சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டவர்கள்

சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டவர்கள்

சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்
(Subjects of International Law)

    

ஓவ்வொரு  நாட்டின் உள்நாட்டுச் சட்டத்திற்கும்  உட்பட்டவர்கள் அந்நாட்டின் குடிமக்களாவர்.  ஏனெனில் ஒரு நாட்டின் சட்டம், அந்நாட்டின் குடிமக்களை மட்டுமே கட்டுப்படுத்தும் அதிகாரவரம்பு உடையதாகும்.  அதுபோல சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள், அதாவது சர்வதேசச் சட்டத்திற்குக் கட்டுபட்டவர்கள் யார் என்பது சர்வதேச சட்டவியலாளர்களுக்கு அவசியமானதாகின்றது. 
    

சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் யார் என்பது குறித்து சட்டவியலாளர்களிடையே மூன்று வகையான கொள்கைகள் நிலவுகின்றன. ஆரம்பகாலத்தில் நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்றொரு கொள்கை செல்வாக்குப் பெற்றிருந்தது.  அதே காலத்தில், நாடுகள் என்பது தனிநபர்களின் தொகுதியையே குறிக்கும் என்பதால் இறுதியில் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தனிநபர்களே என்ற கொள்கையும் நிலவி வந்தது.  ஆனால். தற்காலத்தில் இவ்விரண்டு கொள்கைக்கும் மாற்றாக, சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக பிரதானமாக நாடுகள் இருந்தாலும், அவற்றுடன் தனிநபர்களும் சர்வதேச அமைப்புகள், ஐ.நா.சபை மற்றும் அதன் சிறப்பு முகமைகள் போன்ற தனியுருக்களும் (Entities) சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே எனும் கொள்கை அனைவராலும் ஏற்றுக்  கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கிறது.

சர்வதேசச் சட்டத்தை உருவாக்குபவர்கள் 
(Creators of International Law)

    

தனிநபர்களும் தற்போது சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக ஆகிவிட்ட போதிலும் தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்தை உருவாக்குபவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாக இருப்பவை, சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேச வழக்காறுகள், நாகரீக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கோட்பாடுகள், சர்வதேசத் தீர்மானிப்புகள் போன்றவையாகும் என்பதை முன்னரே கண்டோம்.  இந்த மூலாதாரங்களை உருவாக்குபவர்களாக நாடுகளும் சர்வதேச அமைப்புகளுமே இருக்கின்றன. எனவே நாடுகளும் சர்வதேச அமைப்புகளுமே சர்வதேசச் சட்டத்தை உருவாக்குபவர்கள் எனலாம்.

நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை 
(Only states are subjects of International Law)

    

சர்வதேசச் சட்டம், நாடுகளுக்கு இடையிலான உறவில், நாடுகள் மீதே உரிமைகளையும் கடமைகளையும் சுமத்துகின்றது. பொதுவாக நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைப் பொறுப்புகளை நிறைவேற்றும் கடமை நாடுகளுக்கே உரியதாகும்.  எனவே சில சட்டவியலாளர்கள், நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று கருதுகின்றனர்.  இவர்களது கருத்தின்படி சர்வதேசச் சட்டம், நாடுகளின் நடத்தைகளையே ஒழுங்குபடுத்துகின்றது.  எனவே நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவையாகும் என்று வாதிடுகின்றனர்.  இக்கருத்து 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்நிலைச்சட்டக் கொள்கை (Positivism) செல்வாக்குப் பெற்ற காலத்தில் உருவாகியதாகும்.  தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்தின் இறுதி இலக்காக இருந்தாலும் நாடுகளே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்றாக்கியது நிகழ்நிலைச்சட்டக் கொள்கையே என்று கோர்பெட் (Corbet) கூறுகின்றார். 
    

