அரசியலமைப்பு வகைகள்

அரசியலமைப்பு வகைகள்

அரசியலமைப்பு வகைகள்

(CLASSIFICATION OF CONSTITUTION)

அறிமுகம் :

அரசியலமைப்பு மற்றும் அரசமைப்பு - இரண்டும் நடைமுறையில் உள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அரசியலமைப்பை பெற்றிருக்க வேண்டும். அரசியல் அமைப்பின்றி ஒரு நாட்டினை ஆட்சி செய்வது இயலாத காரியம். ஒரு சில வி முறைகளும், கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இருய ருக்கின்றன என்பதனை வரலாறு மூலம் நாம் அறிகிறோம். சீரான, அமைதியான நாட்டினை உருவாக்க இவைகள் வேண்டும்.

குழப்பமின்றி சிறப்பாக ஆட்சி செய்ய அரசியலமைப்பு இன்றியமையாதது. ஜனநாயக நாடு அல்லது சர்வாதிகார நாடாக இருந்தாலும் அதை நிர்ணயிக்க ஒரு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை ஒவ்வொரு நாடும் ஏற்றுக்கொள்கிறது. தற்பொழுது விதிமுறைகள் எல்லாம் அரசியலமைப்பு என்ற அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறிதல் வேண்டும்.

அரசியலமைப்பின் பொருளும், விளக்கமும்:

ஒரு நல்ல அரசாங்கத்தின் அமைப்பும் அதன் அதிகாரமும் அரசியலமைப்பின் நிலையை உணர்த்துவதாக அமையும். நற்குடிமகனின் உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் எவ்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் என அரசமைப்பை கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அரசமைப்பு என்பது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எழுதப்படாமலும் செயல்படுத்தப்படலாம் என்பதை உணரவேண்டும்.

சில நேரங்களில் அரசியலமைப்பு நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் விதிகளும், பழமொழிகளும், நடைமுறைகளும் கொண்டு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என கருதப்படுகிறது. பல அரசியல் அறிவியல் மேதைகள் அரசியலமைப்பு என்ற வார்த்தைக்கு விளக்கம் அளிக்க முயற்சி மேற்கொண்டனர்.

அரசியலின் தந்தை எனப் போற்றப்படும் அறிஞர் அரிஸ்டாட்டில் "குடிமக்கள் அரசின் அங்கம் எனவும் அவர்களுடைய தொடர்புகளை அரசியலமைப்பு ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி ஒழுங்குபடுத்துகிறதெனவும்" கூறுகிறார்.

உல்சே(Woolsey) அரசியலமைப்பு என்பது அரசாங்கத்தின் அதிகாரத்தை பற்றியும் ஆளப்படுவோரின் உரிமைகள் பற்றியும் இவை இரண்டிற்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றியும், எடுத்துக் கூறும் விதிகளின் தொகுப்பு" என்றும் விளக்குகின்றார்.

பிரைஸ் (Bryce) கூறுகையில் “ஒரு சமுதாயம் உருவாகி ஆளப்பட ஒட்டுமொத்த சட்டங்களும், மரபுகளும் உள்ளடங்கிய விதிமுறைகளின் பெட்டகமே அரசியலமைப்பு” என்கிறார். பௌசீயர் (Boucier) “ஒரு அரசின் அரசமைப்பு சட்டம் என்பது அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்ற கொள்கைகளின் அடிப்படையிலும் அந்த அரசின் இறைமை அதிகாரம் யாருக்கு அல்லது எதற்கு தரப்பட்டிருக்கின்றது, என்றும் அந்த அதிகாரம் எந்த வகையில் செயல்படுத்தப்படுகின்றது என்றும் எடுத்துக் காட்டும் சட்டமாகும்” என்று விளக்குகிறார்.

“அரசாங்கம் அல்லது சமுதாயத்தில் இறைமை அதிகாரம் தரப்பட்டிருக்கும் முறையை விளக்குவதே அரசமைப்பு சட்டம்” என்று ஜார்ஜ் கார்ன்வெல் லூயிஸ் (George Cornewell Lewis) எடுத்துக்காட்டுகிறார். “குடிமக்களுக்கு இன்றியமையாததான சலுகைகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தரப்படும் முக்கியமான உரிமைகளை ஒழுங்குப்படுத்துகின்ற எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத சட்டங்களே ஒரு அரசின் அரசியலமைப்புச் சட்டமாகும்” என சர் ஜேம்ஸ் மெக்கின்டோ (Sir James Macintosh) கூறுகிறார்.

“அரசமைப்பு சட்டமே அரசாங்கமாகும்” என்றார் லீகாக் (Leacock). “உயர் அரசாங்கம் ஒன்றின் அமைப்பு முறையை ஏற்படுத்துவது அரசமைப்பு” என்று ஆஸ்டீன் (Austin) கூறுகின்றார். மேலே கூறப்பட்டுள்ள விளக்கங்களை அடிப்படையாக கொண்டு அரசமைப்பு சட்டம் என்ன என்பதை நாம் கூறலாம். அது

➢ நாட்டின் ஆதாரச்சட்டமாகும்.

➢ எழுதப்பட்டோ அல்லது எழுதப்படாமலோ இருக்கலாம்.

➢ அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் அதிகாரத்தை விவரிக்கின்றது.

➢ குடிமக்களின் உரிமையை கூறுகின்றது.

➢ ஆளப்படுவோருக்கும், அரசாங்கத்திற்கும் இடையே உள்ள உறவைப்பற்றிக்

குறிப்பிடுகின்றது.

➢ இதுவே உயர்ந்த சட்டமாகும். இது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அரசியலமைப்பின் அவசியம்

(NEED FOR A CONSTITUTION)

அமெரிக்காவில் கி.பி. 1776-ஆம் ஆண்டில் புரட்சி ஏற்பட்டது. அதிலிருந்து அனைத்து நாடுகளிலும் அரசமைப்பு அவசியமான ஓர் அடிப்படை ஆவணம் என்று உணரப்பட்டது. இந்த அரசியலமைப்பு மக்களாட்சியின் அஸ்திவாரம் என்று கருதப்படுகிறது. கீழே தரப்பட்டுள்ள காரணங்களுக்காக அரசியலமைப்பு தேவைப்படுகிறது.

1. அடிப்படை சட்டம் அரசாங்கத்தின் கடிவாளமாகும்

2. தனி மனித உரிமையை பாதுகாக்கவும்

3. சட்டத்தின் ஆட்சி நிலைக்கவும்

4. குழப்ப நிலையிலிருந்து மீட்கவும்

5. இறைமை அதிகாரத்தை வரையறுக்கவும்

6. நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததிகளின் விருப்பு, வெறுப்புகளை கட்டுப்படுத்தவும்

அரசமைப்பு மிகவும் அவசியம். “சர்வாதிகார ஆட்சியாக இருயதாலும் கொடுங்கோல் ஆட்சி அரசாக இருந்தாலும் அரசமைப்பு தேவைதான். மேலும் அரசமைப்பு இல்லாத அரசு ஒரு குழப்பமான ஆட்சியை அமைத்துவிடும்” என ஜெல்லினிக் கூறுகிறார்.

அரசமைப்பின் உள்ளடக்கங்கள்

(CONTENTS OF THE CONSTITUTION)

ஓர் அரசமைப்பு கீழ்க்கண்டவற்றை பெற்றிருக்க வேண்டும்.

1. நிர்வாக அமைப்பும், நிறுவனமும்.

2. அரசாங்க அங்கங்களின் செயல்பாடுகள் அதிகாரங்கள் மற்றும் இடையே உள்ள தொடர்புகள்.

3. குடிமக்களின் அடிப்படை உரிமைகள்.

4. மக்களுடன் அரசாங்கத்தின் உறவு.

5. அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள்.

மேற்கூறிய அனைத்து கூறுகளிலும் முதல் மூன்று கூறுகளும் இன்றியமையாதவை. மேலும் “பர்ஜெஸ்” என்னும் அறிஞர் அரசியலமைப்பில் சுதந்திரம், அரசாங்கம் மற்றும் இறைமை அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டுமெனக் கூறுகிறார்.

அடிப்படை உரிமைகளின் தேவை:

(NEED FOR FUNDAMENTAL RIGHTS)

அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது அவசியமாகும். ஏனெனில்அது உறுதியான தீர்மானமான கட்டுப்பாடுகளை அரசாங்கத்திற்கு விதிக்கிறது. மேலும் தனி மனித உரிமைகளை எந்த அரசாங்கமும் மீற இயலாது.

அடிப்படை உரிமைகள் மக்களாட்சியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றன. ஏறத்தாழ உலகின் அனைத்து எழுதப்பட்ட அரசியலமைப்புகளிலும் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்பின் பகுதி 3-ல் அங்கம் 12-32-ல் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற இயலாது. இவ்வுரிமைகளை அரசு மீறவும் இயலாது. மேலும் அடிப்படை உரிமைகளை பறிக்க மாநில அரசுகள் சட்டம் இயற்றினால் அவற்றை நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டங்களுக்கு முரணானது என அறிவிக்கும்.

அமெரிக்கர்கள் அடிப்படை உரிமைகளுக்கு புனிதத் தன்மையுடன் கூடிய மரியாதையை அளிக்கின்றனர். உரிமைகள் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் ஓர் எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகளுக்கும் ஒரு கட்டுப்பாடு தேவை. இல்லையென்றால் அப்படிப்பட்ட நிலைமை குழப்பமான சூழ்நிலைக்கு இழுத்துச் சென்று விடும். பல அரசியலமைப்புகள் தேவையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அரசாங்க அமைப்பு முறை :

(CONSTITUTION OF GOVERNMENT)

அரசமைப்பு என்பது அரசின் அமைப்பு மற்றும் அதன் அதிகாரத்தையும் குறிப்பதாகும். அதிகார வரம்புமுறையை கோடிட்டு காட்டுவதே அரசியலமைப்பின் முக்கிய நோக்கமாகும். அரசியலமைப்பு முழுவதும் அரசாங்கத்திற்கு வழங்கும் அதிகாரங்கள் மற்றும் பணிகள் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றன.

பரந்த அடிப்படையில் அரசாங்கங்கள் பின்வருவனவற்றைப் பெற்றிதிருத்தல் அவசியம் :

1. அரசின் ஒவ்வொரு துறைக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது.

2. குறிப்பிடத்தக்க அரசாங்க ஏஜென்சிகளின் அமைப்பு இருக்க வேண்டிய முறை

3. அவைகளின் பதவிக்காலம் மற்றும் அதிகாரம் செய்யும் முறை

4. பொதுத் துறை பணியாளர்கள் நியமிக்கப்படும் முறை, மற்றும்

5. வாக்காளர் தொகுதிகள் அமைப்பு

ஒரு சில அரசியலமைப்புகள் அரசாங்கத்தின் அதிகாரங்களை தெளிவாகவும், விரிவாகவும் குறிப்பிடுகின்றன. மேலும் ஒரு சில அரசமைப்புகள் அரசாங்கத்தின் பொதுத் தன்மையையே மேலெழுந்தவாரியாக சுருக்கமாகக் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க அரசியலமைப்பில் அதிகாரப் பிரிவினைக் கொள்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. மூன்று அங்கங்களான செயலாட்சிக்குழு, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவைகளின் அதிகாரங்களையும் அவற்றின் அதிகார எல்லையையும் அரசியலமைப்பு தெளிவுப்படுத்துகிறது. மைய, மாநில அரசுகளின் அதிகாரத் தடைகளையும் சம நிலை வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.

“உலகில் உள்ள அனத்து அரசியலமைப்புகளுக்கும் மேலாக, மக்களின் சூழ்நிலைக்கு ஏற்றவகையிலும், எழுதப்பட்ட அரசியலமைப்பின் உயர்விற்கும், அதன் எளிமைக்கும், அழகான நடைக்கும் அருமையான சிறப்பான நீதியியல் முறைக்கும் கொள்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதற்கும் அதன் விளக்கங்களின் வளையும் தன்மைக்கும் அமெரிக்காவின் அரசியலமைப்பு ஓர் எடுத்துக்காட்டு” என பிரைஸ் பிரபு கூறுகிறார்.

நம் இந்திய அரசியலமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் எவ்விதமான குழப்பமும் ஏற்படாத வகையில், எந்த நடைமுறையையும் விட்டுவிடாமல் நேர்த்தியான முறையில் அரசியலமைப்பு பேரவை கவனம் மேற்கொண்டது சிறப்புடையதாகும். நமது இந்திய அரசமைப்பு உலகிலேயே மிகப்பெரிய அரசியலமைப்பு ஆகும் என்று வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. மேலும், வேற்றுமையில் ஒற்றுமை, பல்வேறு விதமான கலாச்சாரம், மொழி, இனம், மதம் மற்றும் பல வேறுபாடுகளைக் கடந்து நிற்கும் பிரமாண்டமான அரசியலமைப்பு எனவும் கருதப்படுகிறது.

கி.பி. 1857.ம் ஆண்டு பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் வாக்குரிமை என்ற கொள்கை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கு வகை செய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற அமைப்பு முறைக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறிப்பிடப்படவில்லை. மேலும் அரசியலமைப்பில் நீதித்துறை அமைப்பு முறையைப் பற்றியும் கண்டுகொள்ளவேயில்லை. இது போன்ற அரசியலமைப்புகள் பொதுவான சுருக்கமான அரசியலமைப்புகளுக்கு உதாரணமாக விளங்குகின்றன. இவ்வாறு அமையும் அரசியலமைப்பு தோல்வியை மட்டுமே தழுவும்.

அரசியலமைப்பு திருத்தமுறைகள்:

(AMENDMENT OF CONSTITUTION)

அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள் சில சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எழுதப்பட்ட அரசியலமைப்பு ஒரு சில விதிமுறைகளை பின்பற்றுதல் வேண்டும். இவைகள் எழுதப்பட்ட அரசியலமைப்பிற்கு மிக அவசியம் என கருதப்படுகிறது. அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் முறையானது, அரசியலமைப்பின் புனிதத் தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. மேலும் தனிநபரின் சுதந்திரத்திற்கும், அரசியலமைப்பைச் சார்ந்தவைகளுக்கும் உத்திரவாதம் அளிப்பது சிறப்பிற்குரியதே.

அரசியலமைப்பு திருத்தம் எளிதான முறையிலும் கடினமான முறையிலும் கையாளப்படுகின்றது. இருப்பினும் இவை எல்லாம் சாதாரணமானவை. இவையே அரசின் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வலிமை பொருந்தியதாகும். இதனால் சட்டரீதியான அமைப்பிற்கும் உண்மையான சட்டமியற்றும் நிலைக்கும் இடையே கருத்து வேறுபாடு எழாத வகையில் அமைதல் வேண்டும்.சாதாரண முறையில் திருத்தம் மேற்கொண்டால் அரசாங்கம் நிலையற்ற தன்மையை அடையலாம். மேலும், கடினமான முறையில் திருத்தம் மேற்கொண்டால் இரண்டு வகையான விளைவுகள் ஏற்படலாம்.

முதலில் பொதுக் கருத்து அடிப்படையில் சட்டரீதியில் அல்லாத நிறுவனங்கள் ஏற்படும். இரண்டாவதாக இதுபோன்ற நிறுவனங்கள் உருவாக இடம் தராவிட்டால் கலகம் புரட்சி ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். எனவே, புரட்சி அல்லது நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிற மாதிரி அரசியலமைப்பு திருத்த முறைகள் இருக்கக் கூடாது. "ஓர் அரசியலமைப்பு எந்த சூழ்நிலையில் ஏற்பட்டதோ அந்த ¦சூழ்நிலைக்கும் அதற்கும் பிறகு பல நூற்றாண்டுகளில் ஏற்படும் மாறுதல்களுக்கும் இடம் தரும் வகையிலம் செயல்பட வேண்டுமென" ஜென்னிங்ஸ் கூறுகிறார்.

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தும் எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசியலமைப்புகளுக்குத் தேவையானவையே. இவை எழுதப்பட்ட அரசியலமைப்பில் சரியாகவும், முடிவாகவும், தெளிவாகவும் உள்ளன. எழுதப்படாத அரசியலமைப்பில் அவை தெளிவாக இல்லை. இவை தான் இரண்டிற்கும் உள்ள வேறுபாடாகும்.

சிறந்த அரசியலமைப்பின் தன்மைகள் :

(ESSENTIALS OR REQUISITES OF A GOOD CONSTITUTION)

ஒரு நாட்டில் நிலவும் சூழ்நிலைக் கேற்ப அரசியலமைப்பு தகுதியுடையதா, இல்லையா என்பதை அறியலாம். ஒரு குறிப்பிட்ட அரசியலமைப்பு பயன்படக் கூடியது என ஒரு சில நாடுகள் விரும்பலாம். ஒரு சில நாடுகளுக்கு அவை தேவையில்லை என உணரலாம். உதாரணமாக கூட்டாட்சி அரசியலமைப்பு இந்திய நாட்டிற்கு பொருத்தமாக உள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான், நேபாளம், மியான்மார் போன்ற நாடுகளுக்கு உகந்ததாக இல்லை என்பதை நாம் உணரலாம். இது அந்நாட்டின் சமூக, பொருளாதார நிலைமையைப் பொறுத்தே அமையும். ஒவ்வொரு நாடும் அதற்கேற்ற அரசியலமைப்பைத் தயாரித்துக்கொள்ளும் உரிமையை பெற்றிருக்கிறது.

ஒரு நல்ல அரசியலமைப்பு கீழ்க்கண்ட தன்மைகளைப் பெற்றிதிருத்தல் வேண்டும்.

1. தெளிவானது : (Clarity or Definiteness)

ஒவ்வொரு அரசியலமைப்பும் தெளிவாகவும், எளிய நடையில் எழுதப்பட்டும் இருத்தல் வேண்டும். எவ்வித குழப்பமும் ஏற்படுத்தாமல் தெளிவாக இருக்க வேண்டும்.

2. சுருக்கமாக இருத்தல் வேண்டும்(Brevity) :

அரசியலமைப்பு நீண்டதாக இருத்தல் கூடாது. முக்கியமான அம்சங்கள் இடம் பெற வேண்டும். அதே வேளையில் தேவையற்றது என்று எதையும் ஒதுக்கிவிடக்கூடாது. சிறியதாக, சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக விரிவாக சொல்ல வேண்டிய கருத்தை சொல்லாமல் விட்டு விடக்கூடாது.

3. விசாலமானது(Comprehensiveness) :

அரசியலமைப்பு ஒரு நாட்டின் முழுமைக்கும் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும். கூட்டாட்சி முறையாக இருப்பின் மத்திய, மாநில அரசின் அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

4. நெகிழும் தன்மை(Flexibility) :

அரசியலமைப்பு திருத்தம் செய்ய முடியாத கடினத் தன்மையுடன் இருத்தல் கூடாது. தேவையானபோது தேவையான திருத்தம் செய்யும் முறையை பின்பற்ற வேண்டும்.

5. உரிமைகள் பிரகடனம்(Declaration of rights) :

ஓர் நல்ல அரசமைப்பு எல்லா அடிப்படை உரிமைகளையும் பெற்றிதிருத்தல் வேண்டும். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் குடிமக்களின் உரிமைகள் தெள்ளத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

6. நீதித்துறையின் சுதந்திரம்(Independence of Judiciary) :

நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலே நல்ல அரசமைப்பிற்குரிய தகுதியை வெளிப்படுத்தலாகும். நீதித்துறை சுதந்திரமாக பயமில்லாமல் செயல்பட வேண்டும். நீதித்துறை மனித உரிமைகளைக் காப்பாற்றும் கேடயமாக இருத்தல் வேண்டும்.

7. வழிகாட்டும் நெறிகள் (Directive Principles of State Policy):

ஒரு நல்ல அரசு சிறப்பாக செயல்பட அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கொள்கைகளை அரசியலமைப்பு பெற்றிருக்க வேண்டும். இக்கொள்கைகள் அரசு சிறப்பாக செயல்பட கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் இந்திய அரசமைப்பில் இடம் பெற்றுள்ளன.

அரிஸ்டாட்டிலின் அரசமைப்பு வகைகள் :

(ARISTOTLE’S CLASSIFICATION OF CONSTITUTIONS)

அரசமைப்பு வகைப்படுத்துதல் தற்கால கருத்தல்ல. அரசமைப்பு வகைப்படுத்துதலுக்கு பல அடிப்படையும் ஆதாரங்களும் உள்ளன. முதன்முதலில் அறிவியல் பூர்வமான முறையில் அரசமைப்பை அரிஸ்டாட்டில் வகைப்படுத் னார். அவர் கால 158 நாடுகளின் அரசியலமைப்பை படித்து அதன் அடிப்படையிலும் இறைமை அதிகாரத்தை மையமாக வைத்தும் அரசியலமைப்புகளை வகைப்படுத்தினார். மக்களின் நல்வாழ்வை அடிப்படையான நோக்கமாகக் கொண்டவை இயல்பானவை எனவும், அதிலிருந்து மாறுபட்டவை எதிர்மறையான திரிந்தவை எனவும் அவர் விளக்கினார்.

அரிஸ்டாட்டிலின் அரசமைப்பு வகைகள் பட்டியல்

ஆட்சியிலுள்ளோர் எண்ணிக்கை

இயல்பானவை

மக்கள் நலனுக்கு

எதிரான அரசுமுறை அல்லது திரிந்தவை

ஒருவர் ஆட்சி

முடியாட்சி

கொடுங்கோலாட்சி

சிலர் ஆட்சி

உயர்ந்தோர் குழு ஆட்சி

தன்னல குழு ஆட்சி

பலர் ஆட்சி

நல்லாட்சி

மக்களாட்சி

இறைமை இருக்க வேண்டிய இடம் மற்றும் அரசின் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டுதான் அரிஸ்டாட்டில் அரசமைப்பை வகைப்படுத்தியுள்ளார். பொது நலத்தின் அடிப்படையில் தனிநபர் நடத்தும் ஆட்சி மன்னராட்சி சுய நலமுடன் ஆட்சி செய்யப்படுமானால் அதுவே கொடுங்கோலாட்சியாகும்.

சில நல்லோர் ஆட்சி உயர்ந்தோர் குழு ஆட்சியாகும். நாட்டின் நலன் கருதி செய்யும் பலர் ஆட்சி நல்லாட்சி. அதுவே சுயநல நோக்கத்தோடு நடைபெறுமானால் மக்களாட்சி அல்லது மாக்களாட்சி ஆகிறது.

அரிஸ்டாட்டில் அரசுகள் சுழற்சி முறையில் மாறுதல் அடைகின்றன என்கிறார். முடியாட்சி, கொடுங்கோலாட்சிகள் எல்லாம் திசைமாறும் பொழுது அவைகள் உயர்ந்தோர் குழு ஆட்சியாக மாறிவிடும். பின்னர் உயர்ந்தோர் குழு ஆட்சி குழப்பநிலையை அடைந்து அவை தன்னல குழு ஆட்சியாகிவிடுகிறது. தன்னல குழு ஆட்சி நீங்கி உயர்குழு ஆட்சி மலர்கிறது. பின்னர் உயர்குழு ஆட்சி மக்களாட்சியாக மலரும். இதேபோல் அரசாங்கங்கள் தொடரும். இதை விளக்கும் வண்ணம் வரைபடம் கீழே தரப்பட்டுள்ளது.

புகைப்படம்: govt change

அரிஸ்டாட்டில் அரசiமைப்பு வகைகள் விஞ்ஞான ரீதியாகவும், உண்மையாக கொடுக்கப்பட்ட பொழு லும், தெளிவானவையாக இல்லை. மேலும் இவைகள் யாவும் அறிவியல் பூர்வமான, தரமான கொள்கைகளைக் கொள்ளவில்லை. ஒரு அரசாங்க முறையிலிருந்து வேறொரு அரசாங்க முறை ஏற்படுவது சரியாக தெளிவுபடுத்தவில்லை. மேலும் அரிஸ்டாட்டில் மக்களாட்சிக்கு தவறான பொருளைத் தந்துள்ளார். அது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

அரிஸ்டாட்டிலின் மக்களாட்சியைப் பற்றிய கருத்து நடைமுறைக்கு அதாவது இன்றைய கால அரசாங்க முறைக்கு ஏற்புடையதல்ல என பேராசிரியர் ஜான் சீலி (Sir John Seely) கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடும்பொழுது அரிஸ்டாட்டில் “நகர அரசு” களைப் பற்றி அறிந்திந்தாரே தவிர “நாடு-அரசு” பற்றி அறியவில்லை. மேலும் அரிஸ்டாட்டில் அரசமைப்பு வகைகளில் வரையறுக்கப்பட்ட முடியாட்சி , தலைவர் முறை அரசாங்கம், ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அரசு முறைப்பற்றி குறிப்பிடவில்லை. சுழற்சி முறையில் அரசாங்கங்கள் மாறுகின்றன என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் தெளிவாகவும் இல்லை.

அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு பல அரசியல் அறிஞர்கள் அரசியலமைப்பை வகைப்படுத் யுள்ளனர். அறிவியல் மற்றும் நவீன காலத் ற்கேற்ப எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க பட்டியலை ஸ்டீபன் லீகாக் தந்துள்ளார். பின்வருமாறு தற்கால அரசியலமைப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. இயல்பாக மற்றும் இயற்றப்பட்ட அரசமைப்புகள்.

2. எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசமைப்புகள்.

3. நெகிழா மற்றும் நெகிழும் அரசமைப்புகள்.

இயல்பான மற்றும் இயற்றப்பட்ட அரசமைப்பு :

(EVOLVED AND ENACTED CONSTITUTIONS)

விதிமுறைகளின் வளர்ச்சி, தேவை இவைகளின் அடிப்படையில் உருவானதுதான் இயல்பான மற்றும் பரிணாம வளர்ச்சியினால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு. பரிணாமத்தின் உச்சக் கட்டமாக நாட்டில் உள்ள அரசமைப்பிற்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசமைப்புகள் தயாரிக்கப்படவில்லை. ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்டு தொடர்ந்து வளர்ந்த பழக்கவழக்கங்களும், நடைமுறைகளும், மரபுகளும், பஞ்சாயத்துக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், விதிமுறைகளும் தான் அரசமைப்பு ஏற்பட காரணங்களாக இருந்திருக்கின்றன.

இயற்றப்பட்ட அரசமைப்பு முழுக்க மனிதனின் முழு முயற்சியினால் இயற்றப்பட்டதே ஆகும். மனசாட்சிப்படி உருவாக்கப்பட்டதுதான் அரசமைப்புகள். பெரும்பாலும் அரசர்களாலும், பாராளுமன்றத்தாலும், உயர்ந்த அதிகாரம் படைத்தவர்களும் ஏன் அரசமைப்பு பேரவையினாலும் இயற்றப்பட்டவையே. இயற்றப்பட்ட அரசமைப்பின் கூறுகள் அனைத்தும் ஏதேனும் ஒரு ஆவணத்திலோ அல்லது பல ஆவணங்களிலோ எழுதப்பட்டிருக்கும். இயல்பான மற்றும் இயற்றப்பட்ட அரசமைப்புகள் தற்காலத்தில் எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசமைப்பு என பிரிக்கப்பட்டுள்ளன.

எழுதப்பட்ட அரசமைப்பு :

(WRITTEN CONSTITUTION)

எழுதப்பட்ட அரசமைப்பு ஆவண வடிவில் அல்லது நூல் வடிவில் அடிப்படை மற்றும் அரசாங்கங்களின் பல்வேறு அங்கங்களுக்கு தேவையான விதிமுறைகளின் தொகுப்பேயாகும். தீர்க்கமான முறையில் உருவாக்கப்பட்டது. நேர்மையாக, மனசாட்சிப்படி திட்டமிட்டு

உருவாக்கப்பட்டது. ஒரு சில நாடுகளில் அரசமைப்பு பேரவையினாலும், மரபுப்படியும் உருவாக்கப்பட்டிருக்கலாம். எழுதப்பட்ட அரசமைப்பு இந்திய நாட்டில் உருவாக்கப்பட்டு மற்றும் அரசமைப்பு பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை பின்வரும் வாசகங்களோடு தொடங்குகிறது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் அரசமைப்பை ஏற்று இறைமை நிறைந்த மக்களாட்சி குடியரசாக நிறுவுகிறோம்.

நம்முடைய அரசமைப்பு பேரவையில் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் இன்று இந்த அரசமைப்பினை ஏற்று இயற்றி நமக்கு நாமே வழங்கிகொள்கிறோம் என்ற சொற்களோடு முடிகிறது.

அமெரிக்காவின் அரசமைப்பு, பிரதிநிதிகளின் பிரத்தியேக கூட்டத்தில் அதிபர் ஜார்ஜ்வாஷிங்டன் தலைமையில் தயாரிக்கப்பட்டது. இந்த அரசமைப்பு செப்டம்பர் 17, 1787-ல் பிலடெல்பியா மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் அவை மாகாண அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்தியா, மியான்மார் மற்றும் அமெரிக்காவில் அரசியலமைப்பு ஒரே தேதியில் உருவாக்கப்பட்ட தனி ஆவணமாக உள்ளது. ஆனால் பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரு தொடரான சிறு சிறு துண்டுகளாக அரசமைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது. உதாரணம் பிரான்ஸ் அரசமைப்பு மூன்றாம் குடியரசில் தனி ஆவணமாக இல்லை. இவை வெவ்வெறு தேதிகளில் பிப்ரவரி 24 பிப்ரவரி 26 மற்றும் ஜுலை 26, 1874 ஆம் ஆண்டு அதாவது அரசியலமைப்பு சட்டங்களாக இயற்றப்பட்டன.

எழுதப்பட்ட அரசமைப்பு இருப்பதனால் சாதாரண சட்டங்களுக்கும் அரசமைப்புச் சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாக அறிய முடியும். அரசமைப்பு சட்டம் என்பது இறைமை அதிகாரம் உள்ள ஆட்சியாளர்களால் இயற்றப்படுகிறது. இவைகள் சாதாரண நடைமுறையை பின்பற்றி மாற்ற இயலாது. சாதாரண சட்டங்கள் அரசமைப்பு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சாதாரண சட்டங்கள் அரசமைப்பு சார்ந்த சட்டங்களினின்றும் மாறுபடும் போது அவை செல்லாதவையாகும்.

எழுதப்பட்ட அரசியலமைப்பின் நிறைகள்:

(Merits of a Written Constitution)

1. திடமானது, நிலையானது, குழப்பத்திற்கு இடமில்லை. அடிப்படை விதிகள் எழுதப்பட்டிருப்பதால் விருப்பத்திற்கு ஏற்ப அறியலாம். அரசாங்க அங்கங்களின் அதிகாரம் மற்றும் நிர்வாக அமைப்பு முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதைப்பற்றி அறிய குழப்பமோ தகராரோ ஏற்படாது. அவ்வாறு கருத்து வேறுபாடு நிலவினால் நீதிமன்றத்தை அணுகலாம்.

2. மிகுந்த கவனத்துடன் நீண்ட பிரதிவாதத்திற்கு பிறகு எழுதப்பட்ட அரசமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட அனுபவம் மற்றும் ஆழ்ந்த அறிவை புலப்படுத்துகிறது. தற்காலிக விருப்பு-வெறுப்புகளுக்கும் விரைவான தீர்மானங்களுக்கும் இடமில்லை.

3. எழுதப்பட்ட அரசமைப்பு தனி மனிதன் உரிமையை பாதுகாக்கிறது. அரசமைப்பில் உரிமைகள் சேர்க்கப்பட்டுள்ளதனால் இவைகள் சாதாரண சட்டங்களை விட உயர்வாக கருதப்படுகின்றன.

அவ்வாறு இருப்பதால் வெவ்வேறு அரசாங்கங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றுவதிலிருந்து உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

4. அரசியலமைப்பை அவ்வப்போது உள்ள அரசாங்கங்கள் மாற்றும் போது மக்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்றப்படுவதினின்றும் அது பாதுகாக்கப்படுகிறது.

5. நெருக்கடி காலத்திற்கு ஏற்றது. அசாதாரண நிலை ஏற்படும் போது எழுதப்பட்ட அரசமைப்பு நிலையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.

6. கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எழுதப்பட்ட அரசமைப்பு பொருத்தமானது. ஏனென்றால் மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்கள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன.

எழுதப்பட்ட அரசியலமைப்பின் குறைகள் :

(Demerits of a written constitution)

1. திருத்தம் செய்ய கடினமான முறையை பின்பற்ற வேண்டும். நெகிழா தன்மையையும் பழைமை வாதமும் பெற்றுள்ளது.

2. எழுதப்பட்ட அரசமைப்பில் நீதித்துறை பழமை வாதத்தை பின்பற்றும் அரசாங்கம் காலத்திற்கேற்ப சட்டம் கொண்டுவர நினைக்கும் போது, நீ மன்றம் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என பார்க்க நேரிடும்.

3. நாட்டின் விதிமுறைகள் மற்றும் குறிகோள்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருப்பதால் எல்லா காலத்திற்கும் இது பொருத்தமானதாக இருக்காது. இது பிற்காலத்தில் வளர்ச்சியைத் தடைசெய்கிறது.

4. விரிவான விளக்கமுடையதாக இருப்பதால் சில சமயங்களில் மிகை படுத்துப்பட்ட சட்ட விளக்கத்திற்கு வழி ஏற்படுத்துகிறது.

எழுதப்படாத அரசமைப்பு :

(UNWRITTEN CONSTITUTION)

ஒரு நாட்டின் அரசியலமைப்பு உருவாவது அந்த நாட்டின் இயல்பான வளர்ச்சியையும் கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் பொறுத்ததாகும். இது ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஒரு சில எழுதப்பட்டிருந்தாலும் அவை எழுதப்படாத அம்சங்களை விட மிகக்குறைவாக உள்ளதாக அறியலாம். இதற்கு உதாரணம் இங்கிலாந்து.

எழுதப்படாத அரசியலமைப்பின் நிறைகள்:

(Merits of an Unwritten Constitution)

1. காலத் ற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப சட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது சட்டங்களை சேர்த்துக் கொள்ளலாம். வரையறை இல்லை. அங்கே வளர்ச்சி உண்டு.

2. வளையும் தன்மையுடையது. பொதுமக்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வப்பொழுது மாற்றங்களை கொண்டு வரலாம். புரட்சிகள் தேவையில்லை.

3. எழுதப்படாத அரசமைப்பில் மாற்றங்களை எளி ல் கொண்டு வரலாம். எதிர்பாராத நேரங்களில் மாற்றங்கள் செய்வது நன்மை தரும்.

4. பண்பாடுகள் மற்றும் மரபுகளைக் காப்பாற்றுவதில் அவை சிறப்பானவை. பிரிட்டிஷ் அரசமைப்பு உடைபடாத வரலாற்றினைப் பெற்றுள்ளது. இவ்வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை வரலாறு மூலம் அறியலாம்.

எழுதப்படாத அரசியலமைப்பின் குறைகள் :

(Demerits of an unwritten constitution)

1. முடிவற்றது. குழப்பம் ஏற்படுத்தக்கூடியது. விதிமுறைகளை சாதாரண மனிதன் அறியது கொள்ள வாய்ப்பு இல்லை. எழுதப்படாத அரசமைப்பு உயர்ந்த நேர்மையான மனப்பாங்கை பெற்றிருப்போரால் தான் செயல்படுத்த முடியும். அதன் தன்மை வேகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள அவர்களால்தான் முடியும். சாதாரணமானவர்களால் புரிந்து கொள்ளவோ பின்பற்றவோ இயலாது.

2. சில சமயங்களில் நிலையற்ற தன்மையையுடையது.

3. அதிகாரம் வழங்கப்பட்ட நிலையைக் காட்டிலும் நீதிமன்றம் தன்னுடைய அதிகார எல்லையை நீட்டித்துக்கொள்ளும். நீதிமன்றம் தன் விருப்பம் போல சட்ட இயல் மற்றும் அதன் நுணுக்கங்கள் ஆகியவற்றை அதன் விருப்பப்படி எடுத்தாளும்.

4. எழுதப்படாத அரசியலமைப்பு மக்களாட்சிக்கு உகந்ததல்ல என்ற கருத்து வலிமையாக உள்ளது. மக்கள் வரையறுக்கப்பட்ட சட்ட விதிகளைத் தான் விரும்புவர். எழுதப்படாத அரசியலமைப்பு உயர்ந்தோர் குழு ஆட்சிக்குத்தான் பயன்படும்.

நெகிழும் மற்றும் நெகிழா அரசமைப்பு :

(FLEXIBLE AND RIGID CONSTITUTION)

அரசமைப்பு மற்றும் அதற்கும் சாதாரண சட்டங்களுக்கும் உள்ள உறவு மேலும் அரசியலமைப்பை திருத்தும் முறைகளைப் பொறுத்துதான் அரசியலமைப்பு வகைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரைஸ் கூறுகிறார். இத் திட்டத்தின்படி இரண்டு வகையான அரசமைப்புகள் உள்ளன. அவை நெகிழும் மற்றும் நெகிழா அரசமைப்புகளாகும்.

நெகிழும் அரசமைப்பு :

(FLEXIBLE CONSTITUTION)

நெகிழும் அரசமைப்பில் அரசமைப்பு சட்டத்திற்கும் சாதாரண சட்டத்திற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இரண்டுமே ஒரே மாதிரியான முறைகளைப் பின் பற்றியே இயற்றப்படுகின்றன. அரசமைப்பு பொதுவாக மரபுகளின் அடிப்படையிலோ அல்லது எழுதப்பட்டோ இருக்கின்றன. ஒரே மாதிரியாகவே திருத்தம் செய்யப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சாதாரண சட்டத்திற்கும் திருத்தம் செய்ய எவ்வித பிரத்தியேக நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.

நெகிழும் அரசியலமைப்பிற்கு சிறப்பான உதாரணமாக இங்கிலாந்து அரசமைப்பை கருதலாம். இங்கிலாந்து பாராளுமன்றமே உயர்யத அதிகாரம் அல்லது இறைமை அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.

பாராளுமன்றம் எந்த சட்டம்வேண்டுமானாலும் இயற்றலாம். அதற்கு தடையேதும் இல்லை.

இயற்றப்பட்ட சட்டம் எதையும் பாராளுமன்றம் மாற்றலாம். அடிப்படை அல்லது அரசியலமைப்பு சட்டங்கள் என இங்கிலாந்து அரசமைப்பில் எவ்வித பாகுபாடும் குறிப்பிடப்படவில்லை. சாதாரண சட்டங்களை இயற்றுவது போல இங்கிலாய ல் சாதாரண முறையில் அரசியலமைப்புத் திருத்தங்களையும் கொண்டு வரலாம். பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை மறு ஆய்வு செய்யவோ ரத்து செய்யவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை.

நிறைகள்

(Merits)

1. நெகிழும் அரசமைப்பை சாதாரண சட்டங்களைப் போல் திருத்தம் செய்யலாம். காலத்திற்கேற்றார் போல் புதிய முறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

2. வளையும் தன்மை கொண்டுள்ளதால் சுலபமாக மக்களின் தேவைகளை நெகிழும் அரசமைப்பில் கொண்டு வரலாம். மக்களின் தேவை அவ்வப்பொழுது நிறைவேற்றப்பட்டுவிட்டால் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது.

இந்நிலைதான் இங்கிலாந்தில் பல கால கட்டங்களில் புரட்சி ஏற்படாமல் இருந்தததற்கு காரணம் அவ்வப்பொழுது மக்களின் தேவைக்கேற்ப சட்டங்களை இயற்றிக் கொள்வதே ஆகும். இதனால் முடியாட்சி முறையிலிருந்து பாராளுமன்ற முறைக்கு இங்கிலாந்து வந்தது இயல்பானது. அதில் வன்முறை ஏதும் இல்லை.

பிரீமேன், பிரிட்டிஷ் அரசமைப்பை பற்றி குறிப்பிடும்பொழுது பிரான்ஸ் நாட்டில் புரட்சி காரணமாக ஐந்து முறை அரசமைப்பு மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டி பிரிட்டிஷ் நாட்டை பார்த்து பெருமைப்பட்டார்.

3. வளரும் நாடுகளுக்கு நெகிழும் அரசமைப்பு தேவை. வளர்ச்சி அரசமைப்பின் அடிப்படையை பாதிக்காத வண்ணம் அமைந்துள்ளது. மேலும் சமுதாய அரசியல் மாற்றம் சிறப்பாக அமையதுள்ளது. நெகிழும் அரசமைப்பிற்கு வலுவூட்டம் தருவதாக உள்ளது - அரசியல் மற்றும் சமுதாயத்தை சரியாக மாற்றம் செய்ய எப்பொழுதும் மிகச்சரியான அரமைப்பு அமைய இயலாது.

4. தேசிய மரபுகளின் அடிப்படையில் நெகிழும் அரசமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேவையும் மாற்றமும் நெகிழும் அரசமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றில் தொடர்ச்சியாக காணப்படுவதாகும். நெகிழும் அரசியலமைப்பு பொது மக்கள் கருத்தை உணரக்கூடிய நாடித்துடிப்பாக உள்ளதோடு மக்களின் எண்ணத்தையும் முன்வைக்கிறது.

“மக்கள் அரசாங்கத்திற்காக நடைமுறைக்கு வருகின்ற அரசமைப்புக்கள் எல்லாவற்றிலும் தேசிய வாழ்க்கையை பிரதிபலித்து இயற்கையாக ஏற்படுவதும் தேசிய அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து வருவதும் சமுதாய மற்றும் அரசியல் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற அரசாங்கத்தின் உணர்வுகளை குறிப்பிட்ட ஒவ்வொரு காலத்திலும் பிரிதிபலிப்பதே மிகச் சிறந்தது” என்று நீதியரசர் கூலி என்பவர் குறிப்பிடுகிறார்.

குறைகள் :

(Demerits)

1. மாறிக் கொண்டே இருப்பது மக்களைத் திருப்திபடுத்த பெரும்பான்மையோர், சிறுபான்மையோரின் கணக்கில் நன்மையை கொள்ளாமல் இருக்க வழிவகுக்கும். இத்தகைய அரசியலமைப்பு நிலையான சிறந்த நிர்வாகத்தை தர இயலாது.

2. திருத்தம் செய்யும் முறை சுலபமாக உள்ளதால் அரசியலமைப்பு சுலபமாகவும் எளிதாகவும் மாற்றப்படுகிறது. மாறும் தன்மையுடைய மக்களின் பெருவிருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றம் செய்யப்படுகிறது. தீர்மானங்கள் சில நேரங்களில் ஆவேச உணர்ச்சிகள் அடிப்படையில் அமைதி மற்றும் ஒற்றுமை பாதிப்புக்குள்ளாகும். ஸ்திரதன்மைக்கு தொல்லை தரும் நிலையும் ஏற்படலாம். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வழிவகுக்கலாம்.

பொதுவாக கூட்டாட்சிமுறை அரசாங்கத்திற்கு நெகிழும் அரசியலமைப்பு உகயதது அல்ல. ஏனெனில், அ ல் கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும் இதர மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் உறுதி செய்யப்பட்டிருக்கமாட்டா. கூட்டாட்சி முறையில் நெகிழும் தன்மையுடைய அரசியலமைப்பு இருந்தால் பின் தரப்பட்டுள்ள இரண்டில் ஒன்று நடை பெற வாய்ப்புள்ளது.

1. அரசின் இதர அரசாங்கங்கள் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் இழயதுவிடும். மேலும் மைய அரசு கூட்டாட்சி தன்மைக்கு எதிராக அதிக அதிகாரம் பெற்றதாகிவிடும்.

2. நெகிழும் அரசமைப்பு நிரந்தரமாக இல்லாமல் இருப்பதால் மைய அரசாங்கம் நீங்கலான இதர அரசாங்கங்கள் சுதந்திரமாக செயல்படும்.

அரசமைப்பு சாதாரண முறையில் மாற்றப்படுவதால் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் மிக எளிதாக அடிப்படை உரிமைகளை மாற்றும் அல்லது நீக்கம் செய்யும்.

நெகிழா அரசியலமைப்பு :

(RIGID CONSTITUTION)

நெகிழா அரசமைப்பில் திருத்தம் செய்ய சில பிரத்தியேக முறைகள் தேவைப்படுகின்றன. நெகிழா அரசமைப்பிற்கு உதாரணங்களாக அமெரிக்கா, ஆஸ் ரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை குறிப்பிடலாம். நெகிழா அரசமைப்பு சாதாரண சட்டங்களை விட உயர்வானது. சாதாரண சட்டங்களை மாற்றுவது போல் இல்லாமல் சில குறிப்பிட்ட தனி வழிகள் மூலம் தான் நெகிழா அரசியலமைப்பிற்கு திருத்தம் மேற்கொள்ளலாம். இதனால் திருத்தம் செய்வது கடினமாகும். அரசின் இறைமைக்கு உயர்வு அளிப்பதே நெகிழா அரசியலமைப்பின் நோக்கமாகும். இத்தன்மைக்கு புனிதத்துவம் வழங்குவது அரசியலமைப்பே ஆகும்.

அமெரிக்க அரசமைப்பு நெகிழா அரசமைப்பிற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். அமெரிக்க பாராளுமன்றம் அரசியலமைப்பிற்கு எதிராக சட்டம் இயற்ற இயலாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்க நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்குகிறது. மேலும் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் அரசமைப்பு சட்டங்களுக்கு எதிராக இயற்றுகின்ற சட்டங்களை நிராகரிக்கவும் செய்யலாம்.

இந்திய அரசியலமைப்பு இங்கிலாந்து அரசமைப்பு போல் நெகிழும் தன்மையும் அமெரிக்க அரசியலமைப்பு போல நெகிழாத்தன்மையும் பெற்றதல்ல ஆங்கில அரசமைப்பு போல அதிகப்படியான நெகிழும் தன்மையையோ அமெரிக்க அரசியலமைப்பு போல அதிக நெகிழாதன்மையையோ பெற்றில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையை கொண்டுள்ளது.

நிறைகள் :

1. நிரந்தரமானது, மாறாத தன்மையுடையது. அனுபவமும் அறிவாற்றல் பெற்றவர்களாலும் எழுதப்பட்டதாகும். இதுவே ஒரு நாட்டின் திறமையை எடுத்துக்காட்டும் அளவுகோல். மக்கள் இதை புனித நூலாக ஏற்றுக் கொள்வதுடன் அதன் வழிமுறைகள் படி நடந்து கொள்ளவும் தயாராக உள்ளனர்.

2. சட்டமன்றத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து அரசமைப்பை பாதுகாக்கின்றது. அரசமைப்பு சட்டம், சட்ட மன்றங்களின் கைப்பாவையாக போய்விடக்கூடாது.

3. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது இவ்வகை அரசியலமைப்பே. அடிப்படை உரிமைகள் அரசமைப்பின் ஒரு பகுதியாகும். இவைகளை எளிதில் மாற்றக் கூடாது.

4. சிறுபான்மையினரை பாதுகாப்பது நெகிழா அரசியலமைப்பு பெரும்பான்மையினர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறுபான்மையினரை பாதிக்கக் கூடாது. அவ்வாறு பாதிக்கும்போது நீதிமன்றம் அதனை பாதுகாக்க வேண்டும்.

5. நெகிழா அரசியலமைப்பு மக்களின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. மக்களின் கொந்தளிப்பு உணர்வுகள் அரசியலமைப்பை மாற்றும் முறையை கைவிட்டுவிடக் கூடாது.

6. கூட்டாட்சி ஒற்றுமைக்கும், பலத்திற்கும் பாதுகாப்பிற்கும் நெகிழா அரசமைப்பு முக்கியமாக தேவைப்படுகிறது. நெகிழா அரசியலமைப்பில்தான் கூட்டாட்சிப் பகுதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஒன்றின் மீது இன்னொன்று ஆதிக்கம் செலுத்த இயலாது. இது நெகிழா அரசமைப்பில்தான் சாத்தியமாகும்.

குறைகள் :

1. சில நேரங்களில் அரசியலமைப்பு மாற்றம் தவிர்க்க இயலாதது. ஆனால் நெகிழா அரசமைப்பை சுலபமாக திருத்தம் செய்ய முடியாது.

2. நெகிழா அரசமைப்பை எழுதியவர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. வளரும் நாடுகளுக்கு இவ்வரசமைப்பு தகுந்ததல்ல. மேலும் வளரும் நாடுகளில் அடிக்கடி மாற்றம் தேவைப்படுகிறது.

3. அரசமைப்புச் சட்டத்திற்குள் இயற்றப்பட்ட சட்டங்கள் வருகின்றவா என உறுதி செய்து கொள்வதே நெகிழா அரசமைப்பில் நீதிமன்றத்தின் கவலையாக இருக்கும்.

குறைகளும் நிறைகளும் இருப்பினும் இன்றைய ¦சூழ்நிலையில் நெகிழா மற்றும் எழுதப்பட்ட அரசமைப்புதான் நல்லது என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. எழுதப்பட்ட அரசமைப்பில் எதிர்காலத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நெகிழும் தன்மை பொருந்திய ஒரு சில அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பதுதான். இந்திய அரசமைப்பில் ஒருசில நெகிழும் மற்றும் நெகிழா அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எனவே, இந்திய அரசியலமைப்பு இதர நாடுகளுக்கு இவ்வகையில் வழிகாட்டியாக விளங்குகிறது.

தொடரும்…

Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com