அரசியல் பயில்வோம்!

சர்வதேச சட்டத்தின் மூலாதாரங்கள் - (பாகம் 2)

சி.பி.சரவணன்

சர்வதேச சட்டத்தின் மூலாதாரங்கள்-2
(Sources of international Law-1)

பிற மூலாதாரங்கள் (Other Sources)

சர்வதேசச் சட்டம் மறைமுகமாக பிற மூலாதாரங்கள் வாயிலாகவும் உருவாக்கப்படலாம். பின்வருவன அத்தகைய மூலாதாரங்களில் முதன்மையானவையாகும்.
(a)    சர்வதேச நிறுவனங்களின் முடிவுகள் அல்லது தீர்மானங்கள்
(b)    உலக மாநாட்டு தீர்மானங்கள் 

(a) சர்வதேச நிறுவனங்களின் முடிவுகள் அல்லது தீர்மானங்கள் (Decisions of Resolutions of International Organisation)
    

சர்வதேச நிறுவனங்களில் முதன்மையானது ஐக்கிய நாடுகள் சபை (United Nations Organaisations) ஆகும். ஐ.நா.வின் பொது சபை (General Assembly) யில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் கட்டுப்படுத்தும் வலிமையற்றவை. அவை நாடுகளுக்கு பரிந்துரை செய்யும் தன்மை கொண்டவை மட்டுமே ஆகும். இருப்பினும் ஐ.நா.சபையின் தீர்மானங்களும் பிரகடனங்களும் உலக அளவில் சர்வதேச வழக்காற்று விதிகளை உருவாக்கும் மூலாதாரமாக விளங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த பொதுவான சட்ட விதிகளைப் பரிந்துரைக்கும் ஐ.நா.வின் தீர்மானங்கள், எதிர்ப்பு வாக்குகள் இன்றி அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒரு மனதாக நிறைவேற்றப்படுமாயின் அத்தீர்மானங்கள் வழக்காற்று விதிகளை நிரூபிக்கும் சாட்சியமாகக் கொள்ளப்படும்.

சர்வதேச வழக்காற்று  விதியை மெய்ப்பிக்கும் வலுவான சாட்சியமாகக் கருதப்படும் ஐ.நா.தீர்மானங்கள் சில:-
(i)    மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம் (1948) (Universal Declaration of Human Right)
(ii)    நாடுகளின் உள் விவகாரங்களில் தலைமையிடாமை பற்றிய பிரகடனம் (1965) (Declaration of non-intervention)
(iii)    நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு பற்றிய பிரகடனம் (1970) (Declaration on Friendly Relation and Co-operation)

(b) உலக மாநாட்டு தீர்மானங்கள்

சர்வதேச பிரச்னைகள் பலவும், இன்று உலக நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய உலக மாநாட்டுத் தீர்மானங்கள் மூலமே தீர்க்கப்படுகின்றன. அவை நாடுகளால் பின்பற்றப்பட்டு சர்வதேச வழக்காற்று விதிகளாகவும் நிலை பெறுகின்றன. ஆனால் சர்வதேச நீதிமன்றச் சட்ட விதிகள் ஷரத்து-38, இத்தகைய உலக மாநாட்டுத் தீர்மானங்கள் துணை மூலாதாராங்களாக கணக்கில் கொள்ளத் தவறிவிட்டது.

சர்வதேச உறவுகள், சர்வதேச வணிகம், சர்வதேச இயற்கை வளப் பகிர்வு, புவி வெப்பமயமாகுதல் போன்ற பல்வேறு சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து உலக மாநாடுகள் அல்லது உச்சி மாநாடுகள் பல கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மாநாட்டு வரைவுத் தீர்மானம் (Draft Resolution) வரையப்பட்டு தொடர்ச்சியாக பல ஆண்டுகள் அதன் மீது விவாதம் செய்யப்படுகின்றன. முடிவில் தேவையான திருத்தங்களுடன் அம்மாநாட்டின் தீர்மானம் நிறைவேற்றப்படும் உலக மாநாட்டுத் தீர்மானங்கள் சர்வதேச சமுதாயத்தின்  பரிந்துணர்வைப் பிரதிபலிப்பதால் நாடுகள் அவற்றைப் பின்பற்றத் துவங்குகின்றன. பிரச்சனைகள் எழும் போது அம்மாநாட்டுத் தீர்மானங்களின்படி அவை தீர்க்கப்படுகின்றன. இவ்வாறு நடைமுறையில் உலக மாநாட்டுத் தீர்மானங்கள் சர்வதேச வழக்காற்று வசதியாக நாடுகளால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனவே அவ்வழக்காற்று விதியை நிரூபிக்கும் வலுவான சாட்சியமாகவும் உலக மாநாட்டுத் தீர்மானங்கள் ஆகின்றன.

