மத அரசியல்-26: பௌத்த மதப் பிரிவுகள்

மத அரசியல்-26: பௌத்த மதப் பிரிவுகள்

பௌத்த மதப் பிரிவுகள் (Schools of Buddhism)

பௌத்த மதத்தில் மகாசாங்கிக் பிரிவானது கோகுலிக், ஹாரிக், பிரக்ஞப்திவாதம், பாஹூலிக், சைதன்யவாதி, சர்வாஸ்திவாதம், தர்ம குப்திக் (Dharmaguptaka,), காஸ்ய பீயே, சாங்கிராந்திக், சூத்ர வாதி என்றும் ஸ்தவிரவாத பிரிவு மஹிசாஸக்விரிஜி, புத்ரக், தர்மோத்தரி, பத்ரயாணிக், சன்ன காரிக், சம்மீத்ய என்று 20 க்கும் மேற்பட்ட பிரிவுகளாக உள்ளன. 

ஹீனயானம்(Hinayana)

ஹீனயானம் என்பது பௌத்த சமயத்தின் பெரிய உட்பிரிவாகும். இதனை குறுகிய பாதை என்றும் கூறுவர். மாற்றம் மிகாத திரிபிடகத்தை பின்பற்றுவர்கள் ஹீனயானர்கள். துவக்கத்தில் இவர்கள் பாலி மொழியில் தங்கள் சமய நூல்களை எழுதியவர்கள். ஹீனயான பிரிவை பின்பற்றுபவர்கள் துறவறத்தை வாழ்க்கை நெறியாக கொண்டவர்கள்.புத்தரால் அருளப்பட்ட நெறி முறைகளை அவ்வாறே ஏற்றுக்கொள்வது இவர்களது கொள்கை. இச்சமயத்தின்படி புத்தர் சாதாரண மனிதராக மதிக்கப்பட்டார். புத்தரின் நல்லொழுக்க நெறிகளை கடைப்பிடிப்பதன் மூலம் பரிநிர்வாணம் அடையலாம் என்பதை வலியுறுத்துவது ஹீனயான புத்த சமயமாகும். இப்பிரிவு அசோகர் காலத்தில் கிளைத்தது.

ஹீனயான பௌத்த சமயத்தில் பின்னர் பல உட்பிரிவுகள் சௌத்திராந்திகம், வைபாடிகம் போன்ற பிரிவுகள் தோன்றியிருந்தாலும், தற்போது தேரவாதப் பிரிவே (Theravada) நிலைத்துள்ளது.

மகாயானம்

மகாயானம் என்ற சொல் மஹா மற்றும் யானம் ஆகிய இரு சொற்களால் ஆனது. யானம் என்ற சொல்லுக்கு வழி, பாதை என பொருள் கொள்ளலாம். எனவே, மகாயானம் என்பது பெரிய வழி அல்லது சிறந்த வழி என பொருள் கொள்ளலாம். பௌத்தத்தின் பல பிரிவுகளை விட இது சிறந்தது என்பதையே இந்த பெயர் குறிக்கிறது. மகாயான கருத்தின்படி புத்தர் அழிவற்றவர் ஆவார். மகாயான பௌத்தர்கள், பல போதிசத்வர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர்.

மகாயான பௌத்தத்தின் படி, அதன் சூத்திரங்கள் புத்தர் இறந்த பிறகு 500 ஆண்டுகள் நாக லோகத்தில் பாதுகாக்கப்பட்டன. ஏனெனில் அப்போது இருந்தவர்களுக்கு அதன் தத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லை. எனவே மனிதர்கள், அந்த பக்குவம் அடையும் வரையில் அவை நாகலோகத்தில் இருந்தன. பிறகு, நாகார்ஜுனர் அந்த சூத்திரங்களை நாக லோகத்தில் இருந்து மீட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. என்வே, மகாயான பௌத்தம், தன்னைப் புத்த பகவானால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே கருதுகிறது.

