அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-14: கன்பூசியனிஸம்

சி.பி.சரவணன்

கன்பூசியஸ் (Confucianism)

சீனாவின் லூ நாட்டில் ஷான்டோங் மாநிலத்தில் சாங்பிங் மாவட்டத்தில் டிஸோ/ கு பூ என்னும் இடத்தில் லூவின் டியூக் ஷியாங்கின் இருபத்து இரண்டாம் ஆட்சி ஆண்டான  கி.மு. 551ஆம் ஆண்டு செப்டம்பர் 28 கன்பூசியஸ் பிறந்தார். அவர் இயற்பெயர் குங்ஃபூ ட்ஸூ ( K'ung Fu-tzu). அவருடைய தாய் நிச்சியூ மலையில் பிள்ளை வரம் கேட்டு பிராத்தனை செய்ததன் விளைவாக பிறந்தார்.

பிறப்பின் சமயத்தில் அவருடைய தலையில் ஒரு புடைப்பு இருந்தது, அதன் காரணமாக அவர் “சியூ” (குன்று) என்றழைக்கப்பட்டார். கன்பூசியஸ் என்ற வார்த்தை “குவாக்-ஃபூ-ட்ஸே என்ற சீன வார்த்தையின் லத்தீன் எழுத்துப் பெயர்ப்பாகும். இவரது இயற்பெயர் குங்பூஸ. பெரும் தத்துவ மேதையான இவர் அநேகமாகக் கடவுளாகவே வணங்கப் பட்டு வருகிறார் இவரது கருத்துக்கள் ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு ‘கன்பூசியனிஸம்’ என்னும் மதமே உருவாகியது.  அவரது நூல் ஆனலெக்ட்ஸ் இம்மதத்தின் புனித நூலாக விளங்கி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, வியட்நாம்,  தைவான் போன்ற நாடுகளிலும் இம்மதம் விரிந்து பரவி உள்ளது.

கன்பூசியஸின் தந்தை அவரது 70வது வயதில் மறுமணம் செய்தார்.  அந்த மனைவிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் தான் கன்பூசியஸ்.  இவருக்கு நான்கு வயதான போது தந்தை இறந்து போனார்.

தந்தையை இழந்த அந்தக் குடும்பம் வறுமையில் தள்ளாடியது. வாழ வழி தெரியாமல் தத்தளித்த அக்குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு இந்தப் பிஞ்சுச் சிறுவன் தலைமேல் வந்து வழுந்தது. எனவே படிப்பைத் துறந்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பல வேலைகளைச் செய்து பொருள் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை. சிறு வயது முதலே சிரமங்களை அனுபவித்த காரணத்தை தலையெழுத்து என்றோ, விதி என்றோ சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிடாமல், மனிதனுக்குத் துன்பம் ஏன் ஏற்படுகிறது என்ற கோணத்தில் தனது சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டது.
அறியாமை தான் முக்கியக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்ட கன்பூசியஸ், அறியாமைக்கு என்ன காரணம் என்று யோசிக்கத் தொடங்கினார்.

அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வது தான் உண்மையான அறிவு என்ற புதிய தத்துவத்தைத் தனது அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டார். இச்சிந்தனையின் ஊடாக வரலாற்றைக் கற்றுத் தேர்ந்தார்.  அத்துடன் கட்டடக் கலையிலும் வல்லமை மிகுந்தவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார்.

முகச் சிறந்த வரலாற்று ஆசிரியராகத் திகழ்ந்த கன்பூசியஸ், தனது இருபதாவது வயதில் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்குத் தந்தையும் ஆனார். குழந்தைகளைப் பண்புடனும், நறந்குணத்துடனும் வளர்த்தார்.

