ஏகாதிபத்தியம்

ஏகாதிபத்தியம்

ஏகாதிபத்தியம் (Imperialism)

காலனி ஆதிக்கம் அல்லது ஏகாதிபத்தியம் என்பது, ஒரு பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், ஒரு வெளி நாட்டின்மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும்.

இலத்தின் வார்த்தையான இம்பீரியம் (Imperium) என்பதும் பேரரசைக் குறிக்கிறது. இதன் பொருள் ஆதிக்கம். பேரரசின் மன்னரைப் பேரரசர் அல்லது பேரரசி என்று அழைப்பார்கள். அரசியல்ரீதியாக பேரரசு என்பது பல மாகாணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் ஒன்று அல்லது பல்வேறுபட்ட இனக்குழு மக்களை உள்ளடக்கியதாக இருக்கும். உலகில் பல பேரரசுகள் தோன்றின, குறிப்பாக ரோமப் பேரரசு, ஆங்கிலேயப் பேரரசு மிகவும் பெயர் பெற்று விளங்கின.

இது ஆட்சிப்பகுதிகளைக் வலுக்கட்டாயமாக கைப்பற்றுவதன் மூலமோ, குடியேற்றங்களை ஏற்படுத்துவது மூலமோ, மறைமுகமான வழிமுறைகள் மூலம் அரசியல் அல்லது பொருளாதாரத்தின்மீது செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் மூலமோ இது சாத்தியப்படுகின்றது. இச்சொல், அடக்கப்பட்ட நாடு, தன்னைப் பேரரசின் ஒரு பகுதியாகக் கருதுகிறதோ இல்லையோ என்பதைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின்மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கைகளை விவரிக்கவே பயன்படுகின்றது.

J.A.ஹாப்சன்

" ஏகாதிபத்தியம் " ஐரோப்பிய நாடுகள், பிற கண்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிய காலத்தையே குறிக்கின்றது. ஏகாதிபத்தியம் என்பது, தொடக்கத்தில், 1500 களின் பிற்பகுதியில், பிரிட்டீஷ், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆப்பிரிக்கா, அமெரிக்கா நோக்கிய விரிவாக்கம் தொடர்பான கொள்கைகளைக் குறிக்கவே பயன்பட்டது. ஆங்கிலேயப் பொருளாதாரவாதி J.A.ஹாப்சன் (John A. Hobson )1902ல் ‘ஏகாதிபத்தியம்‘ எனும் நூலை வெளியிட்டபின் இச்சொல் பிரபலமானது.

ரோசா லக்சம்பர்க்

முதலாளித்துவம், புதிய சந்தை வாய்ப்புக்களையும், வளங்களையும் தேடுவதற்காகப் பேரரசு வாதத்தைத் தூண்டிவிட்டதாகவும் இது முதலாளித்துவத்தின் இறுதியானதும் உயர்மட்ட நிலையும் ஆகுமென லெனின் வாதித்தார். தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு வெளியிலான முதலாளித்துவத்தின் அவசியம் கருதிய விரிவாக்கம் பற்றிய கொள்கையை ஜெர்மனைச் சார்ந்த ரோசா லக்சம்பர்க்கும் (Rosa Luxemburg)  தத்துவவியலாளரான ஹன்னா அரெண்ட்டும் (Hannah Arendt) ஏற்றுக்கொண்டனர்.

ஹன்னா அரெண்ட்

ஏகாதிபத்தியம் வரலாறு

கி.பி.1492 ஆம் ஆண்டு முதல் கி.பி.1763 ஆம் ஆண்டு வரையில் ஐரொப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை காலனி ஆதிக்கம் எனப்படுகிறது. ஜப்பான், கொரியா, இந்தியா, சீனா, அசிரியா, பண்டைய எகிப்து, பண்டைய கிரேக்கம், ரோமப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, பாரசீகப் பேரரசு, ஒட்டோமான் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு மற்றும் பல பேரரசுகளின் வரலாற்றில் ஏகாதிபத்தியம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பன்னிரெண்டுக்கும் அதிகமான முஸ்லிம் பேரரசுகளும். துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவ சகாப்தத்தை முன்னெடுத்துச் செல்லும் பன்னிரெண்டுக்கும் அதிகமான பேரரசுகள் இடம்பெற்றன. உதாரணமாக எத்தியோப்பியன் பேரரசு, ஓயோ பேரரசு, அசாந்த் யூனியன், லுபா சாம்ராஜ்ஜியம், லுண்டா சாம்ராஜ்ஜியம், மற்றும் முடாப்பிய பேரரசு ஆகியனவாகும். பண்டைய கொலம்பிய யுகத்தில் அமெரிக்கர்கள் ஆஸ்டெக் பேரரசு மற்றும் இன்க் பேரரசு போன்ற பெரிய பேரரசுகளைக் கொண்டிருந்தனர்.