அத்தகைய உலகமாநாட்டுத் தீர்மானங்கள் சில:
(i) தூதாண்மை உறவுகள் பற்றிய வியன்னா மாநாடு (Vienna Convention on Diplomatic Relation, 1959) 
(ii) உடன்படிக்கைகள் சட்டம் பற்றிய வியன்னா மாநாடு (Vienna Convention on Law of Treaties, 1969)

மூலாதாரங்களின் படி நிலைகள் (Hierarchies of Sources)
    

கொள்கை அளவில், சர்வதேச உடன்படிக்கைகள், வழக்காறுகள் மற்றும் நாடுகளின் சட்டம் பற்றிய பொதுக் கோட்பாடுகள் ஆகிய மூலாதாரங்களுள் எவ்வித படி நிலைகளும் இல்லை. மூன்றும் சம அளவு முக்கியத்துவம் உடையவைகளே. இருப்பினும் நடைமுறையில் எந்தவொரு சர்வதேசப் பிரச்சனைக்கும் முதலில் அது சம்பந்தமாக உடன்படிக்கை எதுவும் இருக்கிறதா என்றே பார்க்கப்படும். அவ்விதம் உடன்படிக்கை எதுவும் இல்லை என்றால் வழக்காறுகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கப்படும். வழக்காறுகளும் இல்லை என்றால் உள்நாட்டு நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் பொதுக்கோட்பாடுகள் இருக்கிறதா என்று பார்க்கப்படும். இவை தவிர மூலாதாரங்களுக்கு இடையிலான உறவுநிலைகளை பின்வரும் விதிகளும் விளக்குகின்றன: அவை:-

(i)பொதுக் கோட்பாடுகள் பொதுவாக, சர்வதேச உடன்படிக்கைகளுக்கும், வழக்காற்று  விதிகளுக்கும் உதவி புரியக் கூடியவையே.
(ii)சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களில் எது மிக சமீபத்தில் தோன்றியதோ அதுவே பழைய மூலாதாரங்களை விட கூடுதல் அதிகாரமுடையவை.
(iii)ஒரு பொருள் குறித்த குறிப்பான விதி, அப்பொருள் குறித்த பொதுவான விதியை விட மேலானதாகும்.
(iv)கட்டாயப்படுத்தும் சட்டம் (Jus cogens) மற்றும் அனைவருக்கும் எதிரான கடப்பாடு (Obligatio erga omnes) ஆகிய இரு நியதிகளுக்கு (norms) முரணான சர்வதேச ஒப்பந்தம், வழக்காறு, பொதுச்சட்டம் எதுவும் செல்லாதனவாகும். அதாவது இம்மூன்று மூலாதாரங்களுக்கும் மேலான உயர்ந்தபடி நிலையில் இவ்விரு நியதிகளும் வைக்கப்பட்டுள்ளன.

கட்டாயப்படுத்தும் சட்டமும், அனைவருக்கும் எதிரான கடப்பாடும் (Jus cogens and Obligatio erga omnes)
    

Jus cogens எனும் லத்தீன் சொற்றொடருக்கு ‘கட்டாயப்படுத்தும் சட்டம்” (compelling Law) என்று பொருள் ‘Obligatio erga omnes” எனும் லத்தீன் சொற்றொடருக்கு ‘அனைவருக்கும் எதிரான கடப்பாடு” (Obligation towards all) என்று பொருள். கட்டாயப்படுத்தும் சட்டம் என்பது சில சர்வதேசக் குற்றங்கள் அடையும் சர்வதேசச் சட்டத்திற்கு நிலை (Legal status) ஆகும். அனைவருக்கும் எதிரான கடப்பாடு என்பது கட்டாயப்படுத்தும் சட்டம் எனும் தகுதியை அடைந்த சர்வதேசக் குற்றங்களைக் செய்தவருக்கு இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் எதிரான பொறுப்பு நிலையாகும். அதாவது சர்வதேசக் குற்றம் புரிந்தவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் கடப்பாடு அனைத்து நாடுகளுக்கும் உரியதாகும். கட்டாயப்படுத்தும் சட்டமும் அனைவருக்கும் எதிரான கடப்பாடும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை, ஆனால் இரண்டும் வேறு வேறானவையாகும். 