ஆனால் நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை எனும் இக்கொள்கை பல்வேறு சட்டவியலாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.  18-ஆம் நூற்றாண்டிலேயே அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டு அது சர்வதேசக் குற்றமாக ஆக்கப்பட்டுவிட்டது. அந்நிலையில் சர்வதேசச் சட்டம் அடிமைகளுக்கு சில உரிமைகளையும் வழங்கியது. அதுபோல கடற்கொள்ளை, அடிமை வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபடும் தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரியவர்களாக இருந்தனர். எனவே நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை எனும் கருத்து தவறானதாகும். நாடுகளுடன் தனிநபர்களும் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.  

ஓப்பன்ஹீய்ம் போன்ற சட்டவியலாளர்கள், முதன்மையாக நாடுகளே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்றாலும் நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று கூறமுடியாது என்று கூறினர்.  இன்று சர்வதேசச் சட்டத்தின் பல விதிகள் நாடுகளை பொறுத்ததாக மட்டும் இருப்பதில்லை.  மனித உரிமைகள், அகதிகள் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீட்டொப்படைப்பு விதிகள் போன்ற நேரடியாக தனிநபர்களைப் பாதிக்கக் கூடிய விதிகளையும் மறைமுகமாக தனிநபர்களைப் பாதிக்கக் கூடிய வேறு பல விதிகளையும் உள்ளடக்கியதாகவே இன்றைய சர்வதேசச் சட்டம் உள்ளது.  எனவே நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று கூறமுடியாது என்பதே உண்மையாகும்.

தனிநபர்கள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்
(Only Individuals are subjects of International Law)

    

தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்தின் இலக்கு மட்டுமே, நாடுகளே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற முந்திய கொள்கையை மறுக்கும் சில சட்டவியலாளர்கள்,  தனிநபர்கள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற கொள்கையை முன்வைக்கின்றனர்.  வெளிப்பார்வைக்கு சர்வதேசச் சட்டம்  நாடுகளின் மீதே உரிமைகளையும் கடமைகளையும் சுமத்துகின்றது என்றாலும், அந்த நாடு என்பது தனிநபர்களைக் கொண்ட அமைப்பே ஆகும்.  எனவே இறுதியாக ஆராய்ந்து பார்த்தால் நாடுகளின் வழியே தனிநபர்களே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆவார்.  எனவே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் நாடுகள் அல்ல, தனிநபர்கள் மட்டுமே என்பது அவர்களின் கருத்தாகும்.

ஹேன்ஸ் கெல்சன்

இக்கொள்கையாளர்களில் முதன்மையானவரான கெல்சன், நாடு என்பது, அந்த நாட்டில் வாழும் தனிநபர்களைக் கட்டுப்படுத்தும் சட்ட விதிகளையும் உள்ளடக்கிய தொழில் நுட்பரீதியான சட்டக் கருத்தாக்கமாகும்.  எனவே சர்வதேசச் சட்டத்தில் நாடுகளின் கடமை என்பது இறுதியில் தனிநபர்களின் கடமையே ஆகும்.  உண்மையில், சர்வதேசச் சட்டத்திற்கும் நாட்டின் சட்டத்திற்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது.  இரண்டு சட்டங்களுமே தனிநபர்களுக்கானதே,  தனிநபர்களைக் கட்டுப்படுத்துவதே. ஆனால் நாட்டின் சட்டம் தனிநபர்களை நேரடியாகக் கட்டுப்படுத்துகிறது, மாறாக சர்வதேசச் சட்டம் நாடுகளின் மூலமாகத் தனிநபர்களைக் கட்டுப்படுத்துகிறது.  இது மட்டுமே ஒரேயொரு வேறுபாடு ஆகும்.

கெல்சனின் கருத்து மேலோட்டாமாகப் பார்க்கும் போது தர்க்க அடிப்படையில் சரியான வாதமாகத் தோன்றினாலும் உண்மை நடப்பிற்கு மாறானதாகும். ஏனெனில் சர்வதேசச் சட்டம் முதன்மையாக நாடுகளின் மீதே உரிமைகளையும் கடமைகளையும் சுமத்துகிறது. மறைமுகமாக தனிநபர்களுக்கு சர்வதேசச் சட்டத்தின் கீழ் சில உரிமைகள் அல்லது கடமைகள் ஏற்பட்டாலும் அதனை தனிநபர் நேரடியாக நிறைவேற்ற முடியாது. உதாரணத்திற்கு சர்வதேச நீதிமன்றத்தில் தனிநபர்கள் தரப்பினர்களாக இருந்து வழக்கிட முடியாது. சர்வதேசச் சட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகவே இருந்தாலும் அவரது சொந்த நாட்டின்  மூலமே வழக்கிட முடியும்.  சர்வதேசச் சட்டத்தில் தனிநபர்களின் நலனைப் பாதுகாப்பதும் பிரதிநிதிதுவப்படுத்துவதும் நாடுகளே ஆகும். 


