மத அரசியல்-25: பௌத்தம்-சித்தார்த்தன் புத்தராதலும், பௌத்தமத வேதங்களும்

மத அரசியல்-25: பௌத்தம்-சித்தார்த்தன் புத்தராதலும், பௌத்தமத வேதங்களும்

சித்தார்த்தன் புத்தராதலும்,பௌத்தமத வேதங்களும்

ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.

தனது 21-ஆம் வயதில், கி.மு.534, ஆனித்திங்கள் முழுநிலவுள்ள வெள்ளுவாநாள் (ஆஷாட பௌர்ணமி). நள்ளிரவு. நகர மக்கள் கண்ணுறங்குகின்றனர். முழுநிலா, பால்போன்ற நிலவொளி எங்கும் வீசுகிறது. இந்த நள்ளிரவிலே சித்தார்த்த குமரன் தன்னந்தனியே குதிரையில் பிரயாணம் செய்கிறார். குதிரைப்பாகன் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.

சித்தார்த்த குமரனுக்குப் பிரியமான கந்தகன் என்னும் இக்குதிரை, குமரன் நள்ளிரவில் பிரயாணம் செய்வதை விரும்பாமல், மற்றவர்களை விழித்தெழச் செய்வதுபோல பலமுறை உரத்த சத்தமாகக் கனைத்தது. அந்த ஒலியை யாரும் கேளாதபடி தேவர்கள் தடுத்து விட்டார்கள். குதிரையின் குளம்புகளிலிருந்து ‘டக் டக்’ கென்று ஒலி உண்டாயிற்று. அவ்வொலியையும் யாரும் கேளாதபடி தேவர்கள் தடுத்து விட்டார்கள். நகரத்து வாயிலை அடைந்தபோது, மூடப்பட்டிருந்த வாயில் கதவுகளைத் தேவர்கள் திறந்து விட்டார்கள். சித்தார்த்த குமரன் குதிரையைச் செலுத்தி நகரத்தை விட்டு வெளிப்பட்டார்.

சாக்கியர் நாடு, கோலியர் நாடு, மள்ளர் நாடு ஆகிய நாடுகளைக் கடந்து முப்பது யோசனைதூரம் பிரயாணம் செய்தார் சித்தார்த்த குமரன். கடைசியாக, விடியற் காலையில் அனோமை என்னும் ஆற்றங்கரையை அடைந்தார். கரை ஓரத்தில் வந்து தமது காலினால் மெல்லத் தட்டிக் குதிரைக்குச் சமிக்கை செய்தார். குதிரை துள்ளிப் பாய்ந்து ஆற்றைக் கடந்து அக்கரையில் நின்றது. சித்தார்த்த குமரன், குதிரையினின்று இழிந்து வெள்ளிய தூய்மையான ஆற்று மணலிலே அமர்ந்தார்.

சன்னன் வந்து அருகில் நின்றான். “சன்ன, நான் துறவுகொள்ளப் போகிறேன். என்னுடைய ஆடையணிகளையும் குதிரையையும் நகரத் திற்குக் கொண்டு போவாயாக” என்று சித்தார்த்த குமரன் சன்னனிடம் கூறித் தமது ஆடையணிகளைக் கழற்றினார். பின்னர் நீண்டு வளர்ந்திருந்த தமது தலைமயிரை இடது கையில் பிடித்துக்கொண்டு வலக்கையில் வாளை எடுத்து அடியோடு அரிந்தார். அவ்வாறே மீசை தாடிகளையும் களைந்தெறிந்தார். இவ்வாறு சித்தார்த்த குமரன் அரச கோலத்தைக் களைந்து துறவுக்கோலம் பூண்டார்.

இராசகிருகம் சென்றது

அனோமை ஆற்றங்கரையை விட்டுச் சென்ற கௌதம தபசி - துறவுபூண்ட சித்தார்த்த குமரனைக் கௌதம தபசி என்று அழைப்போம் - கால்நடையாகச் சென்று அநுபிய நகரத்தைய அடைந்தார். ‘நகரத்திற்குள் செல்லாமல் அருகிலிருந்த மாந்தோப்பினுள் சென்று மன அமைதி யோடு தங்கியிருந்தார். பிறகு, மாஞ் சோலையை விட்டுப் புறப்பட்டு நடந்து சென்றார். எட்டாவது நாளில் இராசக்கிருக நகரத்தை அடைந்தார். அடைந்து நகரத்தின் கிழக்கு வாயில் வழியாக நகரத்துக்குள் சென்று, வீடுவீடாகப் பிச்சை ஏற்றார். 

