இன அரசியல்-13: நாகர் இனம்

இன அரசியல்-13: நாகர் இனம்

நாகர்கள் (Nagas)

நாகா என்பது பாம்பு என்று பொருள்படுவதாக ஜான் ஓவன் (John owen) குறிப்பிடுகிறார். குமரி முதல் இமயப் பனிமலை வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ-ஹரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும் பரவிக் கிடந்த திராவிடப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களைத் திராவிடர்கள் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்’ என்றும் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

நாகர்கள் மங்கோலிய வகுப்பைச் சார்ந்த திபெத் தோவர்ம குலத்தவர்கள் என்றும் கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவின் வடகிழக்கு கணவாய் வழியாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்கிறார் ஏ.கே.மஜும்தார். நாகர்கள் இலங்கை மற்றும் கடல்கொண்ட பாண்டியநாடு உட்பட பல பகுதிகளுக்கு திராவிட நாட்டிலிருந்து சென்று குடியேறினார்கள் என க.ப.அறவாணர் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.

தமிழர், நாகர் என்போர் இடத்தால் வேறுபட்டவர்களே அன்றி பிறவற்றால் வேறுபட்டவர்கள் அல்லர். அவர்களின் மொழி அது வழங்கப்பட்ட இடத்தால் சிறிது வேறுபடும் தமிழே என்கிறார் K.R.சுப்ரமணியன். நாக் என்பது பாம்பினைக் குறிக்கும் வடமொழிச்சொல், ஆகவே நாகா என்று வடமொழி எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

ரிக் வேதத்தில் “அஹி” (Ahi) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது அஹி என்பதன் பொருள் பாம்பு, விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தால் தாக்கிய போது வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் போல் அஹி என்பவன் வீழ்ந்தான். இதன்வழி, நாகர்கள் அசுரர்கள் சொல்லால் வழங்கப்பட்டது தெரிய வருகிறது என்கிறார் ஜாய் ஜானதேசிகன்.

போகவதியை ஹீராலால் எனும் அறிஞர் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நாம்டிக் நகரம் என அடையாளம் காண்கிறார். அதனை நாகர்களின் இருப்பிடமாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. தாலமி திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள ஓர்த்தூரா (உரகபுரா அல்லது பாம்பு நகரம்) பற்றிக் குறிப்பிடுகின்றார்.

நாகர் என்பார் முதன்முதல் நாகவணக்கங் கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார். இன்றும் கீழ்நாடுகள் பாந்தளும் நச்சுப் பாம்பும் நிறைந்தவை.
“கீழ்நில மருங்கி னாகநாடாளு
மிருவர் மன்னவர்”(9 : 54- 55) என்பது மணிமேகலை.

நாகநாட்டு மாந்தரும் அரசரும் நாக இலச்சினையுடையவராயும், நாகவுருவை அல்லது படத்தைத் தலையிலணிந்தவராயுமிருந்தனர். சிவபெருமான் நாகத்தைத் தலையிலணிந்ததாகக் கூறியது, புல்லிய வணக்கத்தையுடைய நாகரைச் சைவராக்குவதற்குச் சூழ்ந்த சிறந்த வழியே. பௌத்த மதம் பிற்காலத்து வந்தது.

சிந்தர்கள் புகழ்பெற்ற சிந்து நதியில் இருந்து தங்கள் பெயரைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது, கி.பி11-12 நூற்றாண்டுகளில் தக்காணத்தின் பெரும் பகுதியில் காணப்படுகின்றார்கள். பிஜப்பூர், தார்வார் ஆகிய பகுதிகளில் உள்ள சிந்தர்கள் நாகா இனத்தைச் சார்ந்தவர்கள்.

தொல்லியல் ஆதாரங்கள்

தென்னிந்தியத் தமிழகத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான “முதுமக்கள் தாழி”கள் அகழ்வாராய்ச்சியாளரால் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு புதைக்கப்பட்டவர்கள் உயரமானவர்களாகவும் மங்கோலிய உருவ அமைப்பின் அம்சங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்று அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவல்களை ஒரு சேரப் பார்க்கையில் புதைக்கப்பட்ட மக்கள் ‘தமிழ் நாகர்’ என்று குறிப்பனவாக உள்ளன.

கைகயர்கள்(Haihayas) இனம் அஹி அல்லது விரித்ராவிலிருந்து தோன்றியது என கருதப்படுகிறது.

கிருஸ்துவ சகாப்தத்தின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே மைசூர் உட்பட தக்காணத்தில் நாகர் இன மக்கள் வசித்தனர் எனக் கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்வெட்டுகளில் ஏராளமான நாகப் பெயர்களும், நாகச் சிற்பங்களும் தக்காணத்தில் காணப்படுவதால் தக்காணம் நாகர்களில் மையமாக விளங்கியது எனலாம்.

குஷானர்களின் வீழ்ச்சிக்கும் சமுத்திர குப்தரின் தலைமையில் குப்தர்களின் எழுச்சிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் ஏராளமான நாகர் தலைவர்கள் தோன்றினர் என குப்தர்கள் காலக் கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.மதுரா நாகர்களின் கேந்திரமாக முற்காலத்தில் இருந்தது என பிராமிக் கல்வெட்டுகள் வழி தெரியவருகிறது.

நாகர்களின் இருப்பிடம்

சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன. இன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Chota Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயேயிருத்தல் காண்க.
நாகர் அல்லது கீழ்த் திசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தினர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவுகளில் வாழ்பவராயும், அம்மணராயும், நரவூனுண்ணிகளாயு மிருந்தனர்.
“சாதுவ னென்போன் தகவில னாகி...
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன்...
நக்க சாரணர் நயமிலர் தோன்றி...
ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும்”(16 : 4-59) என்னும் மணிமேகலையடிகளைக் காண்க.

சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலைநகரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது. நடுமாகாணத்தி (Central Provices)லுள்ள முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாகநாட்டாரே. வங்காளக்குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்துபோனபின், அவற்றினின்றும் எஞ்சினோர் இந்தியாவின் கீழ்ப்பாகங்களிற் குடியேறினர்.

முண்டரின் முன்னோர் நாகர் என்பதற்குச் சான்றுகள்

(1) சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Peninsula) வரையும், ஒரே வகையான கற்கருவிகள் அகப்படுவதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன.

(2) முண்டா மொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் மொழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான்குமேர் (Mon-Khmer) மொழிகளும் ஓரினமென்று கொள்ளும் படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன.

உணவு

மாமிசமும், நர மாமிசமும் உண்பவர்களாக இருந்தனர். தாவர உணவுகளை உண்பவர்களாக புத்தர் மாற்றினார்.

சேர நாகர்கள்

நானாகாட் கல்வெட்டுக்கள் நாகர்களை நாயணிகாவில் வருவது போன்று நாயா என்று குறிப்பிடுகின்றது. மலபார் நாகர்கள் முற்காலத்திய நாகர்களின் பழக்கவழக்கங்கள் மாறாது பிரதிபலிக்கின்றனர். சில கால முன்புவரை நாயர் பெண்கள் நாகப்படம் என்னும் காதணியை அணிந்தனர்.

அங்கமி நாகர்கள் (ANGAMI NAGAS)

அங்கமி நாகர்கள் பழங்குடியினர்கள் பிபேமா, சிபாமா, விடிமா, கிர்ஹா, பெரிமா போன்ற கிராமங்களில் வசிக்கின்றனர். விழாக்காலங்களில் இவர்களின் நடனமும், விருந்தும் அட்டகாசமானதாக இருக்கும். பிப்ரவரி மாதம் இவர்களின் விழாவான செங்கென்யி கொண்டாடப்படுகிறது. இவர்களில் சிலர் நன்கு படித்து நவநாகரிக உடை அணியவும், வெளியுலகத்துக்கு வரவும் தொடங்கிவிட்டாலும், இந்த கிராமம் இன்னும் பழமையை தொடர்கிறது. அங்கமி இனத்துக்குள்ளேயே பல உட்பிரிவுகள் இருக்கின்றன. திருவிழாக்களின் போது சேவல் பலி கொடுக்கிறார்கள். முன்பு பல வருடங்களுக்கு முன்பு வரை மனிதர்களைத் தான் பலியிட்டு வந்திருக்கிறார்கள்.

அஸ்ஸாம் மணிப்பூர் நாகர்கள்

அஸ்ஸாம் நாகர்கள்

அஸ்ஸாம் நாகர்கள் மொத்தமாக “மிரி; என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் திக்கு ஆற்றுப் (Dikhu River) பகுதியில் வசித்தனர். ஆண் பென் இருபாலரும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். மணிப்பூர் நாகர்கள் பல குழுக்களாக இருந்தனர்.


மணிப்பூர் நாகர்கள்


லோதா நாகர்கள் (Lhota Nagas)

லோதா நாகர்கள் வோஹா மலைப்பகுதிகளில் வசித்தனர். இவர்களுடைய மொழி ஏவோ(Ao), தங்சா(Tangsa), துகுமி(Thukumi) யச்சூமி (Yachumi ) வழி வந்த லோதா மொழி என்கிறார் சர் ஜார்ஜ் கிரியர்சன் (Sir George Grierson)

சமயம் வழிபாடு

பித்துப் பிடித்த கடவுள்களை வழிபாடு செய்தனர். நாகர்களின் மூதாதையர் வழிபாட்டு முறைகளும், பாம்பு வழிபாடும் சைவ மத வழிபாட்டுடன் புத்தர் காலத்திலேயே கலந்துவிட்டன. உலகெங்கும் நாக வழிபாட்டை பரப்பியவர்கள் நாகர்களே. கேரளத்துப் பாம்பு மேக்காட்டு நம்பூதிரிகள் பழங்காலத்து நாகர் இன மக்களே ஆவர். லிங்கங்கள் நாகர்களின் பாதுகாப்பிலும், கவனிப்பிலுன் உள்ளனவாகக் காணப்படுகின்றன. நாகார்ஜுனாவின் சீடர் புத்தமதம் தழுவி மரவழிபாடு மற்றும் பாம்பு வழிபாட்டை ஏற்றுக் கொண்டது குறித்து கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

கிளைகள்

நாகர்களில் பல கிளைகளாக இருந்தனர். எயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய கிளையினர் இருந்தனர். அவர்களில் மறவரே வலிமை மிக்கவராயும் போர்த்திறம் மிக்கவராயும் இருந்தனர், நாலைக் கிழவன் நாகன் என்ற மறவர் கோமன் பாண்டிய மன்னனிடம் அமைச்சனாகவும்,படைத் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரைமலையை ஆண்ட பிட்டங்கொற்றன் சேர மன்னனிடம்  பணிசெய்ததாக வி.கனகசபைப் பிள்ளை கூறுகிறார்.

நாகர்களில் அடக்காப் பண்புடையவர்கள் வயினர் அல்லது வேடர்களே ஆவர். நாகர்களில் இன்னொரு மரபினரான ஒளியர் கரிகால் சோழனால் வென்றெடக்கப் பட்டனர் என்று பட்டினப்பாலை மூலம் தெரிகிறது.

நாகர் இனத்தில் மற்றொரு வகுப்பினர் பரதவர் ஆவர். இவர்கள் மீன் பிடித்தல், கடல் வாணிபம் செய்தல் முதலிய தொழில்கள் செய்துவந்தனர்.ஓவிர் தேசம் ஓவியராகிய நாகர்கள் வாழ்ந்த மாந்தை நகரமாகும்.

எழுத்து

ஆரியர்கள் எழுத்துக்களையை கற்றது நாகர்களிடமிருந்து என்பார். சமஸ்கிருத்த்தை உருவாக்கி அதை கற்பித்தவர்கள் நாகர்களே. அதனால் தான் அவ்வெழுத்துக்களுக்கு தேவநாகரி (தேவ+நாகரி) என்றழைக்கப்படுவதாக செ.ராசநாயகம் முதலியார் தெரிவிக்கிறார்.

நாகர்களின் மந்திரங்கள்

இசையிலும் மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நாகர்கள். அம்மந்திரங்களை ஆங்கில அறிஞர்கள் ரிவென்பர்க் (Rev S.W.Rivenberg) மற்றும் பெட்டிக்ரூவ் (Rev.W.Pettigrew) இருவரும் தொகுத்துள்ளனர்

கலைகள்

நாகர்கள் பல கலைகளில் திறமை உடையவர்களாக இருந்தனர். நெசவு அவர்களின் தனித் திறமையாக இருந்துள்ளது. ஆடைகளையும், மல்மல் என்ற மெல்லாடைகளையும் ஏற்றுமதி செய்துள்ளனர். நீல நாகர்கள் தனக்களித்து மல்மல் ஆடைகளுள் ஒன்றை ஆய் எனும் வள்ள சிவபெருமான் சிலைக்கு பரிசளித்ததாக பத்துப்பாட்டு குறிப்பிடுகிறது.

புது நகரங்களைக் கட்டுவதில் நாக மன்னர்கள் நிபுணர்கள் ஆவர். அவர்கள் பல நகரங்களைக் கட்டினார்கள், மகாபாரதத்தில் வரும் “மாயசபை” இவர்களுடைய சித்திர வேலைத் திறனைக் காட்டுகிறது.பாதாளம், பிரஜயோடிஷ, தக்‌ஷலா, மகாத, மதுரா, விலாசபொரி முதலிய நகரங்களை அமைத்தவர்கள் நாகர்களே. உலகில் முதல் முதலில் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள். பாம்புகள், எறும்புகள் போல நிலத்தைத் தோண்டி பொன், வெள்ளி, முதலிய உலோகங்களைக் கண்டவர்கள்ம் சிற்பக்கலை முதலிய அருங்கலைகளில் சிறந்தவர்கள் நாகர்களே. இத்தொழில்களில் இன்றுவரை நாகர் ரத்தம் உள்ளவர்களே ஈடுபட்டு வருகின்றனர்,

தாசர்கள்

திராவிடர் என்பது மொழியைக் குறிக்கும் பெயராகும். ஆதி திராவிடர் என்ற சொல்லே அவர்கள் ஆதியில் வாழ்ந்தவர்கள் என்பதே. நாகன், நாகப்பன், நாகராஜ், நாகலுங்கம், நாகேந்திரன், நாகூரான் என்ற பெயர்கள் ஆராய வேண்டியவை. தாசர்கள் திராவிடர்களே.

நாகப்பட்டினம்

தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகநாதர் கோயிலில் உள்ள பல்லவர் கல்வெட்டிலும் இவ்வூர் நாகை’ என அழைக்கப்படுவதைக் காணலாம். இப்பெயர் பின்னர் ‘பட்டினம்’ (அந்நாட்களில் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகத்தைச் சுட்டும் சொல்) என்ற பின்னொட்டுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என வழங்கலாயிற்று. நாகர் இன மக்களுக்கும் இவ்விடத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் இவ்வூர் நாகை எனப் பெயர் பெற்றதாகவும் கொள்வர்.
 
பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிறமுடைய மண்கலச் சில்லுகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் ஒரு சில்லில் ‘நாகர்’ என எழுத்துகள் காணப்படுவது சிறப்புக்குரியதாகும். எழுத்துகளின் அமைப்பினைக் கொண்டு கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். எழுத்துகள் கீறப்படாமல் புடைப்பாகக் காட்டப்பட்டுள்ளமை இவை முத்திரையிடப்பட்டவை என்பதைப் புலப்படுத்துகிறது.

தேவையான ஆய்வுகள்

மானுடவியலாளர்கள், தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் நாகர்கள், திராவிடர்கள் மற்றும் தமிழர்களிடையுள்ள மரபுத் தொடர்புகளைப் பற்றி ஆய்ந்து விளக்குதல் அவசியமான ஒன்றாகிறது.

References:

  • ஒப்பியன் மொழிநூல் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
  • நாகப்பட்டினம் அகழாய்வு,முனைவர் பா.ஜெயக்குமார்,கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
  • ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும்பேரும், 1976
  • நாகர் வரலாறு டாக்டர்.சிவ.விவேகானந்தன்.
  • நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்வ் வ.ஜெயதேவன்
  • ஒரு மறக்கப்பட்ட வரலாறு, ஜாய் ஞானதாசன்
  • The origin of saivism and its History in Tamilnadu by K.R.Subramanian
  • ‘Sketches of Ceylon History' 
  • The Naga tribe of Assam_William Carlson Smith 1925
  • Notes on Naga tribes_John owen 1844
  • The Naga tribes of Manipur_T.C.Hodson 1911
  • The Angami Nagas by John Henry Hutton I.C.S 1921

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com