மத அரசியல்-23: பிராமண மதம்

மத அரசியல்-23: பிராமண மதம்

பிராமண மதம் (Brahmanism)

பிராமண மதத்தை ”ஆர்ய தர்மம் அல்லது வைதீக தர்மம் அல்லது ரிஷி சம்ப்ரோதயோ தர்மா” என்றழைத்தனர். பிராமண மதம் வேத மதத்திலிருந்து பிறந்தது. ரிக் வேத காலம் கடந்து பிற வேதங்களுடைய காலத்தில்தான் இம்மதம் வடிவம் கொண்டது.

பிராமண மதம், மதம் என்பதை விட அதிக தத்துவங்களால் ஆனது. இந்து மதம் பிராமண மதத்திலிருந்து பிறந்தது என்கிறார் சர் மோனியர் வில்லியம்ஸ். 

வாழ்க்கையின் மூச்சாகிய “ஆத்மா: அதையே பிரம்மம் என்பர். மனிதர்கள், கடவுள் மற்றும் கண்முன்னே தெரியும் உலகை மாயை என்றனர். இவ்வாறு எளிமையாக இருந்த பிராமண மதம் பின்னாளில்  சடங்குகள், தத்துவங்கள், புராணங்கள், பல கடவுளர்கள், நீதிகள் என சிக்கலான மதமானது. 

பிராமண மத காலத்தை கி.மு.800 - கி.மு.600 என்கிறார் மேக்ஸ் முல்லர். இதை முதல் கால கட்டம் என்கின்றனர். இரண்டாம் கால கட்டம் மனுவின் காலம் என்கின்றனர். பிரம்மா முக்கிய கடவுளர் என்கிறார் க்ளார்க் ஜேம்ஸ் ஃப்ரீமேன். இவ்வாறு வேத காலக் கட்டத்தில் ஆரம்பித்து, சதுர்வர்ணம் என்று அழைக்கப்பட்டு பின் சாதி முறையாக மாறியது.

கடவுளர்கள்

சூரியனை மித்ரன், சூரியன், ஆதித்தன் என்ற பெயர்களில் அழைத்தனர். காயத்ரி ஒரு சூரியத் துதியாகும். ரிக் வேதத்திலுள்ள ஒன்பது மந்திரங்கள் சவிதா என்ற தேவனுக்குரிய துதிகளாகும். வேத காலத்தில் முக்கிய கோத்திரங்களில் ஒன்று பரத்வாஜ். அவர்களுடைய கடவுளான பூஷாவை ரிக் வேதத்திலுள்ள பத்து மந்திரங்களில் துதிக்கின்றனர். கண்வ மகரிஷியின் பாடல்கள் மூலம் இதை அறியலாம்.

வாசுதேவன்; வாயு, வாதம் என இரண்டு வகைக் கடவுள்கள் இருந்தன. ரிக் வேதம் முதல் மண்டலித்திலுள்ள 134-ஆம் சூக்தம் முழுவதும் வாயுவையும், பத்தாம் மண்டலத்திலுள்ள 168, 186 சூக்தங்கள் வாதத்தையும் துதிப்பன.

உயிரை நிலை நிறுத்தத் தேவையான தண்ணீரையும் வழிபட்டனர். உலகத்தைப் படைத்தாகக் ரிக் வேதத்தில் கூறப்படும் அபாம்நபாத் ஒரு கடவுளராக வழிபடப்பட்டுள்ளார், மேலும், பிருதிவி, தியவுஸ், உஷஸ், அஸ்விகள், வருணன், இந்திரன், பர்ஜயன்,  போன்றோரும் கடவுளர்களாவர்.

