அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-57: சிவன்

சி.பி.சரவணன்

சிவன் (Shiva)

சிவன் என்னும் சொற்பிறப்பு

சிவன் என்பதற்கு சிவந்தவன் என்பது பொருள். ஞாயிறுக்கு செங்கதிர் என்பதும் மற்றொரு பெயர். மொகஞ்சோதாரோ முத்திரைகளின் ஆண் தலைமையான தெய்வம் எனக் கூறப்பட்டுள்ளது. சிவனைக் குறிக்கும் பசுபதிக் கடவுளும் ஆண் கடவுளரே ஆவர். ஞாயிறு ஒவ்வொரு மாதத்திலும் தங்கும் வீடும் ஒவ்வொரு வடிவுடையதாகக் கொள்ளப்பட்டு மக்களால் வழிபடப்பட்டது. இறைவனை அட்டமூர்த்தி எனக் கொள்வது  இப்பழைய வழக்குப்பற்றிப் போலும். பிலிப்பைன் தீவுகளில் சிலவற்றில் இன்றும் மக்கள் சிவனைச் சிவப்பன் என வழங்குவர் இதனால் முற்கால மக்கள் ஆண் என்பதற்குச் சிவப்பு என்னும் அடைகொடுத்து வழங்கினார்கள் எனக் கருதலாம்.  ஆண், அன் ஆனபோது சிவப்பு அண் சிவப்பன் ஆகிப் பின்னர் சிவப்பன் என மருவிற்றெனக் கூறுதல் பிழையாகாது. சிவன் என்னும் சொல்லின் உற்பத்தியைக் கூறவந்த ஆசிரியர்கள் எல்லோரும் சிவன் என்பதற்குச் சிவந்த கடவுள் என்னும் பொருளே கூறியுள்ளார்கள் என்கிறார் ஹீராஸ் பாதிரியார்.

வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் நாகரிகம் இந்திய நாட்டிலேயே தோன்றிப் பிறநாடுகளுக்குச் சென்றது எனக் கருதுகின்றார்கள். ஆகவே ஆதியில் மக்கள் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்கள் தமிழுக்குரியனவாயிருந்தத்தல் பொருத்தமானதே.

சிவன் வழிபாடு

எகிப்திய மக்கள் ஞாயிற்றை அமன், ஓசிறிஸ், ரா முதலிய பெயர்களால் வழிபட்டார்கள். சுமேரியர் ஆண், எல் முதலிய பெயராலும் பாபிலோனியர், பால்(Baal) பேல் (Bel) மார்டுக் முதலிய பெயர்களாலும் ஆசீரியர், அகர் என்னும் பெயராலும், பினீசியர் பால் என்னும் பெயராலும் சின்ன ஆசிய மக்கள் சூரியா, அதாத் என்னும் பெயர்களாலும் இந்திய மக்கள் ஆண், சிவன், எல் முதலிய பெயர்களாலும் ஞாயிற்றை  சிவனாக வழிபட்டனர். உலக மக்களின் பழைய சமய வரலாறுகளை நன்கு ஆராய்ந்த ஆசிரியர்கள் எல்லோரும், உலக மக்கள் தொடக்கத்தில் ஞாயிற்றையே வெவ்வேறு பெயர்களால் வழிபட்டார்கள் எனக் கூறியிருக்கின்றனர். மொழி மாறுபட்டது போல அவர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்களும் மாறுபடலாயின. மொழி வேறுபாடு முன்னரே எல்லா மக்களுக்கும் பொதுவாகிய சில கடவுட் பெயர்கள் மாத்திரம் வழங்கியிருத்தல் சாலும். அவை எல், சிவன் பல் ஆண் என்பன மேற்கு ஆசிய அரேபிய இலங்கை மக்கள் எல் தொடர்பான பெயர்களைக் கடவுளுக்கு இட்டு வழங்கினார்கள். பாபிலோன், இந்தியா, சுமேரியா முதலிய நாடுகளில் ஆண் என்பதே கடவுளின் சால பழைய பெயராகக் காணப்படுகின்றது.  ஆண் என்பது தொடக்கத்தில் ஞாயிற்றையும், பின் கடவுளையும், பின் உயர்திணை ஆண்பால் படர்க்கை ஒருமையையும் குறிக்க வழங்கிற்று. எல் என்பது தமிழில் காணப்படும் பழைய சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம் சிவன் என்னும் பெயர் இவ்வுலகில் மிகப் பழைமையே வழங்கியதற்குரிய ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. மற்றப் பெயர்களை விடச் சிவனையே சாலச்சிறந்த பெயராக மக்கள் ஞாயிற்றுக்குத் தொடக்கத்தில் இட்டு வழங்கினார்கள் என்கிறார் தாமஸ் இன்மேன்.

