மத அரசியல்-50: சௌரம்

மத அரசியல்-50: சௌரம்

சௌரம் (Saura)

சூரிய குடும்பத்திற்கும், அதில் உயிர்கள் வசிக்கும் ஒரே கிரகமான பூமிக்கும் இன்றியமையாதது ஆதவன் என்பதனை எடுத்துரைப்பதாய் இருக்கிறது சூரிய வழிபாடு. சூரியனை பகவானாகக் கருதி, முழுமுதற் கடவுளாக எண்ணி வழிபடுவது   சவுமாரம் / சௌர சமயமாகும். சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். பேரொளி வடிவமான சூரியனை வழிபட வேண்டும் என்கிறது சௌரம். சூரியனின் சஞ்சாரத்தை வைத்து பஞ்சாங்கங்களில் கணக்கிடப்படுவதை சௌரமானம் என்பார்கள். சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவது சாந்திரமானம் எனப்படும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இயற்கையை அன்புடன் வணங்கியுள்ளனர்.  தமிழர் மதத்தில் சூரிய வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனாலும் சூரியனை முழுமுதற் தெய்வமாக எண்ணி வணங்குவது சௌரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படியே தமிழர் திருநாளில் முதல் சூரியப் பொங்கல் வைத்து சூரியனை வழிபடும் வழக்கம் இன்றும் உண்டு.

இயற்கையில் சூரியனே முதன்மையானது என்பதால் சூரியனை வழிபடும் முறை பண்டைக்காலம் முதலே இருந்து வருகிறது. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு உலகெங்கும் இருந்தது என்பதை எகிப்திய, கிரேக்க, சுமேரிய, ஐரோப்பிய, மெசபடோமிய நாகரிகங்கள் எடுத்துச் சொல்கின்றன. கண்கூடாக சூரிய பகவான் வானில் தெரிவதால் சூரிய வழிபாட்டில் விக்ரங்களும், கோயில்களும் அவசியமற்றதாகிவிட்டது. எனவேதான் சூரிய பகவானுக்கு அதிகளவில் கோயில்கள் இல்லை. சூரிய பகவான் தித்யம், திவாகரன், பாஸ்கரன், கதிரவன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

பிரபஞ்சம் முழுதும் பரம்பொருளில் தோன்றி மீண்டும் அதனிடமே ஒடுங்குவது போல் இப்பிரஞ்சத்தில் உள்ள அழியாப் பொருள் சூரியனிடமிருந்து பூவுலகும். பூவுலகில் வாழும் உயிர்களும் தோன்றி மீண்டும் அதனிடம் ஒடுங்கும் என்பது கோட்பாடு.    சூரிய பகவானுடைய சொரூபம் இலட்சணமானது, பிரகாசமானது பல்வேறு கருத்துக்களையும் பொருள்களையும்  கொண்டது.

இலக்கியத்தில் சூரியன்

சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' என்பது ஆன்றோர்கள் வாக்கு. வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம். தமிழ் வேதங்கள் சூரியனை 'ஆயுளை வளர்க்கும் அன்ன உருவம்' என்று போற்றுகின்றன. நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் 'உச்சிகிழான் கோட்டம்' என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது. சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.

பிற நாடுகளில் சூரிய வழிபாடு

சூரியனுக்கு பாரசீகர்கள் வைத்த பெயர் மித்திரன். கிரேக்க கடவுள் Helios, ‘அப்போலோ’ ஒரு சூரிய கடவுள். கிமு 4ம் நூற்றாண்டில் வழிபடப்பட்டவர். இவரும் குதிரைகள் பூட்டிய தேரில் வருவதாக உருவகப்படுத்தப்படுகிறது. ரோமர்கள் வைத்த பெயர் தைபிரியஸ்.  ரோமர்கள், ‘ஹைபீரியன்’ என்றும் சூரியனை வழிபட்டனர். அமெரிக்க பழங்குடிகளான இன்காஸ் இனத்தவரும் சூரிய வழிபாடு செய்ததாக, குறிப்புகள் தெரிவிக்கின்றன. எகிப்தை ஆண்ட பாரோ மன்னர்கள் தங்களை சூரிய குமார்கள் என பெருமையாக அழைத்து கொண்டது போலவே, இந்திய மன்னர்களும் தங்களை சூரிய வம்சம் என அழைத்து கொண்டனர்.

