இன அரசியல்-12: திராவிடர்

இன அரசியல்-12: திராவிடர்

திராவிடர்கள், ஆஸ்திரலோயிட் அல்லது வெத்தோயிட் என்னும் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டது. எனினும் அநேகர் காக்கசாயிட் இனத்தின் தென்கோடியில் உள்ள பிரதிநிதிகளாகத் திராவிட இனத்தைக் கருதி வருகின்றார்கள். தமிழர், கன்னடர், மலையாளி, தெலுங்கர் மற்றும் பல பழங்குடியினருக்கு முன்னோர்கள் ஆதி திராவிடர்கள் என்கிறார் T.R.சேஷ ஐயங்கார். இந்தியக் மலைகளில் காடுகளில் பழங்குடிகள் ஒதுங்கி வாழ்வதைக் காணும் பொழுது, திராவிடர்கள் வெகு காலத்திற்கு முன் இந்தியாவை படையெடுத்து வந்த குழுவினர் என்கிறார் E.L.தம்பிமுத்து.

திராவிடர் பூர்வீகம்

திராவிடர்கள் இரு வகையினர் ஒன்று கோலேரியர்கள் (kolarians) மற்றொன்று முண்டரிகள் (Mundari) ஆவர். கோலேரியர்கள் வடகிழக்கு வழியாக இந்தியாவிற்குள் வந்தவர்கள். இந்த முண்டரிகளுக்கு முன்னோர் நாகர்கள் என்கிறார் தேவநேய பாவாணர். வடமேற்கு வழியாக பஞ்சாபை அடைந்தனர் என்கிறார் சர் வில்லியம் ஹண்டர். மங்கோலிய பூர்வீகத்தினர் என்கிறார் கனகசபை. சர் H ஹிஸ்லி(Sir H Hisley)  இமாலயப்பகுதியிலிருந்து (trans-himalayan) வந்தவர்கள் என்கிறார்.

திராவிட மக்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்று கூறுவதற்கேற்ற ஆதாரம் ஒன்றேனும் காணப்படவில்லை. பழைய கற்காலம் முதல் இரும்புக்காலம் வரையில் மக்கள் தொடர்பாகச் செய்து பயன்படுத்திய ஆயுதங்களும் பிறபொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன .

திராவிட மக்கள் அயல்நாடுகளினின்றும் வந்தார்கள் என்று கூறுவோர்க்குத் துணேயாயிருப்பது ஆப்கானிஸ்தானத்தின் ஒர் பகுதியில் தமிழுக்கு இனமுடைய பிராகூய் மொழி வழங்குவது. இன்றைக்கு ஆராயிரம் ஆண்டுகளின் முன் சிந்து ஆற்று வெளிகளில் திராவிடர் நாகரிகம் பரவியிருந்தது. அங்கு தமிழ் வழங்கிற்று. இம்மக்களின் தொடர்புடையவர்களே ஆப்கானிஸ்தானத்தில் தங்கி வாழ்ந்தார்கள். அவர்களின் சந்ததியினரே திராவிடத் தின் சம்பந்தமுடைய பிராகூய் மொழியை இன்றும் பேசி வருகின்றனர் என்கிறார் W.R.ராமசந்திர தீட்சிதர்.

திராவிடர் பரவல்

ரிக் வேதத்தில் திராவிடர்

ரிக் வேதத்தின் ஒன்பதாவது இயல்,சோம பானம் மற்றும் சுரா பானம் காய்ச்சும் முறைகளைக் பற்றியும் இவற்றை எந்த அளவில் எவற்றோடு கலந்து குடிப்பது என்பதைப் பற்றியும் 1108 பாடல்களில் விரிவாகப் பாடுகின்றது. சுரா பானத்தைக் குடிப்பவர்களை ஆரியர்கள் தங்களைச் ‘சுரர்’ என்றும் அதனை மறுத்த திராவிடர்களை ‘அசுரர்கள்’ என்றும் அழைத்தனர்.

“அக்கினியே, தானம் அளிக்காத எங்கள் பகைவர்களாகிய அரக்கர்களைத் தூள் தூளாக்கு’ (ரிக்-441). ‘இந்திரனே, தெய்வ நம்பிக்கையில்லாத - கடவுளற்ற - சடங்குகள் செய்யாத தாசர்  இனத்தைப் பூண்டோடு அழித்துச் சாம்பல் ஆக்க வானத்தையும் பூமியையும் அனலாக்கு’ (ரிக் - 4617)

திராவிடர்களை, தாசர்கள், தஸ்யூக்கள், கறுப்பர்கள் என்ற சொல்லாட்சிகளால் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார்கள்.
 

தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்

மரபணு ரீதியாக மனிதகுல வரலாற்றையும் இடப்பெயர்வுகளையும் ஆராயும் தமிழக விஞ்ஞானி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மரபணு அறிவியல் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர்.இராம பிச்சப்பன் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூரில் விருமாண்டி என்பவரிடம் மரபியியல் ஆய்வு செய்த போது "எம்130 டி.என்.ஏ" கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு ஆப்பிரிக்க மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் "Mம்130 DNA" இருப்பதாக டாக்டர்.பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார்.

 மைகேல் வூட்ஸ்

மைக்கேல் வூட்ஸ் (Michael Woods) என்கிற ஆவண பட தயாரிப்பாளர் விருமாண்டியை நேரில் சந்தித்து பேட்டி எடுத்துள்ளார், இதை தனது ஆவணப்படம் பகுதி-1இல் பதிவு செய்துள்ளார். இத்தரவுகளை இந்திய வரலாறு (The Story of India) என்ற தனது நூலிலும் பதிவு செய்துள்ளார். அடிப்படையில் இவர் வரலாற்று ஆசிரியர் எனினும் இவர் பதிவுகள் மானுடவியல், மரபியல் அல்லது தொல்லியல் சார்ந்து இல்லாத காரணத்தால் இவர் தரவுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியாது.  இவர் முருகனின் சிரிப்பில் (A South Indian Journey: The Smile of Murugan) என்று அவர் ஒரு ஆங்கில நூலும் எழுதி உள்ளார்.

இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும். 13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபணு குறியீடுகளை ஆய்வு செய்தனர். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழங்குடியினர், உட்பட அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.

தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர். அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். 

சமீபத்திய ஆய்வுகள்

ஆப்பிரிக்காவில் தான் முதல் மனிதன் தோன்றினான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், 26 மே 2018 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது என தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திராவிட மொழிகள் (dravidian language)

திராவிட மொழிக் குடும்பம் என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரப்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் ,பியரி மொழி, படுக மொழி, குடகு மொழி, குறும்பா மொழி, காணிக்காரர் மொழி, கொற்ற கொரகா, இருளா, தோடா, கோத்தர், அல்லர், கோண்டி, முரியா, கூய், மாரியா குவி, பெங்கோ, கோயா, பர்தான், செஞ்சு, கொண்டா, நாகர்ச்சால், மண்டா, கொலாமி, துருவா, ஒல்லாரி, நைக்கி, பிராகுயி, குறுக்ஸ், சவ்ரியா பஹரியா, குமார்பக் பஹரிய் போன்றவை அவற்றுள் சில ஆகும்.

திராவிடர் சமயம்

சைவம் எனப்படும் சிவ நெறியானது பழங்காலத் திராவிடர்களின் சமயக் கொள்கை எனலாம். பறவைகளும், விலங்குகளும் சூழ, மனிதன் கால்மேல் கால்போட்டு வீற்றிருப்பது போன்ற உருவம் பொறித்த இலச்சினைகள் பல மொகஞ்சதரோவிலிருந்து கிடைத்துள்ளன, சிவனுக்கு சொல்லப்படும் சாயல் தோற்றங்கள் எல்லாம் இந்த உருவத்துக்கும் அமைந்துள்ளன

References:

  • திராவிட மக்கள் வரலாறு E.L.தம்பிமுத்து 1946
  • திராவிட இந்தியா  ந. சி. கந்தையா பிள்ளை 1949
  • Origin and Spread of the Tamils-W.R.Ramachandra Dikshitar
  • ஆரிய - திராவிடப் போராட்டம் பேராசிரியர் ப.காளிமுத்து
  • Tamil Studies by M.Srinivasa Iyengar
  • Dravidian India Vol 1 T.R. Sesha Iyengar 1925
  • The Dictionary of Historical and Comparative Linguistics, Robert Lawrence 2000

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com