் சட்ட விதிகளை இங்கிலாந்து உள்நாட்டுச் சட்டத்தில் செயல்படுத்துதற்காக அது சர்வதேச வழக்காற்று விதிகள் என்றும் சர்வதேச உடன்படிக்கை விதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளப்படுகிறது. இரண்டிற்கும் வெவ்வேறு நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளன.


(i)  சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தை பொருத்து பிரிட்டனின் நடைமுறை வழக்கம் (Practice in accordance with International Law) பிரிட்டனின் இன்றைய நடைமுறை வழக்கத்தின்படி, சர்வதேசச் சட்டத்தின் வழக்காற்று விதிகள், இங்கிலாந்து சட்டத் தனிஒரு பாகமாகக் கருதப்பட்டு இங்கிலாந்து நீதிமன்றங்களால் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் அது பின்வரும் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்:


(a)    அந்த வழக்காற்று விதிகள் பிரிட்டனின் உள்நாட்டுச் சட்டங்களுடன் முரண்படாதனவாக இருக்க வேண்டும்.
(b)    அந்த வழக்காற்று விதியின் அனாவுகை என்ன என்பது பிரிட்டனின் இறுதி அதிகாரம் பெற்ற நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுவிட்டால், அதையே அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும்.


Chung-chi-Cheung-Vs R (1939)- என்ற வழக்கில், இங்கிலாந்தின் பிரிவி கவுன்சில் நீதிமன்றத்தின் நீதிபதி அட்கின் பிரபு, சர்வதேசச் சட்டத்தின் விதிகள், இங்கிலாந்தின் சட்டங்களுடன் முரண்படாத வரையில் இங்கிலாந்தின் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாகவே கருதப்படும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச வழக்காற்று விதிகள் தொடர்பான பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தின் காரணமாக இரண்டு விதிகள் இங்கிலாந்து நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன அவை:-


(a) ஒத்திசைந்த பொருள் விளக்க விதி (Rule of harmonious Cosntruction) நாடாளுமன்றத்தின் சட்டங்களும் சட்ட ஆவணங்களும் சர்வதேசச் சட்டத்துடன் முரண்படாத வகையில் பொருள் கொள்ளப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக ‘நாடாளுமன்றத்தின் எண்ணம், சர்வதேசச் சட்டத்தை மீற வேண்டும் என்பது அல்ல” எனும் முதனிலை அனுமானமும் ஏற்பட்டது.


(b)    சாட்சிய விதி (Rule of Evidence): இங்கிலாந்தின் நீதிமன்றங்களில், அயல்நாட்டுச் சட்டத்தை ஒரு பொருண்மையாக நிரூபிக்க வேண்டி இருப்பது போல் சர்வதேசச் சட்ட விதிகளை நிரூபிக்க வேண்டியதில்லை. நீதிமன்றமே அந்த விதியை சர்வதேசச் சட்ட மூலாதாரங்களில் இருந்து அறிந்து உறுதி செய்து கொள்ளும்.


வரம்புகள் (Limitaions)
    

மேலே கண்ட இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சர்வதேச வழக்காற்று விதிகள் இங்கிலாந்தின் உள்நாட்டுச் சட்டமாக கருதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதற்கு வரம்புகளும் இல்லாமல் இல்லை. இங்கிலாந்து அரசரின் செயல் சர்வதேசச் சட்டத்திற்கு விரோதமாக இருந்தாலும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் அச்செயலைக் கேள்விக்குள்ளாக முடியாது. அதுபோல் இங்கிலாந்து மன்னரின் கேள்விக்குள்ளாக்க முடியாது. அதுபோல இங்கிலாந்து மன்னரின் தனிப்பட்ட அதிகாரவரம்பிற்குட்பட்ட செயலையும் இங்கிலாந்து நீதிமன்றங்களில் கேள்விக்குள்ளாக்க முடியாது.

(ii)    சர்வதேச உடன்படிக்கைகளை பொறுத்து பிரிட்டனின் நடைமுறை வழக்கம் (Practice in accordance with International Treaties) 


இங்கிலாந்தின் அரசு பீடத்தின் (Crown) தலைமையிலான நிர்வாகத் துறைக்கும் சட்டமியற்றும் நாடளுமன்றத்துக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்தும் அரசமைப்புக் கோட்பாடுகளின் படியே சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்த நடைமுறை வழக்கம் இருக்கின்றது. இந்த அதிகார பிரிவினையில் சர்வதேச உடன்படிக்கைகள் நிர்வாகத் துறையின் செயல்களாக அமைகின்றன. நிர்வாகத் துறையின் அத்தகைய உடன்படிக்கைகள் உள்நாட்டில் தானாகவே செயல்படுத்தப்படுவது, நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட உள்நாட்டு சட்ட அமைப்பு முறையில் நிர்வாகத் துறை தலையிடுவது போலாகும். அது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் மாண்பையும் சிறுமைப்படுத்துவதாக அமையும். எனவே பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தில் பெரும்பாலும் அமையும். எனவே பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தில் பெரும்பாலும் சர்வதேச உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தின் குறிப்பான சட்டத்தின் மூலம் உள்நாட்டுச் சட்டமாக ஆக்கப்படாத வரை உள்நாட்டில் நிறைவேற்றத்தக்கவை அல்ல.

பின்வருவன நாடாளுமன்றத்தின் சட்டம் அல்லது ஒப்பந்தம் தேவைப்படக்கூடிய சர்வதேச உடன்படிக்கைகளாகும்.


(a)    தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்கும் உடன்படிக்கைகள்
(b)    இங்கிலாந்தின் பொதுச் சட்டம் அல்லது செய்சட்டத்தை மாற்றக்கூடிய வரைமுறைகளைக் கொண்டுள்ள உடன்படிக்கைகள்
(c)    அரசபீடத்திற்கு (மன்னர் அல்லது ராணிக்கு) கூடுதல் அதிகாரங்களை வழங்குகின்ற உடன்படிக்கைகள்
(d)    அரசாங்கத்திற்கு கூடுதலான நிதிப்பொறுப்புகளை விதிக்கின்ற உடன்படிக்கைகள்
(e)    நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்ற வரம்புடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் உடன்படிக்கைகள்
(f)    பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஆள் நிலபரப்பை பிரிப்பது தொடர்பான உடன்படிக்கைகள்
ஆனால் பின்வரும் சர்வதேச உடன்ப
டிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் சட்டமோ ஒப்புதலோ தேவையில்லை
(g)    இங்கிலாந்து அரச பீடத்திற்கு இருக்கும் போரிடும் உரிமையில் மாற்றம் செய்யும் உடன்படிக்கைகள்
(h)    உள்நாட்டுச் சட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காத, முறைசாராத் தன்மை வாய்ந்த நிர்வாக ரீதியான உடன்படிக்கைகள்.

அமெரிக்காவின் நடைமுறை வழக்கம் 
    

பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தை போலவே அமெரிக்காவின் நடைமுறை வழக்கத்திலும் சர்வதேசச் சட்டம், வழக்காற்றுச் சட்டமாகவும் உடன்படிக்கைச் சட்டமாகவும் பிரித்தே நடைமுறைப் படுத்தப்படுகிறது.

(i)    சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தைப் பொறுத்த நடைமுறை வழக்கம் (Practice in accordance with Customary International Law)


சர்வதேச வழக்காற்று விதிகளை உள்நாட்டு சட்ட அமைப்பு முறையில் நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தையே பின்பற்றுகிறது. எனவே சர்வதேச வழக்காற்று விதிகளும் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாகவே கருதப்பட்டு அமெரிக்க நீதிமன்றங்களால் நிறைவேற்றப்படும். அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டங்கள் அத்தகைய சர்வதேச வழக்காற்று விதிகளுடன் முரண்படாத வகையிலேயே அமெரிக்க நீதிமன்றங்களால் பொருள் கொள்ளப்படும். ஆனால், ஏற்கனவே இருக்கும் சர்வதேச வழக்காற்று விதிகளுக்கு முரணாக பிந்தய சட்டம் இருக்குமானால் பிந்தய சட்டமே மேலோங்கியதாக எடுத்துக் கொள்ளப்படும்.

