மத அரசியல்-42: ஆசீவகம் குருகுலக் கல்வி, வர்ணாசிரமம், ஏழு கன்னிமார்

மத அரசியல்-42: ஆசீவகம் குருகுலக் கல்வி, வர்ணாசிரமம், ஏழு கன்னிமார்

தொல்லியல் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், சங்க காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில் சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப் புற கிராமப் பகுதியில் வாழும் கள் விற்பவர்கள் கூடத் தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவை சங்க காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகளோடு அவர் விளக்குகிறார். ஒப்பீட்டளவில் பண்டையத் தமிழகம் பரந்த அளவில் கல்வி அறிவு பெற்றிருந்தது. 

         “தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ள பானை வரிகளும் பொறிப்புகளும் எழுத்தறிவு மிகப்பழங்காலத்திலேயே தமிழகம் முழுவதும் பரவிவிட்டதைத் தெரிவிக்கின்றன. தொகைநூல் புலவர் பட்டியலில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரிவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதில் இருந்தும், தமிழ்நாட்டில் பரவியிருந்த எழுத்தறிவினை நன்கு அறியலாம்” என்கிறார் பேராசிரியர் அ. பாண்டுரங்கன்.

           பண்டைய வட இந்தியாவில் அல்லது பிற இந்தியப் பகுதிகளில் கல்வெட்டுகளில் அதுவும் அரசால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் மட்டுமே எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச்சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற சாதனங்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அதுபோன்றே பல நிலைகளில் உள்ள குடிமக்கள் சமயத் துறவிகளுக்கு வழங்கிய பாறைகளிலும்  எழுத்துப் பொறிப்புகளைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தைத்தவிர பிற இடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. இத்தரவுகள் மிக மிகச் சாதாரண மனிதர்கள் முதல் உயர் நிலையில் உள்ளவர்கள் வரை எழுதப்படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.  

         அது போன்றே மிகமிகச் சாதாரண மக்களும் சங்க இலக்கியத்தின் படைப்பாளிகளாக இருந்துள்ளார்கள் என்பது சாதாரண மக்கள் எழுதப்படிக்க மட்டுமல்ல சங்க இலக்கியம் போன்ற உயர் நிலை இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் இதற்கான கல்வி முறை எப்படி இருந்தது, அது எவ்வாறு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது,

கல்வி கற்றத் தமிழ் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத் தமிழ் புலவர் கோவூர்கிழார்(புறம்-47).

ஆதி குரு

குருக்குலக் கல்வியை ஆதியில்  தொடங்கியவர் சிவ சித்தர். அதனால் அவர் ஆதிகுரு என்றழைக்கப்படுகிறார். அதன்பின் குருக்குலக் கல்வி நடத்தியவர்கள் ஆசீவர்கள். 

ஆசீவக அறிவர் பள்ளி / குருகுலக் கல்வி

நமது முன்னோர்கள் குருகுலக் கல்வி பயின்றவர்கள்.அங்கே இருந்த சித்தர்கள் மாணவர்களுக்கு அனைத்து வகையான கலைகளையும் கற்றுத்தந்தனர். இந்த இடங்கள் “பள்ளி” எனப்பட்டன. ஆசீவகத்தின் பிறப்பிடமான தமிழ்நாட்டில், பல ஊர்களின் பெயர் பள்ளி என முடிவதை நாம் காணலாம். தென் இந்தியா முழுவதும் ஆசீவகம் பரவி இருந்த பொழுது,இன்றைய ஆந்திராவிலும் ,கர்நாடகாவிலும் பல ஊர்களின் பெயர்கள் பள்ளி என முடியும். வானியல், இசை, இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், போர் உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன.

ஆசிரியர் என்ற வார்த்தை ஆசு+ இரியர் என ஆசீவகத் தொடர்புப் பெயரே ஆகும். இதுவே பின்னாளில் ஆச்சாரியன் என்றானது. தமிழ் நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி என்ற ஊரின் பெயர் திருச்சிறார்பள்ளி என்ற சொல்லில் இருந்து வந்தது.  திரு+சிறார்+பள்ளி=திருச்சிராப்பள்ளி. அதாவது சிறுவர்கள் கல்வி கற்றுவந்த பள்ளிகள் நிறைந்த ஊர் என்று பொருள். இந்தப் பள்ளிகளை நடத்தியவர்கள் சித்தர்கள் வழி வந்த குருமார்கள். இந்தப் பள்ளிகளில் அனைத்து இனக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி கற்க அனுமதி உண்டு.

ஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் உள்ள ஆசீவகர்கள், தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள ஆசீவகர்களுக்குச் சொல்லிக்கொடுப்பர். ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. ஆசீவகர்கள் பிற மனிதர்களிடமும் பரிவுடன் இருப்பர்.

குருகுலக்காலம் என்பது மொத்தம் 18 ஆண்டுகள். 6 ஆம் அகவை முதல் 24 ஆம்
அகவை வரை அனைத்துக் கலைகளும் கற்றுத் தரப்படும்.இதற்குப் பிறகு ஒரு இளைஞனானவன் அவனுக்குப் பிடித்த தொழிலை செய்யமுடியும். பெற்றோரின் தொழில் அவன் மீது ஒரு போதும் திணிக்கப்பட்டது கிடையாது!!!!இது தான் தமிழ் கல்வி முறை.ஒரு மாணவன் அனைத்து கலைகளையும்
கற்றுக்கொண்ட பிறகு அவனுக்கு கை வந்த கலையை மட்டும் தேர்ந்தெடுத்து தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.

கல்வி கற்கும் இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் மாணவர்களை அவர்களது மூளை வளர்ச்சிக்கும், திறமைக்கும் ஏற்றாற்போல் வகைப்படுத்த குருகுல சித்தர்கள் கொண்டு வந்த முறையே வர்ணப் படிநிலை.

ஆசீவகத்தின் ஏழு நிறங்கள் யாதெனின் கருப்பு,நீலம்,பச்சை,சிவப்பு,பொன்மஞ்சள்,வெள்ளை மற்றும் எழாவதாக நீர்வண்ணம்( நிர்வாணா ). ஆசீவகத்தின் வழிவந்த சித்தர்கள் நடத்திய குருகுலத்தில் இந்த முறைதான் பின்பற்றப்பட்டது. அதாவது ஒரு மனிதனின் மூளைவளர்ச்சியை இந்த நிறங்கள் குறிக்கின்றன.

வர்ணாசிரமம் / ஆசீவகக் கல்விக் கோட்பாடு 

நாம் இன்று பேசும் மனுவின் வர்ணாசிரமம் என்பது பின்காலங்களில் தோன்றியது. ஆனால் ஆசிவக வர்ணாசிரமம் என்பதே ஆதி. குருகுலக் கல்வி அதாவது ஆசீவகக் கல்விமுறை சொல்லித்தரப்படும் இடம் ஆசிரமம் என்றும் அழைக்கப்படும்..அந்த ஆசிரமத்தில் பின்பற்றப்பட்ட வர்ணப் படிநிலை தான் வர்ணாசிரம (வர்ணம்+ஆசிரமம்=வர்ணாசிரமம் ) முறை.

ஆறு நிறங்கள்

ஞாயிறு உதிக்கும் முன்பு இருள் சூழ்ந்து இருக்கும்.ஒளிக்கதிர்கள் வரத்தொடங்கும் பொழுது வானில் கருநீல நிறம் தெரியும்.அடுத்ததாக தரையின் மேல் உள்ள பச்சைநிறம் நமது கண்களுக்குத் தெரியும். அதன்பிறகு சிவப்பு நிறப் பந்து போல ஞாயிறு மேல் எழும்பும்.சிறிது நேரம் கழித்து பொன்மஞ்சள் நிறத்தில் ஞாயிறு மின்னும். ஞாயிறு மேல் எழுந்தவுடன் வெள்ளைநிற ஒளி நமது வளிமண்டலத்தை நிரப்பியிருக்கும்.

இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி இந்த நிறங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இயற்கையைக் கண்ட மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் என முடிவு செய்து இதுபோன்ற வரிசையைத் தேர்ந்தெடுத்தான்.

குருகுலத்தில் ஒரு இளம்பருவ மாணவன் உள்நுழையும் பொழுது அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இருள் சூழ்ந்த இந்த நிலைக்கு ஏற்றாற்போல் அந்த மாணவனுக்கு கரிய நிற சீருடை அளிக்கப்பட்டது.

குருகுலத்தில் ஒரு மாணவன் ஒவ்வொரு பருவத்தைக் கடந்து செல்லும் பொழுதும் அவனுடைய மூளை வளர்சியடையத் தொடங்கும். சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.திறமைகள் வளரும்.இதன் அடிப்படையில் ஒரு மாணவனுக்கு நிறப்படிநிலையின் அடுத்த நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட்டன.

மொத்தம் பதினெட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வி!!! ஆனால் ஆறு நிறங்கள் தான் உள்ளன.அதனால் பதினெட்டு ஆண்டுகளை மூன்று மூன்று ஆண்டுகளாக மொத்தம் ஆறு பருவங்களாகப் பிரித்தனர் குருமார்கள்.ஒரு பருவத்துக்கு ஒரு நிறம் என வகைப்படுத்தினர்.

கரிய நிறத்தில் ஆடை அணிந்து குருகுலத்தில் சேரும் ஒரு ஆறு வயதுப்பாலகன், குருகுலம் முடிந்து வெளியில் செல்லும் பொழுது அறிவாற்றல் மிக்கவானாக ,ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாறுகிறான்.அதாவது இருளில் இருந்து ஒளியை நோக்கிய குருகுலப் பயணத்தின் இறுதில்
ஒளிபொருந்தியவனாய் மாறுகிறான்.

ஏழாவது நிறமான நீர்வண்ண நிலையை அடைவது மிகக் கடினம்.அது மாணவர் பருவத்துக்குத் தேவைப்படாது என்றதால் ஆறாவது நிறமான வெள்ளை அவர்களின் இறுதி பருவமாகக் கருதப்பட்டது. தமிழக குருகுலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த வர்ண முறையானது ஆசியக் கண்டம் முழுதும் பரவியிருந்தது.

எடுத்துக்காட்டாக இன்றைய கராத்தே பயிற்சியில் ,இந்தத் தற்காப்புக் கலையைக் கற்கும் மாணவர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் இடுப்புப் பட்டைகள் வழங்கப்படுவதை அறிவோம். தொடக்க நிலையில் இருப்பவனுக்கு வெள்ளைநிறப் பட்டையும் ,இக்கலையை முழுதும் கற்றுத் தேரியவனுக்கு கருப்பு நிறப் பட்டையும் கொடுக்கப்படும். இந்த முறை எதைக் குறிக்கும் என்றால் உடல் வலிமையில்லாத ஒருவன் ,வலிமை பெற்ற ஒரு போராளியாக மாறுவதைக் குறிக்கிறது.

தற்காப்புக் கலைகளைக் கற்கும் பொழுதுமட்டும் நிறங்களின் வரிசை தலைகீழாக இருக்கும். காரணம் கரிய நிறத்தில் ஆரம்பித்து வெள்ளை நிறம் வரை செல்வது அறிவு வளர்ச்சியைக் குறிக்கும்.வெள்ளை நிறத்தில் இருந்து கரியநிறத்துக்குச் செல்லுதல் உடல் வலிமை அடைவதைக் குறிக்கும்.

ஆனால் இன்றைய கராட்டேவில் நிறங்கள் சரியான வரிசையில் அமைந்து இருக்காது. நீலம், பச்சை, மஞ்சள்,சிவப்பு ஆகியவை மாறிமாறி வரும். இதற்குக் காரணம் காலத்தினால் வந்த சிதைவுகள்.தமிழ்நாட்டில் உருவான இம்முறை ஆசிய நாடுகளுக்குச் சென்று நடைமுறைக்கு வரும் பொழுது சிறிய மாற்றங்கள் வருவது இயற்கைதான்.

மேலும் ஆசியாவில் உருவான தற்காப்புக் கலைகளான கராட்டே,ஜூடோ ,குங்க்பூ போன்றவற்றிற்கு பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உலக அளவில் பள்ளிகள் அமைந்தன.ஆக இராயிரம் ஆண்டுகளில் உண்மையான நிற வரிசையில் சில தவறுகள் நடந்திருக்கலாம்.ஆனால் கொள்கையின் கரு மாறவில்லை என்பதே சிறப்பு! நிற வரிசை என்பது, ஒன்று வெள்ளையில் தொடங்கி கருப்பில் முடியும் அல்லது கருப்பில் தொடங்கி வெள்ளையில் முடியும்.

சப்தகன்னிகளே குருகுலம் மருத்துவம் தந்த பெண் சித்தர்கள்

ஆசீவக வண்ணப்படிநிலைகளின் அடிப்படையில் ஏழு பெண் உருவகங்களை ஏற்படுத்தினர்.அப்பெண்கள் ஏழு கன்னிமார் எனப்பட்டனர். இவர்களுக்கு சிலை கிடையாது. நடுகல் அல்லது பூடம் மட்டுமே உண்டு. குருக்குல வகுப்புகள், மாணவர்கள் குடிநீர் மற்றும் பிற நீர்த்தேவைகளுக்காக நீர்நிலைகள் அருகிலேயே இருந்தன, அதனால் கன்னிமார் கோயில்கள் பெரும்பாலும் நீர் நிலைகளின் அருகிலேயே அமைந்துள்ளன. 

ஏழு கன்னிமார்

தமிழர்கள் தாய்த்தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள். அதன்படி ஆசீவக வண்ணப்படிநிலைகளின் அடிப்படையில் ஏழு பெண் உருவகங்களை ஏற்படுத்தினர். அப்பெண்கள் ஏழு கன்னிமார் எனப்பட்டனர். இவர்களுக்கு சிலை கிடையாது. நடுகல் அல்லது பூடம் மட்டுமே உண்டு!

1. அமரி நிறமற்ற நிலை(72-84)
2. குமரி வெள்ளை(60-72)
3. கவுரி பொன்(48-60)
4. சமரி சிவப்பு(36-48)
5. சூலி பச்சை(24-36)
6. நீலி நீலம்(12-24)
7. கொற்றி கருப்பு(0-12வயது)

ஏழாம் நிலை கொற்றவை

கொல்+தவ்வை = வேட்டையாடுதலின் குறியீடாவாள்.இவளது நிறம் அடர்கருப்பு.இவள் பாலைநில மறவர்/கள்வர்களின் தெய்வம். ஆசீவக வாழ்வியல் இருள்நிலையில் இருந்து துவங்குவதைக் குறிக்கவே கருமைநிறம்!

ஆறாம் நிலை

பெதும்பைப்பருவம். நீலி இவளது நிறம் நீலம். கண்ணுக்கு புலப்பட்டாலும் அதன் மறைபொருள் விளங்கப்படாமையைக் குறிப்பதற்காக இந்நிறம் பயன்படுத்தப்படுகிறது. கருப்பிலிருந்து நீலம்..

ஐந்தாம் நிலை

மங்கைப்பருவம் #சூலி இவளது நிறம் பச்சை. மருதநிலத்தின் பச்சையம்மனாக வளர்ச்சியின் தெய்வமாக இவள் வணங்கப்படுகிறாள். காரணகாரியங்களை சிந்திக்கும் திறனானது துளிர்விடுவதை (நெற்கதிர் போல) இந்நிலை குறிக்கிறது.

நான்காம் நிலை

மடந்தைப்பருவம்.. சமரி இவளது நிறம் சிவப்பு. கோட்டைகளின் காவல் தெய்வமாக வணங்கப்படுபவள். ஆசீவகக் கல்வியின் முதல் பாதி இந்நிலையில் நிறைவுபெறும்.

மூன்றாம் நிலை

அரிவைப்பருவம், கவுரி இவள் பொன்னிறத்தவள்(மஞ்சள்) செல்வத்தை வாரி வழங்குபவளாக கருதப்படுபவள். ஆசீவக வழக்கில் 'மாதங்கி' என்று அழைக்கப்படும் சிறப்புடையவள்.

இரண்டாம் நிலை

தெரிவைப்பருவம் #குமரி இவளது நிறம் வெண்மை. கழிவெண் நிலைக்கு முந்தையது. ஞானத்தின் குறியீடாக போற்றப்படுபவள்.குன்றாத இளமை உடையவளாகக் கருதப்படுகிறாள். அதாவது இறப்பில்லா நிலையை நோக்கி செல்லுதலைக் குறிக்கவே!

முதல் நிலை

பேரிளம்பெண் #அமரி இவள் காற்றைப்போல கண்ணுக்கு புலப்படாதவள். கழிவெண் (அ) நிறமிலி நிலையினைக் குறிப்பவள். இறப்பினை வென்றவள்.இவளே பழையோள்,தவ்வை,மாமுகடி என இலக்கியத்தில் பலவாறு புகழப்படும் மூத்தோள்! அனைத்து வளங்களின் மூலமாக பழந்தமிழரால் போற்றப்பட்டவள்.

“நாட்டுப்புறசமயத்தில் தமிழகத்தின்; தென்மாவட்ட கிராமங்களில் மாரியம்மன், காளியம்மன், பத்ரகாளியம்மன், அரியநாச்சியம்மன் காந்தாரியம்மன், வண்டிமலைச்சியம்மன், உமையம்மாள் ஆகிய எழுவரை வழிபடுகின்றனர்” என்று டாக்டர் துளசிராமசாமி குறிப்பிடுவதிலிருந்து தென்தமிழகத்தில். கன்னியர் எழுவருக்கும் வழங்கியப் பெயர்களை அறியமுடிகிறது.

ஆந்திரம் மற்றும் கருநாடகத்தில் கன்னியர் எழுவர்

           கர்நாடகத்திலும் ஏழுசகோதரிகள் பற்றிய குறிப்பு இருக்கிறது. வொய்ட்கெட் என்பவர் தமது நூலில் எழுமாரித் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

“அன்னம்மா, சந்தேஸ்வரம்மா, மாயேஸ்வரம்மா, மரம்மா, உடலம்மா, கொக்கலம்மா, சுகஜம்மாஆகியவை அந்த ஏழுதெய்வங்களாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாகமுனிஸ்வரர் என்ற ஆண் தெய்வம் இருக்கிறது”.

ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் கண்டுகுறு வட்டத்தில் பொதுவாக கீழ்க்  கண்டவாறு ஏழு சகோதிரிகள் பற்றி அழைக்கிறார்கள்.

“போலேரம்மா, அங்கம்மா, முத்தியாலம்மா, தில்லி, பொலசி, பங்காரம்மா, மாதம்மாஆகியனவாகும், பாலேரம்மா என்பது அம்மை நோய் கடவுளாகும். இது நம் மாரியம்மன் போன்றதெய்வமாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாக போத்திராஜ் என்ற ஆண்தெய்வம் இருக்கிறது”.

ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலுள்ள ஏழு சகோதிரிகளும் வீட்டுத் தெய்வமாகவும், ஊர்த்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றனர். இன்றைய காலத்தில் ஏழு கன்னியர்கள், சப்த மாதாக்கள் எனவுன் பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி,இந்திராணி,சாமுண்டி என்றழைக்கப்படுகின்றனர்.

References:
1.தமிழர் கல்விச் சிந்தனைகள் by சபா.ஜெயராசா சேமமடு பதிப்பகம் 2017
2.An epigraphic perspective on the antiquity of Tamil – Iravatham Mahadevan, The Hindu.  dt 24.6.2010.
3.‘தொகை இயல்’ பேராசிரியர் அ. பாண்டுரங்கன், 
4.கன்னியர் எழுவர் வழிபாடு, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், பேரா.அ.அன்புவேல், 2018, 
5.நாட்டுப்புறத்தெய்வங்கள், டாக்டர் துளசிராமசாமி, விழிகள் பதிப்பகம், 2000
6.அறிவோம் ஆசீவகம், சிவத்தமிழன் சேயோன்

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com