முற்கால இடப்பெயர்கள்

பழைய காலத்தில் மக்களின் குடியிருப்பு பெரும்பாலும் கோயிலைச் சுற்றியிருந்தது. ஆகவே, ஒவ்வொரு பட்டினமும் அல்லது இடமும் கடவுள் தொடர்பான பெயர் பெற்றிருந்தது என்கிறார் க்ளாட் ரீனர் கார்னர்(Claude Reignier Conder).  இவ்வுலகில் ஒன்றில் ஒன்று தொலைவிலுள்ள இடங்களில் சிவன் தொடர்புடைய இடப்பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வுலகின் அகன்ற இடப்பரப்பில் சிவன் ஆலயங்கள் பல இருந்தனெவென்று நாம் நன்கு அறிதல் கூடும்.

சிவன் என்னும் பாலை நிலப் பசுந்தரை

எகிப்திலே இலிபிய வனாந்தரத்தில் சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை ஒன்று உள்ளது. இவ்விடம் அமன்யூ பிதர் என்னும் கடவுள் வழிபாட்டக்குப் பேர் போனது என்று சொல்லப்படுகின்றது. அமன், ரா, ஒசிறிஸ் என்னும் பெயர்களை எகிப்தியரின் ஞாயிற்று கடவுளைக்குறிப்பன. இக்கடவுளுக்கு வாகனம் இடபம். யூபிதர் என்னும் பெயரும் சுயஸ்பிதர் என்பதினின்றும் பிறந்ததென்று சொல்லப்படுகின்றது. யூபிதர் என்னும் சொல் சிவா என்பது போன்ற ஒரு சொல்லின்று பிறந்ததென என தாமஸ் மௌரிஸ்  ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். யூபிதர் என்னும் பெயரும் ஞாயிற்றுக் கடவுளைக்குறிப்பதே ஆகும். கிரேக்கரது சியஸ் என்னும் கடவுட் பெயரும் சிவன் என்பதன் திரிபே. சிவன் பாலை நிலப் பசுந்தரையில் இன்றும் அமன் கடவுளின் கோயில்களின் வழிபாடுகள் காணப்படுகின்றன என்கிறார் ஆர்தர் பெர்னர்ட் குக். இப்பாலை நிலப் பசுந்தரை சிவன் வழிபாடு காரணமாகக் சிவன் என்னும் பெயர் பெற்றிருந்ததென்றும், பின்பு சிவன் கடவுளின் பெயர் அமன்யூபிதர் என மாறியுள்ளதென்றும், நாம் நன்கு ஊகித்தறியலாம். இடப்பெயர் மாத்திரம் அன்று முதல் இன்று வரையும் சிறிதும் மாறுபடாமலே இருந்து வருகின்றது.  அமன் கடவுளுக்கு இடபம் வாகனமாகுதல், ஆலயங்களினுள் சிவலிங்கங்கள் வைத்து வணங்கப்படுதல் முதலிய காரணங்களால் அமன் சிவனே என்கிறார் அபேதுபே.

பாபிலோனில் சிவன் என்னும் பட்டினம்

பாபிலோன் நாட்டிலே, களிமண் ஏட்டில் எழுதப்பட்டு சூளையிட்டு காப்பாற்றப்பட்ட பல பழைய பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளுள் பல, மக்கள் அடிமைகளையும், நிலங்களையும் விற்றதும் வாங்கியதும் தீட்டிய ஆவணங்களாக காணப்பட்டன. அவைகளில் இன்ன மாதத்தின் இன்ன இடத்தில் இன்ன நாளில் ஆவணம் எழுதப்பட்டதெனக் குறிக்கப்பட்டள்ளது என்கிறார் மோர்ரிஸ் ஜாஸ்ட்ரோ(Morris jastrow). அவ்வாவணங்கள் சிலவற்றுள் சிவன் என்னும் இடப்பெயர் காணப்படுகின்றது. இதனால் பாபிலோனில் சிவன் வழிபாடும் சிவன் ஆலயமும் இருந்தனவென்று நாம் நன்கு அறிகின்றோம்.