(ii)    சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்த நடைமுறை வழக்கம் (Practice in accordance with International Treaties) 


சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்த வரை அமெரிக்காவின் நடைமுறை வழக்கம் பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தில் இருந்து மாறுபடுகிறது. பிரிட்டனின் நடைமுறை வழக்கம் நிர்வாகத் துறைக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்பட்டது போல், அமெரிக்க நடைமுறை வழக்கத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக சர்வதேச உடன்படிக்கை குறித்த அரசமைப்பு சட்ட வகைமுறைகளின் படியே தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய  நாடுகளின் அரசமைப்புச் சட்டம் ஷரத்து IV-இன்படி இந்த அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் சர்வதேச உடன்படிக்கைகளும் இந்த நாட்டின் மேலான சட்டங்கள் ஆகும். அதாவத அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம், சர்வதேச உடன்படிக்கைகளையும் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டத்திற்கு சமமானதாகவே வகைப்படுத்துகின்றது.


ஆனால் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டத்திற்கும், சர்வதேச உடன்படிக்கைக்கும் முரண்பாடு ஏற்பட்டால், இரண்டில் பிந்தய நாளில் உருவானது எதுவோ அதுவே மேலோங்கியதாக இருக்கும். அதே சமயத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கும் சர்வதேச உடன்படிக்கைக்கும் முரண்பாடு ஏற்பட்டால், அரசமைப்புச் சட்டமே மேலோங்கியதாக இருக்கும் என்பதே அமெரிக்காவின் நடைமுறை வழக்கமாகும்.

அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம், சர்வதேச உடன்படிக்கைகளும் உள்நாட்டு சட்டத்திற்கு இணையானவையே என்று கூறினாலும் அமெரிக்க நீதிமன்றங்கள் சர்வதேச உடன்படிக்கைகளை இருவகையாகப பிரிக்கின்றன. அவை:-


(a)    தன் செயலாக்க உடன்படிக்கைகள் (Self-executing Treaties)
(b)    தன் செயலாக்கமற்ற உடன்படிக்கைகள் (Non-Self executing Treaties)


தன் செயலாக்க உடன்படிக்கைகள் என்பது, அரசமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்டிருந்தால், தனியான சட்டம் எதுவும் இல்லாமல் தானாகவே உள்நாட்டு நீதிமன்றங்களில் நிறைவேற்றத்தக்கதாக இருக்கும் உட்படிக்கைகளாகும். பிற உடன்படிக்கைகள் தன் செயலூக்ககமற்ற உடன்படிக்கைகள் எனப்படும். அவற்றை உள்நாட்டு சட்டமாக ஏற்றுக் கொள்ளும் தனியான சட்டம் ஒன்று இயற்றப்படும் வரையிலும் அவ்வுடன்படிக்கை விதிகள் அமெரிக்க நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தாது.

இந்தியாவின் நடைமுறை வழக்கம் (Indian Practice)
    

இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை இந்தியாவிலும் இங்கிலாந்தின் நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், இந்தியாவின் நடைமுறை வழக்கம் இந்திய அரசமைப்பு சட்டத்தைப் பின்பற்றியதாகவே அமைந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம், இங்கிலாந்தைப் போல சர்வதேச் சட்டத்தில் வழக்காறுகளையும் உடன்படிக்கைகளையும் வெவ்வேறாக பிரிக்கவில்லை. ஷரத்து-51 C  சர்வதேச சட்டத்தையும் உடன்படிக்கை கடப்பாடுகளையும் அரசு மதித்து நடக்க வேண்டும் என்று கூறுகின்றது. இதில் சர்வதேசச் சட்டம் என்பது வழக்காற்றையே குறிப்பிடுகிறது என்கிறார் அலெக்ஸான்ட்ரோவிச் (Alexandro witch). எனவே இந்திய அரசமைப்புச் சட்டம், சர்வதேச வழக்காறுகளையும்  சர்வதேச உடன்படிக்கைகளையும் சமமாகவே பாவிக்கின்றது. ஆனால் உண்மை நடப்பில் இவ்விரண்டிலும் வெவ்வேறு நடைமுறை வழக்கங்களே பின்பற்றப்படுகின்றன.

(i) சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தை பொறுத்த நடைமுறை வழக்கம் 
    

சர்வதேச வழக்காறுகளைப் பொறுத்தவரை, பிரிட்டனின் நடைமுறை வழக்கமே இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது. அதாவது சர்வதேச வழக்காற்று விதிகள் இந்தியாவின் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாகவே கருதப்படுகிறது. Peoples’s Union for Civil Liberties Vs Union of India AIR 1997 SC 568 - என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், உள்நாட்டுச் சட்டத்துடன் முரண்படாத சர்வதேச வழக்காற்று விதிகள், இந்தியாவின் உள்நாட்டுச் சட்டத்துடன் ஒன்றிணைக்கப் பட்டுவிட்டதாகவே கருதப்பட வேண்டும் என்பது  அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் சட்ட நிலையாகும் என்று கூறியுள்ளது.


    A.P.Polution Control Boar-Vs-prof M.V.Nayusu,1999 SCC 712-என்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் சர்வதேசச் சட்டத்pன் வழக்காற்று விதியாகிய முன்னெச்சரிக்கைக் கோட்பாட்டினை (Precautionary Principle) அங்கீகரித்து உள்நாட்டுச் சட்டத்தில் பொருத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

(ii) சர்வதேச உடன்படிக்கைகளை பொறுத்த நடைமுறை வழக்கம்
    

சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் நடைமுறை வழக்கங்களைத் தீர்மானிக்கும் கடமையை இந்திய உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்திய உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில் இந்திய அரசமைப்பின்படி சர்வதேச உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதும், ஏற்புறுதி செய்வதும் நிர்வாகத் துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். ஆனால் நிர்வாகத் துறையால் ஏற்புறுதி செய்யப்பட்ட சர்வதேச உடன்படிக்கையை உள்நாட்டுச் சட்ட அமைப்பு முறைக்குள் நிறைவேற்றுவதற்கு உரிய சட்டமியற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உரியதாகும் என்று ஷரத்து-523 கூறுகின்றது. ஆனால் சர்வதேச உடன்படிக்கைகளை இந்தியாவின் உள்நாட்டு நீதிமன்றங்களில் நிறைவேற்றுவது தொடர்பான ஒழுங்கு முறை விதிகளை வகுக்கும் சட்டம் எதனையும் ஷரத்து 253-இன்படி இந்திய நாடாளுமன்றம் இது நாள் வரை இயற்றவில்லை.
    

Birma-Vs-Sate of Rajasthan AIR 1951 Raj 127-என்ற வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றமும், State of madras-Vs-C.G.Menon,AIR 1954 SC 517-என்ற வழக்கில் உச்ச நீதிமன்றமும், சர்வதேசச் சட்டத்தின் ஒரு பாகமாகிய சர்வதேச உடன்படிக்கைகள், உரிய சட்டம் இயற்றப்படாத நிலையில் உள்நாட்டுச்  சட்டத்தின் ஒரு பாகமாக ஆகாது என்று தீர்ப்பளித்துள்ளன. ஆனால் இந்தச் சட்ட நிலை படிப்படியாக பல்வேறு தீர்ப்புகளில் மாறிக் கொண்டே வந்து இறுதியாக, Vishaka-Vs-Sate of Rajasthan AIR 1997 SC 3011-என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், உள்நாட்டு சட்டத்தில் வெற்றிடமாக உள்ள ஒரு விஷயம் குறித்து சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருக்குமானால், அது குறித்த உள்நாட்டுச் சட்டம் தனியாக இயற்றப்படாவிட்டலும் அதனை உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாக எடுத்தக் கொள்ளலாம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதனால் தான் அலெக்ஸான்ட்ரோவிச் “எல்லா உடன்படிக்கைகளும்  உள்நாட்டுச் சட்டம் இயற்றப்பட்டால் தான் இந்தியாவின் உள்நாட்டுச் சட்டத்தில் செயல்படுத்தப்பட முடியும் என்று சொல்ல முடியாது. தனிநபர் உரிமைகளைப் பாதிக்கும் உடன்படிக்கைகளக்கு மட்டுமே சட்டம் தேவை: மற்ற உடன்படிக்கைகளுக்கு சட்ம் தேவையில்லை என்றே இந்திய நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளன” என்று கூறுகிறார்.
    

எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம் ஷரத்துக்கள்-51C, 73, 253 உடன் இணைந்த 7வது அட்டவணை 10 முதல் 21 வரையிலுள்ள இனங்கள் ஷரத்து-372 மற்றும் நீதிமன்றப் பொருள் விளக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்து இந்தியாவின் நடைமுறை வழக்கங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

(1) சர்வதேச உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தின் சட்டம் இல்லாமல் இந்திய நீதிமன்றங்களில் செயல்படுத்த முடியாது. State of West Begal-VsKesoram Industries Ltd AIR, AIR 2005 SC 1644-என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு, இந்தியா கையொப்பமிட்டுள்ள சர்வதேச உடன்படிக்கை ஒன்று இந்திய சட்டத்தின் ஒரு பகுதியாக ஆகாது, அது பற்றிய சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்படவில்லை எனில் அதனை இந்திய நீதிமன்றத்தில் நிறைவேற்றமுடியாது என்று தீர்பளித்துள்ளது.


(2) தனிநபர்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கின்ற அல்லது இந்தியாவின் ஆள்நில எல்லையில் மாற்றம் செய்கின்ற சர்வதேச உடன்படிக்கைகளை இந்தியாவில் நிறைவேற்றுவதற்கான நாடாளுமன்றச் சட்டம் தனியாக இயற்றப்படாத வரை அத்தகைய உடன்படிக்கையின் விதிகளை இந்தியாவில் நிறைவேற்ற முடியாது. Magan Bhai patel-Vs-Union of India, AIR 1969 SC 783-என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், நிர்வாகத்துறையினர், சர்வதேச ஒப்பந்தங்களில் ஈடுபடுவதன் மூலம் சர்வதேசக் கடப்பாடுகளை ஏற்கலாம். அத்தகைய கடப்பாடுகள், குடிமக்கள் அல்லது பிறரது உரிமைகளை கட்டுப்படுத்துதாகவோ உள்நாட்டுச் சட்டத்தில் மாற்றம் செய்வதாகவோ இல்லை என்றால் அதனை நிறைவேற்ற தனியான சட்டம் இயற்றப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக அத்தகைய கடப்பாடுகள் அவ்வாறு குடிமக்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவோ உள்நாட்டச் சட்டத்தில் மாற்றம் செய்வதாகவோ இருந்தால் நாடாளுமன்றச் சட்டம் அவசியமாகும் என்று தீர்ப்பளித்துள்ளது.


(3) ஒரு சர்வதேச உடன்படிக்கையின் விதிகள், இந்தியாவின் உள்நாட்டு சட்டத்தில் மாற்றம் செய்வதாக இருந்தால், அதனை நிறைவேற்ற நாடாளுமன்ற சட்டம் அவசியமாகும்.


(4) சர்வதேச உடன்படிக்கைகளின் வகைமுறைகள் இந்தியச் சட்டத்துடன் முரண்படாதனவாக இருந்தால், அவற்றை இந்திய நீதிமன்றங்கள் சட்டப் பொருள் விளக்கத்தின் கருவியாகப் பயன்படுத்தி உள்நாட்டில் நீதி வழங்கலாம்.Vishaka-Vs-State of Rajasthan, AIR 1997 SC 3011-என்ற வழக்கில் அரசமைப்புச் சட்டத்துடன் முரண்படாமல் அதன் உயர்வுடன் ஒத்துப் போவதாக இருக்கும் சர்வதேச உடன்படிக்கையினை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள நோக்கத்தை  முன்னேற்றுவதற்கும் அதன் வகை முறைகளின் உள்ளடக்கம் மற்றும் அர்த்தத்தை விரிவாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