ஒரு நாட்டில் வெளிநாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை கட்டாயமாக சுமத்தப்பட்ட அல்லது பொதுவாக ஒரு ஒன்றிப்பு அரசாங்கம் இல்லாத பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக “ஏகாதிபத்தியம்” என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படும் என்றாலும் சில நேரங்களில் வலுவான அல்லது மறைமுக அரசியல் அல்லது பொருளாதார செல்வாக்கை விரிவாக்க பலவீனமான நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் செயல்முறையை குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

கி.பி.1763 ஆம் ஆண்டு முதல் கி.பி.1870 ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகள் பல போர்களிலும், நாட்டின் ஒருங்கிணைப்புகளிலும் ஈடுபட்டன. 1870 இல் இத்தாலி, ஜெர்மனி ஒருங்கிணைப்பட்ட பிறகு, அந்நாடுகள் ஆசிய ஆப்ரிக்க கண்டங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தன. கி.பி.1870 ஆம் ஆண்டு முதல் கி.பி.1945 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை புதிய ஏகாதிபத்தியம் எனப்பட்டது.

கலாச்சார ஏகாதிபத்தியம் (Cultural Imperialism)

கலாச்சார ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாட்டின் பண்பாட்டு கலாச்சாரமானது அடுத்த நாட்டு கலாச்சாரத்தில் வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்துவதையே பண்பாட்டு ஏகாதிபத்தியம் என்றழைக்கப்படுகிறது. மென்மையான அதிகார வடிவமாக கருதப்படும் இது ஒரு நாட்டின் நகர்புறங்களில் தார்மீக, கலாச்சார மற்றும் சமூகத்தின் உலக கண்ணோட்டத்தை மாற்றுகிறது. இத்தகைய செயல்கள் ஏதோவொரு விதத்தில், ஏகாதிபத்தியத்தின் கருத்தாக்கத்தை அர்த்தமற்றதாக கருதுவது போன்றதாகும்.வெளிநாட்டு இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இளந்தலைமுறையிரிடையே பண்பாட்டு ரீதியிலான உள்நாட்டு கொள்கைகளுக்கு மாறான பழக்கவழக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்துவதும் இதற்குச் சான்றாகக் கூறலாம். உதாரணமாக, பனிப்போர் காலத்தில் ஓபரா டல்லாஸ் சோப்பின் ஆடம்பரமான அமெரிக்க வாழ்க்கைப் பாணியின் சித்திரங்கள் ருமேனியர்களின் எதிர்பார்ப்புகளை மாற்றின. மிக சமீபத்திய உதாரணம் வட கொரிய மக்களிடைளே மிகவும் செல்வாக்கு ஏற்படுத்திய கடத்தப்பட்ட தென்கொரிய நாடகத் தொடரினைப் குறிப்பிடலாம். ஒரு காலத்தில் கிரேக்கப் பண்பாட்டினர், தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் உடற்பயிற்சிக் கூடங்களையும், அரங்குகளையும், பொதுக் குளியல் மண்டபங்களையும் கட்டி அந்நாட்டினரைத் தமது பண்பாட்டினுள் அமிழ்ந்து போகச் செய்தனர். பொதுக் கிரேக்க மொழியின் பரவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

ராணுவ ஏகாதிபத்தியம் (Military Imperialism)

நாடுகள் தங்களின் படைகளை அனுப்பி மற்ற நாடுகளில் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதை ராணுவ ஏகாதிபத்தியம் என்கிறோம். எடுத்துக் காட்டாக, அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுத்து அங்கு தன் நாட்டிற்குச் சாதகமான ஒரு அரசை ஏற்படுத்தியது.

அரசியல் ஏகாதிபத்தியம் (Political Imperialism)

நாடுகளின் தலைவர்களைத் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்து, அவர்கள் மூலம் மறைமுகமாக ஆட்சியை ஏற்படுத்துவது அரசியல் ஏகாதிபத்தியம் எனபடும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி தங்களுடைய அலுவலர்களை நியமித்து ஏற்கனவே இருந்த அரசியல் அமைப்பைத் தங்களுக்குச் சாதகமான முறையில் மாற்றி அமைத்துக் கொண்டனர்.

பொருளாதார ஏகாதிபத்தியம் (Ecomnic Imperialism)

ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதார அதிகாரத்தை தன்வசப்படுத்தி, அந்நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதே பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.

ஏகாதிபத்தியம் ஏற்படக் காரணங்கள்

1. தொழிற்புரட்சி (Industrial Revolution)

ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது. எனவே உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சந்தையும் தேவைப்பட்டன. உள்நாட்டு சந்தைகளில் தங்கள் பொருட்களை விற்கமுடியவில்லை. ஆசியா ஆப்பிரிக்க குடியேற்ற நாடுகள் நல்ல சந்தைகளாகவும், மூலப் பொருட்கள் அளிக்கும் இடங்களாகவும் செயல்பட்டன.

2. தேசிய பாதுகாப்பு (National Security)

தனது நாட்டின் செல்வ வளம் அயல் நாட்டில் முதலீடு செய்யப்படும்போது, அதன், பாதுகாப்பிற்காக அந்நாடுகளைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர விரும்பின.

3. தேசியமயமாக்கல் (Nationalisation)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிதீவிர நாட்டுப்பற்றுக் கொள்கை ஐரோப்பாவில் ஏற்பட்டது. பல நாடுகள் தங்களின் இனப்பெருமை, பண்பாட்டுப் பெருமை, மொழிப்பற்று ஆகியவற்றைப் பெரிதும் வளர்த்துக் கொண்டன. தம் நாட்டின் கௌரவத்தை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு அதிக குடியேற்ற நாடுகளை அடைய விரும்பின. மேலும் ஏகதிபத்தியம் அக்கால நாகரிகமாக கருதப்பட்டது.

ஐரோப்பிய வெள்ளையின மக்களை உயர்வாகவும், கருப்பின ஆப்ரிக்க மக்களுக்கு நாகரிகம் கற்றுத் தருவது தங்களின் பெரும் சுமை என்று கருதியதும் ஏகாதிபத்தியம் ஏற்பட வழிவகை செய்தது.

4. சமநிலை ஆதிக்கம் (Balance of Power)

சமநிலை ஆதிக்கம் பெற ஐரோப்பிய நாடுகள், தங்களுக்குப் போட்டியாக உள்ள நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு இணையாக குடியேற்ற நாடுகளை ஏற்படுத்த முற்பட்டன.

5. புதிய வழித்தடங்கள் கண்டுபிடிப்பு (Discovery of new routes)

ஆப்பிரிக்க, ஆசியக்கண்டங்களை அடையக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழித்தடங்கள் ஏகாதிபத்தியக் கொள்கையை ஊக்குவித்தன. புதிய கடல் வழித்தடங்கள் வணிகர்களுக்கும், இராணுவத்திற்கும் குடியேற்ற நாடுகளில் உள்ள பெரும் செல்வத்தைச் சுரண்ட பேருதவியாக இருந்தன.

6. மக்கள் தொகைப் பெருக்கம் (Growth of Population)

மக்கள் தொகைப் பெருக்கம், அதன் விளைவாக ஏற்பட்ட வேலையின்மை ஐரோப்பியர்களை குடியேற்றங்களுக்காகவும் மற்றும் வேலை வாய்ப்பிற்காகவும் வேறு நாடுகளைத் தேடி செல்லத் தூண்டியது.

7. சட்ட ஒழுங்கின்மை  (State of Anarchy)

முதலாம் உலகப் போருக்கு  முன் உலக நாடுகளுக்கிடையே அமைதியை வளர்க்கவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டங்கள் இயற்றக் கூடிய சர்வதேச அமைப்பு இல்லை. இந்த சட்ட ஒழுங்கற்ற நிலை குடியேற்றங்களைக் கைப்பற்றுவதற்கு வழிவகுத்தது.

ஏகாதிபத்திய வழிமுறைகள்

1. போர் மற்றும் கையகப்படுத்துதல் (Conquest and Annexation)

ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த பல முறைகள் கையாளப்பட்டன. நவீன காலத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளால் அனுப்பப்பட்ட படை வீரர்கள் பல நாடுகளின் தலைமையை வீழ்த்தி, அங்கு ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டினர்.

2.சலுகைகள் அல்லது உரிமைகள் (Concession of Franchise)

சில நேரங்களில் தீவிர அமைப்புகள், பிற்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதார வளங்களை சுரண்டும் பிரத்தியேக உரிமையைப் பெற்றிருந்தன.

3. குத்தகை உரிமை (Lease hold)

சில நாடுகள் தங்கள் குடியேற்றநாடுகளிடமிருந்து ஒரு நிலப்பகுதியை குத்தகைக்குப் பெற்று அங்குள்ள பொருளாதார வளங்களைச் ச்டுரண்டி வந்தன. பின்னர் அந்த குத்தகை நிலங்கள் மீது அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தின.

4.செல்வாக்கை நிலைநாட்டுதல் (Sphere of Influence)

செல்வாக்கை நிலைநாட்டுதல் என்றபெயரில் சில நாடுகள் பொருளாதாரச் சுரண்டல் வேலையில் ஈடுபட்டனர். 1907 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் ரஷ்யா, பாரசீக நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.

5. பாதுகாப்பு ஏற்படுத்துதல் (Protectorate)

பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுடன் பொம்மை ஆட்சி (Puppet Rule) உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு மாபெரும் நிலப்பரப்பை தங்கள் வசப்படுத்திக் கொண்டு, பின் சுரண்ட முற்பட்டனர். 1912 இல் பிரான்ஸ் மொராக்கோ மீது இவ்வாறு தனது பாதுகாப்பை நிலை நிறுத்தியது..

6. பொருளாதாரம் அல்லது வரிக்கட்டுப்பாடு (Econimic and Tariff control)

சில சமயங்களில் வலிமையான ஒரு நாடு வலிமை குறைந்த நாட்டின்  மொத்த பொருளாதார அதிகாரங்களை தன் வயப்படுத்திக் கொள்ளுதல் பொருளாதார அல்லது வரிக்கட்டுப்பாடு முறையாகும். உதாரணமாக முதலாம் உலகப் போருக்கு முன் துருக்கியில் அனைத்து பொருளாதார அமைப்புகளும்  ஆட்டோமான் பொதுக் கடன் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

7. ஒப்படைப்பு முறை ((mandate system)

இது புதிய ஏகாதிபத்தியத்தின் இறுதி வழிமுறையாகும். இது 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் தெனாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் ஜான் ஸ்மட் என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது. முந்தைய கால குடியேற்ற நாடுகளில் பலவும், பிற்படுத்தப்பட்ட பகுதிகளும் சர்வதேச சங்கத்திடம் ஒப்ப்டைக்கப்பட்டன. இச்சங்கம் சில கட்டுப்பாடுகளுடன், இத்தகைய நாடுகளைப் பராமரிக்கும்படி பல நாடுகளிடம் கேட்டுக் கொண்டது. இத்தகைய நாடுகளை நிர்வாக ஒப்படைப்பு நாடுகள் என்றழைக்கிறோம்.

ஏகாதிபத்தியத்தின் சாதக விளைவுகள்

வலிமை மிக்க நாடுகள் வலிமையற்ற நாடுகளில் போக்குவரத்து மற்றும்தொடர்பு முன்னேற்றங்களை ஏற்படுத்தின. குடியேற்ற நாடுஅகளுக்கு கல்வி, மருத்துவம், புதிய விவசாய முறை, அமைதி, ஒற்றுமையை வளர்த்தன.

ஏகாதிபத்தியத்தின் பாதக விளைவுகள்

குடியேற்ற நாடுகள் தங்கள் சுதந்திரத்தை இழந்தன. மக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டதோடு அவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். குடியேற்ற நாடுகஆள் மூலப்பொருள்களை வழங்குவதற்கும் பொருள்களை விற்பதற்கு சந்தைகளாகவும் விளங்கின.  அந்நாடுகளின் உள்நாட்டு தொழில்கள் நசுக்கப்பட்டு, ஏழ்மையும், வேலையின்மையும் அதிகரித்தன. பாரம்பரிய விவசாய முறை மாற்றப்பட்டு, உற்பத்தி மூலப் பொருள்களை பயிரிட நிர்பந்திக்கப்பட்டன. சில இனங்கள் மறைவுக்கு காரணமாயின.

இங்கிலாந்தின் ஏகாதிபத்தியம்

பிரிட்டீஷ் பேரரசின் ஏகாதிபத்திய ஆர்வம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காணலாம். 1599 இல் பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டு அடுத்த ஆண்டில் ராணி எலிசபெத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் வணிகப் மையங்களை நிறுவுவதன் மூலம், இந்தியாவில் ஏற்கனெவே வர்த்தக தளங்களை நிறுவியிருந்த போர்த்துகீசியர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்ள இங்கிலாந்தால் முடிந்தது. 1767 ஆம் ஆண்டில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் சூறையாடப்பட்டதுடன் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனியில் நிகழ்ந்த சுரண்டல்கள் காரணமாக கம்பெனி திவாலாகியது. வெர்ஜீனியா, மாசசூசெட்ஸ், பெர்முடா, ஹொண்டுராஸ், அன்டிகுவா, பார்படோஸ், ஜமைக்கா மற்றும் நோவா ஸ்கொச்சியா ஆகியவற்றில் காலனிகளைக் கொண்டிருந்ததால் 1670 ஆம் ஆண்டளவில் பிரிட்டனின் ஏகாதிபத்திய ஆர்வங்கள் அதிகரித்தன.

பிரான்ஸின் ஏகாதிபத்தியம்

1814 ஆம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான முதலாம் காலனித்துவ பேரரசானது முடிவுக்கு வந்திருத்தது. இரண்டாவது காலனியாதிக்க பேரரசு ஆல்ஜீரியவை 1830 ஆம் ஆண்டு வென்றதன் மூலம் தொடங்கியது. பின்னர் 1962 ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டவுடன் பெரும்பாலான காலனியாதிக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பிரான்ஸின் வரலாறு பெரியதும் சிறியதுமான பல போர்கள் மற்றும் உலகப் போர்களின் போது காலனித்துவ நாடுகளிலிருந்து பிரான்ஸிற்கு குறிப்பிடத்தக்க உதவிகள் கிடைத்தன.

16 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸின் காலனித்துவத்தை அமெரிக்காவின் புதிய குடியேற்றம் மூலம் தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டது

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு காலனியாதிக்க பேரரசானது பிரித்தானியப் பேரரசிசிற்கு அடுத்த படியாக இருந்தது. 12,347,000 கிமீ 2 (4,767,000 சதுர மைல்கள்) பரப்பளவில் விரிந்திருந்த பிரெஞ்சு காலனியாதிக்கம் உலக மக்கட்தொகையில் பத்தில் ஒரு பங்கினையும் இரண்டாம் உலகப்போரின் போது இது 110 மில்லியன் மக்கள் என்றளவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது.

ஜப்பானின் ஏகாதிபத்தியம்

1894 ஆம் ஆண்டில் முதல் சினோ-ஜப்பானியப் போரில் தைவான் உள்ளிட்ட நாடுகள் கைப்பற்றப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் ரஷ்ய-ஜப்பானியப் போரை வென்றதன் விளைவாக, ஜப்பான் ரஷ்யாவின் சாகலின் தீவில் பங்கு பெற்றது. 1910 ஆம் ஆண்டில் கொரியா இணைக்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜப்பான், சீனாவின் ஷாங்டோங் மாகாணத்திலும், மரினா, கரோலின், மார்ஷல் தீவுகள் ஆகியவற்றிலும் ஜேர்மனியின் குத்தகைக்குட்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், பல்வேறு தீவுகளையும் நாடுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்க அழுத்தங்கள் காரணமாக ஜப்பான் ஷாங்டோங் பகுதியை சப்பான் திரும்ப ஒப்படைத்தது. 1931 ஆம் ஆண்டு சீனாவின் மஞ்சூரியன் பகுதியை ஜப்பான் கைப்பற்றியது.1937 ஆம் ஆண்டு சீன- ஜப்பானியப் போரின் போது ஜப்பானின் இராணுவம் மத்திய சீனாவை ஆக்கிரமித்ததுடன், பசிபிக் போரின் முடிவில் ஜப்பான், ஹாங்காங், வியட்நாம், கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இந்தோனேசியா, நியூ கினி மற்றும் பசிபிக் பெருங்கடலின் சில தீவுகளையும் கைப்பற்றியது. கிழக்காசிய ஒத்துழைப்பு கோளத்தை உருவாக்கும் லட்சியத்தை சப்பான் பொண்டிருந்தது. இருப்பினும் 1945 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானின் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவின்  ஏகாதிபத்தியம்

ஒரு முன்னாள் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடாக ஏகாதிபத்திய எதிர்ப்பி்னை வெளிப்படுத்தி வந்த அமெரிக்கா காலப்போக்கில் தனது கொள்கைகளிலிருந்து விலகி இன்று முக்கிய ஏகாதிபத்திய சக்தியாக விளங்கி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், தியோடோர் ரூஸ்வெல்ட் மத்திய அமெரிக்காவில் செயல்படுத்திய தலையீட்டுக் கொள்கைகள் மற்றும் உட்ரோ வில்சன் அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டத்தில் "ஜனநாயகத்திற்காக உலகத்தை பாதுகாப்போம்" என்று முழங்கியது அமெரிக்காவின் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அமெரிக்கா பெரும்பாலும் இராணுவப் படைகளால் ஆதரவளிக்கப்பட்டு அவை திரைக்குப் பின்னால் இருந்து பெரும்பாலும் இயக்கப்பட்டன. வரலாற்று பேரரசுகளின் ஆதிக்கம் மற்றும் மேலாதிக்கத்தின் பொதுவான கருத்துடன் இது ஒத்திருக்கிறது. 1898 இல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அமெரிக்கர்கள் பிலிப்பைன்ஸிலும் கியூபாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்கினர்.  2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி உலகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 இராணுவ தளங்களை அமெரிக்கா கொண்டுள்ளது.

இந்தியாவில் ஐரோப்பியர்கள் ஏகாதிபத்தியம்

போர்ச்சுகீசியர்கள் (Portuguese)

வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் போர்ச்சுகீசியர்கள். போர்ச்சுகீசிய மன்னரான ஹென்றி தனது கப்பல் மாலுமிகளை புதிய கடல்வழி பயணத்தை ஊக்குவித்ததன் காரணமாக வாஸ்கோடகாமா என்ற மாலுமி மே-27-1498 -ல் நன்னம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கள்ளிகோட்டையை அடைந்தார்.அப்போதைய கள்ளிகோட்டை மன்னரான சாமரின் போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ய அனுமதி அளித்தார்.கள்ளிகோட்டை,கண்ணனூர்,கொச்சி ஆகிய இடங்களில் போர்ச்சுகீசியர்கள் வாணிக நிலையங்களை நிறுவி வணிகம் மேற்கொண்டனர்.

டச்சுக்காரர்கள் (Dutch)

டச்சுக்காரர்கள் என்பவர்கள் ஹாலந்து நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவர். இவர்கள் 1602-ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டு, இந்தியாவில் மசூலிப்பட்டினம், புலிகாட், சூரத், காரைக்கால், நாகப்பட்டினம், கசிம்பசார் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினர். ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக போட்டி நிலவியது.எனவே தங்கள் வாணிக மையங்களை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.

ஆங்கிலேயர்கள் (British)

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ஆங்கிலேயர்கள். 1609-ல் இங்கிலாந்திலிருந்து கேப்டன் வில்லியம் ஹாகின்ஸ் ஜகாங்கீரின் அரசவைக்கு வந்தார். போர்ச்சுகீசியர்களின் தூண்டுதலினால் ஆங்கிலேயர்களுக்கு முதலில் அனுமதி தர மறுத்தாலும் 1612-ல் ஜகாங்கீரிடம் அனுமதி பெற்று ஆங்கிலேயர்கள் 1613-ல் சூரத்தில் வணிக நிலையத்தை நிறுவினர். இது முதல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி 1858-வரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

டேனியர்கள் (Danish)

டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் டேனியர்கள் ஆவர். 1620-ல் தரங்கம்பாடியில் டேனிஷ் வணிக நிலையம் நிறுவப்பட்டது. இந்தியாவில் அவர்களது வணிக நிலையங்களை விரிவுபடுத்தவில்லை. எனவே 1845-ல் தங்களது குடியேற்றங்களை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.

பிரெஞ்சுக்காரர்கள் (French)

பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயி மன்னரின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழு 1664 -ல் அமைக்கப்பட்டது. இவர்கள் 1668-ல் சூரத்திலும் 1669-ல் மசூலிப்பட்டினத்திலும் வாணிபத் தளங்களை நிறுவினர்.1673 -ல் பாண்டிச்சேரியில் வணிக நிலையங்களை நிறுவினர்.பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போட்டி நிலவியது. இது இந்தியாவில் போர்களாக மாறின. இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றனர். பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com