ஃபிலிப் சி ஜெஸ்ஸப்

எனவேதான் சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராயிருந்த ஃபிலிப் சி ஜெஸ்ஸப் (Philip C. Jessup), நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் அதன் எதிர்முனையாக இருக்கும் தனிநபர்கள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். ஏனெனில் உண்மை நடப்பில் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக முதன்மையாக நாடுகளும் அதனுடன் தனிநபர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் போன்ற தனியுருக்களுமே இருக்கின்றன.

நாடுகள், தனிநபர்கள் மற்றம் பிற சர்வதேசத் தனியுருக்களே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாவர்

(states, Individuals, and someInternational Entities  are subjects of International Law)
    

சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் குறித்த மூன்றாவது கொள்கையே தற்காலத்தில் நிலவும் உண்மை நடப்பைப் பிரதிபலிக்கும் கொள்கையாகும். இக்கொள்கை மேலே கண்ட இரண்டு கொள்கைகளையும் உள்ளடக்கியதுடன் கூடுதலாக சில சர்வதேசத் தனியுருக்களையும் அவற்றுடன் சேர்த்துக் கொண்டுள்ளது.  இக்கொள்கையின் படி, நாடுகளே முதன்மையாக  சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்றாலும் தனிநபர்களும், ஐ.நா.சபை மற்றும் அதன் சிறப்பு முகமைகள், பிற சர்வதேச அமைப்புகள், போன்றவையும் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவையாகும்.  சர்வதேசச் சட்டம், தனிநபர்களைப் பொறுத்த உரிமைகள் மற்றும் கடமைகளையும் உள்ளடக்கியது.  என்பதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.  முக்கியமாக அடிமைகளையும் கடற்கொள்ளையர்களையும் குறிப்பிடலாம்.  இவர்கள் சர்வதேசச் சட்டத்தின் இலக்கு (Object)  தானேயொழிய அதற்கு உட்பட்டவாகள் (Subjects)  அல்ல எனும் வாதம் வெறும் வார்த்தை விளையாட்டாக இருக்காலமே தவிர, உண்மை நடப்பை பிரதிபலிப்பதாக இருக்காது.  அடிமைகளைப் பாதுகாக்கும் கடமை நாடுகளுக்கு உண்டு எனும் சர்வதேசச் சட்ட விதி நாடுகளின் மீது கடமையை சுமத்துகிறது என்றால் அடிமைகள் மீது அதற்கான உரிமையை வழங்குகிறது.

அதுபோல, இரண்டாம் உலகப்போரின் போர்க் குற்றவாளிகள் மீதான நியூரெம்பர்க் விசாரணை, டோக்கியோ விசாரணை ஆகிய சர்வதேச விசாரணைகள், சர்வதேசச் சட்டத்தின் கீழ் தனிநபர்களையும் பொறுப்புக்குள்ளாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளன.  இதையே சர்வதேசச் சட்ட ஆணையுமும் ஏற்றுக் கொண்டுள்ளது.  மனித குலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தொகுப்புச் சட்டத்தில் ஒரு தனிநபரையும் மனிதகுலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிரான குற்றமிழைத்தவராகக் கருதி தண்டிக்கலாம் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இன அழிப்பு மாநாடு (Genocide Convention) (1943) இன அழிப்புச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.  அத் தனிநபர்கள் ஒரு நாட்டின் ஆட்சியாளராகவோ அரசு அதிகாரிகளாகவோ இருந்தாலும் தண்டனைக்குரியவர்களே என்று கூறப்பட்டுள்ளது.