கட்டாயப்படுத்தும் சட்டம் ( Jus Cogens) 
    

கட்டாயப்படுத்தும் சட்டம் என்பது எந்தவொரு சர்வதேச உடன்படிக்கை வழக்காறு, பொதுக் கோட்பாடுகளாலும் மீறப்பட முடியாத சர்வதேசக் குற்றங்ள் பற்றிய சட்டமாகும். இவை மீற முடியாத அடிப்படை நியதி (Pre-empty norms) எனப்படும். கட்டாயப்படுத்தும் சட்டத் தகுதியை அடைந்து விட்ட சர்வதேசக் குற்றங்கள் என்பவை எழுதப்பட்ட சர்வதேசக் குற்றவியல்  சட்டத்தில் (International Criminal Law) அடங்காதவையாகும். எவ்வித எழுத்து மூலமான ஆவணமும் இல்லாமலேயே ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் நன்மை கருதி எவராலும்  மீற முடியாத சட்டத் தகுதியை நடைமுறையில் அடைந்திருக்கும் சர்வதேசக் குற்றங்கள் குறித்த சட்டமே கட்டாயப்படுத்தும் சட்டமாகும்.

பல்வேறு சர்வதேசச் சட்டவியல் படைப்புகள், கட்டாயப்படுத்தும் சட்டத் தகுதியை அடைந்திருக்கும் குற்றங்களாக பின்வரும் சர்வதேசச் குற்றங்களை வகைப்படுத்துகின்றன. அவை (i) வலுச்சண்டை (Aggression) (ii) இனப்படுகொலை (Genocide) (iii) மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Crime against humanity) (iv)போர்க் குற்றங்கள் (War crimes) (v) கடற்கொள்ளை (Piracy) (vi) அடிமை முறை (Slavery) அடிமை தொடர்பான நடைமுறைகளும் (vii) சித்ரவதை (Torture) போன்றவையாகும். இப்பட்டியல் முழுமையானதுமல்ல, முடிவானதுமல்ல. சர்வதேசச் சமுதாயத்தின் நாகரீகம் வளர வளர உலக சமுதாயத்திற்கு எதிரான இன்னும் பல குற்றங்கள் கட்டாயப்படுத்தும் சட்டத் தகுதியை அடையலாம். 

மேலே கண்ட சர்வதேசக் குற்றங்கள், மீறமுடியாத கட்டாயப்படுத்தும் சட்டத் தகுதியை அடைந்தவை என்பதற்கான சட்ட அடிப்படைகள் பின்வருமாறு:-
(i)இக்குற்றங்கள் சர்வதேச பொது வழக்காற்றுச் சட்டத்தின் பகுதிகள் என்பதை அங்கீகரிக்கும் சர்வதேச அறிவிப்புகள் அல்லது சர்வதேச நீதிமுறைத் தீர்ப்பு முடிவுகள் அல்லது சர்வதேச மனக்கருத்து (International Opinio Juris).
(ii)இக்குற்றங்கள் சர்வதேசச் சட்டத்தில் உச்ச நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிக்கும் சர்வதேச உடன்படிக்கைகளின் முகவுரை அல்லது வகைமுறைகள்:
(iii)இக்குற்றங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்புறுதி (Ratified) செய்திருக்கின்றன எனும் உண்மை:
(iv)இக்குற்றங்களை இழைத்த நபர் அல்லது நாட்டின் மீது தனியான விசாரணைகளும் குற்ற வழக்கு நடவடிக்கைகளும் தொடரப்பட்டிருக்கின்றன எனும் உண்மை.

உடன்படிக்கைகள் பற்றிய வியன்னா மாநாடு (1969), ஷரத்து 53, ஒரு உடன்படிக்கை முடிவாகும் சமயத்தில் நடப்பிலிருக்கும் பொது சர்வதேசச் சட்டத்தின் மீற முடியாத கட்டாயப்படுத்தும் சட்டம் ஒன்றுக்கு விரோதமாக செய்யப்படும் எந்தவொரு உடன்படிக்கையும் செல்லாத உடன்படிக்கையாகும் என்று கூறுகிறது.

Nicaragua-Vs-Unites States: Military ans para Military activities in and against Nicaragua, (1968) IC.No.14] என்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம், மீற முடியாத கட்டாயப்படுத்தும் சட்டவிதி, சர்வதேசச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடாகும் என்று கூறியது.

அனைவருக்கும் எதிரான கடப்பாடு (ObligatioErga Omnes)
    

அனைவருக்கும் எதிரான கடப்பாடு என்பது, மீறப்பட முடியாத கட்டாயப்படுத்தும் சட்டமாக கருதப்படும்  சர்வதேசக் குற்றங்களைச் செய்தவர். உலகின் அனைத்து நாடுகளுக்கும் எதிராகச் கடமைப்பட்டிருக்கும்  கடப்பாடு அல்லது பொறுப்பு நிலையாகும். அதாவது, கட்டாயப்படுத்தும் சட்டமாகிய சர்வதேசக் குற்றங்களைச் செய்த நபர் அல்லது நாட்டின் சர்வதேசக் குற்றப் பொறுப்புநிலை (International Criminal Liability) யாகும். பொதுவாக குற்றவியல் சட்டத்தில் குற்றம் என்பது தனிநபருக்கு எதிராக இழைக்கப்பட்டதாகவே இருப்பினும் அது சமுதாய அமைக்கு எதிரானது என்பதால் சமுதாயத்திற்கு எதிராக  இழைக்கப்பட்டதாகவே கருதப்படும்.

எனவே அக்குற்றமிழைத்தவருக்கு எதிராக  பாதிக்கப்பட்டவர் சார்பாக அரசே குற்ற வழக்கைத் தொடரும். அதுபோல கட்டாயப்படுத்தும் சட்டத் தகுதியை உடைய சர்வதேசக் குற்றம் என்பது ஒட்டு மொத்த மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றமாக சர்வதேசச் சட்டத்தில் கருதப்படுகிறது. அச்சர்வதேசக் குற்றம் ஏதோ ஒரு நாட்டில், ஒரு மூலையில் சிறு பகுதியினருக்கு எதிராக இழைக்கப்பட்டாலும், அது சர்வதேச சமுதாயத்திற்கு எதிராக அல்லது மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றமாகவே கருதப்படும். எனவே சர்வதேசக் குற்றம் செய்த நபர் அல்லது நாட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அல்லது நாட்டின் சார்பாக, உலக நாடுகளில் எந்தவொரு நாடும் தனியாகவோ அல்லது பிற நாடுகளுடன் கூட்டு சேர்ந்தோ நடவடிக்கை எடுக்கலாம். அதாவது சர்வதேசக் குற்றம் புரிந்தவர், அதற்கான பொறுப்பை அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் ஏற்க வேண்டும் என்ற கடப்பாடே ‘அனைவருக்கும் எதிரான கடப்பாடு” ஆகும்.

இக்கடப்பாட்டின் படியே 1990-இல் மனித குலத்திற்கு எதிராக இரசாயண ஆயுதங்கள் வைத்திருப்பதாக இராக் மீது குற்றம் சாட்டி அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைகள் போர் தொடுத்தது. ஆனால் போரின் முடிவில் இரசாயண ஆயுதங்கள் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுபோல 2012 இலங்கை உள்நாட்டுப் போரின் போது மக்கள் கொல்லப்பட்டதும் சரணடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்றதும் தொடர்பான போர்க் குற்றங்களுக்காக இலங்கை அரசின் மீது ஐ.நா.சபையில் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியதும் சர்வதேச குற்றத்திற்கான அனைவருக்கும் எதிரான கடப்பாட்டின் பொருட்டே ஆகும்.