பார்க்கவ ஆசிரமம்

துன்பம் நீங்கிய இன்பமான சாந்திநிலை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட கௌதமர், பண்டவமலையை விட்டுப் புறப்பட்டார். அவர் நேரே பார்க்கவ முனிவருடைய ஆசிரமத்தையடைந்து அங்குச் சில காலம் தங்கினார். பார்க்கவ முனிவர் கௌதமருக்குத் தமது கொள்கைகளை உபதேசம் செய்தார். கௌதமர் தாம் நாடியிருக்கும் வீட்டு நெறிக்குப் பார்க்கவருடைய உபதேசங்கள் உதவி செய்வன அல்ல என்று கண்டு அவ்வாசிரமத்தை விட்டுப் போய்விட்டார்.

ஆளார ஆசிரமம் சென்றது

பார்க்கவ ஆசிரமத்தை விட்டுச் சென்ற கௌதமர் வைசாலி நாட்டின் பக்கமாகச் சென்றார். அங்கு ஒரு ஆசிரமத்தில் பல சீடர்களுக்கு ஆசிரியராக இருந்த ஆளார காலாமர் என்னும் முனிவரிடம் சென்றார். காலாம கோத்திரத்தைச் சேர்ந்தவராகிய ஆளார முனிவர் ஏழுவிதமான ஸமாபத்திகளை (தியானங்களை)க் கைவரப் பெற்றவர். இவரை யடைந்த கௌதமர் இவரிடம் சீடராக அமர்ந்தார். ஆளாரர் இவருக்குத் தமது ஸமாபத்தி முறைகளை உபதேசம் செய்தார். ஆளாரர் சொல்லிய முறைகளைக் கைக்கொண்டு கௌதம முனிவர் அவற்றின்படி ஒழுகி ஏழு ஸமாபத்திகளையும் அடைந்தார். இதையறிந்த ஆளார முனிவர் கௌதம முனிவரைத் தமக்குச் சமமாக வைத்துத் தமது சீடர்களில் சரி பகுதியினரை இவருக்குச் சீடராகக் கொடுத்தார். அன்றியும் தம்மை நாடி வருகிறவர்களைக் கௌதமரிடம் அனுப்பித் தம்மைப்போலவே இவரையும் சிறப்புச் செய்து வணங்கும்படி இவருக்கும் குரு பதவியை யளித்தார். ஆனால், தாம் கைவரப்பெற்ற ஏழு விதமான ஸமாபத்தியினாலும் தாம் நாடியுள்ள மோக்ஷ நிலையை அடைய முடியாது என்று அறிந்த கௌதம முனிவர் இந்த ஆசிரமத்தை விட்டுப் போய்விட்டார்.

உத்ரக ஆசிரமம்

ஆளார முனிவரின் ஆசிரமத்தை விட்டுச் சென்ற கௌதமர், மகத தேசத்தை யடைந்து மஹீநதி என்னும் ஆற்றைக் கடந்து அக் கரைக்குச் சென்றார். சென்று அங்கிருந்த உத்ரக இராமபுத்திரர் என்னும் முனிவருடைய ஆசிரமத்தையடைந்தார். அடைந்து அவருடைய போதனைகளை அறிந்துகொள்ள விரும்பினார். உத்ரகர் இவரைச் சீடராக ஏற்றுக்கொண்டு தாம் அறிந்திருந்த எல்லாவற்றையும் இவருக்கு உபதேசம் செய்தார். இவருடைய உபதேசம், ஆளார முனிவருடைய உபதேசத்தைப் போன்றதே. ஆயினும் அதைவிட அதிகமாக எட்டாவது ஸமாபத்தியை (தியானத்தை)யும் கொண்டது. கௌதம முனிவர் உத்ரகர் போதித்தவற்றைக் கேட்டு அவற்றின் படி யோகாப்பியாசம் செய்து எட்டாது ஸமாபத்தியையும் கைவரப் பெற்றார். பிறகு, உத்ரக முனிவரிடம் சென்று தாம் எட்டாவது ஸமா பத்தியைக் கைவரப்பெற்றதைக் கூறி இதற்கு மேலாக ஏதேனும் உண்டா என்று கேட்டார். உத்ரக முனிவர், “இவ்வளவுதான்; இதற்குமேல் ஒன்றும் கிடையாது” என்று கூறி, ஆளார காலாமர் செய்தது போலவே உத்ரகரும் கௌதமரைத் தமக்குச் சமமாக வைத்துத் தமது சீடர்களில் சரிபாதி தொகையினரை இவருக்கு மாணவராகக் கொடுத்துத் தமக்குச் சமமான ஆசாரிய பதவியையளித்துப் பாராட்டினார். ஆனால், எட்டாவது ஸமாபத்தியும் மோக்ஷத்திற்கு வழியல்ல என்று அறிந்த கௌதம முனிவர், ஆசாரிய பதவியை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரமத்தை விட்டுப் போய்விட்டார்.

உருவேல கிராமம் சென்றது

உத்ரக ஆசிரமத்தை விட்டு நீங்கிய கௌதம முனிவர், உருவேல என்னும் கிராமத்தை யடைந்தார். அந்தக் கிராமத்தின் அருகிலே தங்கித் தபசு செய்யக் கருதி அதற்குத் தகுந்த இடம் ஒன்றைத் தேடினார். தேடின போது இயற்கைக் காட்சி மிகுந்த ஒரு வனத்தைக் கண்டார். இவ்வனத்தின் வழியே நேரஞ்சர நதி என்னும் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இது கங்கை ஆற்றின் தென்புறத்தில் இருந்த கங்கையின் ஒரு உபநதி. அழகான காட்சியுடைய நேரஞ்சரநதி குளிர்ந்து தெளிந்த நீருள்ளது. இதன் கரையில் மரம் செடி கொடிகள் நிறைந்த சோலை யொன்று இருந்தது.

இந்த இடம் யோகிகள் தங்கி, தபசு செய்வதற்குத் தகுந்த இடம் என்று கௌதம முனிவர் அறிந்தார். இந்த வனத்துக்குச் சற்றுத் தூரத்திலே ஒரு கிராமம் இருந்தது. கௌதம முனிவர் இந்த வனத்தில் தங்கித் தபசு செய்து கொண்டிருந்தார். இவர் தனியே தவம் செய்துகொண்டிருந்த போது ஐந்து துறவிகள் இவரிடம் வந்தார்கள். அத் துறவிகளின் பெயர்கள் கொண்டஞ்ஞர், வப்பர், பத்தியர், மஹாநாமர், அஸ்ஸஜி என்பன. இவர்களில் கொண்டஞ்ஞர் என்பவர், முன்பு சித்தார்த்த குமரனின் ஜாத கத்தைக் கணித்த நிமித்திகரில் ஒருவர். மற்ற நால்வரும் ஜாதகம் கணித்த மற்ற நிமித்திகரின் புத்திரர்கள். இந்த ஐந்து துறவிகளும் கௌதம முனிவரிடம் சீடராக இருக்க விரும்பி இவ்விடம் வந்தவர்கள். பல இடங்களில் சுற்றித்திரிந்த இந்தத் துறவிகள் கடைசியாகக் கௌதம முனிவர் தங்கியிருந்த வனத்தை யடைந்து இவரிடம் தங்கிச் சீடராக அமர்ந்து இவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார்கள்.

கௌதமரின் மைத்ரீபாவனை

நேரஞ்சர ஆற்றங்கரையில் தங்கிய கௌதம முனிவர் மைத்ரீ தியானம் செய்துகொண்டு காலங்கழித்தார். அப்போது, பிராமணர்களும் சிரமணர்களும் காடுகளில் தனித்து வசிக்கும் போது அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன என்று கூறுகிறார்களே, அதன் காரணம் என்ன என்பதை இவர் ஆராய்ந்து பார்த்தார். ஆராய்ந்த போது இவருக்கு உண்மை புலப்பட்டது. மனம் வாக்குக் காயங்களில் குற்றம் இருப்பதனாலே இவ்வாறு அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன என்பதை அறிந்தார்.

தம்மிடம் மனம் வாக்குக் காயங்களில் குற்றம் உள்ளனவா என்று சிந்தித்துப் பார்த்துத் தம்மிடம் குற்றம் இல்லை என்றும் குற்றத்திற்கு மாறாகக் குணங்களே உள்ளன என்றும் கண்டார். அதாவது தம்மிடத்திலே மனம் வாக்குக் காயங்களில் குற்றம் இல்லாததோடு அச்சமின்மை, தைரியமுடைமை, தன்னைப் பிறரைவிட உயர்ந்தவர் என்றும் பிறரைத் தாழ்ந்தவர் என்றும் கருதாமை, அன்புடைமை (மைத்ரீ) என்னும் நற்குணங்கள் தம்மிடம் இருப்பதைக் கண்டார்.

பிறகு, அட்டமி, பாட்டியம், பௌர்ணமி முதலிய நாட்களிலே இரவுக் காலத்தில் ஆராம சயித்தியம், வனசயித்தியம், விருக்ஷ சயித்தியம் என்னும் மூன்று வகையான இடங்களில் தனித்து இருந்தால் அச்சம் உண்டாகும் என்று கூறுகிறார்களே, அதன் காரணம் என்ன என்பதை ஆராயவேண்டும் என்று எண்ணங்கொண்டார். ஆகவே, அந்நாட்களில் இரவு வேளையில் அவ்விடங்களுக்குத் தனியே சென்று தங்கினார். அப்படித் தங்கியபோது நள்ளிரவிலே அவ்விடத்தில் ஒரு மான் வந்தது. பின்னர் ஒரு பறவை வந்தது. பின்னர் காய்ந்து உலர்ந்து இற்றுப் போன மரக்கிளையொன்று மரத்திலிருந்து ஒடிந்து விழுந்தது. பின்னர் இலைகள் சலசலவென்னும் ஓசையுடன் அசைந்தன.
இவைகளை அனுபவ வாயிலாகக் கண்ட கௌதம முனிவர், இரவு வேளைகளிலே இந்த இடங்களிலே அச்சத்தை உண்டாக்குகிற காரணங்கள் இவைதாம் என்பதை அறிந்து இவ்விதமான காரணங்களினால் ஏற்படும்.

ஐந்து கனவுகள்

ஒரு வைகாசித் திங்கள் வளர்பிறையின் பதினான்காம் நாள் இரவு போதிசத்துவராகிய கௌதம முனிவர் கண் உறங்கிக் கொண்டிருந்த போது கடைசி யாமத்திலே ஐந்துவிதமான கனவு களைக் கண்டார். அந்தக் கனவுகள் இவை :

•    இந்தப் பரதகண்டம் பாய்போலவும் இமயமலை (மேரு மலை) தலையணை போலவும் கிடந்தன. இந்தப் பாயிலே கௌதம முனிவர் மல்லாந்து படுத்துக்கொண்டிருப்பது போலவும் அவருடைய வலதுகை மேற்கிலும் இடதுகை கிழக்கிலும் கால்கள் தெற்கிலும் இருப்பது போலவும் கனவு கண்டார். இந்தக் கனவின் கருத்து என்ன வென்றால், போதிசத்துவராகிய கௌதம முனிவர் கட்டாயமாகப் புத்த பதவியை யடைவார் என்பதே.

•    இவ்வாறு படுத்திருக்கும்போது தம்முடைய நாபியில் (கொப்பூழ்) இருந்து, சிவந்த நிறமுள்ள கம்புச் செடி ஒன்று உயரமாக வானம் வரையில் வளர்ந்து சென்றதுபோலக் கனவு கண்டார். இந்தக் கனவின் பொருள் ஆரிய (உயர்ந்த) அஷ்டாங்க மார்க்கத்தைத் தாமே கண்டறிந்து அதை மக்களுக்குப் போதிக்கப்போகிறார் என்பது.

•    பின்னர்க் கருமையான தலையும் வெண்மையான உடலும் உள்ள சிறு பூச்சிகள் கூட்டமாக வந்து இவருடைய கால் நகங்களை மொய்த்துக் கொண்டன. பின்னர் அவை கொஞ்சங் கொஞ்சமாக முழங் கால்வரையிலும் ஏறிவந்து மொய்த்துக் கொண்டன. இந்த மூன்றாவது கனவின் கருத்து என்னவென்றால், இல்லறத்தார் இவரிடம் வந்து இவருடைய உபதேசங்களைக் கேட்டு, இவருக்கு உபாசகத் தொண்டர்கள் ஆவார்கள் என்பதாகும்.

•    பின்னர், நான்கு திசைகளினின்றும் நான்கு வித நிறமுள்ள பறவைகள் பறந்து வந்து தம்முடைய காலடியில் தங்கித் தம்மை வணங்கியதாகக் கனவு கண்டார். இதன் கருத்து, பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு சாதி மக்கள் இவரிடம் வந்து உபதேசம் பெற்றுத் துறவு கொள்வார்கள் என்பது.

•    ஐந்தாவதாக, மலக்குவியலின்மேல் நடந்து சென்றது போலவும் ஆனால், கொஞ்சமும் காலில் மலம் ஒட்டாதது போலவும் கனவு கண்டார். உணவு உடை முதலியவை இவருக்குக் கிடைத்தாலும் அவற்றின்மீது இவருக்குப் பற்றுதல் இருக்காது என்பது இந்தக் கனவின் கருத்தாகும்.

தசசீலம் (பத்து ஒழுக்கம்)

பௌத்தரில் இல்லறத்தார் பஞ்ச (ஐந்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். துறவறத்தார் தச (பத்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். சீலத்தைச் சிக்காபதம் என்றும் கூறுவர். தச சீலத்திலே பஞ்ச சீலங்களும் அடங்கியுள்ளன. இல்லறத்தார் பஞ்ச சீலங்களையும், துறவறத்தார் தச சீலங்களையும் தினந்தோறும் ஓத வேண்டும். தச சீலத்தின் பாலி மொழி வாசகம் இது:

1.பானாதி பாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
2.அதின்னாதானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
3.அஹ்ப்ரஹ்மசரியா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
4.மூஸாவாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
5.ஸுராமேரய மஜ்ஜப மாதட்டாணா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
6.விகால போஜனா வேரமணி ஸிக்காபதம் ஸாதியாமி
7, 8, 9. நச்சகீத வாதித விலரக்க தஸ்ஸனமால கந்த விவப்பண தாரணமண்டன விபூஷணட்டானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
10.உட்சாசன மஹாசயன வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

இதன் பொருள் வருமாறு:

1. உயிர்களைக் கொல்லாமலும் இம்சை செய்யாமலும் இருக்கும் சீலத்தை (ஒழுக்கத்தை) மேற்கொள்கிறேன்.

2. பிறர் பொருளைக் களவு செய்யாமலிருக்கும் சீலத்தை மேற் கொள்கிறேன்.

3.பிரமசரிய விரதம் என்னும் சீலத்தை மேற்கிறேன். (இது இல்லறத் தாருக்குப் பிறர் மனைவியரிடத்தும் பிற புருஷரிடத்தும் விபசாரம் செய்யாமல் இருப்பது என்று பொருள்படும். துற வறத்தாருக்குப் பிரமசரிய விரதம் என்பது இணை விழைச்சியை அறவே நீக்குதல் என்று பொருள்படும்.)

4. பொய் பேசாமலிருத்தல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

5. கள் முதலிய மயக்கந்தருகிற பொருள்களை நீக்குததல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

6. உண்ணத் தகாத வேளையில் உணவு கொள்ளாமை என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

7, 8, 9. இசை, ஆடல்பாடல்களைக் கேட்டல், காண்டல், புஷ்பம் வாசனைத் தயிலம் முதலியவற்றை உபயோகித்தல், பொன் வெள்ளி முதலியவற்றை உபயோகித்தல் ஆகிய இவற்றைச் செய்யாமல் இருக்கிற சீலத்தை மேற்கொள்கிறேன்.

10. உயரமான படுக்கை, அகலமான படுக்கை முதலிய சுக ஆசனங்களை உபயோகிக்காமல் இருக்கிற சீலத்தை மேற் கொள்கிறேன்.

திரிபிடகம்

பௌத்தமத வேதங்களுக்குத் திரிபிடகம் என்பது பெயர். பாலிமொழியில் திபிடகம் என்று கூறுவர். அவற்றிற்கு விநய பிடகம், அபிதம்ம பிடகம், சூத்திரபிடகம் என்று பெயர். அவை பாலி மொழியிலே எழுதப் பட்டுள்ளன.

புத்தர் பெருமான் நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தமது கொள்கைகளை நாடெங்கும் போதித்து வந்த போதிலும், அவர் அக்கொள்கைகளை நூல் வடிவமாக எழுதி வைக்கவில்லை. ஆனால், அவருடைய சீடர்கள், அவருடைய போதனைகளை இரண்டு சம்ஹிதைகளாகத் தொகுத்துப் பாராயணம் செய்து வந்தார்கள். அவற்றிற்கு விநய சம்ஹிதை, தர்ம சம்ஹிதை என்று பெயர், சம்ஹிதை என்றால் தொகுப்பு என்பது பொருள்.

பகவர் புத்தர் நிர்வாண மோக்ஷம் அடைந்த சில தினங்களுக்குப் பிறகு, மகதநாட்டின் தலைநகரமான இராசகிருக நகரத்துக்கு அருகில் ஸத்தபணி என்னும் மலைக்குகையிலே கார் காலத்தைக் கழிக்கும் பொருட்டு ஐந்நூறு தேரர்கள் (பௌத்தத் துறவிகள்) ஒருங்கு கூடினார்கள். இதுவே பௌத்தரின் முதல் மகாநாடு ஆகும். புத்தரின் முக்கியச் சீடர் ஆகிய மகாகாசிபர், இந்த மகாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இம் மகாநாட்டிலே, புத்தர் பெருமான் அருளிச்செய்த விநய போதனைகளை உபாலி என்னும் தேரர் எடுத்து ஓதினார். இதற்கு விநய பிடகம் என்று பெயரிட்டனர். மற்றொரு தேரராகிய ஆனந்தர், புத்தர் அருளிச் செய்த தர்மபோதனைகளை இம்மகாநாட்டில் ஓதினார். இதற்கு தம்ம (தர்ம) பிடகம் என்று பெயரிட்டனர். இவ்வாறு முதல் பௌத்த சங்கத்திலே, புத்தருடைய போதனைகள் இரண்டு பிடகங்களாகத் தொகுக்கப்பட்டன.

பிற்காலத்திலே, அபிதம்ம பிடகத்திலிருந்து சில பகுதிகளைத் தனியாகப் பிரித்து அதற்குச் சூத்திரபிடகம் என்று பெயரிட்டார்கள்.

திரிபிடக நூல்கள் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளன. தேரவாத பௌத்த நூல்கள் உரைநூல்கள் உட்பட யாவும் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. (மகாயான பௌத்த நூல்கள் வடமொழியிலே எழுதப் பட்டுள்ளன.) பிடக நூல்களும் அவற்றின் பிரிவுகளும் வருமாறு:

1. விநயபிடகம்

இது விநயபிடகம், பாதிமோக்கம் என்னும் இரண்டு பிரிவுகளை உடையது. விநயபிடகத்துக்கு சமந்த் பாஸாதிகா என்னும் உரையையும், பாதிமோக்கத்திற்கு கங்காவிதரணீ என்னும் உரையையும் ஆசாரிய புத்தகோஷர் பாலிமொழியிலே எழுதி இருக்கிறார்.

2. சூத்திரபிடகம்

இது தீகநிகாயம், மஜ்ஜிம நிகாயம், ஸம்புக்த நிகாயம், அங்குத்தர நிகாயம், குட்டக நிகாயம் என்னும் ஐந்து பிரிவுகளையுடையது. ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத்துக்குப் பதினைந்து உட்பிரிவுகள் உள்ளன. அவையாவன:- குட்டக பாதம், தம்மபதம், உதானம், இதிவுத்தகம், ஸத்த நிபாதம், விமானவத்து, பேதவத்து, தேரகாதை, தேரி காதை, ஜாதகம், மஹாநித்தேசம், படிஸம்ஹித மக்கம், அபதானம், புத்த வம்சம், சரியாபிடகம் என்பன.சூத்திர பிடகத்தின் முதல் நான்கு பிரிவுகளுக்கு ஆசாரிய புத்த கோஷர் பாலி மொழியில் உரை எழுதியிருக்கிறார். தீக நிகாயத்துக்கு சுமங்களவிலாசினீ என்னும் உரையையும், மஜ்ஜிம நிகாயத்துக்கு பபஞ்ச சூடனீ என்னும் உரையையும், சம்புக்த நிகாயத்துக்கு ஸாராத்த பகாஸினீ என்னும் உரையையும், அங்குத்தர நிகாயத்துக்கு மனோரத பூரணீ என்னும் உரையையும் எழுதியிருக்கிறார்.

சூத்திர பிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத் தின் உட்பிரிவாகிய குட்டக பாதத்திற்குப் பரமார்த்த ஜோதிகா என்னும் உரையையும், தம்ம பதத்திற்கு தம்மபதாட்டகதா என்னும் உரையையும் ஆசாரிய புத்த கோஷர் எழுதினார். உதானம், இதிவுத்தகம் என்னும் பிரிவுகளுக்குப் பரமார்த் தீபனீ என்னும் உரையைத் தமிழராகிய ஆசாரிய தர்மபால மகாதேரர் எழுதினார். ஐந்தாவது உட்பிரிவாகிய சுத்த நிபாதத்திற்குப் பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை ஆசாரிய புத்த கோஷர் எழுதினார். விமானவத்து, பேதவத்து, தேரகாதை, தேரிகாதை என்னும் நான்கு உட்பிரிவுகளுக்குத் தமிழராகிய ஆசாரிய தர்மபால மகாதேரர், பரமார்த்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.
ஜாதகம் என்னும் உட்பிரிவுக்கு ஜாதகாத்த கதா என்னும் உரையை ஆசாரிய புத்த கோஷர் எழுதினார். நித்தேசம் என்னும் பிரிவுக்கு ஸத்தம்ம பஜ்ஜோ திகா என்னும் உரையை உபசேனர் என்பவர் எழுதினார். படிஸம்ஹித மக்கம் என்னும் பிரிவுக்கு ஸத்தம்ம பகாஸினீ என்னும் உரையை மகாநாமர் என்பவர் எழுதினார். அபதானம் என்னும் பிரிவுக்கு விசுத்தசன விலாஸினீ என்னும் உரையை ஒருவர் எழுதினார். அவர் பெயர் தெரியவில்லை. புத்த வம்சம் என்னும் பிரிவுக்கு மதுராத்த விலாஸினீ என்னும் உரையை சோழநாட்டுத் தமிழராகிய ஆசாரிய புத்ததத்த தேரர் எழுதினார். சரியா பிடகம் என்னும் பிரிவுக்கும் பரமார்த்த தீபனீ என்னும் உரையை ஆசாரிய தம்மபால மகாதேரர் எழுதினார்.

3. அபிதம்ம பிடகம்

இது தம்ம ஸங்கினீ, விபங்கம், கதாவத்து, புக்கல பஞ்ஞத்தி, தாதுகதா, யமகம், பட்டானம் என்னும் ஏழு பிரிவுகளையுடையது. இந்த ஏழு பிரிவுகளுக்கும் ஆசாரிய புத்த கோஷர் உரை எழுதி இருக்கிறார். முதல் பிரிவுக்கு அத்த சாலினீ என்னும் உரையையும், இரண்டாது பிரிவுக்கு ஸம்மோஹ வினோதினி என்னும் உரையையும், மற்ற ஐந்து பிரிவுகளுக்குப் பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையையும் எழுதினார்.

இவையன்றித் தேரவாத பௌத்தத்தில் வேறு சில நூல்கள் பாலி மொழியில் உள்ளன. விரிவஞ்சி அவற்றின் பெயரைக் கூறாது விடுகின்றோம். மகாயான பௌத்த மத நூல்களும் பல உள்ளன. 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com