(5) ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த உள்நாட்டுச் சட்டம் எதுவும் இல்லாத போது, அது குறித்த சர்வதேச உடன்படிக்கை விதிகளை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளலாம்.  Vishaka-Vs-State of Rajasthan, AIR 1997 SC 3011-என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், வேலைபார்க்கும் பெண்களுக்கு பணியிடத்தில் கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து இந்தியாவில் எந்த சட்டமும் இல்லாத நிலையில், அது குறித்த சர்வதேச மாநாட்டு விதிகளை இந்திய சட்ட அமைப்பு முறையின் ஒரு பாகமாக கருதலாம் என்று தீர்ப்பளித்தது. 

(6) ஒரு பொருள் குறித்து இந்திய சட்டமும் சர்வதேச உடன்படிக்கையும் இருக்கும்போது, அவ்விரண்டுக்கும் இடையில் ஒருங்கிணைவான பொருள் விளக்கத்தை (harmonious construction) மேற்கொண்டு, அவற்றுக்கு உள்நாட்டில் செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு பொருள் விளக்கம் காணும்போது உள்நாட்டுச் சட்டத்திற்கும் சர்வதேச உடன்படிக்கைக்கும் முரண்பாடு ஏற்பட்டால், உள்நாட்டுச் சட்டமே மேலோங்கியதாக இருக்கும் (Kubis Darius-Vs-Union of India, AIR 1990 SC 605, Mackionnon Mackenzie-Vs-Aundrey D’ Cousta, AIR 1987 SC 1281.

(7) நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் ஒன்று இருக்கும் போது நீதிமன்றம் அந்தச் சட்டத்தை மட்டுமே பார்க்க வேண்டும். அச்சட்டத்தின் வகைமுறைகள் எவ்வித குழப்பத்துக்கும் இடமின்றி இருந்தால், நீதிமன்றம் அச்சட்டத்தின் வகைமுறைகளையே செயல்படுத்த வேண்டும். மாறாக அச்சட்டத்தின் வகைமுறைகள் குழப்பமானதாகவும் ஒன்றுக்கு  மேற்பட்ட பொருள் தரக்கூடியதாகவும் இருந்தால், சர்வதேச உடன்படிக்கை கடப்பாடுகளை நிறைவேற்றுவதுடன் ஒத்துப் போகும் பொருளையே நீதிமன்றம் எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது அத்தகைய நிலையில் சர்வதேச உடன்படிக்கை விதிகளையே செயல்படுத்த வேண்டும். (Tractor Export Case, AIR 1971 SC1)

பிறநாடுகளின் நடைமுறை வழக்கங்கள்
    

சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டில் நிறைவேற்றுவது தொடர்பான பிறநாடுகளின் நடைமுறை வழக்கங்கள் ஒரே சீரானவையாக இல்லை. இருப்பினும் பிறநாடுகளின் நடைமுறை வழக்கங்களை பொதுவாக பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.


(i) பெரும்பாலான நாடுகள், உள்நாட்டுச் சட்டத்துடன் முரண்படாத சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தை உள்நாட்டுச் சட்டத்துடன் ஒரு பாகமாகவே கருதுகின்றன.


(ii)    ஒரு சில நாடுகள் உள்நாட்டுச் சட்டத்துடன் முரண்பட்டாலும் வழக்காற்றுச் சட்டமும்  உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகம் என்றே கருதுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் சர்வதேசச் சட்டமே மேலோங்கிய சட்டமாக இருக்கிறது.


(iii)  ஆனால் சர்வதேச உடன்படிக்கை விதிகள் தொடர்பான நடைமுறை வழக்கம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடக் கூடியதாகவே இருக்கிறது.


(iஎ) பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்நாட்டு அரசின் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு கூடுமானவரை செயல்வடிவம் கொடுக்கும் வகையிலேயே உள்நாட்டுச் சட்டத்திற்கு பொருள் விளக்கம் காண வேண்டும் என்ற நடைமுறை நீதிமன்றங்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com