பாபிலோனரின் கடவுளுக்கு எல்சடை என்பதும் மற்றொரு பெயர் எல்சடை என்பது சிவபிரானை குறிக்க வழங்கும் சடைநன் என்னும் பெயரை ஒத்திருக்கின்றது. அவர்கள் ஞாயிறுக் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர் மார்டுக், யேகோவா, சிவா போன்ற ஒரு சொல்லினின்று பிறந்தது.

வட அமெரிக்காவில் சிவன் ஆலயம்

வட அமெரிக்காவிலே கொலரடோ என்னும ஓர் ஆறு உள்ளது. இந்த ஆறு நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஆழத்தில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. இதன் பக்கத்தே மேற்பாகம் தட்டையாகக் காணப்படும் குன்றின் உச்சி சிவன் ஆலயம் என நீண்டகாலம் அங்குள்ள மக்கள் ஞாபகத்திலிருந்து வந்தது. இவ்விடத்தை ஒருவரும் ஏறிக்கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. 1937 ஆம் ஆண்டு அமெரிக்கப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர் இவ்விடத்தைக் கண்டுபிடித்துத் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இச்சிவன் ஆலயத்தின் காலம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று சிலரும், இதற்கு இன்னும் மிகப் பழைமையுடையது என்று வேறு சிலரும் தமது கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். இதனால் வட அமெரிக்காவில் பத்தாயிரம் ஆண்டுகளின் முன் சிவன் ஆலயமும் சிவன் வழிபாடும் இருந்தனவென்று நாம் துணிந்து கூறலாம்.  இந்து அமெரிக்கா என்னும் நூல் எழுதிய சமன்லால் என்பவர் அமெரிக்காவின் பல பாகங்களில் இன்றும் சிவலிங்க வழிபாடிருப்பதை நன்கு எடுத்து விளக்கியுள்ளார்.

கிரேத்தா (Crete) வில் சிவன் நகர்

கிரேத்தா என்னும் தீவு பழந்தமிழருடைய குடியேற்ற நாடாகக் கருதப்பட்டது. வரலாற்றைப் பிதா எனப்பட்ட ஹெரதோதஸ் (Heradotus) என்பார். கிரேத்தா மக்கள் தமிழர் (தமிழி) எனப்பட்டார்கள் என்றே கூறியுள்ளார். கிரேத்தா நாட்டுப் பழைய நாகரிகமும், சிந்து சமவெளித் தமிழரின் நாகரிகமும் ஒரே வகையின. கிரேத்தா மக்கள் மீனவர் எனப்பட்டார்கள். அவர்களின் எழுத்துக்கும், அரப்பா மொகஞ்சொதரோ எழுத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாகரிகத் தொடர்பும் இவ்வகையினதே. அங்குள்ள பழைய நகரம்  ஒன்றுக்குச் சிவன் என்பது பெயர். அங்குச் சிந்துவெளியிற் கிடைத்தவை போன்ற பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் கிரேத்தாவில் சிவன் வழிபாடும் சிவன் ஆலயமும் இருந்தனவென்று நன்கு அறியலாம். கிரேத்தாவில் சிவலிங்க வழிபாடு சங்கு வாத்தியம் முதலியனவும் காணப்பட்டன.

சின்ன ஆசியாவில் சிவாஸ் என்னும் நகர்

சின்ன  ஆசியாவிலே (ஆசியா மைனர்) சிவாஸ் என்னும் பழைய நகர் ஒன்று உண்டு. இது பழைய அழிபாடுகளுடைய அழிந்த நகரம் எனப்படுகின்றது. இதன் பழைய வரலாறு ஒன்றும் அறியப்படவில்லை. சின்ன ஆசியாவில் சிவலிங்க வழிபாடும், இடப்பத்தின் மீது வீற்றிருக்கும் சிவன் வழிபாடு, இடப வழிபாடு முதலியனவும் காணப்பட்டமையின் சிவாஸ் என்பது சிவன் ஆலயத்துக்குப் பேர்போன ஒரு பழைய நகரம் என கூறலாம்.