தனிநபர்களைப் போலவே ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் சிறப்பு முகமைகள், உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation-WTO)  போன்ற சர்வதேச அமைப்புகள், பிரிக்ஸ் ( BRICS)  நாடுகள் கூட்டமைப்பு போன்ற பிராந்திய அமைப்புகள் போன்ற நாடு அல்லாத தனியுருக்களும் இன்று சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவையாக ஆகியுள்ளன. இவற்றின் அமைப்புகள், செயல்பாடுகள், உரிமைகள், கடமைகள் யாவும் சர்வதேச உடன்படிக்கைகள் அல்லது சர்வதேச மாநாடுகள் மூலம் சர்வதேசச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேசச் சட்டத்தில் தனிநபருக்குஉரிய இடம் 
(Place of Individual in International Law)

    

“தனிநபர், இன்றைய நிலையில் சர்வதேசச் சட்டத்தின் இலக்கு மட்டுமல்ல சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அவர் ஆகிவிட்டார்”  என்பதே உண்மையாகும். ஏனெனில், நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை எனும் நிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர்களின் கருத்து செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாகக் கருதப்படவில்லை.  தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்தின் இறுதி இலக்கு (Object) மட்டுமே என்றே சட்டவியலாளர்களால் கருதப்பட்டு வந்தது.  அடிமைகள், கடற்கொள்கையர்களைப் பொறுத்து சர்வதேசச் சட்டத்தில் உரிமைகளும் பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதால் தனிநபர்களும் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போது, அது நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்ற பொது விதிக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மட்டுமே என்று வாதிட்டனர்.
 

Denzing Railway Official Case (1928)- என்ற வழக்கிலேயே முதன் முதலில் சர்வதேசச் சட்டத்தில் தனிநபருக்கு உரிய உரிமை அங்கீகரிக்கப்பட்டது எனலாம். இவ்வழக்கில், போலந்து நாடு ஒரு சர்தேச உடன்படிக்கையின் மூலம் டான்ஸிங் ரயில்வே நிறுவனத்தின் உரிமையைப் பெற்றது. அதன் உடன்படிக்கையின்படி, அந்நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சில உரிமைகளை வழங்குவதாக போலந்து ஒப்புக் கொண்டிருந்தது.  ஆனால் பின்னர் போலாந்து அவ்வுரிமைகளை வழங்க மறுத்து விட்டது.  அந்த உடன்படிக்கை சர்வதேச உடன்படிக்கை என்பதால், சர்வதேசச் சட்டத்தில் நாடுகளும் மட்டுமே உரிமைகளும் கடமைகளும் வழங்கப்படும்.  எனவே ரயில்வே நிறுவன அதிகாரிகள் போன்ற தனிநபர்களுக்கு சர்வதேசச் சட்டத்தில் எந்த உரிமையும் கிடையாது.  எனவே அந்த உடன்படிக்கையின் கீழ் தனிநபர்களுக்கு உரிய உரிமைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு இல்லை என்று போலந்து வாதிட்டது.  போலந்தின் இந்த வாதத்தை நிராகரித்த சர்வதேச நிரந்தர நீதிமன்றம், ஒரு சர்வதேச உடன்படிக்கையில் தனிநபர்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தால் சர்வதேச சட்டம் அத்தனிநபர்களின் உரிமைகளை அங்கீகரித்துச் செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
    
சமீப காலங்களில், தனிநபர்கள் மீது உரிமைகளையும் கடமைகளையும் சுமத்தும் சர்வதேச உடன்படிக்கைகள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. பின்வருவன அவ்வாறு தனிநபர்களுக்கு உரிமைகளை வழங்கும் சர்வதேசச் சட்ட உதாரணங்களுள் சிலவாகும்.

(i) நியூரெம்பர்க் வழக்கு விசாரணைத் தீர்ப்பின்படி, தங்களது சொந்த அரசாங்கம் செய்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் சர்வதேசக் குற்றவியல் சட்டத்தின் பாதுகாப்பைப் பெறுவதற்கான உரிமை உண்டு.


