அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-39: ஆசிவகம்-நிறுவனர்கள்/காட்சியியலாளர்கள்

சி.பி.சரவணன்

ஆசிவகம்-நிறுவனர்கள்/காட்சியியலாளர்கள் (Founders and Philosophers of Aseevagam)

எண்ணியத்தைத் தோற்றுவித்தவர் தொல்கபிலர்; வைசேடிக சூத்திரம் என்கிற நூலை எழுதி சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர் கணாதர்; சாங்கியம் என்கிற எண்ணியக் கோட்பாட்டின் தலைவராக இருந்து அணுக்கோட்பாட்டினை வளர்த்தெடுத்தவர் பக்குடுக்கை நன்கணியார்; உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார்; தற்செயல் கோட்பாட்டை உருவாக்கியவர் பூரண காயபர்; அளவையியல் எனப்படும் நியாயவாதத்தைத் தோற்றுவித்தவர் கோதமனார். இவர்கள் அனைவரும் ஆசிவக அறிஞர்கள் ஆவர்.

மற்கலி கோசாலர் (Makkhali Gosala)

ஆசீவக நெறிமுறைகள் ஏற்கனவே வழக்கத்தில் இருப்பினும் மற்கலி கோசாலர் என்பவர் ஆசீவகம் என்ற இயக்கத்தை நிறுவனமாக மாற்றியவர். இவர் இயற்பெயர் மாசாத்தன் மற்றும் மன்கலி. இவர் பிறப்பு கி.மு 523 என்பர்.  இவர் மேலும் ஐயனார் என்றும் சாத்தன் என்றும் அழைக்கப்படுவர். திருப்பட்டூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட குறுநிலமன்னன் மரபைச் சேர்ந்தவர். திருப்பட்டூர் இன்றைய திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவர் வடநாடு சென்று திகம்பரப்பிரிவைத் தோற்றுவித்த மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் பணியாற்றி, பின் கருத்து வேறுபாடு காரணமாக தமக்கென்று சங்கம் அமைத்துக் கொண்டார்.

பகவதி சூத்திரத்தின் படி இரந்துண்பதை தொழிலாகக் கொண்ட “மன்கலி’ என்பவருக்கு மகன் எனும் பொருள்படும் “மன்கலிபுத்தர்’ என அழைக்கப்பட்டார். மேலும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த காரணத்தால் ‘கோசாலர்’ என அழைக்கப்பட்டார் என்கிறார் ஏ.எஃப்.ஆர்.ஹார்ன்லி (Augustus Frederic Rudolf Hoernlé). இவரே முதலில் வினைக் கொள்கையை மறுத்து, நியதிக் கொள்கையை உரைத்தவர். 

இவர்கள் சாண, கலந்த, கணியாரன், அச்சித்தன், அக்கிவேசாயணன், அச்சுண்ண கோமாயு புத்தன் என்பவர்களாகும்.  இவர்களே மக்கலி கோசாலரின் கோட்பாடுகள் எண்ணங்கள் ஆகியவற்றை எல்லாத் திசைகளிலும் பரப்பியவர்கள். புத்தர், மகாவீரர், இந்து மதத்தினர் கர்மாக் கொள்கையை ஏற்றுக் கொண்டது போல் மக்கலி கோசலர் கர்மாக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஏற்றுக்கொண்டது விதி எனப்படும் கொள்கையே. இதை நியதி ,தைவம் என்ற வேறு பெயர்களாலும் அழைப்பர். இவர்கள் கொள்கைகளடங்கிய  ஆசீவகர்களால் எழுதப்பட்ட நூல் என்பது இதுவரை கிட்டவில்லை. மற்கலி நூல், ஒன்பதுவாங்கதிர், என்ற நூல்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஆசீவகர்களிடையே வழக்கில் இருந்ததாகத் தெரிய வருகின்றது (மணிமேகலை 27:165),
 
ஐயனார் பிறந்த ஊர் திருப்பட்டூர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள், திருப்பட்டூர் அய்யனார் கோயிலில் உள்ளன என பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் கூறுகிறார். யானை, மற்கலி  ஐயனாரின் வாகனத்தையும், குதிரை, படைத்தளபதியான ஐயனாரின் வாகனத்தையும் குறிப்பன.

மற்கலியின் இயற்பெயர் கலியன் அன்ற்ம், இவர் கலிவாகு என்னும் அரச மரபில் பிறந்ததால் கலியன் எனப் பெயர் பெற்றதாக அயோத்திதாசர் கூறுகிறார். தமிழரின் ஆண்டு முறையில் கலியாண்டு என்றும் கலியுகம் என்றும் அழைப்பர். கலி என்றால் மகிழ்ச்சி, வலிமை ஆரவாரம் என தமிழ் மரபு பொருள் கூறுகிறது.

