மின்னூர் டான்சி தொழிற்கூடத்தை மீண்டும் பயன்படுத்த கோரிக்கை

ஆம்பூர் அருகே மின்னூர் கிராமத்தில் மூடிக் கிடக்கும் டான்சி தொழில் கூடத்தை வேறு தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் முனைவோரிடையே எதிர்பார்ப்பு
மின்னூர் டான்சி தொழிற்கூடத்தை மீண்டும் பயன்படுத்த கோரிக்கை

ஆம்பூர் அருகே மின்னூர் கிராமத்தில் மூடிக் கிடக்கும் டான்சி தொழில் கூடத்தை வேறு தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் முனைவோரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் தமிழக தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, ஆம்பூர் அருகே மின்னூரில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் டான்சி தொழில் கூடம் அமைக்கப்பட்டது. அங்கு கம்பளி தயாரிக்கும் தொழிற்சாலை துவக்கப்பட்டது. அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அலுவலர்கள், தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன. 
அந்த ஆலைக்கு அருகிலேயே 2.5 ஏக்கர் பரப்பளவில் தோல் பதனிடுவதற்காக அரசால் டால்கோ தொழிற்சாலை துவக்கப்பட்டது. இவ்விரு தொழிற்சாலைகளும் நஷ்டம் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டன.
இவ்விரண்டு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், அந்த தொழிற் கூடங்களின் கட்டடங்கள் எதற்கும் பயன்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக கேட்பாரற்று உள்ளன. அதனால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் புகலிடமாக அத்தொழில் கூடங்கள் மாறியுள்ளன. மேலும் அத்தொழில் கூடங்களில் இருந்த இயந்திர தளவாடங்கள், கதவு, ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சமூக விரோதிகளால் பெயர்த்து எடுத்து திருடிச் செல்லப்பட்டுள்ளன.
ஆம்பூரில் உள்ள ஷூ தொழிற்சாலைகளில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஷூ தயாரிக்கும் தொழில் சார்ந்த நுணுக்கமும், தொழில் நுட்பமும் அவர்களுக்குத் தெரிந்துள்ளது. இந்த நிலையில், அவர்களுக்கு சொந்தமாகத் தொழில் துவங்குவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், பயன்பாடின்றிக் கிடக்கும் டால்கோ, டான்சி தொழிற் கூடங்கள் அமைந்துள்ள பகுதியில் மகளிருக்கென தொழிற் பூங்கா அமைக்கலாம் என்பது அவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதே நேரத்தில், அங்கு பொதுவான தொழில் பூங்காவும் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கருத்தும் நிலவுகிறது. அப்பகுதியில் புதிய தொழில் தொடங்குவதற்குத் தேவையான முதலீட்டை அரசு கடனாக வழங்கி, தொழிலை நடத்த உதவி செய்திட வேண்டுமென ஆம்பூர் பகுதி தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மின்னூரில் உள்ள டான்சி, டால்கோ தொழிற் கூடங்களில் புதிய தொழில் பூங்காவை அறிவித்தால், அதன் மூலம் புதிய தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு அவற்றின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளும் உருவாகும். புதிய வேலைவாய்ப்புகள் அளிப்பதோடு, இதன் மூலம் அரசுக்கு வருவாயும் கிடைக்கும் என்பது உறுதி.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் எம்.வி. சுவாமிநாதன் கூறியது:
தற்போதைய கால கட்டத்தில் சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர் தங்களது தொழில் கூடத்தை அமைப்பதற்கு இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ஆம்பூர் அருகே மின்னூரில் உள்ள டான்சி, டால்கோவிற்கு சொந்தமான தொழிற் கூடங்கள் பயன்பாடு இல்லாமல் பூட்டிக் கிடப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். 
இத்தொழில் கூடங்களைப் புதுப்பித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் பலனடையும் வகையிலும் புதிய தொழில் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். புதிய தொழில் பூங்கா, மகளிர் தொழில் பூங்கா, அடுக்குமாடி தொழிற் கூடங்கள் போன்ற ஏதேனும் ஒன்றை ஏற்படுத்தி, அங்கு சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் தொழில் தொடங்க முன்னிரிமை அளிக்க வேண்டும். 
அண்மைக் காலமாக சிறு, குறுந்தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. அவர்களுக்குத் தேவையான தொழில் முதலீட்டு நிதியைப் பெறுவதிலும், தொழிலை நடத்துவதற்கு தேவையான வசதிகளைப் பெறுவதிலும் தொழில் முனைவோர் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். 
ஆகவே ஆம்பூர் அருகே மின்னூரில் மூடப்பட்டு, பயனற்ற நிலையில் உள்ள டான்சி, டால்கோ தொழிற்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அப்பகுதியில் புதிய தொழில் திட்டத்தை அறிவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com