பிராமண இலக்கியங்கள்

1.வேதங்கள் (Vedas) (கி.மு.1500-1000)

சிந்து மக்கள் லிங்கத்தையும், மற்ற கடவுள் சின்னங்களையும், விக்கிரகங்களையும் வழிபட்டுவந்தாலும், அவர்களிடையே தத்துவ சிந்தனை இல்லாததால் ஆரியர்கள் அதை ஆரம்பித்தனர். கி.பி. கி.பி.00-இல் வாழ்ந்த ஜைமினியின் கருத்துப்படி, ஆரியர்களின் இலக்கியமான வேதங்கள் “மந்திரங்கள்” என்றும். “பிராமணங்கள்’ என்றும் ’மந்திரங்களின் தொகுப்பை’ சம்ஹிதைகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.

வேதங்களில் மிகப் புராதனமானது ரிக் வேதமாகும். ரிக் வேதங்களை இயற்றிய ரிஷிகளில் விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பரத்வாஜர், கோதமர், அத்ரி ஆகியோர் பழையவர்கள். ரிக் வேதம் ஆறேழு தலைமுறைகளைச் சேர்ந்த ரிஷிகளின் படைப்பாகும், அவர்களின் வம்சாவளி:

அங்கிரா

பிரகஸ்பதி (கி.மு.1520)

பரத்வாஜர் (கி.மு1500)

விதத்தி

நர் (கி.மு 1460)

ஸ்ம்க்ருதி (கி.மு/1440)

கவுரவீதி (கி.மு 1420) மற்றும் ரத்தி தேவர்

2.பிராமணங்கள் (Brahmana)

சம்ஹிதைக்கு அடுத்ததாக வேதத்தில் முக்கியப் பகுதி பிராமணங்கள். இது யாகங்களைப் பற்றி விரிவாகச் சொல்கிறது. ரிக் வேதத்திற்கு “அய்தரேயம்’ என்றும் ‘கவ்ஷீதகம் என்றும்’ பிராமணங்கள் உள்ளன. யஜூர் வேதத்திற்கு ‘கிருஷ்ண யஜூர்’ என்றும் சுக்ல யஜூர் வேதமென்றும் உள்ளன. கிருஷ்ண யஜூர் வேதத்தின் பிராமணங்கள் தைத்திரீயம், மைத்ராயணி, காடகம் ஆகும். வாஜஸனேயம், சதபதம் ஆகியவை இரண்டாவது வேதத்தின் பிராமணங்களாகும்.

3.ஆரண்யகங்கள் (Aranyaka)

1. அய்தரேயாரண்யகம்
(ரிக் வேதத்துடன் தொடர்புடைய அய்த்ரேயரண்யகம் 15 அத்தியாயங்கள் அடங்கிய பெரிய நூல்)
2. கவுஷீதகாரண்யகம்
3.தைத்தியாரண்யகம்

(இதே பெயரையுடைய பிராமணத்தின் பாகம் இது. 10 அத்தியாயங்களில் ஆறில் கிரியா மார்க்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.)
4.ப்ருஹதாரண்யகம்
(யஜூர் வேதத்துடன் தொடர்புடையது. சதபத பிராமணத்தின் கடைசி காண்டம் இது.)

4. உபநிஷத்துகள் (Upanaishads)

உபநிஷத்துகளின் தத்துவாசிரியர்கள் பல கருத்து வேற்றுமைகளைக் கொண்டிருக்கின்றனர். சிலர் ஆருணி, அவரது சீடர் யாக்ஞய வல்க்யரைப் போல “அத்வைத; துவைத சித்தாந்தங்களை வலியுறுத்துகின்றனர். சாதாரணமாக உபநிஷத்துக்கள் 112 காணக் கிடைத்தாலும் எல்லாமுமே அசலானவையல்ல.

அ) பழங்கால உபநிஷத்துகள் (கி.மு.700)

(i) ஈசா உபநிஷத் (Isha Upanishad)

சுக்ல யசூர் வேத சம்ஹிதாவின் கடைசி நாற்பதாவது அத்தியாயமாகும். இந்த உலகங்கள் அனைத்தும் ஈசாவாஸ்ய என்று துவங்குவதால் (ஈசா வாஸ்ய இதம் சர்வம்), இந்த உபநிடதத்தினை ஈசா வாஸ்ய உபநிஷத் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுபநிடதம் 18 மந்திரங்களை மட்டுமே கொண்டுள்ள சிறிய உபநிஷத் ஆகும். உபநிடதத்தின் மையக்கருத்து “அனைத்து உயிரினங்களும் அண்டங்களும் இறைவனால் நிரம்பப்பட்டுள்ளது. தியாகத்தால் தன்னை காத்துக் கொள்ள வேண்டும். யாருடைய பொருள்களை கைப்பற்ற ஆசை கொள்ளக் கூடாது. எல்லா உயிரினங்களில் ஆத்மதத்துவத்தை பார்க்கின்றவனுக்கு மயக்கம் இல்லை, துயரம் இல்லை. வேதத்தில் கூறப்பட்ட கர்ம யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர்களுக்கு பலனாக சொர்க்கலோகம், பிதுர்லோகம் கிடைக்கிறது”.

(ii) சாந்தோக்கிய உபநிஷத் (கி.மு 700)

பிரகதாரண்யக உபநிடதம்மும் சாந்தோக்ய உபநிடதமும் இரு மிகப்பெரிய உபநிடதங்கள். இரண்டிற்கும் பல ஆசாரியர்களும் விரிவாக உரை எழுதியிருக்கின்றனர். இவையிரண்டில் இல்லாத வேதாந்த தத்துவங்கள் வேறு எங்குமே இல்லை என்று சொல்ல முடியும். ஆனால் இரண்டையும் ஆழமாகப் பார்க்கும்போது ஒரு முக்கியமான வேறுபாட்டைக் காணலாம். சாந்தோக்யம் இப்பிரபஞ்சத்தில் நம் புலன்களுக்குப் புலனாவதில் தொடங்கி நம்மை பிரும்மத்திற்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கிறது. பிருகதாரண்யகம் நம் புலன்கள் அறியக்கூடியவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரம்மத்தை நம்மறிவிற்கு உட்படுத்தமாட்டாமையை விளக்குகிறது. இதனால் சாந்தோக்யத்தை 'ஸப்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் பிரகதாரண்யகத்தை 'நிஷ்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் சொல்வதுண்டு.

(iii) பிரகதாரண்யக உபநிஷத் (Bṛhadāraṇyaka Upanishad) (கி.மு 600)

பிரகதாரண்யக உபநிஷத் சுக்ல யஜூர் வேதத்தின் சதபத பிராமணத்தின் கடைசி பாகமும், ஒரு ஆரண்யகமும் ஆகும். உபநிஷத்துக்களின் மிகப் பெரிய சிந்தையாளரான யக்ஞவல்கியரின் கருத்துகள் இதில்தான் உள்ளன. ’நான் பிரம்மாக இருக்கிறேன்’என்ற மெய்ப்பொருள் தத்துவத்தை இந்த உபநிடதம் விளக்குகிறது. இதில் ‘ஆத்ம விசாரணை’ அதாவது, ஆத்மா தொடர்பான பல ரகசியங்களை சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆ) இரண்டாம் காலகட்ட உபநிஷத்துகள் (கி.மு 600-500)

’ஈசா’ என்பது உபநிஷ ஸம்ஹிதையின் ஒரு பகுதியாகும். சாந்தோக்யமும், பிரகதாரண்யகமும் பிராமணத்தின் பகுதிகளாகும். இவை ஞானத்தை வலியுறுத்தின; சடங்குகளை எதிர்த்தன.

(i) ஐதரேய உபநிஷதம்

ஐதரேய உபநிஷம் ஐதரேய ஆரண்யகத்தின் ஒரு பகுதியாகும். உடல், உயிர் மனம், பிராணன், ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே மனிதன். அவன் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களுக்கேற்ப உடல்களை மாற்றிச் செல்வது ஒரு உயிரின் பயணம்; உயிர் பழைய உடலை விடுவது மரணம். புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு; உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது. உயிர் தந்தையின் வழியாக வருகிறது; இதன் பிறகு ஆன்மா கருவுக்குள் புகுந்து கொள்கிறது. ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் விரிவாக இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளன.

(ii) தைத்திரீய உபநிஷம்

தைத்திரீய உபநிடதம் கிருட்டிண யசூர்வேதத்தில் அமைந்துள்ளது. இந்த உபநிடதம் 31 மந்திரங்கள் கொண்டது. இது மூன்று அத்தியாயங்கள் கொண்டது. வல்லிகள் பல பகுதிகளை கொண்டது. பகுதிகளுக்கு அனுவாகம் என்பர்.

(இ) மூன்றாம் காலகட்ட உபநிஷத்துகள் (கி.மு.500-400)

(i) பிரஸ்ன உபநிஷதம்

ஆறு நிஷிகள் கேட்ட கேள்விகளுக்கு பிப்பலாதர் அளித்த பதில்களின் தொகுப்பே பிரஸ்ன உபநிஷதாகும். அதர்வண வேதத்தில் இந்த உபநிஷதம் இருப்பதால், அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இவ்வுபநிஷதத்திற்கும் பொருந்துகிறது. “பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:| எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள், தேவர்களே, செவிகளால் நல்லதைக் கேட்போமாக, கண்களால் நல்லதைப் பார்ப்போமாக, உறுதியான உறுப்புக்களுடன் வேதங்களால் உங்களை நாங்கள் புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ அதை அனுபவிப்போமாக. ஓங்கிய புகழையடைந்த இந்திரன் எங்களுக்கு நன்மையை அருளட்டும். அனைத்தையும் அறிகின்ற சூர்ய தேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். தடையின்றிச் செல்லும் கருடதேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். பேரறிவுடைய பிரகசுபதி எங்களுக்கு நன்மையை அருளட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. (இங்கு சாந்தி என்ற சொல்லிற்கு தடைகள் நீங்கட்டும் என்று பொருள். இயற்கை, சூழ்நிலை, உடல் முதலிய மூன்று இடங்களிருந்து நமக்கு வரும் தடைகள் அமைதி அடைய வேண்டும். அதாவது நீங்கவேண்டும் என்று மும்முறை கூறப்படுகிறது).

(ii) கேன உபநிஷதம்

கேன உபநிடதம்சாமவேதத்தில் அமைந்துள்ள இந்த உபநிஷதம் ”கேன” என துவங்குவதால் இதற்கு கேன உபநிடதம் என்று பெயர் ஆயிற்று. ’கேன’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் ’கேள்வி’ என்று பொருள். இவ்வுபநிஷதம் கேள்வியுடன் துவங்குவதால் இதற்கு கேன உபநிஷதம் பெயராயிற்று. இந்த உபநிஷதம் 35 மந்திரங்களுடன், நான்கு பகுதிகள் கொண்டது.

(iii) கடோபநிஷதம்

நசிகேதா-யமனின் சந்திப்பு: “கட” என்னும் பிரிவைச் சேர்ந்ததால், இதற்கு ‘கடோபநிஷதம்’ எனப்பெயர் பெற்றது. விச்வஜித் என்ற யாகத்தை செய்த ஒருவன் யாக முடிவில் தனது அனைத்து செல்வங்களையும் தானமாக தர வேண்டும் என்பது அந்த யாக விதி. ஆனால் அந்த யாகத்தை செய்த வாஜச்ரவசு என்பவன், தனது கறவை நின்ற பசுக்களை மட்டும் தானமாக தருவதை கண்ட அவர் மகன் நசிகேதன் தன்னை யாருக்கு தானமாக கொடுப்பீர்கள் என அடிக்கடி தனது தந்தையை நோக்கி கேட்க, தந்தையும் எரிச்சலுடன் உன்னை எமனுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று கூறிவிட, உடனே நசிகேதன் எமலோகத்திற்கு சென்று, மூன்று பகல் இரவுகள் பசியுடன் காத்திருந்து யமதேவரை சந்திக்கின்றான்.

யமலோகத்திற்கு விருந்தாளியாக வந்த நசிகேதனை காக்க வைத்த காரணத்தால் யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் வரத்தின் மூலம் தனது தந்தை மனஅமைதி அடைந்து தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறான். எந்த ஒரு யாகத்தை செய்தால் மக்கள் சுவர்க்க லோகம் அடையமுடியும் என்பதை இரண்டாம் வரத்தின் மூலம் நசிகேதன் தெரிந்து கொள்கிறான். மூன்றாவது வரத்தின் மூலமாக, உடல் அழிந்த பின்னும் அழியாது இருக்கின்ற ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவை உபதேசிக்கும் படி வேண்டுகிறான்.

முதல் இரண்டு வரங்களை நசிகேதனுக்கு உடனே வழங்கிய யமன், மூன்றாவது வரத்தை தருவதற்கு முன் அதற்கான தகுதி நசிகேதனுக்கு உள்ளதா என யமதேவர் சோதிக்கிறார். சுவர்க்கலோகம், பிரம்மலோகம் செல்வதற்கு வழி சொல்கிறேன் என்று யமதேவர் கூறியும், நிலையற்ற அந்த லோகங்கள் வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளி தனக்கு நிலையான ஆத்ம ஞானம் எனும் பிரம்ம தத்துவம் ஒன்றே போதும் என்று நசிகேதன் உறுதியாக கூறி விடுகிறான்.

இறுதியில் யமதர்மராசன் வைத்த அனைத்துச் சோதனைகளிலும் வெற்றி பெற்ற நசிகேதனுக்கு ஆத்ம தத்துவத்தை விளக்கமாக யமதேவர் எடுத்து கூறினார். இந்த ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே சீவ முக்தி (மனநிறைவு) அடைந்து பின்பு மரணத்திற்குப்பின் விதேக முக்தி எனும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைகிறார்கள் என்று யமதேவர் கூறினார்.

(iv)  முண்டக உபநிஷதம்

முண்டக உபநிடதம் அதர்வண வேதத்தை சார்ந்தது. முண்டம் என்பதற்கு தலை என்று பொருள்.எனவே இவ்வுபநிஷதத்திற்கு முண்டக உபநிஷதம் என்பார். அங்கிரசு என்ற முனிவர், சௌனகர் என்ற முனிவருக்கு அருளிய உபதேசமே முண்டக உபநிஷதம் ஆகும்.

(v) மாண்டூக்ய உபநிடதம்

மாண்டூக்ய உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள விசயங்களில் “ஓம்” ஏனும் மந்திரத்தை வீணான வகையில் தத்துவ இயல் அந்தஸ்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகின்றார். மாண்டூக்ய உபநிடதம் 108 உபநிடதங்களுள் ஒன்று. ”மாண்டூகம்” என்பதற்கு சமற்கிருத மொழியில் தவளை என்று பொருள். இந்த உபநிடதம் சொல்ல வந்த பொருளை நேரடியாக சொல்லாமல், தவளை போல இங்கும் அங்கும் தாவித் தாவி செல்வது போன்று சொல்வதால், இதற்கு மாண்டூக்ய உபநிடதம் என்று பெயர் பெற்றது.

(ஈ)  நான்காம் காலகட்ட உபநிஷத்துகள்

(i) கவ்ஷீதகி உபநிஷத் (கி.மு.200)

கவ்ஷீதகி உபநிஷதம் கவ்ஷீதகி பிராமணத்தின் ஒரு பகுதியாகும். இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. ‘பித்ரு’ யானமும் ‘ தேவ யானமும்’ விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயத்தில் கவ்ஷீதகி, பைங்க்ய, பிரதர்த்தன் ஆகியோர்களுடைய கருத்துக்களும், சுவையற்ற சிருங்கார எண்ணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

(ii) மைத்ரீ உபநிஷதம்

கி.மு, 200-100 இல் தோன்றிய மைத்ரீ உபநிஷதத்தின் மேல் புத்தர் காலத்திய ஆளுங்கூட்டத்தின் நிராசை, துறவு ஆகிய முத்திரைகள் தெளிவாகப் பதிந்துள்ளதை, பிரகத்ரதர் அரசரின் சொல்லால் அறியலாம்.

(iii) ஸ்வேதாஸ்வர உபநிஷதம் (கி.மு 200-100)

ஸ்வேதாஸ்வர உபநிஷதம் பதிமூன்று உபநிஷத்துகளில் இறுதியானதாகும். அதன் மொழியையும், கருத்துக்களையும் கவனித்தால், அது தோன்றிய காலத்தில் நாட்டில் சைவ சம்பிரதாயம் நிலவியிருந்ததை அறியலாம். இதிலுள்ள பல ஸ்லோகங்களை பின்னால் “பகவத் கீதை’ அப்படியே எடுத்துக் கொண்டுள்ளது.

உபநிஷத்துகளின் தத்துவாசிரியர்கள்

1.பிரவாஹன் ஜைவலி (கி.மு. 700-600)

ஆருணியின் காலம், அவரது சீடரான யக்ஞவல்கியருக்கு (கி.மு.650) சற்று முன்னதாக இருந்திருக்கும். அதனால் ஆருணியின் குருவான பிரவாஹன் ஜைவலி இன்னும் கொஞ்சகாலத்திற்கு முன்னவராக கொள்ளலாம். 

2.உத்தாலக ஆருணி கவுதமர் (கி.மு.650)

‘சதபத பிரமணத்தின் கூற்றுப்படி ஆருணி குரு பாஞ்சால ராஜ்ஜியத்தைச் சேர்ந்த பிராமணர் ஆவார் இவர் பிரவாஹன் ஜைவலியிடம் நீண்ட காலமாக சீடராக இருந்து, பஜ்சாக்னிக் கல்வி, தேவயானம், பித்ருயானம் போன்ற தத்துவங்களைக் கற்றறிந்தார்.

3. யாக்ஞவல்கியர்

யாக்ஞவல்கியர் பிறந்த இடம் தெரியவில்லை. அவர் வைதேக ராஜ்ஜியத்தின் அரசர் ஜனகரின் குருவாக இருந்ததால், அவரும் விதேகத்தில் (திர்ஹூத்) வாழ்ந்திருந்ததாகச் சொல்வர்.

4, சத்யகாம ஜாபாலர் (கி.மு.650)

சத்யகாம ஜாபாலரின் தத்துவத்தை நாம் ‘சாந்தோக்ய உபநிஷத்தில் பார்க்கலாம். 

5. சயுக்வா ரைக்வ

‘சயுக்வா ரைக்வ’ உபநிஷத்துகளில் ஆரம்பகால ரிஷிகளில் புகழ்பெற்றவர். சாந்தோக்ய உபநிஷதத்தில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

References:

1. ரிக் வேதம்
2. பிராமண மதம்-தோற்றமும் வளர்ச்சியும், ஜோசப் இடமருகு 1996
3. இந்திய தத்துவக் களஞ்சியம,. சோ.ந.கந்தசாமி, (2004)
4. இந்தியத் தத்துவ இயல்_ராகுல் சாங்கிருத்யாயன் 1985
5. https://www.britannica.com/topic/Brahmanism
6. The Origin of Brahmanism_Martin Haug 1863
7. Brahmanism in South-East Asia: From the Earliest Time to 1445 A.D, by Dawee Daweewarn,1983

தொடரும்...

- C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com