குடும்ப வாழ்க்கையைக் காட்டிலும் சமூக நலனிலேயே அதிக அக்கறை கொண்டவராக இருந்தபோதிலும், குடும்பதம்திற்குத் தேவையான வருமானத்திற்காக வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இவரது அறிவாற்றல் சிறப்பானதாக இருப்பதை உணர்ந்த அரசாங்கம், உணவுப் பொருள் கிட்டங்கியைப் பராமரிக்கும் அதிகாரியாகப் பணிபுரிய வாய்ப்பளித்தது.  அந்த வேலையிலும் தனது திறமையைக் காட்டினார்.  பற்பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

இவரது அட்டகாசமான திறமையை அரசும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. மேலும் அரசின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆக்கமிகு கொள்கைகளை வகுத்துக் கொடுக்கவே, கன்பூசியஸின் மதிப்பும், மரியாதையும் மிகப் பெரிய உயரத்தைத் தொட்டது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கித் தரும் பொறுப்பை அரசு அவருக்கு வழங்கியது.

இவ்வாறாக அறிவில் ஈடிணையற்றவராக விளங்கி, பெரும் புகழ் சம்பாதிக்க அவர் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிமானது கல்வி மட்டுமே என்பதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்தார். எனவே பிரபல தத்துவஞானி அரிஸ்டாட்டிலைப் போலவே கல்விக் கழகம் ஒன்றை நிறுவினார். அரசு நிர்வாகம், சமூக முன்னேற்றம், ஒழுக்கம், பண்பு போன்றவற்றைப் பாடமாக மாணவர்களுக்குப் போதித்தார். அறியாமையைக் களைவதிலும், உழைப்பின் முக்கியத் துவத்தை உணர்வதிலும், சுதந்தமிரமாகச் சிந்திக்கும் திறனை வலியுறுத்துவதிலும் கவனம் செலுத்தினார்.

இவரது இப்புதிய முயற்சி பெரும்பாலானவர்களைக் கவர்நதாலும், சிலருக்குக் கசந்தது. அதற்கு முக்கியக் காரணம் என்ன வென்றால், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை அவர் பேசிவந்தது தான்.

மக்கள் மதச் சம்பிரதாயங்களில்  மூழ்கி, மூடநம்பிக்கையில் உழன்று கிடக்கிறார்கள். மதம் என்பது அவர்களை முட்டாள்களாக்கி இருக்கிறது. அறியாமையின் காரணமாக மதவெறியோடு காணப்படுகிறார்கள். என்றெல்லாம் கன்பூசியஸ் பிரசங்கம் செய்துவந்தார். இவ்வாறு மதத்தின் மீதான தனது வெறுப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படையாக காண்பித்தார். வாழும் காலத்தின் மனிதன் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீதிக்கு அடிப்பணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.

கன்பூசியஸின் இத்தகையப் போக்கு அரசு அதிகாரிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவரைக் குறை கூறத் தொடங்கினர். இதனால் அரசாங்கப் பணியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலையை விட்டு வெளியே வந்த கன்பூசியஸ், பல நாடுகளுக்கும் சென்றார். அங்கெல்லாம் தமது எண்ணத்தையும், கருத்துக்களையும் பரப்பினார்.

அவரது முற்போக்கான கருத்துக்களால் கவரப்பட்ட குறுநில மன்னர்கள் சிலர், அவருக்கு உதவ முன்வந்தபோதும், ஏற்றுக்  கொள்ள மறுத்துவிட்டார். கொடிய வறுமை அவரைப் பலமாக ஆட்கொண்ட போதும், இவ்வாறு உதவிகளை அவர் ஒதுக்கித் தள்ளியது பலரையும் வியப்பில் விழிவிரிய வைத்தது. அவரது உயர்ந்த லட்சியங்களை உணரத் தொடங்கிய சீன அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து கௌரவிக்க விரும்பியது.  ஆனால் அதனையும் ஏற்க மறுத்து விட்டார்.

கடுமையான சிந்தனை, ஓயாத உழைப்பு, வறுமையின் பிணைப்பு போன்ற காரணங்களால் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தனது 70-வது வயதில் ஒய்வெடுத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். ஒரு மலைப்பாங்கான இடத்தில் தமது சீடர்களுடன் கடைசிக் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார். சீடர்களுக்கு உபதேசங்கள் வழங்கிக் கொண்டே வசந்தமும் இலையுதிர்க் காலமும் என்னும் நூல் ஒன்றையும் எழுதினார்.

கன்பூஸியசின் மரணத்திற்குப் பிறகுதான் அவரது கருத்துக்கள் இன்னும் அதிக ஆதரவைப் பெற்றது. அவர் மீதான நன்மதிப்பு அதிகமானது. அவரது கொள்கைகள் தத்துவம் என்பதையும் தாண்டி மதமாக உருவெடுத்தது.

அதுவே ‘கன்பூசியனிஸம்’ என்ற பெயரில் அவரது கருத்துக்கள் அனைத்தும் மதமாக மாறியது. உலகில் மக்களிடையே ஏழை, பணக்காரர் என்கிற மாதிரியான எவ்விதப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்றார் கன்பூசியஸ். ஆதரவற்றோர், முதியோர், ஏழை எளியவர்களுக்கு அடைக்கலம் தந்து பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்பதையும் அவர் வலியுறுதினார். கல்வியை வளர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்ற கன்பூசியஸ், இளைஞர்கள் சுதந்திரமாக சிந்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கன்பூசியஸ் ஒரு கடவுளாகவே மதிக்கப்படலானார்.  அவர் பிறந்த கு பூவில் அவருக்குக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. இக்கோயில்  உலகப் பாரம்பரியச் சின்னம் என்று யுனெஸ்கோ 1994-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்துடன் கன்பூசியஸ் பிறந்த வீடும் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்பூசியஸ் கோயில் மற்றும் வீடு அமைந்துள்ள 14 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான வளாகத்தில், ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அமைந்துள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களும் அங்கே காணப்படுகின்றன. கடந்த 2 ஆயிரத்து 500 ஆண்டுகளாக சீனாவை ஆட்சி செய்துவந்த ஆட்சியாளர்கள் அனைவரும் இந்த வளாகத்தைப் பாதுகாத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்பூசியஸ் கருத்துக்களுக்கு எதிரான விமர்சனத்தை மா சேதுங் கடைப்பிடித்து வந்தார். எனவே கம்யூனிஸ்ட் சீனாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் கன்பூசியஸ் தத்துவத்துக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும் டமாவோவின் இறப்புக்குப் பின் கன்பூசியஸ் சித்தாந்தம் அரசின் ஆதரவுடன் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

மனித நேயம், நற்பண்பு, சுதந்திரமான செயல்பாடுகள்,  முழுமையான நிறைவு, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது கன்பூசியஸ் மத நெறி.

கன்பூசியனிஸம் (Confucianism)

இவருடைய தத்துவங்கள் கன்பூசியனிஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்புக்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைப் பற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார். நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.

ஐந்து இலக்கியங்கள்

 
1. ஷி ஜிங் (பாடல் நூல்)
சௌ காலத்தின் தினசரி வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் 305 பாடல்கள்
2. ஷூ ஜிங் (வரலாற்று நூல்)
பேரரசு காலத்திலிருந்து சீனர்களுன் 17 நூற்றாண்டு கால வரலாறு
3. ஈ ஜிங் ( மாற்றங்களின் நூல்)
ஆறு முழுமையான நேர்க்கோடுகளின் சேர்க்கையால் உருவாகக் கூடிய 64 சேர்மானங்களின் விளக்கங்கள் அடிப்படையிலான நூல்
4. லி ஜி (சடங்குகளின் நூல்)
சடங்குகள், சம்பிரதாயங்கள் பேரில் விதிமுறைகள் அடங்கிய நூல்
5. சுன்சியூ  (இளவேனிற்கால நிகழ்ச்சிகள் நூல்)
கன்பூசியசின் சொந்த் ஊரான லூவின் வரலாறு