(ii) 1948-ஆம் ஆண்டில் இன அழிப்பு மாநாடு (Genocide Convention) ஒரு மனித இனக்குழு, ஒரு குழுவாக நீடித்திருப்பதற்கான உரிமையை அங்கீகரித்து பாதுகாப்பதற்கு முயல்கிறது.


(iii) ஐ.நா.சாசனத்தின் முகப்புரை, அடிப்படை மனித உரிமைகளிலும் மனிதர்களின் மதிப்பு மற்றும் கண்ணியத்திலும் உள்ள நம்பிக்கையை மறு உறுதி செய்வதாக அறிவிக்கின்றது.


(iv) 1948 ஆம் ஆண்டு ஐ.நா.சபை ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) தனிநபர்களின் அடிப்படை மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் அங்கீகரித்துள்ளது.


(v) சர்வதேசச் சட்டத்தின்படி, ஒவ்வொரு நாடும், தங்களது நாட்டின் குடிமகன்களுக்கு அளிக்கும் உரிமைகளை அந்நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டினருக்கும் வழங்க வேண்டும்.  இதன் மூலம் சர்வதேசச் சட்டம் அயல்நாட்டுக் குடிமகன்களுக்கு சில உரிமைகளை வழங்குகின்றது.


(vi) சர்வதேசச் சட்டத்தின் மீட்டு ஒப்படைத்தல், அரசியல் குற்றவாளிகளுக்கும், அகதிகளுக்கும் அளிக்கப்படும் புகலிடம் தொடர்புடைய சர்வதேசச் சட்ட
விதிமுறைகள் தனிநபர்களுக்கு சில உரிமைகளை வழங்குகின்றன.
     

மேலே கண்ட சர்வதேசச் சட்டவிதிகளின்படி, தனிநபர்களும் சர்வதேசச் சட்டத்திற்குட்பட்டவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.  இதனை மறுப்பவர்கள் தனிநபர்களுக்கு சர்வதேசச் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகள் மீறப்படும் போது நேரடியாக தனிநபர்களால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கிட முடியாது.  

அவர் சார்ந்த நாட்டின் மூலமாகவே வழக்கிட முடியும். நிறைவேற்ற வழிவகையற்ற வைத்து தனிநபர்களும் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறமுடியாது என்று வாதிடுகின்றனர்.  ஆனால், நேரடியாக வழக்கிட முடியாத இயலாமை, நடைமுறை (Procedural) சார்ந்த  குறைபாடேயொழிய நிலைமுறை (Substantial) சார்ந்தது அல்ல.  உள்நாட்டுச் சட்டத்தில் இளவர் (Minor) கூட நேரடியாக வழக்கிட முடியாது, அதற்காக இளவர் உள்நாட்டுச் சட்டத்திற்கு உட்பட்டவர் அல்ல என்று கூறமுடியுமா? எனவே சர்வதேசச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டிருக்கும் தனிநபர்களும் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே ஆவர்.

முடிவுரை 
        

இன்றைய நிலையில், சர்வதேசச் சட்டத்தின் இலக்கு என்ற நிலையில் இருந்து மாறி தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக ஆகியுள்ளனர் என்பதை நாம் காணலாம்  ஆனால் சர்வதேசச் சட்டத்தில் ஒரு நாட்டிற்கு உரிய அதே இடத்தில் தனிநபர்களும் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறமுடியாது.  

இன்னமும் நாடுகளே முதன்மையாக சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவையாக இருக்கின்றன.  ஆனால் முன்பு போல் நாடுகள் மட்டுமே சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று நிபந்தனையின்றிக் கூறமுடியாது.  ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தனிநபர்களும் சில சர்வதேசத் தனியுருக்களும் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக ஆகியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. எனவே தனிநபர்கள், சர்வதேசச் சட்டத்தின் இலக்கு மட்டுமே என்ற நிலை தற்போது மாறியுள்ளது.  தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்தின் இலக்கு மட்டுமல்ல, சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாகவும் ஆகிவிட்டனர் என்பது இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com