இன்று மற்கலி கோசாலரே அறப்பெயர் சாத்தன் ஆவர். அறப் பெயர் சாத்தானே “தரும சாஸ்தா’ ஆகும். தமிழகத்தில் ஊர்புறக் காவல் தெய்வமாக இடம் பெற்றுள்ளவர் இந்த ஐயனார்.  ஐயனார், முனியப்பன், போன்றோர் போன்றோர் உலக மாமனிதர்களோடு ஒப்பிடமுடியாத பேரறிவாளர் ஆவர்.

இந்த ஆசீவகத் துறவிகளுக்கெல்லாம் சிறந்தவராக மற்கலி என்பவர் போற்றப்படுகிறார். மற்கலி என்பதே மக்கள் வழக்கில் ‘மக்கலி’ என்று வழங்கப்பட்டு ‘மக்கிலி’ எனத் திரிந்து வழங்கப் படுகிறது. செய்யாறு பகுதியில் இந்த ‘மக்கிலி’ என்று பெயரிடும் வழக்கம் தற்போது அருகி வருகிறது.

"மற்கலி கோசலர் கைகளைத் தூக்கிப் பிடித்த வண்ணம் வெயிலில் நின்றவாறே தவம் செய்து வந்தவராம். பகவதி சூத்திரம் என்னும் சைன நூலை காட்டி அதைக் குறிப்பிடுவர். அவ்வாறு தவம் செய்கையில் அவர் ஆறு வேளைகள் உண்ணவே மாட்டாராம். மொச்சைக் கொட்டையும் அரிசிக் கஞ்சியும் மட்டுமே அவரது உணவாம். தவத்தைத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு வாய் நீரை மட்டுமே குடித்துவிட்டு அவர் ஒரு முறை ஆறு திங்கள் வரை கடுந்தவம் செய்தாராம். இதன் விளைவாக, இறுதியில் உக்கிரமான ஓர் ஆற்றலை அவர் பெற்றாராம். ஆசீவகர், சம்மணம் கொட்டிய (கொள்ளுதல் என்பது கொண்டுதல்/கொட்டுதல் என்றும் பலுக்கப் படும்; இன்றைக்கும் எங்கள் ஊர்ப் பக்கம் சம்மணம் கொட்டு என்றுதான் சொல்லுவார்கள்.) நிலையில் தம்மைத் தாமே வருத்திக் கொண்டு கடுந்தவம் புரிந்து வந்தனர். இதை அவர்கள் சம்மணத் தவம் என்றனர். 

ஆசீவக மூவர்

அருகம், ஆதிநாதர் முதலான 23ஆம் திருத்தங்கரரான பார்சுவநாதர் வரையிலானவர்களின் போதனைகளின் அடிப்படையில் மகாவீரர் போதித்த நெறிகளைப் பின்பற்றுகிறது. மகாவீரரை 24வது திருத்தங்கரராகக் கொண்டாடுகிறது.ஆசீவகம், பார்சுவநாதருக்குப் பின் மற்கலியைத் திருத்தங்கரராகக் கொண்டு, மற்கலியின் போதனைகளையே பின்பற்றுகிறது.

திருப்பிடவூர் ஐயனார்/மற்கலி கோசாலர்
மாங்குளம் நந்தாசிரியன்/நந்தவாச்சா
மறுகால்தலை கிசசாங்கிசா/வெண்காசியபன்

ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களாக மூவர் குறிக்கப்படுகின்றனர். அம் மூவர் ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி, கிசசாங்கிசா, நந்தவாச்சா என்போராவர். இம் மூவருள் மற்கலி கோசாலரைத் தவிர்த்த மற்ற இருவரைப் பற்றியும் பாலி, பாகதம் முதலான வட மொழிகளில் குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆசீவகம் என்ற சங்கத்தை சாவத்தி நகரில் வாழ்ந்த ஆலகாலா எனும் குயப்பெண் வீடே தலைமையகமாக விளங்கியது. "வைதிகநெறி" எனும் விதிக் கொள்கைக்கு எதிரான வாழ்க்கை முறை. குறிப்பாக, கிமு 600 முதல் கிபி 250 வரை தமிழ் மக்களின் பேரியக்கமாகத் தழைத்தோங்கி வாழ்ந்த ஒரு சமய நெறி.

பாழி (பாளி), பாகதம் (பிராகிருதம்) முதலான வடமொழிகளில், துறவிகளைப் பொதுவாக 'சமண' என்றழைப்பதே மரபு. ஆனால், 'சிரமண (Sramna) என்னும் சங்கதச் சொல்லில் இருந்தே 'சமணன்' என்னும் தமிழ்ச் சொல் வந்தது என்பது ஒரு தலைகீழ்ப் பாடம். அது போலவே அம்மணமான நிலையில் துறவிகளாக இருந்தவர்கள் அமணர். ஆசீவகத் துறவிகளும் அம்மணமானவர் என்பதனால் "ஆசீவகன் அமணர்களில்" எனச் சிவஞான சித்தியார் கூறும்.

சம்மணத் தவம் போக, முள்படுக்கையின் மீது கிடந்த வண்ணம் ஆசீவகர் செய்து வந்தது முள்தவமாம். ஐந்து நெருப்புகளுக்கிடையில் அமர்ந்தவண்ணம் ஆற்றி வந்த தவம் 'ஐந்தீத் தவ'மாம். பேசாமை, அசையாமை, காலை மடித்துக் குந்தியிருத்தல், கழுத்துவரை மண்ணில் புதையுண்டு நிற்றல் போன்ற கடுந்தவங்களையும் கூட ஆசீவகர் செ;ய்து வந்தனராம். வவ்வால் தவமும் உண்டு. பெருந்தவம் செய்து வந்த ஆசீவகரை மாதவர்   என்றனர்."

பூரணகாயபர் (Poorana Kayapar)

சிவகத் தோற்றுநர்களில் ஒருவராகிய பூரணகாயபர் ஒரு தமிழர்தான் என  பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் கூறுகிறார்.. “ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியல்” எனும் தனது நூலில் 30 பக்கங்களில் தமிழ் இலக்கியங்கள், தமிழ் கல்வெட்டுகள் பிற இந்தியத் தமிழகத் தத்துவநூல்களின் துணைகொண்டு ஆய்வு செய்து பூரணகாயபர் தமிழர்தான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். அதற்கான காரணங்களாக பின்வரும் விளக்கங்களை அவர் அதில் கூறியுள்ளார்.  ஆசிவகத்தில் நிறக்கொள்கையை அறிமுகப்படுத்திய பூரண காயபர் தமிழகக் கல்வெட்டுகளில் காயபன், செங்காயபன், மூத்த அமணன் செங்காயபன், வெண்காயபன் எனச் சுட்டப்பட்டுள்ளார் என்கிறார் அவர். புத்தரின் தலைமாணாக்கர் ஆனந்தர், ஆசிவக நெறியில் கழிவெண்பிறப்பு நிலையை அடைந்த மூவருள் ஒருவர் பூரணகாயபர் என்கிறார். அவரது கூற்றை தமிழ் இலக்கியமான நற்றிணையில் (பாடல் எண்கள்; 250, 369) வரும் மதுரை ஓலைக்கடையத்தனார் நல்வெள்ளையார் எனும் பூரணகாயபரின் பெயர் உறுதிப்படுத்துகிறது. தமிழ் இலக்கியங்களில் வரும் நல்வெள்ளையார் என்பது கழிவெண்பிறப்பு நிலையை அடைந்தவர்களைக் குறிக்கிறது. மதுரை ஓலைக்கடை என்பது ஆசிவகச் சமயத்தின் தலைமை இடமாக இருக்கலாம். மாங்குடி மருதனார் எழுதிய “மதுரைக்காஞ்சி” மதுரையில் ஆசிவகப்பள்ளிகள் இருந்ததை உறுதி செய்கிறது. தமிழ் மரபுக்கு ஏற்ப பூரணரும் தாழியில் தவம் இருந்தநிலையில் உயிர்விட்டுள்ளார். இவை பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் தரும் தகவல்கள். 

பக்குடுக்கை நன்கணியார் (Pakkudukkai Nankaniyar)

ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈரத்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்ப்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே
 
                                                                                                          -பக்குடுக்கை நன்கணியார்.
 

இதன் பொருள், ஒரு வீட்டில் சாவுப்பறை முழங்க, இன்னொரு வீட்டில் திருமண முழவு ஒலிக்கும். ஒரு வீட்டில் இளம் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்வர், இன்னொரு வீட்டில் கணவனைப் பிரிந்த மனைவி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பாள். இவ்வாறு இரண்டு வகையாக உலகைப் படைத்துவிட்டான் பண்பில்லாதவன். துன்பம் நிறைந்த இந்த உலகில் இன்னாதவற்றை சிந்தை செய்யாது, இனியனவற்றை மட்டுமே கண்டு மகிழ் என்பது.

அஜித கேசகம்பாளர் / நரிவெரூஉத்தலையார் (Ajitha Kesakambalar)

உத்தேசம் என்ற சொல்லிற்கு சிதைவு என்று பொருள். உலகில் யாஅவும் நிலைத்திருப்பதில்லை அழிகின்றன எனும் சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர். கேச கம்பாளர் என்பது மனிதரின் தலைமயிரிலிருந்து ஆடைகளை அணிந்தவர் எனும் பொருளில் அமைந்தவை. நரிகளே அஞ்சி ஓடக் கூடிய தலைமை உடையவர் என்பது பொருள். உலகாயத கோட்பாட்டை பேசியவர்.

பகுத காசாயனர் (Bakutha Kachayanar)

’ஒருமையியம்‘ எனும் கோட்பாட்டை நிறுவியவர்.

சஞ்சய பேலட்டபுத்தன் (Sanjaya Pelataputhan)

ஒவ்வொரு பொருளிலும் தீர்மானத்துக்கு வரமுடியாத ஓர் ஐயுறவுத் தன்மையே ஐயுறவுக் கோட்பாடாகும். இக்கோட்பாடு பின்னாளில் வர்தமானரின் சன சமயத்துடன் இணைந்துவிட்டது.

பிடவூர்ப் பெருஞ்சாத்தன்  (Pidavur Perunchathanan)

"செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர் சாத்தன் கிளையேம் பெரும"

எனும் புறநானூற்றுப் பாடல்,. சோழநாட்டுப் பிடவூர்க் கிழானின் மகன் பெருஞ்சாத்தன் திருப்பிடவூர் எனும் திருப்பட்டூரில் வாழ்ந்ததாகக் கூறுகிறது.. சாத்தன் எனும் சொல் தமிழ்வழக்கில் ஐயனார் என்றே அறியப்படுகிறது. சாத்து என்றால் கூட்டம் என்று பொருள். பொதுவாக, வணிகக் கூட்டங்களை சாத்து என்று அழைப்பர். வணிகக் கூட்டங்களின் காவல் தெய்வமாக விளங்கிய ஐயனார்க்குச் சாத்தன் எனும் பெயர் வழக்காயிற்று. வணிகக் கூட்டங்களின் தலைவனும் சாத்தன் என்றே அழைக்கப்பெறுகிறான்.

நந்தவாச்சாவும் கிசசாங்கிசாவும்
"கணிய் நந்த அஸிரிய் இகுவ்அன் கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன்
கடல்அன் வழுத்திய் கொட்டுபித்த அபளிஇய்"
"என கிமு 3ஆம் நூற்றாண்டு  மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் கணி நந்தாசிரியனே நந்தவாச்சா என பாலி மொழியில் குறிப்பிடப் படுகிறார்.. வானவியல் கணிப்பதில் வல்லவரான கணி நந்தாசிரியன் பேச்சு வழக்கில் நந்தவாச்சா ஆகியிருக்கிறார். 

ஆசிரியன் - ஆச்சாரியன் -ஆச்சான்
பெரியவாசிரியன் - பெரியவாச்சான்
நந்தாசிரியன் - நந்தவாச்சான் - நந்தவாச்சா

நந்தவாச்சாவைப் போலவே கிசசாங்கிசா என்பவரும் ஆசீவகத் துறவிகளுள் முதன்மையானவர்

"வெண்காசிபன் கொ(ட்)டுபித்த கல் கஞ்சணம்"
தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலையில் ஆசீவகப் படுக்கை கண்டுபிடிக்கப்பட்டபோது காணப்பட்ட கிபி.2ஆம் நூற்றாண்டு 'தமிழி' எழுத்து இது.இந்த மறுகால்தலை கற்படுக்கைக்குரிய வெண்காசிபன் என்பவரே கிசசாங்கிசா.

இவ்விருவரையும் பௌத்த தமிழ் இலக்கியங்களிள்கூட  ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகப் போற்றுவதைக் காண்கிறோம். இம் மரபுக்கு ஏற்ப இவர்களைப் ‘பரம ஐயனார்’ என்று தமிழ் மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர் என்பதும் வியப்பே.
"ஆசீவகமானது பண்டைய தமிழர்களின் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்தது" என  அமெரிக்க இந்தியாவில்  ஆராய்ச்சியாளர் அறிஞர் ஹென்ரிக் ராபர்ட் ஜிம்மர் (Heinrich Robert Zimmer )தனது ‘இந்திய தத்துவவியல்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மக்கலி மறைவு

மகாவம்சம் நூலின் அடிப்படையில் வரலாற்று அறிஞர், ஏ. எல். பாசம் (A. L. Basham), மக்கலி கோசாளர், கிமு 484ல் மறைந்ததாக கருதுகிறார்.
தமிழரின் ஊனோடும் உயிரோடும் கலந்து நிற்கும் ஓர் அறிவியல் மரபே ஆசீவகம். புத்தரும், மகாவீரரும் பொறாமைப் படும் அளவிற்கு ஒரு காலத்தில் மக்கள் சமயமாகவும் இது திகழ்ந்துள்ளது. சங்க காலத் தமிழரின் வாழ்வியலாகவும் சமயமாகவும் கூட ஆசீவகம் திகழ்ந்துள்ளது. எவ்வளவோ இடர்ப்பாடுகளைக் கடந்தும் அது தன்னைக் காத்துக் கொண்டு இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

References:
Philosophies of India by Heinrich Robert Zimmer

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT