அரசும் அதன் கூறுகளும்

அரசும் அதன் கூறுகளும்

அரசு என்பது உலகெங்கிலும் காணப்படுவதாகும். சமூக நிறுவனங்களிலேயே அதிக வலிமை மிகு அமைப்பு அரசே ஆகும். அரசு இயற்கையாகவே தோன்றிய ஒன்றாகும். மனிதன் ஒரு சமூகப் பிராணி ஆவான். அவன் இயல்பாகவே அரசியல் பிராணியாகவும் ஆகிறான் என அரிஸ்டாட்டில் குறிப்பிடுகிறார். அவரது கருத்துப்படி மனிதனாக இருப்பதும் ஒரு அரசின் கீழ் வாழ்வதும் ஒன்றே ஆகும்.

ஆங்கிலத்தில் State (அரசு) எனப்படும் சொல் Status எனப்படும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். நிகோலோ மாக்கியவெல்லி (1469-1527) எனும் அரசியல் சிந்தனையாளர் தனது “இளவரசன்” ((PRINCE) என்னும் நூலில் முதல் முறையாக `அரசு' என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

அரசு என்பது மனித சங்கத்தின் உயர்மிகு வடிவமாகும். அரசு, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவானதாகும். எனவே அரசு என்பது அவசியமான ஒன்றாகும்.

அடிப்படைத் தேவைகள் நிறைவடைந்த பின்னரும் மனிதனுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவே அரசு தொடர்ந்து இருந்து வருகிறது. மனிதர்களின் நோக்கங்கள், வெறுப்புகள், ஆர்வங்கள் போன்றவை அரசின் மூலமாக நிறைவேற்றப்படுகின்றன. அரசு என்பது அவசியமான நிறுவனம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் எந்த இரு வேறு நூலாசிரியர்களும் அரசு பற்றிய ஒரே கருத்தை கொண்டிருக்கவில்லை.

உட்ரோவில்சன் என்பவர், “அரசு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில், சட்டத்திற்காக அமையப்பெறும் மக்கள் கூட்டமாகும் என்கிறார்”.

அரிஸ்டாட்டில், அரசு என்பது “ஆனந்தமான மற்றும் கௌரவமான வாழ்க்கை அடங்கிய தன்னிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்காக கிராமங்களும், குடும்பங்களும் இணைந்த ஒன்றியமாகும்” எனக் குறிப்பிடுகிறார்.

ஹாலண்ட் கருத்துப்படி “பல்வேறு மனித கூட்டங்களை ஒன்றிணைத்து, ஒரு குறிப்பிட்ட எல்லைப் பரப்பில் குடியேறி, அவர்களில் பெரும்பான்மையானவரின் கருத்துக்களை, அதனை எதிர்ப்போரையும் மீறி நிலவச் செய்வதாகும்”.

பர்கஸ் எனும் நூலாசிரியர், “மனித வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கினர் ஒரு அமைப்பாக இருந்து செயல்படுவதே அரசு ஆகும்” என்கிறார்.

சிட்ஜ்விக் கருத்துப்படி “அரசு என்பது, அரசாங்க வடிவில் தனி மனிதர்கள் அல்லது சங்கங்கள் இணைவது ஆகும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பின் மீது அவர்கள் ஒன்றிணைவது தங்களை அரசியல் ரீதியாக அமைத்துக் கொள்வது அரசு ஆகும்”.

கார்னர் என்பவர், “அரசு என்பது ஒரு மக்கள் கூட்டம் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிப்பதாகும். அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல், ஒரு முறையான அரசாங்கத்தை பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்ப்படிதலை அரசுக்குச் செலுத்துகிறார்கள்” என்று விளக்குகிறார்.

பேராசிரியர் லாஸ்கி அரசு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஒரு நிலப்பரப்புக்கு உட்பட்ட சமுதாயமானது அரசாங்கம் என்றும், குடிமக்கள் என்றும் இரு வேறாக வகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் உறவுமுறை அரசினுடைய நிர்பந்திக்கும் அதிகாரத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது.”

கூறுகள் :

மேலே தரப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள கூறுகளை அரசு கொண்டிருப்பதாகக் குறிப்பிடலாம்.