"அனைவருக்கும் எதிரான கடப்பாடு" என்பது சர்வதேசக் குற்றம் புரிந்தவருக்கு அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் இருக்கும் கடப்பாட்டை மட்டுமே குறிக்கிறது. அவ்வாறு சர்வதேசக் குற்றம் புரிந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மற்ற நாடுகளுக்க இருக்கும் வாய்ப்பு ஒரு உரிமையே அன்றி கடமை அல்ல. அதாவது மற்ற நாடுகள் விரும்பினால் அவ்வுரிமையை செயல்படுத்தி குற்றமிழைத்த நபர் அல்லது நாட்டின்மீது நடவடிக்கை எடுக்கலாம். கட்டாயம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்  என்ற கடமை மற்ற நாடுகளுக்கு இல்லை என்று சட்ட வல்லுனர்களில் ஒரு சாரர் கருதுகின்றனர். ஆனால் மற்றொரு சாரர். கடப்பாடு என்பதன் பொருள் கடமையே அன்றி, விருப்பத்தின் பாற்பட்ட உரிமை அல்ல அனைவருக்கும் எதிரான கடப்பாடு என்பதன் மூலம் சர்வதேசக் குற்றமிழைத்தவருக்கு மட்டுமல்லாது, அக்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய உலக நாடுகளுக்கு எதிராகவும் கடப்பாடே சுமத்தப்படுகிறது என்கின்றனர்.

கட்டாயப்படுத்தும் சட்டத் தகுதி பெற்ற சர்வதேசக் குற்றங்களான இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் போன்றவற்றை விசாரிக்கும் உள்ளார்ந்த அதிகாரம் (Inherent Jurisdiction) சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருள், மனித சமுதாயத்திற்கு எதிரான, மீற முடியாத கட்டாயப்படுத்தும் சட்டத் தகுதி பெற்ற, சர்வதேசக் குற்றங்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடரவும்  குற்றமிழைத்த வரை மீட்டொப்படைக்கவும் (Extradite) ஆன அனைவருக்கும் எதிரான கடப்பாடு அதிலிருந்து பெறப்படுகிறது என்பதே ஆகும்.


ஆன்டனி டி அமடோ

இருப்பினும், மீறப்பட முடியாத கட்டாயப்படுத்தும் சட்டத் தகுதி பெற்ற சர்வதேசக் குற்றங்கள் எவை, ஒரு சர்வதேசக் குற்றம் கட்டாயப்படுத்தும் தகுதியை எப்படிப் பெறுகிறது. அத்தகைய தகுதி பெற்ற சர்வதேசக் குற்றம் தொடர்பாக எழும் அனைவருக்கும் எதிரான கடப்பாடு குற்றமிழைத்த வரை மட்டும் சார்ந்ததா அல்லது அது உலக நாடுகள் மீதும் கட்டுப்பாட்டை சுமத்துகிறதா என்பன போன்ற கேள்விகள் இன்றும் சர்வதேசச் சட்டத்தில் விடை காணப்படாத கேள்விகளாகவே இருக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பேராசிரியர் ஆன்டனி டி அமடோ (Anthony d'amato) தனது கட்டுரைக்கான தலைப்பில் ‘இது ஒரு பறவை, இது ஒரு விமானம், இது கட்டாயப்படுத்தும் சட்டம்” என்று சுட்டிக்காட்டுகிறார். இக்குழப்பங்களுக்கான முடிவு இது தொடர்பான சர்வதேசச் சட்ட நிலைகள் முரண்பாடுகள் இன்றி தர்க்கபூர்வமாக தொகுக்கப்படுவதிலேயே உள்ளது எனலாம்.

சர்வதேசச் சட்டத்தை தொகுத்தலும், முற்போக்கு வளர்ச்சியும் (Codification and Progressive Development of International Law)
    

சர்வதேசச் சட்டத்தின் பெரும்பகுதி எழுதப்படாத சர்வதேச வழக்காற்று விதிகளால் ஆனதே. நவீன காலத்திலேயே சர்வதேசச் சட்ட விதிகள் சர்வதேச உடன்படிக்கைகள் மூலம் எழுத்து மூலமாக ஆவணப்படுத்தப்படுகிறது. தற்காலத் தேவைக்கேற்ப சர்வதேசச் சட்டத்தைத் தொகுப்பதும் அதன் முற்போக்கு வளர்ச்சிக்கு வழி வகுப்பதும் சர்வதேச் சட்டத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

சட்டத்தை தொகுத்தல் என்பது சர்வதேசச் சட்டம் பற்றிய முழு விதிகளையும் எழுதப்பட்ட சட்டத்தின் வடிவில் தலைப்பு வாரியாக தொகுத்து ஆவணப்படுத்துதல் ஆகும். சர்வதேசச் சட்டத்தின் முற்போக்கு வளர்ச்சி என்பது ஏற்கனவே இருக்கும் சர்வதேசச் சட்ட விதிகளை தொகுப்பதுடன் அதன் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் புதிய சர்வதேசச் சட்ட விதிகளை முன்மொழிவதும் ஆகும். சர்வதேசச் சட்டத்தின் முற்போக்கு வளர்ச்சி பற்றிய சிந்தனை இன்றி ஏற்கனவே இருப்பதை மட்டும் தொகுப்பதால் ஒரு பயனும் இல்லை. தற்கால சர்வதேசச் சமுதாயத்தின் தேவைக்கேற்ப முற்போக்கு வளர்ச்சிக்கான விதிமுறைகளையும் உள்ளடக்கியதாக சர்வதேசச் சட்டத் தொகுப்பு அமையும் போது மட்டுமே அது இன்றைய சமூகத்திற்குப் பயனள்ளதாக இருக்கும். எனவே தான் சர்வதேசச் சட்டத் தொகுப்புடன் சர்வதேசச் சட்டத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கான முயற்சியும் இணைந்தே செய்யப்பட வேண்டும் என்பதை சர்வதேசச் சட்ட ஆணையச்சட்டம் (Statute of International Commission) ஷரத்து-15 வலியுறுத்துகிறது.

வரலாறு
    

சர்வதேச சட்டத்தை தொகுப்பதற்கான முதல் முயற்சி 1792-ம் ஆண்டில் தேசங்களின் உரிமைகள் பற்றிய பிரகடனங்களை வரைவு செய்வதற்கான ஃப்ரெஞ்சு மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்சி முழு வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் 18ம்  நூற்றாண்டின் இறுதியில் சர்வதேசச் சட்டம் தொகுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஜெரமி பென்தாம் முன்வைத்தார்.

1856-இல் பாரிஸ் பிரகடனம் சர்வதேசச் சட்ட தொகுப்பில் முக்கியமான படிக்கல்லாகும். அதன்பிறகு 1899-இல் முதலாம் ஹேக் மாநாட்டில் சர்வதேச பிரச்னைகளை சமாதான முறையில் தீர்த்துக் கொள்வது தொடர்பாகவும் தரை வழி யுத்தத்தின் சட்டம் மற்றம் வழக்காறுகள் தொடர்பாகவும் சர்வதேசச் சட்ட விதிகள் தொகுக்கப்பட்டு உடன்படிக்கை வடிவில் ஏற்கப்பட்டன. அதன் பிறகு 1907-இல் நடைபெற்ற இரண்டாவது ஹேக் மாநாட்டில் போர் மற்றும் போரில் நடுநிலை வகித்தல், கடல் மற்றும் நிலப் போர், போர் துவங்கிய பிறகு எதிரி நாட்டின் வியாபாரிகளின் நிலை உட்பட 13 தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உடன்படிக்கைகளாக ஏற்கப்பட்டன. அம்மாநாட்டில் 44 நாடுகள் பங்கேற்றிருந்தன என்பது  குறிப்பிடத்தக்கது.

சர்வதேசச் சங்கத்தின் தொகுப்பு முயற்சி (Codification attempt of League of Nations)
    

முதல் உலகப் போரின் முடிவில் உருவாகிய சர்வதேசச் சங்கம் தொகுப்பதற்கு தேவையான சர்வதேசச் சட்டத் தலைப்புகளை அடையாளம் காண 1924-இல் 16 சட்ட அறிஞர்களைக் கொண்ட குழுவை நியமித்தது. அக்குழு தேசிய இனவுரிமை (Nationality) கடற்கரையோர நீர் எல்லைகள் (Territirial waters) அயல் நாட்டினருக்கு ஒரு நாட்டில்  இழைக்கப்பட்ட சேதத்திற்கு அந்நாட்டின் அரசுக்குரிய பொறுப்பு நிலை, தூதாண்மை காப்பு விலக்குகளும் தனியுரிமைகளும், கடற்கொள்ளை போன்ற  தலைப்புகளைப் பரிந்துரைத்தது. அப்பரிந்துரைகளின் அடிப்படையில் 1930 இல் ஹேக் தொகுப்பு மாநாடு கூட்டப்பட்டது.

ஹேக் சட்டத் தொகுப்பு மாநாடு 1930 (The hague Codification Conference)
    

சர்வதேசச் சங்கம் அமைத்த குழுவின் பரிந்துரைகளில் (i) தேசிய இனவுரிமை (ii) கடலோர நீர் எல்லைகள் மற்றம் (iii) அயல்நாட்டினருக்கு ஏற்பட்ட இழப்பிற்கான நாட்டின் பொறுப்பு நிலை ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் உள்ள சர்வதேசச் சட்ட விதிகளை தொகுக்க 1930 ஆம் ஆண்டு ஹேக் தொகுப்பு மாநாடு கூட்டப்பட்டது. கடைசி இரண்டு தலைப்புகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. தேசிய இனவுரிமை தொடர்பாக மடடும் பல உடன்படிக்கைகள் ஏற்கப்பட்டன. இருப்பினும் சர்வதேசச் சட்டத்தை தொகுப்பதில் 1930 ஆம் ஆண்டு ஹேக் மாநாட்டுக்கு மிக முக்கிய பங்கு உண்டு எனலாம்.

ஐ.நா.சபையின் தொகுப்பு முயிற்சி (Codification Attempt of United Nations)
    

ஐ.நா.பிரகடனம் (U.N.Charter) ஷரத்து 13  ஐ.நா.வின் பொதுசபை சர்வதேசச் சட்டங்களை தொகுக்கவும் வளர்க்கவும் முயற்சிக்க வேண்டும் என்கிறது. இதற்கென ஐ.நா.சபை 1946 இல் ஒரு தனிக்குழுவை அமைத்தது. அதன் பின்னர் 1947இல் சர்வதேசச் சட்ட விதிகளை தொகுப்பதற்காகவே தனியாக சர்வதேசச் சட்ட ஆணையம் (International Law Commission) ஒன்றை ஏற்படுத்தியது.

சர்வதேசச் சட்ட ஆணையத்தின் பங்கு (Role of International Law Commission)
    

சர்வதேசச் சட்ட ஆணையம் 34 உறுப்பினர்களைக் கொண்டு தனது முதல் அமர்வை 1948ஆம் ஆண்டில் துவக்கியது.  ஆணையத்தின் 34 உறுப்பினர்களும் ஐ.நா. சபையின் பொதுசபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். அவர்கள் சர்வதேசச் சட்டத்தின் கோட்பாடுகளிலும் நடைமுறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்களாவர். ஐ.நா.சாசனத்தின் மூலம் சர்வதேசச் சட்ட ஆணையத்திற்கு வழங்கப்பட்ட பணி, சர்வதேசச் சட்டத்தின் முற்போக்கான வளர்ச்சியும் சட்டத்தை தொகுத்தலுமாகும்.
    

சர்வதேசச் சட்ட ஆணையம் பல ஆண்டுகள் சர்வதேசச் சட்டத்தை ஆராய்ந்து தனது முன்மொழிவு வரைவுகளை  ஐ.நா. பொது சபைக்கு வழங்கும்.  அத்துடன் ஒவ்வொரு தலைப்பிலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அறிக்கை சமர்ப்பித்து வரும். சட்ட ஆணையம் சமர்ப்பிக்கும் வரைவுகளும் அறிக்கைகளும் ஐ.நா. பொதுசபையில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பின்னர் அப்பொருள் குறித்த சர்வதேசச் சட்டத் தொகுப்பாக அது மாறிவிடும்.  அவ்வாறு ஏற்கப்பட்ட தொகுப்புச் சட்டம்,  அதே பொருள் குறித்த உடன்படிக்கைகளுக்கு பொருள் விளக்கம் அளிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பயன்படும். அத்தொகுப்புச் சட்டம் 34 சர்வதேசச் சட்ட அறிஞர்களால் ஒரு மனதாக ஏற்கப்பட்டு தொகுத்து வெளிவருவதால் அது சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தை தீர்மானிப்பதற்கான துணை மூலாதாரமாகவும் பயன்படுகிறது.

சர்வதேசச் சட்ட ஆணையம் உருவாக்கப்பட்ட 1949-இல் இருந்து இன்று வரை எண்ணற்ற பொருள் குறித்த தொகுப்புச் சட்டத்தை உருவாக்கியிருந்தாலும் அதன் முக்கியமான பங்களிப்பிற்கு உதாரணமாக, 
(1) உடன்படிக்கைகள் தொடர்பான சட்டம்
(2) தூதரக மற்றும் வணிகத் தூதரக உறவுகள் மற்றும்
(3) சர்வதேச  கடல் சட்டம் ஆகியவற்றைக் கூறலாம்.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT