அபராதத்திலிருந்து தப்பிக்க வருமான வரி தாக்கல் செய்வோம்!

மாத சம்பளம் பெறுவோர் வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அபராதத்திலிருந்து தப்பிக்க வருமான வரி தாக்கல் செய்வோம்!

மாத சம்பளம் பெறுவோர் வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் (ஜூலை 31) அதனை தாக்கல் செய்யாதோருக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அபராதத்தில் இருந்து தப்பிக்க மாத வருவாய் பெறும் அனைவரும் தங்களது கணக்கு விவரங்களை வருமான வரி துறைக்கு தெரிவித்தே ஆக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
வருமான வரி தாக்கல் செய்ய எளிய நடைமுறையிலான புதிய படிவங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மொத்தம் 9 வகையான வரி தாக்கல் படிவங்கள் உள்ளன. அதில், தனிநபர்கள் பயன்படுத்தும் ஐடிஆர்-1 (சஹஜ்), ஐடிஆர்-2, ஐடிஆர்-2ஏ, ஐடிஆர்-3, ஐடிஆர்-4, ஐடிஆர்-4எஸ் ஆகிய 6 படிவங்கள் உள்ளன. 
பெரும்பான்மையோர் மாத சம்பளக்காரர்களாக இருப்பதால் சஹஜ் படிவத்தை பயன்படுத்தியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். வெளிநாடு வாழ் இந்தியார்களுக்கு சஹஜுக்கு பதிலாக ஐடிஆர்-2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்களை அவர்கள் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஐடிஆர்-5, ஐடிஆர்-6 மற்றும் ஐடிஆர்-7 படிவங்கள் நிறுவனங்களுக்கானவை.
மாத சம்பளம் வாங்கும் தனிநபர்கள் கணக்கு தாக்கல் செய்யும்போது, நிறுவனம் அளித்த சம்பளம் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் விவரங்கள் அடங்கிய ஐடிஆர் 16 (பார்ம் 16) படிவம் கண்டிப்பாக தேவை. மேலும், 80சி, 80 சிசிசி, 80 சிசிடி போன்ற வரிசேமிப்பு பிரிவுகளின் கீழ் முதலீடு செய்திருக்கும்போது அதற்கான ஆவணங்களையும் கூடவே வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். வங்கி, அஞ்சல் அலுவலக டெபாசிட்டுகள் மூலம் 10,000 ரூபாய்க்கும் மேல் வட்டி வருமானம் ஈட்டும் தனிநபர் கட்டாயம் வரி செலுத்தியாக வேண்டும். 
80டி மற்றும் 80 யு பிரிவுகளின் கீழ் ரூ.25,000 வரை மருத்துவ காப்பீடு பிரீமியம் செலுத்தியோருக்கு வரி விலக்குகளும் உண்டு.
பங்குச் சந்தை முதலீட்டை பொருத்தவரையில் நடப்பாண்டு ஏப்ரல் 1-க்குப் பிறகு பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த லாபம் ரூ.1 லட்சத்தை தாண்டும்போது அவர்கள் 10% நீண்டகால மூலதன ஆதாய வரியை கட்டாயம் அரசுக்கு செலுத்தியாக வேண்டும். ஆதார் எண்ணுடன் பான் எண்ணையும் இணைத்திருந்தால், வரி தாக்கலை ஆதார் மூலமாகவே சரிபார்த்துக் கொள்ள முடியும். மேலும், வரி தாக்கல் படிவத்தை நகல் எடுத்து கையொப்பமிட்டு பெங்களூரு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை. வருத்தமின்றி வாழ வரி தாக்கல் செய்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com