அரசின் கூறுகள்

  • மக்கள்  தொகை              
  • நிலப்பகுதி                 
  • அரசாங்கம்                  
  • இறையாண்மை                                 

மக்கள் தொகை :

மக்கள் தான் அரசை உருவாக்குகிறார்கள். மக்கள் தொகை அரசுக்கு முக்கியமான ஒன்றாகும். பண்டைய கிரேக்க சிந்தனையாளர்கள் ஓர் அரசின் மக்கள் தொகை மிகவும் சிறிதாகவும் இருத்தல் கூடாது. மிகவும் பெரியதாகவும் இருத்தல் கூடாது என்று கருதினர்.

தத்துவ ஞானி பிளாட்டோ, ஓர் லட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று கருதினார். அரிஸ்டாட்டில் மக்கள் தொகையை துல்லியமாகச் சொல்லாமல் மிகக் குறைவாகவும் இருக்கலாகாது. அதே நேரத்தில் மிக அதிகமாகவும் இருத்தலாகாது என்றுரைத்தார். அதாவது ஓர் அரசு தன்னிறைவு பெறுவதற்கு ஏற்ற வகையிலும், அதே நேரத்தில்  திறம்பட ஆட்சி செய்வதற்கு ஏற்ற வகையிலும் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்றார்.

ரூஸோ என்பவர் ஓர் லட்சிய அரசு என்பது 10,000 மக்கள் தொகையுடைதாய் இருத்தல் வேண்டும் என்று கூறினார்.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற சிந்தனையாளர்கள் சிறிய கிரேக்க நகர அரசுகளான ஏதென்ஸ், ஸ்பார்த்தாவை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் தொகை எண்ணிக்கையை வலியுறுத்தினார்கள். நவீன அரசுகள் மக்கள் தொகை எண்ணிக்கையில் வேறுபடுகின்றன. இந்தியா, 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 102,70,15,247 மக்கள் எண்ணிக்கை உடையதாகும்.

நிலப்பகுதி  :

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி இல்லாமல் அரசு இருக்காது. மக்கள் வசிக்க இருப்பிடம் அதாவது நிலப்பகுதி அவசியமாகிறது. மேலும் மக்கள் தங்களை சமூக மற்றும் அரசியல் சம்பந்தமாக தயார்படுத்திக்கொள்ள நிலப்பகுதி தேவையாகிறது. நிலப்பகுதி  என்பது அந்த நாட்டின் நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றை தன்னுள் கொண்டது.

நவீன அரசுகள் நிலப்பகுதி அளவில் வேறுபடுகின்றன. குடியுரிமைக்கு நிலப்பகுதி முக்கியமாகும். மக்கள் தொகை போல, நிலப்பகுதிக்கு அளவு கிடையாது. சிறிய மற்றும் அதிக நிலப்பகுதி  உள்ள அரசுகள் உள்ளன.

“நிலப்பகுதி இறையாண்மை என்பது அந்தந்த அரசின் எல்லைப் பகுதியினுள் சுதந்திரமாகவும் வெளியிலிருந்து கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதையும் தற்கால அரசுமுறை வாழ்க்கை குறிக்கும்”, என பேராசிரியர் எலியட் என்பவர் கூறுகிறார்.

இந்திய நாட்டின் நிலப்பகுதி  32,87,263 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது உலகளவில் கிட்டத்தட்ட 2.4 Ð ஆகும்.

அரசாங்கம்:

அரசாங்கம் அரசின் மூன்றாவது கூறாகும். அரசாங்கம் இல்லாமல் அரசு கிடையாது. அரசாங்கம், அரசின் ஆக்கக் கூறுகளில் ஒன்று. அரசு என்னும் கப்பலை ஓட்டிச் செல்லும் மாலுமியாக அரசாங்கம் விளங்குகின்றது.

பேராசிரியர் அப்பாதுரை என்பவர் அரசின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக அரசாங்கம் விளங்குகிறது என்கிறார்.

C.F. ஸ்ட்ராங் என்பவர் சட்டத்தை இயற்றி, அமல்படுத்த அரசுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது என்று கூறுகிறார்.

இறையாண்மை :

இறையாண்மை அரசின் நான்காவது கூறாகும். இறையாண்மை என்பது உயர்ந்த மற்றும் தலையாய அதிகாரம் ஆகும். அரசின் இறையாண்மை அதிகாரம், சட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்படுகிறது. சட்டம் சார்ந்த ஆணையுரிமை (legal authority) தலையாயது.

நவீன அரசுகள் தோன்றும்போது அதனுடன் இறையாண்மைக் கருத்தும் உருவாக்கப்பட்டது. இறையாண்மை என்ற சொல் (Sovereignty) லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதற்கு உயர்ந்த அதிகாரம் என்று பொருள்.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜீன் போடின் (1530-1597) என்பவர் நவீன இறைமை கோட்பாட்டின் தந்தையாவார்.

இறையாண்மை தன்மை என்பது:-

1. உள் இறையாண்மை

2. வெளி இறையாண்மை

என இரண்டு வகைப்படும்.

உள் இறையாண்மை என்பதற்கு அரசு தனது எல்லைக்குள் உள்ள குடிமக்கள் மற்றும் சங்கங்கள் மேல் தலைமையான அதிகாரத்தை செலுத்தவல்ல அதிகாரமுடையதென பொருள்.

வெளி இறையாண்மை என்பது தன் அதிகார எல்லைக்கு வெளியேயுள்ள யாரும் தன்னை கட்டுப்படுத்த முடியாத சுதந்திரமுடையது என பொருள்.

ஹெரால்ட் லாஸ்கி கருத்துப்படி, அரசு இறையாண்மை உடையதாய் இருப்பதால்தான் மற்ற சமுதாய அதிகாரம் மற்றும் மனித சங்கங்களிலிருந்து வேறுபடுகிறது.

கீழ்க்காணும் விளக்கப்படம் வெளிப்புறத்தில் சமுதாயத்தையும் உள்புறத்தில் அரசாங்கத்தையும் காட்டுகிறது.

அரசு மற்றும் சமுதாயம்

சமுதாயம் என்பது தன்னுள், தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

அரசியல் சிந்தனையாளர்கள் அரசு மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டும் ஒன்றே என்றனர். அரசு என்பது சமுதாயத்தின் பகுதி யாகும் எனினும் அது சமுதாயத்தின் உருவமாகி விடாது.

அரசுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள வேறுபாடுகள்:

அரசு - சமுதாயம்

1. சமுதாயம் தோன்றிய பின்னரே அரசு என்ற அமைப்பு உருவானது. சமுதாயமானது அரசு தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது.

2. அரசின் எல்லை வரையறைக்குட்பட்டது. சமுதாயத்தின் வரையறை பெரியது.

3. அரசினுடைய நிலப்பரப்பு இறுதியானது. சமுதாயத்திற்கு எல்லைப்பரப்பு இல்லை.

4. அரசு என்பது அரசியல் நிறுவனமாகும். சமுதாயம் என்பது ஒரு சமூக நிறுவனமாகும்.

5. அரசுக்கு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளது. சமுதாயத்திற்கு அத்தகைய அதிகாரங்கள் எதுவும் இல்லை.

பேராசிரியர் பார்க்கர் “சமூக மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படைகள்” என்ற நூலில் அரசு, மற்றும் சமுதாயம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடுகளை பின்வரும் மூன்று அடிப்படைகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அவை,

1. நோக்கம் அல்லது பணி

2. நிறுவனம் மற்றும் கட்டமைப்பு

3. வழிமுறை

நோக்கம் என்ற அடிப்படையில் அரசு என்பது சட்டரீதியான ஒரு சங்கமாகும். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கு தரமான ஒரு அமைப்பை உருவாக்கி அதனை செயல்படுத்துவதே அரசின் ஒரே நோக்கமாகும்.

ஆனால் சமுதாயம் என்பது பலவகைப்பட்ட சங்கங்களை உள்ளடக்கியது ஆகும். பல்வேறு சட்டம் சாராத நோக்கங்களையும் கொண்டதாகும். சமுதாயத்தின் பல்வேறு நோக்கங்கள் பின்வருவன ஆகும்.

1. அறிவு சார்ந்தது

2. நெறிமுறை சார்ந்தது

3. சமயம் சார்ந்தது

4. பொருளாதாரம் சார்ந்தது

5. நுண்கலை சார்ந்தது

6. பொழுது போக்கு சார்ந்தது.

அரசு மற்றும் சமுதாயத்தின் உறுப்பினர் தன்மை ஒன்றேயாகும். ஆனால் நோக்கங்களில் இரண்டும் மாறுபடுகின்றன. அரசு என்பது மிகப் பெரிய ஆனால் ஒரே ஒரு நோக்கத்திற்காக உள்ளது. சமுதாயம் என்பதோ சில பெரிய நோக்கங்களுக்காகவும், சில சிறிய நோக்கங்களுக்காகவும் உள்ளது. சமுதாயத்தின் நோக்கங்கள் ஆழமானதாகவும், பரந்ததாகவும் காணப்படுகின்றன.

அமைப்பு ரீதியாக பார்க்கும்போது அரசு என்பது சட்டம் சார்ந்த ஒற்றை அமைப்பாகும். ஆனால் சமுதாயம் என்பது பல அமைப்புகளை உள்ளடக்கியது. நிறுவனம் என்ற அடிப்படையில் பார்க்கும் போது அரசிற்கு கட்டாய கீழ்ப்படிதலை பெறும் அதிகாரம் உள்ளது. கட்டாயப் படுத்துவதற்கும், நிர்பந்திப்பதற்கும் அரசிற்கு அதிகாரம் உள்ளது.

ஆனால் சமுதாயம் மனமுவந்த கீழ்படிதலையே முறையாகக் கொண்டுள்ளது. சமுதாயத்தின் பல்வேறு நோக்கங்கள், ஊக்கமளித்து, இசைவை பெறுவதற்கு வகை செய்கிறது. சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகள் இருப்பதால் ஒரு சங்கத் லிருந்து விடுபட்டு, வேறு சங்கத்தில் இணைவதற்கு வாய்ப்புள்ளது. நிர்பய ப்பதன் மூலமாக சங்கங்கள் செயல்பட முடியாது.

அரசு மற்றும் தேசம்

ஆங்கிலத்தில் 'Nation' என்ற சொல் நேஷியோ (Natio) என்ற லத்தீன் மொழிச்சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் பிறப்பு அல்லது இனம் ஆகும். தேசம் என்பதும் அரசு என்பதும் ஒரே பொருளில் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அவை இரண்டும் வெவ்வேறானவை ஆகும். லீக்காக் என்னும் அறிஞரின் கருத்துப்படி ஒரே வம்சம் மற்றும் மொழி சார்ந்த மக்கள் ஒன்றிணையது ஒரு அமைப்பை உருவாக்குவது தேசம் ஆகும். தேசம் மற்றும் அரசிற்கு இடையிலான வேறுபாடுகளை பின்வருமாறு அறியலாம்.

அரசு

தேசம்

1. அரசு என்பது பண்டைய காலத்திலேயே இருந்ததாகும்.

 

தேசம் என்பது தற்காலத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாகும்.

 

2. அரசானது சட்டம் மற்றும் அரசியல் தன்மை உடையதாகும்.

 

தேசம் என்பது இனம் மற்றும் கலாசாரம் சார்ந்ததாகும்.

 

3. வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் மக்களால் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்டதாகும்.

மக்கள் உளரீதியாக இணைந்து ஒன்றாக வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.

4. அரசு இறைமை உடையதாக இருக்க வேண்டும்

 

இறைமை இல்லை என்றாலும் மக்கள் ஒரே தேசத்தை சார்ந்தவர்களாக தொடர்ந்து வாழ்கின்றனர்.

 

 

5. அரசில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்

 

தேசம் என்பது ஒரே வகைப்பட்ட மக்களை கொண்டதாகும்.

 

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு (1939-1945) ஒரு தேசம், ஒரு அரசு என்ற கோட்பாடு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதிய அரசுகள் தோன்றும்போது தேச அரசுகளாக உருவாகின்றன. 1947-ம் ஆண்டு சுதந்திரமடையத நிலையில் இந்தியா ஒரு தேச அரசாக உருவானது. சுய அரசாங்கம் கொண்ட ஒரு தேசம் விடுதலை அடையும் போது ஒரு தேச அரசாக தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com