வட இந்தியாவில் சிவபுரம்

ஆரிய வேதங்கள் சிவாக்கள் என்னும் ஒரு கூட்டத்தினரை பற்றிக் கூறுகின்றன. பாணினி, சிவபுரம் என்னும் இடப்பெயரை குறிப்பிட்டுள்ளார். இது வட இந்தியாவில் சிவாக்கள் வாழ்ந்த நகரமாகாலாம் என  ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். ஆரியர்கள் தங்கள் சிவலிங்க வழிபாட்டை வெறுத்துத் தள்ளியமையின் வட நாட்டில் சிவனை வழிபடும். பிறிதொரு மக்கள் இருந்தார்கள் என்று நாம் நன்கு அறிதல்கூடும்.

இலங்கையில் சிவன் மலை

இலங்கையில்  சிவன் மலை அல்லது சிவன் ஒளி மலை என்னும் ஒரு மலை உள்ளது. இம் மலை உச்சியில் ஞாயிறு உதயமாகும் காலத்தில் வானவில்லின் நிறமுடைய ஒளி தோன்றுகிறது. இது புத்தர் காலத்துக்கு முன்தொட்டுச் சிவன் ஒளி மலை எனவே வழங்குவதாயிற்று. இம்மலை லிங்க வடிவாயிருந்ததால் அரேபியர் இதனை ஆதம் மலை என்றார்கள். ஆதம் என்னும் ஆதிப்பிதாவைக் குறிக்க லிங்க வடிவமே கையாளப்பட்டதெனச் சொல்லப்படுகிறது.

“சிவன்” மாதப் பெயர்

முற்காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்குச் சிறப்புடையதாயிருந்தது. மலையாளத்தில் ராசிப் பெயர்களே மாதங்களுக்கு இட்டு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் தங்கும் வீடு ஒவ்வொரு வடிவுடையதாகக் கொண்டு வழிபடப்பட்டதென்று மொகஞ்சோதாரோ பழம்பொருள் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. மேற்கு ஆசிய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் சிவன் எனத் தெரிகிறது. பாபிலோனில் கிடைத்த களிமண் ஏடுகளில் சிவன் மாதம் குறிக்கப்பட்டுள்ளது. சிவன் மாதம் சிமானு எனவும் பட்டது. மொசே என்பவர் யேகோவா அருளிய பத்துக்கட்டளைகளைச் சிவன் மாதத்தின் ஆறாவது நாள் சினாய் மலைமீது நின்று மக்களுக்கு வெளிவிட்டார் என்று கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு கூறுகிறது. மொசேயின் காலம் கி.மு.1500 வரையில் இத்துணைப் பழைய காலத்திலேயே சிவன், மாதத்தின் பெயராயிருந்ததெனக் கொள்ளின் அப்பெயர் மக்களிடையே அதனினும் பன்னெடுங்காலம் முன்தொட்டு வழங்கி விருந்திருத்தல் வேண்டும். இதனால் மேற்கு ஆசிய நாடுகளில் மக்கள் மொசேக்கு மிக நீண்டகாலம் முன்தொட்டே சிவன் என்னும் ஒரு கடவுளை வழிபட்டார்கள்.

சிவன் பின்லாந்து மக்களின் காத்தற்கடவுள்

பின்லாந்தில் வாழும் மக்கள் துரானிய வகுப்பைச் சேர்ந்தோர். இம்மக்களின் காத்தற் கடவுள் சிவன்.

விவிலிய மறையில் சிவன் கடவுள்

விவிலிய மறையின் பழைய ஏற்பாடு சிவன் (Chien) என்னும் கடவுளைப்பற்றிக் கூறுகிறது. இக் கடவுளை நன்கு ஆராய்ந்த மேல் நாட்டு அறிஞர் சிவன் என்பது சிவனே என்றும், அது விவிலிய மறையில் சிறிது வேறுபாட்டுடன் திரித்து வழங்கப்பட்டுள்ளதென்றும் காட்டியுள்ளார்கள். சிவன் வழிபாடு மேற்கு ஆசியா கிரீஸ் உரோம் முதலிய நாடுகளில் மிகப் பழங்காலத்திலேயே பரவியிருந்ததென்றும் பிற்காலத்து மக்கள் அதன் வரலாற்றை மறந்து போயினமையின் தங்கள் தேசத்துக்கும், இடங்களுக்கும் மனப்பான்மைக்கும் பொருத்தமான பழங்கதைகளைப்புனைந்து கட்டினார்கள் என்றும் ஆதர்லில்லி (Arthur Lillie) என்பார் கூறுகிறார்.

அக்கேடிய மக்களின் விண்மீன் சிவன்

அக்கேடிய மக்களின் ஏழு முக்கிய விண்மீன்களில் மூன்றாவது சிவன் எனப்பட்டது என்கிறார் ஜே.எஃப்.ஹீவிட் (J.F.Hewitt)

ஜப்பானிய மக்களின் சிவோ

ஜப்பானிய மக்களின்  பழைய தெய்வங்களில் ஒன்று சிவோ எனப்பட்டது. அது வேட்டை ஆடும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள். ஜப்பானிய மக்கள் கோரியா நாட்டினின்றும் சென்று ஜப்பான் தீவுகளில் குடியயேறியவர்களாவர். இவர்கள் சிவலிங்கங்களை முச்சந்தி நாற்சந்திகளில் நட்டு வழிபட்டார்கள். இவர்கள் முற்காலத்தில் இலக்கங்களை தமிழ் எழுத்துக்களால் எழுதினார்கள் என்று வடல் (Waddell) என்பார் குறிப்பிட்டுள்ளார். இவை போன்ற பல ஏதுக்களால் சப்பானியரின் சிவோ என்னும் பெயர் சிவன் என்பன் திரிபு ஆகலாமென நாம் உணரலாகும்.

சன் (Sun) சிவன் என்பதன் திரிபு

ஞாயிற்றைக் குறிக்க ஆங்கில மொழியில் வழங்கும் சன் என்னும் சொல் சிவன் என்பதன் திரிபு எனக்கருத இடமுண்டு. இச்சொல்லின் மூலம் அறியப்படவில்லை. கிழக்குத் திசையினின்றும் இச்சொல் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிறது. பாலஸ்தீனியர் சிவன் என்பதைச் சியன் என வழங்கினார்கள் என்பது முன் விளக்கப்பட்டது சிவவே ஆங்கில மொழியில் சன் ஆயிற்று எனக் கருதல் பிழையாக மாட்டாது.

சிவன் மக்கட் பெயர்

முற்கால மக்கள் சிவன் எனவும் தமக்குப் பெயரிட்டு  வழங்கினர். இவ்வகைப் பெயர்கள் பழைய இலங்கை அரசரிடையே காணப்பட்டது. செய்றோரேயிஸ் என்னும் சுமேரிய அரசனின் மனைவியின் பெயர் சிவன். சிவன் என்னும் பொருள் தரும் பால் என்னும் பெயர்களை மேற்கு ஆசிய மக்கள் தமக்குச் சூட்டியிருந்தார்கள் என்பார் செடான் லாய்ட் (Seton Lloyd)

சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல்

ஆதியில் மக்கள் சிவன் என்னும் ஞாயிற்றுக்கடவுளை மலை முகடுகளில் கண்டு வணங்கினார்கள். ஆகவே மலை முகடுகள் கடவுளுக்கு உறைவிடம் என்று கருதப்பட்டன. மலை இல்லாத நாடுகளில் மக்கள் மலைபோன்ற முக்கோணமான செய்குன்றுகளை எழுப்பி அவை மீது ஞாயிறைப் போன்ற வட்ட வடிவமான வடிவத்தை வைத்து வழிபட்டார்கள். எகிப்தியரின் கூர்நுதிச் சமாதிகள் ஞாயிறுக் கடவுளின் கோயில்களே ஆகும். எல்லா இடங்களிலும் பெரிய செய்குன்றுகளை எழுப்புவது எளிதன்று. ஆதலின் செய்குன்று வடிவான முக்கோணக் கற்கள் ஞாயிறின் குறிகளாக வைத்து வழிபடப்பட்டன. லிங்கம் என்பதற்கு அடையாளம் என்பது பொருள் என்கிறார் ஃப்ரெட்ரிக் சார்லஸ் மைஸி (Fredrick Charles Maisey). முக்கோணவடிவான கற்களே பின்பு அடி அகன்று நுனி ஒடுங்கிய கற்களாக மாறின. ஒபிலிஸ்க் (Obelisk) எனப்படும் சதுரவடிவான தூண்களும் ஞாயிறுத் தூண்களாகும். சிவலிங்க வழிபாடு இந்திய நாட்டில் மாத்திரமன்று. இவ்வுலகம் முழுமையிலும் ஒரு காலத்தில் காணப்பட்டமையைப் பற்பலர் நன்கு ஆராய்ந்து காட்டி உள்ளார்கள். விவிலிய மறையில் பீதெல் என்று சொல்லப்படுவன மரங்களின் கீழ் நிறுத்தப்பட்ட சிவலிங்கங்களேயாகும்.

கைலை, என்பது கபாரத காலத்தில் சிவன் கோயில் கொண்டிருக்கும் மலைகளைப் பொதுவில் குறிக்க வழங்கிய பெயர் எனத் தெரிகிறது. இது பாரதப் போர் நிகழ்ந்தபோது ஒரு நாள் இரவில் கண்ணனும் அர்ஜுனனும் குருக்ஷேத்திரத்தினின்றும் கைலைக்கு சென்று மீண்டார்கள் எனப்படுவதாக அறியலாம். இலங்கையில் மனுவின் பேழை தங்கியதாகக் கருதப்படும் மலை ஹமெல் எல் எனப்பட்டதெனத் தெரிகிறது. இன்னும் எல் தொடர்பான பல இடப்பெயர்கள் இலங்கையில்  காணப்படுகின்றன. இதனால் ஆதியில் திருக்கோண மலையே எல் தொடர்பான பெயரைக் பெற்றிருந்ததெனக் கருத இடமுண்டு. அது தென் கைலை எனப்படுகிறது.

கைலாய மலை, திருக்கோண மலை முதலியன மற்ற மலைகளிலும் பார்க்கச் சிவலிங்க வடிவம் பெற்றிருந்ததினாலேயே அவை சிவனின் சிறந்த இருப்பிடங்கள் எனப்படுகின்றன. வடக்கேயுள்ள சிவன் மலை வடகைலை என்றும் தெற்கேயுள்ள அவ்வகை மலை தென்கைலை எனவும் அறியப்பட்டன. ஆதியில் இவ்விடங்களின் பெயர் எல்+ஐ+அம் = எல்ஐஅம் என்று இருந்ததால் கூடும். பின்பு இவ்விடங்களைப் பிரித்தறியும் பொருட்டு வடகை (வடக்கு பக்கத்திலுள்ள) இடகை(இடப் பக்கத்திலுள்ள) என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டனவாகலாம். அப்பொழுது வடகை எல்லை அம், தென்கை எல்லை அம் என்று ஆகிய பெயர்கள் வட கைலாயம் தென் கைலாயம் என்று வழங்கலாயின.

References:
1.    Ancient faiths embodied in ancient names; or, An attempt to trace the religious belief, sacred rites, and holy emblems of certain nations by Inman, Thomas, 1820-1876
2.    Syrian Stone-Lore by Claude Reignier Conde 1887
3.    The History of Hindostan Book by Thomas Maurice 1795
4.    Zeus, God of the Bright Sky, Arthur Bernard Cook  1964
5.    Hindu manners, customs and ceremonies by Abbe J. A. Dubois, , 1765-1848
6.    the civilization of babylonia and assyria by Morris jastrow 1915
7.    Hindu America by Chaman Lal 1941
8.    India in Primitive Christianity by Arthur Lillie 1909
9.    History of Chronology of Myth Making age by J.F.Hewitt
10.    Twin Rivers A Brief Hostory Of Iraq by Seton Lloyd 1943
11.    Sanchi and Its Remains by Fredrick Charles Maisey 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT