மத அரசியல்-2: மதம் தோன்றிய வகை

மத அரசியல்-2: மதம் தோன்றிய வகை

ஆதியில் மதம் தோன்றியதற்கான சில காரணிகளைப் பார்ப்போம்

(1) அச்சம்

காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருளையும் வேட்டையாடி விலங்கு பறவை இறைச்சியையும் உண்டு வாழ்ந்து, அநாகரிக நிலையிலிருந்த முந்தியல் மனிதன் தீயும் இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோர்களுக்கும்,  பேய்கட்கும், அஞ்சிய அச்சமே தெய்வ வணக்கத்தை அல்லது சிறுதெய்வ மதத்தை முதற்கண் தோற்றுவித்தது. அதனால், கொல்லுந் தன்மையுள்ள எல்லாவற்றையும் தெய்வமாகக் கொண்டு, அவை தம்மைக் கொல்லாவாறு இயற்கையும் செயற்கையுமாகிய உணவுப் பொருள்களைப் படைத்தும், இருதிணை யுயிரிகளையும் காவு கொடுத்தும், வந்தனர்.
நாகரிகம் முதிர்ந்துள்ள இக்காலத்தும், இம்மையிலும் மறுமையிலும் நேரக்கூடிய துன்பங்கட்கு அஞ்சுவதே, பல்வேறு மதவொழுக்கங்கட்கும் பெரும்பாலும் அடிப்படைக் காரணியமாயிருக்கின்றது.    அச்சத்தினாற் படைப்பதெல்லாம் தீமை விலக்கலைக் குறிக் கோளாகக் கொண்டது.

(2) முற்காப்பு

மாந்தன் வாழ்க்கை பல்வகைத் துன்பம் நிறைந்ததனால், அவற்றினின்று தப்புவதற்குத் தொன்றுதொட்டுப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. உடமைகளையும் உயிரையும் காப்பதற்கு முன்பு காவற்காரனும் பின்பு அரசனும் ஏற்பட்டனர். ஆயின், மக்களால், தடுக்க முடியாத கொள்ளைநோய், பஞ்சம், கடுங்காற்று, பெருவெள்ளம் முதலிய துன்பங்களைத் தடுத்தற்கும் நீக்கற்கும், மாந்தரினத்திற்கும் மேற்பட்ட சில மறைவான தெய்வங்களே ஆற்றலுள்ளவை என்று கருதி, அனைவரும் அவற்றை வணங்கவும் வழிபடவும் தலைப்பட்டனர். அத் துன்பங்கள் அத் தெய்வங்களின் சீற்றத்தால் நேர்வன வென்றும் நம்பி, அவற்றிற்கு அஞ்சினர். ஆதலால், முற்காப்பு அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். தீயும் பாம்பும் பேயும் என்று முள்ளன. கொள்ளைநோய், பஞ்சம் முதலியன ஒரோவொரு காலத்து நிகழ்வன.

(3) நன்றியறிவு

பல்வேறு தீங்குகட்கும் அச்சங்கட்கும் பெரிதும் இடந்தரும் காரிருளைப் போக்கி, உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு  தேடவும் இனத்தாருடன் உறவாடவும், பேரளவாக உதவும் கதிரவனையும் சிற்றளவாக உதவும் திங்களையும்; உண்ணக் காய்கனியும் தங்கத் தண்ணிழலும் குடியிருக்க உறையுளும் உதவும் பல்வகைப் பழுமரங்களையும்; இளமை முதல் முதுமைவரை எல்லார்க்கும் இன்னுயிர்த் தீம்பால் உதவும் ஆவையும், இன்னோ ரன்ன பிறவற்றையும், தெய்வமாகப் போற்றியதும் வணங்கியதும் நன்றியறிவு பற்றியதாகும். அவ்வகை வணக்கத்தைக் குறித்த காலந் தொறும் தொடர்ந்து செய்வது, மேன்மேலும் நன்மை பெறலைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். வணக்க மெல்லாம் படைப்பொடு கூடியதே.

(4) பாராட்டு

இனத்தைக் காக்கப் பகைவருடன் புலிபோற் பொருதுபட்ட, உயிரீகி (பிராணத்தியாகி)யாகிய தறுகண் மறவனுக்கும்; மழை வருவித்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரை யெரித்தும், உடன்கட்டை யேறியும், கடுங்கற்பைக் காத்த பத்தினிப் பெண்டிற்கும்; கல் நட்டி விழா வெடுத்தது பாராட்டுப் பற்றியதாகும்.
     "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்     
      பெய்யெனப் பெய்யும் மழை"    (குறள். 55)

என்னுங் கூற்று, ஒருசில நிகழ்ச்சிகளையேனும் சான்றாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பட்டவன் கல்லும் பத்தினிக் கல்லும் இனத்தார் அல்லது பயன் பெற்றவர் நட்டுச் சிறப்புச் செய்வது, நன்றியறிவையும் ஒருமருங்கு தழுவியதே.

தீயானது, கொல்லுந்தன்மையால், அச்சத்திற்கும், இருள் போக்கியும் உணவு சமைக்க உதவியும் கொடுவிலங்குகளை வெருட் டியும் குளிரகற்றியும் நன்மை செய்வதால் நன்றியறிவிற்கும் உரிய தாயிற்று.

(5) அன்பு

இருதிணைப் பகையையும் அழித்தும், உணவிற்கு வழிவகுத்தும், நடுநிலையாக ஆட்சி செய்தும், குடிகளை அரவணைத்துக் காத்த அரசன் இறந்தபின், அவனுக்குப் படிமையமைத்துப் படைத்து வணங்கியது அன்பு பற்றியதாகும். இதினின்றே, விண் ணுலக வேந்தன் (இந்திரன்) வணக்கம் தோன்றிற்று.

(6) கருதுகோள்

முதற்காலத்திற் குறிஞ்சிநிலத்திலேயே வாழ்ந்த மாந்தர், பின்னர் ஏனை நிலங்களிலும் பரவியபின், அவ்வந் நிலத்திற்கேற்ப ஒவ்வொரு தெய்வந் தோன்றிற்று. அதன்பின், ஒவ்வொரு பெரு நிலத்திற்கும் பேராற்றிற்கும் பெருந்தொழிலுக்கும் பெருநன்மைப் பேற்றிற்கும், காதற்பண்பிற்கும், சாதல் தீங்கிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகக் கருதப்பட்டது.

கண்ணாற் காணும் இயற்கைக் கூறுகளும் நிகழ்ச்சிகளும் தோற்றங்களும் ஆவிகளும் வினைகளுமன்றி, மனத்தாலேயே படைத்துக் கொள்ளும் தெய்வங்களெல்லாம் கருதுகோளின் விளைவேயாகும்.    நீரூட்டியும் நீராடுவித்தும் உணவு விளைத்தும் பல்வகை யுதவும் ஆற்றை நன்றியறிவுபற்றி வணங்குவது வேறு; 

(7) அறிவு வளர்ச்சி

மாந்தன் நாகரிகமடைந்து அறிவுவளர்ந்து பண்பாடுற்றபின், மறுமையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது   அறிவு வளர்ச்சியாகும்.

மக்கள் மனப்பாங்கும் அறிவுநிலையும் பல்வேறு வகைப்பட் டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின.

அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக, பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்பதுண் மையே. அவை பெரும்பாலும் பழங்காலத் தன்மையாலும் தன்னலக் காரரின்  சூழ்ச்சியாலும் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக் கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொள்ளல் வேண்டும்.

மதமும் சமயமும் பெரும்பாலும் நம்பிக்கையைப் பொறுத்தன

மூவகை மதம்

மக்களின் அறிவுநிலைக்கேற்ப, 

(1) சிறுதெய்வ வணக்கம்

(2) பெருந்தேவ மதம் 

(3) கடவுள் சமயம் என மதம் மூவகைப்படும்.

இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்பக்காலத்திலும் துன்பக் காலத்திலும். ஐம்பூதமும் ஆவிகளும் போன்ற சிறுதெய்வங் கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள் தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனிமட்டும் படைத்து, அவ்வவ் மத அடையாளந் தாங்கி, இருதிணை யுயிருக்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய்தொழுகுவது, பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்தி லேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர் கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடுபெற வொழுகுவது, கடவுள் சமயமாம்.

சிறுதெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது; பெருந்தேவ வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, இருந்தும் இல்லாமலும் இருக்கலாம்.

குமரிநாட்டு மதநிலை

மேற்கூறிய மூவகை மதநிலையும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டுத் தமிழ் மக்கள் கொண்டிருந்தனர். ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. 1500. அவர் மதம் கொலைவேள்விச் சிறுதெய்வ வணக்கம். தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் தழுவினர். ஆதலால், அவரின் வேதாகம இதிகாச புராணக் கதைகளை யும் புரட்டுகளையும் நம்பி, அவையே சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும் அவற்றின் கொண்முடிபுகட்கும்(சித்தாந்தங்கட்கும்) மூலமெனக் கூறுவது, இவ் விருபதாம் நூற்றாண்டிற்கு  எட்டுணையும் ஏற்காது. 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com