நவம்பர் மாத மோட்டார் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி

பண்டிகை காலத்தில் குறைந்திருந்த மோட்டார் வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் சூடுபிடித்துள்ளது. மாருதி சுஸுகி, ஹுண்டாய், மஹிந்திரா, டொயோட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வாகன
நவம்பர் மாத மோட்டார் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி

பண்டிகை காலத்தில் குறைந்திருந்த மோட்டார் வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் சூடுபிடித்துள்ளது. மாருதி சுஸுகி, ஹுண்டாய், மஹிந்திரா, டொயோட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
புதிய மாடல்களுக்கு அதிக வரவேற்பு, கிராமப்புறங்களில் வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் நவம்பர் மாத விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
மாருதி சுஸுகியின் கார் விற்பனை 14% அதிகரிப்பு
கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்பரில் 14.1% அதிகரித்தது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸுகி நவம்பரில் 1,54,600 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 1,35,550 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 14.1% அதிகமாகும். உள்நாட்டில் கார் விற்பனை 1,26,325லிருந்து 15% அதிகரித்து 1,45,300 ஆனது.
ஆல்டோ, வாகன்ஆர் உள்ளிட்ட சிறிய பிரிவிலான கார்கள் விற்பனை 1.8% குறைந்து 38,204ஆனது. ஸ்விஃப்ட், எஸ்டிலோ, டிசையர் மற்றும் பலேனோ உள்ளிட்ட நடுத்தர வகை கார்களின் விற்பனை 32.4% வளர்ச்சி கண்டு 65,447ஆக இருந்தது. சியாஸ் கார் விற்பனை 26.2% குறைந்து 4,009ஆக இருந்தது. கார் ஏற்றுமதி 9,225 என்ற எண்ணிக்கையிலிருந்து உயர்ந்து 9,300ஆக இருந்தது என்று மாருதி சுஸுகி அதில் தெரிவித்துள்ளது.
ஹுண்டாய் விற்பனை 10% வளர்ச்சி
ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் மாதத்தில் உள்நாட்டில், 44,008 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகமாகும். கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, கிரெட்டா, நெக்ஸ்ட் ஜென் வெர்னா கார்களின் விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. இதே நிலை தொடரும்பட்சத்தில், நடப்பாண்டு செப்டம்பர்-டிசம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில் கார் விற்பனை 2 லட்சத்தை எட்டும் என அந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். 
அசோக் லேலண்ட் விற்பனை 51% உயர்வு
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் நவம்பரில் 14,460 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான 9,574 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 51% அதிகமாகும்.
நடுத்தர மற்றும் கனரக வகை வர்த்தக வாகனங்கள் விற்பனை 54% வளர்ச்சி கண்டு 6,928 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 44% அதிகரித்து 3,819ஆகவும் இருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ விற்பனை 21% வளர்ச்சி
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்பரில் 3,26,458ஆக இருந்தது. கடந்த ஆண்டு விற்பனையான 2,69,948 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 21% அதிகமாகும்.
மோட்டார் சைக்கிள் விற்பனை 2,37,757லிருந்து 11% அதிகரித்து 2,63,970ஆகவும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 94% ஏற்றம் கண்டு 62,488ஆகவும் இருந்தது. வாகன ஏற்றுமதி 1,15,425 என்ற எண்ணிக்கையிலிருந்து 27% வளர்ச்சி கண்டு 1,46,623ஆக காணப்பட்டது என்று அந்நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 12% உயர்வு
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 12% அதிகரித்தது என்று அந்நிறுவனம் தெரிவித்தது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பது: கடந்த நவம்பர் மாதம் டிவிஎஸ்ஸின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 2,51,965 ஆகும். கடந்த ஆண்டு நவம்பரில் இது 2,24 லட்சமாக இருந்தது. இரு சக்கர வாகன விற்பனை எண்ணிக்கை 2,43,323 ஆகும். இதில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 2,02,138. மோட்டார்சைக்கிள் விற்பனை 37% உயர்ந்து 93,202-ஆனது. ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை 7.2% அதிகரித்து 78,397-ஆக இருந்தது. மூன்று சக்கர வாகன விற்பனை 46% உயர்ந்து 8,642-ஆக இருந்தது. ஏற்றுமதி 43% அதிகரித்தது. கடந்த நவம்பரில் ஏற்றுமதியான வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 47,207-ஆகும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
மஹிந்திரா விற்பனை 18% அதிகரிப்பு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்பரில் 18% அதிகரித்து 38,570ஆனது. கடந்த ஆண்டில் இந்த விற்பனை 32,564ஆக காணப்பட்டது.
உள்நாட்டில் வாகன விற்பனை 29,869லிருந்து 21% வளர்ச்சியடைந்து 36,039ஆனது. ஏற்றுமதி 2,695 என்ற எண்ணிக்கையிலிருந்து 6% குறைந்து 2,531ஆனது என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா விற்பனை 13% உயர்வு
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை நவம்பரில் 12,734ஆக இருந்தது. கடந்த ஆண்டு விற்பனையான 11,309 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 13 % அதிகமாகும். எட்டியோஸ் மாடல் ஏற்றுமதி 1,284லிருந்து 46.57% குறைந்து 686ஆனது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபோர்டு கார் விற்பனை 13% வளர்ச்சி
ஃபோர்டு எக்கோஸ்போர்ட் சொகுசுக் கார் புதிய பதிப்பாக சந்தையில் அண்மையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இது, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, நிறுவனத்தின் மொத்த கார்கள் விற்பனை உள்நாட்டில் 13.1 சதவீதம் வளச்சியடைந்து 7,777ஆனது என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது. 
சுஸுகி மோட்டார் சைக்கிள் விற்பனை 37% அதிகரிப்பு
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் விற்பனை நவம்பரில் 37.2% அதிகரித்து 49,535ஆக இருந்தது. உள்நாட்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை 30,830லிருந்து 38.6% உயர்ந்து 42,722ஆனது. ஏற்றுமதி 29.33% அதிகரித்து 6,813ஆக இருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com