சூரிய தேரும் ஏழு குதிரைகளும் (Sun chariot and seven horses)

சூரியனிலிருந்து வெளிவருவது அதன் கதிர்கள் தான். அந்த கதிர்கள் ஏழு நிறங்களை  கொண்டது. வானிவில் உருவாகும் போது அதை நம்மால் பிரிந்து காண முடியும். இந்த ஏழு என்னும் எண் எல்லா இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏழு மலை தாண்டி, தொடங்கி வாரத்திற்கு ஏழு நாள், ஏழு கண்டங்கள் என எல்லா இடத்திலும் ஏழு காணப்படுகிறது.

இந்த ஏழு குதிரைகள் எதற்கு? ஒரு குதிரை போதாதா? இதில் ஒளியின் தத்துவத்தை ஒளிக் கடவுளின் சிலை வடிவமைப்பில் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சூரியனின் ஒளி வெள்ளை நிறமுடையது. உண்மையில் வெள்ளொளி என்பது ஏழு நிறங்களின் தொகுப்பே. அவை  - ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு (VIBGYOR - Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red) ஆகியவையே.

Prism எனப்படும் பட்டகத்தில் வெள்ளொளி உட்புகும் போது அது ஏழு வண்ணங்களாகப் பிரியும். வானவில்லின் தத்துவமும் அதுவே. மழை பெய்யும் போது மழை நீர் பட்டகம் போல் செயல்பட்டு வெள்ளொளியை ஏழு வண்ணங்களாகப் பிரிக்கிறது. அதாவது வானவில்லில் தோன்றும் ஏழு வண்ணங்களும் வெள்ளை ஒளியில் இருக்கும் ஏழு வண்ணங்களாகும். வெள்ளை நிறத்தை வழங்கும்  ஒளிக் கடவுளான சூரிய பகவானுக்கு ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரை வடிவமைத்ததன் மூலம் 'வெள்ளொளியில் இருக்கும் ஏழு வண்ணங்கள்' தத்துவம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இது நமது முன்னோர்களால் கோவில்களில் பாதுகாத்து வைத்துச் செல்லப்பட்ட அறிவியல். 

சூரியனார் கோவில்கள்

ஆதித்தியர்களைச் சூரியன் உள்ளிட்ட சந்திரன், பூமா அல்லது அங்காரகன் அல்லது செவ்வாய், புதன், சுக்கிரன், பிரகஸ்பதி எனப்படும் வியாழன், சனி, ராகு மற்றும் கேது ஒன்பான் கோள்கள் (நவக்கிரகங்களாக) வழிபடப்படுகிறது. இவ்வழிபாடு கலை வரலாற்றில் இருந்ததற்கான சான்றுகள் புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கப்பெறுகின்றன.  இருப்பினும், நவக்கிரகங்களை ஒரு சேர வழிபடும் தனித்துவக் கோயில்கள் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற வரலாற்றுப் பெயரில் அமைக்கப்பட்டது. இத்தலம் இன்று சூரியனார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கி.பி 11 ஆம் நூற்றாண்டில் சண்டேள ஆட்சியாளர்களால் ஒடிசா மாநிலம் கோனார்க் என்ற இடத்தில் சூரியனுக்கு என்று தனிக்கோயில் உருவாக்கப்பட்டது. பல்லவர்கள் மற்றும் சோழர்களின் கற்றளிகளில் உயரமான மேடை மீது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பான் கோள்கள் வைக்கப்பட்டன. இவை அமைக்கப்பட்டுள்ள முறை என்பது குறிப்பிட்ட அவ்வாலயம் கட்டப்படும் நிலையில் வான மண்டலத்தில் ஒன்பான் கோள்கள் அமைந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் அக்கோயில்களில் இப்படிமங்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஓர் கருத்து நிலவுகிறது. இருப்பினும் இது ஏற்புடையதா என்பதை ஆய்வாளர் திரு.கோபிநாதராவ் என்பவர் வினவியுள்ளார்.

சூரியனின் ஒளி அமைப்பை, உதயம், நண்பகல், மாலை என்று மூன்றாகக் கொண்டு, மூன்று இடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்த வரிசையில், உதயகால சூரியனுக்கான கோயில்தான் முதலில் அமைந்தது. அதை அமைத்தவன் சாம்பன் என்று சொல்கிறார்கள்.

நண்பகலில் ஜொலிக்கும் சூரிய பகவானுக்கான கோயில், சந்திரபாகா நதிக்கரையில் அமைந்தது. அந்தக் கோயிலுக்கே ‘மூலஸ்தானம்’ என்று பெயர். அதுதான் மருவி, இன்றைய ‘மூல்தான்’ (பாகிஸ்தானில் உள்ள இடம்) என்கிறார்கள். சந்திரபாகா நதியே, ‘சீனாப்’ நதி என்றும் சொல்லப்படுகிறது. இன்று அப்படி ஓர் ஆலயம் இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை.

மூன்றாவது, மாலைச் சூரியனுக்கான ஆலயம், ‘மொதேரா’. இது சோளங்கி வம்சத்தாரால் பதினாறாம் நூற்றாண்டில் குஜராத்தில் முதேரா சூரிய கோவில் கட்டப்பட்டது  என்றாலும், தமிழகத்தில் சூரியனுக்காக அமைந்த ஒரே கோயில் சூரியனார் கோயில்தான். இதைத்தவிர, சூரியன் பெயரால் அமைந்த தலை ஞாயிறு, திருப்பரிதி நியமம், ஞாயிறு போன்றவையும் சூரியன் வழிபட்ட தலங்களாக அமைந்துள்ளன.

ராஜஸ்தானிலும், வங்காளத்திலும், காஷ்மீரத்திலும் பல அரசர்களால் கட்டப்பட்ட சூரிய கோவில்கள் உள்ளன. ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன.

சூரிய வழிபாடு / சூரிய வழிபாட்டாளர் (sun/son worship/worshipers)

வழிபாடு என்றால் விழுந்து வணங்குதல் என்ற பொருளிளேயே நாம் எண்ணி வருகிறோம். இங்கே வழிபாடு என்பது வழிபடுதல், அதாவது ஒன்று அல்லது ஒருவரின் வழியை பின்பற்றுதல். சூரிய வழிபாடு என்பது சூரியனை பின்பற்றுதல். எப்படி பின்பற்றுவது ? சூரியனில் ஒளி விழும் நிலையை கணித்து அதனை பின் தொடர்தல். உலக வரலாற்றை நீங்கள் உற்றுநோக்கினீர்கள், எனில் பெரும் நகரங்களையும் பெரும் கட்டிடங்களையும் கட்டியவர்கள் சூரிய வழிபாட்டாளராய் இருப்பர். இதற்கு உதாரணமாக மாயன்களையும் எகிப்தையும் சோழரையும் கூறலாம்.

சோழர் என்ற சொல்லே ஆங்கிலத்தில் சோலார் (Solar) என்ற சூரியனை குறிக்கும் சொல்லாக வழங்கப்படுகிறது; சோழர்கள் தங்களை சூரிய வம்சம் என கூறிக்கொண்டனர் என்பதையும் நோக்கவும். எகிப்து பாரோக்களும் தங்களை சூரியனின் வாரிசுகள்; சூரியனின் மகன்கள் என்றே கூறிகொண்டனர்.

நான் உதாரணமாக கூரிய மூன்று அரசுகளும் கூம்பு வடிவ பெரும் கட்டிடங்களை கட்டியவர்கள். இவை பெருமேடுகள்.

விழுவன் குச்சி (Obelisk)

விழுவன் குச்சி எனும் குட்டையான ஒரு கம்பை நட்டு, கோள்மீன்களின் பெயர்ச்சிகளையும் நாள்மீன்களின் பெயர்ச்சிகளையும் துல்லியமாகக் கணக்கிட்ட முதல் இனம், தமிழரினம். விழுவன் குச்சி மூலம் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு நேரம் நமது முன்னோர்களால் கணிக்கப்பட்டுள்ளது. சூரியனின் இயக்கத்தை அறிவதற்கு பயன்படுவது “விழுவன் குச்சி” ஆகும். சித்திரை 1 நண்பகல் சூரியனின் கதிர்கள் சரியாக 90 திகிரியில் பூமியில் வந்து விழும். அச்சமயம் குச்சியின் நிழல் தரையில் எங்குமே விழாது சூரியனின் இந்த 90 திகிரி விழுதலை துல்லியமாக அளப்பதாலேயே அது “விழுவன்” குச்சி எனப்பட்டது.

“விழுவம்” என்னும் இச்சொல்லே பேச்சுவழக்கில் “விசுவம்” என்று திரிந்திருக்கிறது. இதைத்தான் “சித்திரை விசு” என்னும் பெயரில் பெருமாள் கோயில்களில் விழாவாக கொண்டாடுகிறார்கள். விஷ்ணு 5 ஆயுதங்களை பயன்படுத்தியதாய் சொன்னாலும், 2 ஆயுதங்களே முதன்மையாய் சொல்லப்படுவதோடு விஷ்ணுவின் அடையாளமாயும் காட்டப்படுகிறது. அவை சக்கரமும், சங்கும்.

வாசிங்டன்  விழுவன் குச்சி

மாயங்களின் பெருமேடு

எகிப்தியரின் பெருமேடு

சோழரின் பெருமேடு

சரி, இவற்றுக்கும் சூரிய வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு?

"சூரியனின் நிலைகளை கொண்டு காலத்தை கணித்து அதனை வழிபடுவோரே சூரிய வழிபாட்டாளர்"சூரியனின் நிலைகளை துள்ளியமாக கணிக்க உதவியது  இந்த பெருமேடுகள். விழுவன் குச்சி மூலம் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு நேரம் நமது முன்னோர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

பெருமேடு என்பதும் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு சூரியனின் நிலைகளை  ஆண்டு அளவில் கணிக்க பயன்படுத்தபட்டதாகும்.

பெருமேடு நிழல்

சமவெளியில் இருந்து பார்த்தால் தெரியும் உயர்வான இடத்தை “ மேடு “ என்றும் தாழ்வான இடத்தை “ பள்ளம் “ என்று தமிழ் மொழியில் அழைப்பர். ஆழம் மிகுதியாக இருந்தால் “ பெரும் பள்ளம் “ என்றும் உயரம் மிகுதியாக இருந்தால் “ பெருமேடு “ என்றும் அழைப்பது தான் சரியானது.இந்தப் பெருமேடு என்ற தூய தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் பிரமிடு (Pyramid) என்று வழங்கப்படுகிறது. 

கதிரவனின் அயனத்தை செங்குத்தான ஒரு குச்சியை வைத்து அறிந்துகொள்ள முடியும் என்ற ஆதிகாலத் தொழில்நுட்பத்தின் நீட்சியே பெருமேடுகள்.அவ்விழுவன் குச்சியை விட மிகத் துல்லியமானது தான் பெருமேடு என்ற கட்டுமான வடிவம். உச்சி வேளையில் கதிரவனின் கதிர்கள் பெருமேட்டுக்கு 90 பாகையில் மேலிருந்து விழுவதால் அப்பெருமேட்டின் நிழல் அதன் மேலேயே விழுமே தவிர மண்ணில் விழாது!!

ஒரு சூரிய நாளின் உச்சிவேளையில் நடக்கும் இந்நிகழ்வு, ஒரு சூரிய ஆண்டின் உச்சியிலும் நடக்கும். (முதலாவது படத்தில் உள்ள நிழல்விழா எகிப்தியப் பெருமேடு.) அதாவது சித்திரை மாதமும்,ஐப்பசி மாதமும் ஒரு சூரிய ஆண்டின் உச்ச மற்றும் நீச்ச மாதங்கள். சித்திரை நண்பகல் பனிரெண்டு மணிக்கும், ஐப்பசி நடுயாமம் பனிரெண்டு மணிக்கும் ஒப்பானது.

“வழிபடுதல்“ என்றால் பின்தொடர்வது என்றும் பொருள் கொள்ளலாம்.தலைவன் வழியில் நடப்பது என்றால் அவனைப் பின்தொடர்வது என்பது போல, சூரிய வழிபாடு என்றால் சூரியனின் அயனத்தை மிகத் துல்லியமாகப் பின்தொடர்வதாகும். செயற்கைக்கோள்கள் ஏவப்படும் முன் சூரிய அயனத்தைக் கணிக்க உதவும் ஒரு கருவியாக பெருமேடு என்ற வடிவியல் உருவம்தான் 1950 கள் வரை உலகெங்கிலும் பயன்பட்டது !!

உலகெங்கிலும் வாழ்ந்த சூரிய வழிபாட்டாளர்கள் தவறாமல் இப்பெருமேட்டை தங்கள் நாடுகளில் கட்டினார்கள்.பெருமேடு எவ்வளவு உயரமோ அவ்வளவு துல்லியம். எகிப்திய நாட்டுப் பெருமேடுகள், மாயன் நாட்டுப் படிப்பெருமேடுகள் (Step pyramid), சோழப் பேரரசின் பெரிய கோவில், சோலாங்கி அரசர்களின் சூரியக் கோவில் என அனைத்துமே சூரியனின் அயனத்தைக் கணிக்கவே கட்டப்பட்டன.

இன்றைய ஆங்கிலத்தில் வழங்கப்படும் சோலார் (Solar) என்ற சொல் சூரியனைக் குறிக்கும். இச்சொல் இந்தியத் துணைக்கண்டத்தில் காலம் காலமாய்ப் வழக்கத்தில் இருந்துள்ளது. சூரிய வழிபாடு செய்யும் தமிழ் மண்ணின் ஒரு அரச குடும்பத்துக்கு “ சோழர் “ என்ற பெயரும், குசராத் மண்ணின் ஒரு அரச குடும்பத்துக்கு “ சோலாங்கி “ என்ற பெயர் இருந்தமையே இதற்குச் சான்று.

சோழர் - சோலாங்கி - சோலார் ( Solar ) ஆகியவை ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்.அந்த ஒரு பொருள் சூரிய வழிபாடு. கி.பி. ஒன்பது முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப் பேரரசுக் காலம் ஆகும்.இதன் உண்மையான பொருள் இதே காலத்தில் தான் சோழனும் தஞ்சையில் பெருமேடு கட்டினான், சோலாங்கி அரசனும் குசராத்தில் சூரியக் கோவில் கட்டினான், மாயன் அரசனும் படிப்பெருமேடு கட்டினான்.

சோழன் கட்டிய பெருமேடு எகிப்தியக் கட்டுமானத்தைப் போல அல்லாமல் பதிமூன்று படிகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும். சோலாங்கி அரசன் கட்டிய சூரியக் கோவிலிலும் படிப்பெருமேடுகளை ஒத்த ஒரு கட்டுமானத்தைக் காணலாம்.உலகப் புகழ் பெற்ற மாயன் படிப்பெருமேடும் இவற்றை ஒத்த ஒரு வடிவத்தைக் கொண்டது. தட்டையான முகப்பைக் கொண்ட பெருமேடுகளை விட படிகளைக் கொண்ட பெருமேடுகள் துல்லியமானவை. மாயன் படிப்பெருமேட்டில் உள்ள நான்கு முகங்களில் தலா தொன்னூற்று ஓரு படிக்கட்டுகள் உள்ளன.மொத்தமாக 4 x 91 = 364 படிகளும், பெருமேட்டின் மேலே உள்ள ஒரு படியையும் சேர்த்து மொத்தம் 365 படிகள் உள்ளன.இது ஒரு சூரிய ஆண்டில் உள்ள 365 சூரிய நாட்களைக் குறிக்கும். மேலும் சூரியன் உச்சமடையும் நாளில் சூரியனின் மாலை நிழல் அப்படிப்பெருமேட்டின் மேல் விழுந்து ஒரு பாம்பைப் போல காட்சியளிக்கும்.

இதனை வைத்துத் தான் அப்பெருமேட்டைப் பயன்படுத்தியவர்கள் சூரிய ஆண்டின் உச்சத்தை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்தனர். இது சோழனின் பெரிய கோவிலுக்கும் பொருந்தும்.உச்சி வேளையில் கோவில் நடையைச் சாத்தும் வழக்கம் அதனுள்ளே வாழ்ந்தவருக்கு இன்றும் உண்டு.கைக் கடிகாரம் இல்லாத அக்காலத்தில் உச்சி வேளையை எவ்வாறு கண்டு பிடித்தனர்?? படிப்பெருமேட்டின் நிழல் அதன் மேலேயே விழும்.மண்ணில் நிழல் தெரியாது. இது ஒரு சூரிய ஆண்டின் உச்சத்துக்கும் பொருந்தும். தஞ்சை பெரிய கோவிலின் நிழலே மண்ணில் விழாது, இது தான் தமிழன் பெருமை என்ற கட்டுக்கதையை எவனோ ஒருத்தன் பரப்பிவிட்டிருக்கிறான்.அதன் உண்மையான பொருள் மேலே உள்ள விளக்கம் தான்.

தை, சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய நாலும் சூரிய அயனத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.முதல் முதலில் இப்பெருங்கட்டுமானங்களை தமிழ் மண்ணுக்குள் கொண்டுவந்தவன் பல்லவனே ஆவான்.அவனுக்குப் பின் சோழன் தொடர்ந்தான்.பல்லவ வம்சாவழியினர் (வர்மன் என்ற பெயர் கொண்டோர் ) கைப்பற்றி ஆண்ட தென்கிழக்கு ஆசியா முழுவதும் படிப் பெருமேடுகள் கட்டப்பட்டன.இன்றும் அந்நாடுகளில் சித்திரை ஒன்று தான் ஆண்டுப்பிறப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாண்டிய மற்றும் சேர நாடுகளிலும் இதுபோன்ற பெருமேட்டுக் கட்டுமானங்கள் பக்தி இயக்கக் காலத்துக்குப் பின்தான் முளைத்தன. பத்மநாதனின் பெருமேட்டு நுழைவாயில் சூரியஆண்டின் நீச்சதை இன்றும் மிகத் துல்லியமாகக் காட்டிவருகிறது . அக்கோவிலில் 365 முழு தூண்களும், ஒரு கால் தூணும் உள்ளது. 365.25 நாட்கள் கொண்ட ஒரு சூரிய ஆண்டை இக்கோவிலில் வாழ்ந்தவர்களை விட இவ்வுலகில் எவனும் இவ்வளவு துல்லியமாகக் கணித்ததில்லை.

பொதுவாகவே சூரிய வழிபாடு செய்யும் குலங்களுக்கும், சந்திர வழிபாடுசெய்யும் குலங்களுக்கும் ஒத்துவராது.இருவரும் இரு துருவங்களைப் போல எதிரும் புதிருமாகவே இருப்பர்.பத்தாம் நூற்றாண்டில் மிகப்பெரிய பேரரசை நிறுவத்துடித்த சோழர்கள் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, பர்மா, கங்கை, கடாரம் என கைப்பற்றினார்களே , ஏன் மேற்கே குசராத் நோக்கிச் செல்லவில்லை என்ற புதிருக்கு விடை கிடைத்துள்ளது. சோழனும், சோலாங்கியும் சூரிய வழிபாட்டாளர்கள் என்பதால் இருவரும் போரிட்டுக்கொள்ளவில்லை.

இவ்வாறு பெருமேடுகளை கட்டி அதன் வழி சூரியனின் வழியினை கணித்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை தொடர்வது சூரிய வழிபாடு எனவும் ; இவ்வாறு சூரியனை வழிபட்டோர் சூரிய வழிபாட்டினர் என்றும் அழைக்கப்பட்டனர். ஆண்டு கணக்கை பின்பற்றுவோர் என கூறலாம். எல்லா சூரிய வழிபாட்டாளர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்; கடல் வழி பயணம் மேற்கொண்ட இவர்கள் இவற்றை உலக முழுவதும் பரப்பினர்.

இன்று சௌர சமயத்தை பின்பற்றுபவர்கள் உலகில் குறைந்த அளவே இருந்தாலும் சூரிய பகவானை  உலகம் முழுவதும் பலரும் வணங்கி வருகின்றனர்.

Reference and Courtesy:  

ஒன்பான் கோள்கள், முனைவர் கி.கந்தன் ,துறைத்தலைவர், சிற்பத்துறை
சூரிய வழிபாடு / சூரிய வழிபாட்டாளர் by - யூதா அகரன்

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com