லி, சென்

சமுதாயத்தில் சீர்மிகுலைந்து போயிருந்த ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்ட அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே கடைபிடிக்க வேண்டிய கடமைகளை உணர்ந்ந்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். லி என்றால் ஒரு சமூகத்தில் மனிதன் ஒருவன் எவ்வாறு முறையாகச் செயல்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் விதிகளும் நியாயங்களும் ஆகும். இக்கோட்பாடுகளே “லி’ எனப்படும்.”சென்” ஐ கடை பிடித்தால் அனைவரையும் கனிவோடு நடத்த முடியும். ரென், இயி, இலி என்று இதன் அடிப்படை நெறிகளைச் சொல்வார்கள்.  ரென் என்றால் பிறர் மீதான மனிதநேயம் மற்றும் பொதுநலம் சார்ந்த கடமை உணர்வு என்று பொருள். இயி என்றால் நியாயத்தை நிலைநிறுத்த முயற்சித்தல், நன்மை செய்ய விழைதல் மற்றும் ஒழுக்க மனப்பான்மை ஆகியனவாகும்.

‘ரென்’ மற்றும் ‘இயி’ ஆகியவற்றின் முக்கியமான அறப்பண்புகளைக் காப்பதற்காக ஒருவன் தன் உயிரையும் தர வேண்டும் என்று கன்பூசியஸ் நெறி வலியுறுத்துகிறது. கன்பூசியஸ் சீனத்து பழமையான மதங்களின் மீது நம்பிக்கை கொண்டவர் என்றாலும் கன்பூசியஸ் நெறியானது மனிதநேயம் சார்ந்ததாகவும், இறைசாரா நம்பிக்கை உடையதாகவுமே இருக்கிறது. கன்பூசியஸ் நெறியை ஒரு மதமாகக் காண்பதற்குப் பதிலாக பிற நெறிகள் அல்லது நம்பிக்கைகளுக்கு ஒரு துணை வழிகாட்டி நெறி என்று கூறுவோரும் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை கன்பூசியனிஸத்தை ஒரு சமயமாக அடையாளப்படுத்தி உள்ளது.

சீடர்கள்

இவருடைய சீடர்கள் பெரும்பாலனவர்களை அறிய இயலவில்லை. மேலும் சிலர் புனைப்பெயர்களில் சுயோ சுஹான் (Zuo Zhuan) என்பதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்லிஸ்ட் பதிவானது மொத்தம் 22 சீடர்கள் உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆனால் மென்சியஸ் பதிவானது மொத்தம் 24 சீடர்கள் உள்ளதாகவும் மேலும் பல சீடர்களின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். இவருடைய பெரும்பாலான சீடர்கள் லூ நாகரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்றவர்கள் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறுகின்றனர். உதாரணமாக (ஸிகோங் Zigong_) என்பவர் வே மநிலத்தில் (Wey state) இருந்து வந்தவர் ஆவார்.

கன்பூசியஸின் நான்கு புத்தகங்கள்

1. தா ஷூஹ் (மஹா கல்வி)
கண்ணியவானின் கல்விக்கு அடிப்படைப் புத்தகம்
2. சுக் யுங் (நடுநிலைக் கோட்பாடு)
நடுநிலையோடிருந்து மனித இயல்பை முன்னேற்றுவிப்பதன் பேரில் ஆய்வு நூல்
3. லூன் யூ (இலக்கிய தொகுப்பு)
கன்பூசியசின் உபதேசங்கள் அடக்கிய ஒரு தொகுப்பு
4.மெங்-ட்ஸே (மென்ஸியசின் புத்தகம்
கன்பூசியசின் முக்கிய சீடரான மெங்-ட்ஸே என்பவரின் கருத்துகள் அடங்கிய நூல்

இறப்பு

Cemetery of Confucius, Qufu, Kina


கி.மு. 479-ஆம் ஆண்டு தமது 71-வது வயதில் கன்பூசியஸ் மரணத்தைத் தழுவினார். தனது மரணத்துக்குப் பிறகு சீடர்கள் தவிக்காமல் இருப்பதற்காக சொன்ன சத்தியவாசகம் இதுதான்: "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு என்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT