மத அரசியல்-11: இந்தியாவில் இஸ்லாம் 

மத அரசியல்-11: இந்தியாவில் இஸ்லாம் 

கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி.636-லேயே முஸ்லிம்களின் கப்பல்கள் இந்திய பெரும் கடலில் காணப்பட்டதாக திரு. தாராசந்த் அவருடைய புகழ்பெற்ற நூலான Influence of Islam on Indian Culture…. என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் வி.ஏ.கபீர் தம்முடைய Kerala Muslim Monuments என்ற நூலில் எழுதியுள்ளார்.

கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.

சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்கு பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.

சேரமான் பெருமாள்

சேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபு கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும், முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.
 

சேரமான் தர்கா, ஓமன்

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

சேரமான் ஜும்மா பள்ளிவாசல், கொடுங்கல்லூர், எர்ணாகுளம், கேரளா 

ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா (Cheraman Perumal) இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும், தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது.
இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.

References:

  • 1. திருக் குர்ஆன்_IFT வெளியீடு
  • 2. இஸ்லாமியத் தத்துவ இயல்_ராகுல் சாங்கிருத்யாயன்
  • 3. இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்_எம்.என்.ராய்
  • 4. தமிழகத்தில் முஸ்லீம்கள்_எஸ்.எம்.கமால்
  • 5. சேரமான் பெருமாள் தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்_CMNசலீம்

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com