அவலோகிதர் (Avalokiteśvara)

அவலோகிதர் மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு போதிசத்துவர் ஆவார். அவர் அனைத்தும் புத்தர்களின் கருணையின் வடிவாக கருததப்படுகிறார். சீனத்தில் இவரை குவான்-யின் என்ற பெண் வடிவத்தில் போற்றப்படுகிறார். திபெத்திய மொழியில் இவரை சென்ரெட்ஸிக் என்று அழைக்கின்றனர். அவலோகிதர் வாழ்வதாக பௌத்த சூத்திரங்களில் போதாலகம் என்னும் மலை பொதிய மலை எனவும், இவருடைய வடிவத்திற்கும் தெக்கணமூர்த்தி என்னும் தட்சிணாமூர்த்தி வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்புடையதென்றும் கூறுவர். 

சுகவதி பௌத்தம் (sukhavati Buddhism)

சுகவதி பௌத்தம் என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு பெரும் பிரிவாகும். இப்பிரிவு தென் - கிழக்கு ஆசியவில் பரவலாக பின்பற்றப்படும் பௌத்த பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இது அமிதாப புத்தரை நோக்கிய ஒரு பக்தி சார்ந்த பௌத்த பிரிவாகும். சுகவதி பௌத்தம் மகாயான பௌத்த பிரிவுகளான சீன பௌத்தம், மற்றும் ஷிங்கோன் பௌத்தத்தில் ஒரு துணைப்பிரிவாக உள்ளது. மேலும் ஜோடோ ஷு, ஜோடோ ஷின்ஷு போல இது ஒரு தனி பௌத்த பிரிவாகவும் உள்ளது.

சுகவதி பௌத்தம் அமிதாபரின் மீது கொண்ட பக்தியின் காரணமாக நிர்வாண நிலை அடையலாம் எனக்கூறுகிறது. அதாவது அமிதாபரின் கருணையால் அவருடைய உலகமான சுகவதியில் பிறக்கு அனைவருக்கும் நிர்வாணம் கிடைக்கும் என் இப்பிரிவினர் கருதுகின்றனர். சுகவதி பௌத்தம் என்பது ஜப்பானில் நிலப்பிரபுக்களின் காலத்தில் மிகவும் பரவலாக பின்பற்றப்பட்டது.

சீன முழுக்கவும் சுகவதி பௌத்தம் பரவியது. பல்வேறு பௌத்த துறவிகளால் இதன் கருத்துக்கள் செப்பனிடப்பட்டன. பிறகு இது ஜப்பானுக்கு பரவி அங்கே ஜோடோ ஷு என்ற தனிப்பிரிவாக நிலைப்பெற்றது.

அருகதர் (Arhat or Arahant)

அருகதர் என்பதற்கு ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர்  அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு குறிப்பிடுகிறது. புத்தத்தன்மை அடையாத, ஆனால் போதிசத்துவ நிலையை அடைந்த பௌத்த பிக்கு அருகதர் என்று அழைக்கப்படுகிறார்.

கௌதம புத்தரின் நேரடிச் சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் அருகதர் நிலையை அடைந்தவர்கள். மகாயான பௌத்தம், அருகதர் நிலையை அடைந்தவர்களில் 18 பேரைக் குறிப்பிடுகிறது. கி மு 150இல் வாழ்ந்த மகாயானத்தின் சரஸ்வதிவாத பௌத்தப்பிரிவின் பிக்குவான நாகசேனரும் அருகதர் நிலையை அடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.

பௌத்த சமயத்தில் புத்தத்தன்மை அடைதற்கான ஆன்மீக முன்னேற்றத்தின் படிநிலைகளில் உள்ளவர்களுக்கு போதிசத்துவர், அருகதர் போன்ற பட்டப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

பைஷஜ்யகுரு ( Bhaiṣajyaguruvaidūryaprabha)

இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். மகாயன பௌத்தத்தில் இவரை சாக்கிமுனி புத்தரின் குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர். எனவே இவரை 'மருத்துவ புத்தர்' என்றும் அழைப்பர். 

வைபாடிகம் (vaipadika Buddhism)

வைபாடிகம் அல்லது வைபாசிகம் பௌத்தப் பிரிவிலிருந்து பிரிந்த இரண்டு பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று சௌத்திராந்திகம் ஆகும். பௌத்த சமய திரிபிடகத்தின் ஒன்றான அபிதம்ம பிடகத்தை அடிப்படையாகக் கொண்டது வைபாடிகம். இப்பிடகத்தின் உரையினை மேற்கோளாகக் கொண்டமையால் இப்பிரிவுக்கு வைபாடிகம் எனப் பெயராயிற்று. இப்பிரிவை பின்பற்றும் பௌத்தர்கள் தற்போது எவருமில்லை.

சர்வாஸ்திவாத பௌத்தம் (Sarvāstivāda)

மன்னர் மெனாண்டரின் கேள்விகளுக்கு நாகசேனர் விடையளித்தல்

நாகசேனர் (Nāgasena), சர்வாஸ்திவாத பௌத்தப் பிரிவின் நிறுவனரும், கி.மு. 150-ல் காஷ்மீரில் பிறந்த பாளி மொழி அறிஞரும் ஆவார். இந்தோ கிரேக்க மன்னர் மெனாண்டரின் பௌத்த சமயம் தொடர்பான கேள்விகளுக்கு, நாகசேனர் பதில் அளிக்கும் வண்ணம் அமைந்த, மிலிந்த பன்கா எனும் பாலி மொழி பௌத்த நூலை இயற்றியவர். துவக்கக் கால பௌத்த தத்துவச் சிந்தனைகளில் ஒன்றாகும். தருமங்கள் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் எனும் முக்காலங்களிலும் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது எனும் சித்தாந்ததைக் கொண்டது. சர்வாஸ்திவாதப் பள்ளியை நிறுவியவர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகசேனர் ஆவார். இதனை வளர்த்தவர் உபகுப்தர் ஆவார்.பின்னர் சர்வாஸ்திவாதிவாத பௌத்த தத்துவத்தை 4-5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த அறிஞரான அசங்கருடன் இணைந்து வசுபந்து, தாம் இயற்றிய அபிதர்ம கோசம் (Abhidharmakośa-bhāṣya) எனும் நூலில், தருமங்கள் முக்காலங்களிலும் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது என வலியுறுத்திகிறார். இத்தர்மங்களைப் பின்பற்றுபவர்களை சர்வாஸ்திவாதிகள் என்பர். சர்வாஸ்திவாதிவாத பௌத்த தத்துவம், வட இந்தியா, வட மேற்கு இந்தியா மற்றும் நடு ஆசியாவில் வாழ்ந்த பிக்குகளிடையே புகழ் பெற்று விளங்கியது.

மத்தியமிகம் (Madhyamaka)

ஸ்காட்லான்டில் சாம்யே லிங் துறவி மடத்தில் நாகார்ஜுனரின் தங்க உருவச்சிலை

நாகார்ச்சுனர் (கிபி 150 – 250) மகாயான பௌத்த சமயப் பிரிவில் மாத்யமக பள்ளியை நிறுவிய இந்திய மெய்யியலாளர் ஆவார். குமாரஜீவர் போன்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில், ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பாளி அல்லது பௌத்த கலப்பு சமற்கிருதம் உபயோகிக்காமல் தூய சமற்கிருதத்தை தமது நூல்களில் உபயோகப்படுத்தியுள்ளார். அவர் தமது சீடரான ஆரியதேவருடன் கூடி ப்ரஜ்ஞா பரமித (அதாவது பரிபூரண ஞானம்) சூத்திரங்களின் தத்துவத்தை வளர்த்ததாகவும், நாலந்தா பல்கலைக்கழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததற்காகவும் வரலாறு கூறுகிறது. ஜப்பானில் புத்தமதத்தின் ஜோடோ ஷின்ஸூ பிரிவில் அவர் தலைமைக் குருவாகக் கருதப்படுகிறார். புகழ் பெற்ற இவரது சீடர்களில் ஒருவர் ஆரியதேவர் ஆவார். மத்தியமிகம் மகாயானம் பௌத்தத்திலிருந்து பிரிந்த ஒன்பது பிரிவுகளில் மாத்தியமிகம் மற்றும் யோகசாரம் சிறப்பாக கருதப்படுகிறது. மத்தியமிக பௌத்தப் பிரிவை நாகார்ஜுனர் தோற்றுவித்தார்.

யோகசாரம் (yogacara)

ஜப்பான், நரா,கொபுஜி கோயிலில் வசுபந்துவின் 186 செ. மீ., உயரமுள்ள மரச்சிற்பம், ஆண்டு 1208

வசுபந்து (Vasubandhu) கி பி 4 முதல் 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காந்தார நாட்டு மகாயான பௌத்த துறவியும் அறிஞரும் ஆவார். இவரை இரண்டாம் புத்தர் என்று பௌத்தர்கள் அழைப்பர். பௌத்தர்களின் மும்மணிகளில்  ஒன்றான அபிதம்மத்தை அடிப்படையாகக் கொண்டு, தனது உடன் பிறந்தவரும், பௌத்த துறவியுமான ஆசங்காவுடன் இணைந்து யோகசாரம் எனும் தத்துவப்பள்ளியையும் நிறுவியவர். பின்னர் ஹீனயானத்தின் பழமைப் பிரிவான சௌத்திராந்திகம் மற்றும் மகாயனத்தின் உட்பிரிவான யோகசாரம் ஆகியவற்றின் தத்துவங்களை இணைத்து புதிதாக சௌத்திராந்திக யோகசாரம் தத்துவப்பள்ளியை நிறுவியவர். யோகசாரம் மகாயான பௌத்தத்தின் ஒன்பது பிரிவில் சிறப்பாக கருதப்படும் இரண்டு உட்பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று மாத்தியமிகம் ஆகும். யோகசாரப் பிரிவை நிறுவியவர் அசங்கர் மற்றும் வசுபந்து எனும் உடன் பிறந்தவர்கள் ஆவர். யோகசார நெறியில் உள்ளத்தில் உருகிப் புத்தரின் அருளைப் பெற்று உய்ய வழி காண்பது யோகசாரத்தின் கொள்கை ஆகும்.

சௌத்திராந்திகம்

சௌத்திராந்திகம்ஹீனயான பௌத்த சமயத்திலிருந்து பிரிந்த இரண்டு முதன்மைப் பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று வைபாடிகம் ஆகும். இப்பிரிவை உருவாக்கியவர் குமாரலப்தர் ஆவார். குமாரலப்தர் நாகார்ஜுனர் காலத்தவர். பிடக சூத்திரத்தைப் பின்பற்றியதால் சௌத்திராந்திகர் எனப்பெயர் பெற்றனர். புலால் உண்ண தலைப்பட்ட பௌத்தப் பிரிவினர் சௌத்திராந்திகர்கள்.

வச்சிரயான பௌத்தம் (Vajrayana Buddhist)

வச்சிரயான பௌத்தம் என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு நீட்சியாக கருதப்படுகிறது. வஜ்ரயானம் தர்மத்தை அறிந்து கொள்ள பல கூடுதல் உபாயங்களை கையாள்கிறது. இதை தந்திரயானம், மந்திரயானம், என்ற பெயர்களிலும் அழைப்பர். வஜ்ரயானம் என்ற சொல் வழக்கத்தில் வருவதற்கு முன், புத்தகுஹ்யர் போன்ற பௌத்த அறிஞர்கள், மகாயானத்தை பாரமித-யானம், மந்திர-யானம் என இரு வகையாக பிரிக்கின்றனர்.தேரவாதம் மற்றும் மகாயானத்துக்கு அடுத்து மூன்றாவது பெரும் பிரிவாக வஜ்ரயான பௌத்தம் கருதப்படுகிறது.

வஜ்ரயானம் தற்போது இரண்டு துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

திபெத்திய பௌத்தம்: இது திபெத், பூடான், இந்தியாவில் லடாக், நேபாளம், தென்மேற்கு மற்றும் வட சீனா, மங்கோலியா, மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் கால்மீக்கியாவில் இது பின்பற்றப்படுகிறது. வஜ்ரயானம் திபெத்திய பௌத்தத்தின் ஒரு பகுதியே ஆகும். ஏனெனில், வஜ்ரயான கருத்துகள், பொதுப்படையான மகாயான கருத்துகளுக்கு, மேம்பட்ட நிலை கருத்துகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஷிங்கோன் பௌத்தம்: இது ஜப்பானில் பின்பற்றப்படும் ஒரு பிரிவாகும். இது திபெத்திய பௌத்த பிரிவினை போல் பல மறைபொருள் சடங்குகளை கையாண்டாலும் இதன் முறைகள் திபெத்திய பௌத்தத்தில் இருந்து வேறுபட்டவை ஷிங்கோன் பௌத்தம் மஹாவைரோசன சூத்திரம் மற்றும் வஜ்ரசேகர சூத்திரத்தை அடிப்படையாக கொண்டது. ஷிங்கோன் பௌத்தம் கூக்காய் என்ற பௌத்த துறவியால் தோற்றுவிக்கப்பட்டது.

தசபூமிக பிரிவு

தசபூமிக பிரிவு என்பது சீனாவில் ஒருகாலத்தில் பரவலாக இருந்த ஒரு பௌத்த பிரிவாகும். இது வசுபந்துவின் தசபூமிக சூத்திரத்தை அடிப்படையாக கொண்டு எழுந்த ஒரு பௌத்த பிரிவாகும். பிற்காலத்தில் இது அவதாம்சக பிரிவுடன் இது ஒன்றிணைந்து விட்டது.

போன் பௌத்தம் (Bön)

போன் பௌத்த சமயச் சின்னம், இடப்புறமுக விளங்கும் சுவஸ்திக்கா

திபெத்தை மையமாகக் கொண்ட ஒரு பௌத்தப் பிரிவாகும். போன் பௌத்தம், திபெத்திய பௌத்தத்திலிருந்து சிறிது வேறுபட்டு, தனித்தன்மையுடன் விளங்குகிறது. திபெத்தில் போன் பௌத்தம் 11-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. மேலும் போன் பௌத்த தாந்ரீகச் சமயச் சாத்திரங்கள் பத்மசம்பவர் மற்றும் டாகினியை அடிப்படையாகக் கொண்டதாகும். திபெத் பகுதியில் பௌத்தம் பரவுவதற்கு முன்னிருந்த பழைமையான சமயம் போன் ஆகும். பின்னர் பௌத்த சமயத் தாக்கத்தின் விளைவாக புதிய சமயமாக தன்னை மாற்றிக் கொண்டது. போன் பௌத்த சமயம் சீனாவின் சிச்சுவான், கிங்ஹாய் மாகாணம், கான்சு, யுன்னான் மற்றும் சிஞ்சியாங் மாகாணங்களிலும், இந்தியாவின் லடாக் மற்றும் பல்திஸ்தான் பகுதிகளிலும் மற்றும் பூட்டான், சிக்கிம், நேபாளத்தின் வடக்கின் பால்பா மாவட்டம் மற்றும் மஸ்தாங் மாவட்டங்களில் வாழும் செர்ப்பா மற்றும் தமாங் மக்கள் வாழும் பகுதிகளிலும், வடக்கு மியான்மர் பகுதிகளிலும் போன் பௌத்தம் பின்பற்றப்படுகிறது.

சென் புத்தமதம் (Zen/ Chán) 

முதல் இரண்டு சென் மரபினராகக் கருதப்படும் போதிதர்மரும், தாசு உயிக்கியும்

மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சீன அரசு மரபுகளில் ஒன்றான தாங் அரசமரபு காலத்தில் சென் புத்தமதம் என்ற பெயரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீன சமயத்தின் தத்துவக்கோட்பாடான தாவோயிசத்தால் வலிமையாகப் பாதிக்கப்பட்டு சீன புத்தமதத்தின் ஒரு தனிப்பிரிவாகச் சான் புத்தமதம் வளர்ந்தது. பின்னர் இப்பிரிவு சீனாவிலிருந்து தெற்கு வியட்நாம், வடகிழக்கு கொரியா, கிழக்கு சப்பான் போன்ற பகுதிகளுக்குப் பரவியது. சப்பானில் இப்பிரிவு ஜப்பானிய சென் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானியர்களின் அன்றாட வாழ்வும் கலை, இலக்கியம், ஓவியம், கலாசாரம் ஒவ்வொன்றிலும் சென் புத்தமதத்தின் பாதிப்பு உள்ளது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com