ஏல முறையில் மாற்றம்: ஏலக்காய் விவசாயிகளுக்கு சிக்கல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடி, தமிழகத்தின் தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தக நடைமுறையில், வாசனை பொருள் வாரியம் செய்துள்ள
ஏல முறையில் மாற்றம்: ஏலக்காய் விவசாயிகளுக்கு சிக்கல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடி, தமிழகத்தின் தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தக நடைமுறையில், வாசனை பொருள் வாரியம் செய்துள்ள புதிய மாற்றம் விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 கேரளம், இடுக்கி மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடி, தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஆகிய இடங்களில் வாசனைப் பொருள் வாரியம் மூலம், தனியார் ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள் சார்பில் மின்னணு வர்த்தக முறையில் ஏலக்காய் விற்பனை நடைபெற்று வருகிறது.
 இந்த ஏல நிறுவனங்களில் விவசாயிகள் விற்பனைக்குப் பதிவு செய்யும் ஏலக்காயை, உரிமம் பெற்ற வியாபாரிகள், தனியார் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் முகவர்கள் மின்னணு வர்த்தகம் மூலம் கொள்முதல் செய்கின்றனர். சிறு வியாபாரிகள் மூலம் விவசாயிகளிடம் நேரடியாகவும் ஏலக்காய் கொள்முதல் செய்யப்படுகிறது.
 கடந்த 2014-ஆம் ஆண்டு வரை 7 ஏல விற்பனை நிறுவனங்கள் மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தன. புத்தடி, போடி ஆகிய இடங்களில் வாரத்தின் எல்லா நாள்களும், ஏல விற்பனை நிறுவனங்கள் சார்பில் சுழற்சி முறையில் ஏல விற்பனை நடைபெற்று வந்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள் சார்பில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு 7 நாள்களுக்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.
 இந் நிலையில், ஏல விற்பனை நிறுவனங்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது. இதனால் ஏலக்காய் ஏல விற்பனை நடைமுறையை வாசனை பொருள் வாரியம், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மாற்றி அமைத்தது. இதன்படி, புத்தடி, போடி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாளொன்றுக்கு காலை மற்றும் பிற்பகலில், இரண்டு ஏல விற்பனை நிறுவனங்கள் சார்பில், மின்னணு வர்த்தகம் நடைபெற்றது. இந்த நடைமுறை மாற்றம், விலை ஏற்ற, இறக்கத்தை அனுசரித்து ஏலக்காய் விற்பனை செய்வதற்கும், வாரம் ஒருமுறை அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் விவசாயிகளுக்கு வாய்ப்பு அளித்தது.
 புதிய நடைமுறை: இவ்வாண்டு மே மாதம் முதல் ஏலக்காய் மின்னணு வர்த்தகத்தில் புதிய நடைமுறையை வாசனைப் பொருள் வாரியம் கொண்டு வந்தது. இதன்படி, புத்தடி மற்றும் போடியில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக, பிற நாள்களில் காலையில் மட்டும், ஏலக்காய் மின்னணு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், ஒவ்வொரு ஏல விற்பனை நிறுவனத்திற்கும் மாதம் இருமுறை வீதம், பன்னிரண்டு ஏல நிறுவனங்களுக்கு ஏலக்காய் ஏல வர்த்தகம் நடத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
 இந்த புதிய நடைமுறையின்படி, ஒவ்வொரு நிறுவனமும் 14 நாள்கள் இடைவெளியில் இரு முறை ஏல வர்த்தகம் நடத்தி வருகிறது. புதிய நடைமுறை அமலானது முதல், இந்த ஏல நிறுவனம் மூலம் ஏலக்காய் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு 15 நாள்களுக்கு பின்புதான் அதற்குரிய பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
 ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாரம்தோறும் சனிக்கிழமை சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. மேலும் உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு விவசாயிகள் அன்றாடம் பணம் செலவிட வேண்டியுள்ளது.
 இந்த நிலையில், ஏலக்காய் விற்பனைக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கான கால அவகாசம் 15 நாள்களாகிவிட்டதால், உற்பத்தி மற்றும் தொழிலாளர் சம்பள செலவிற்கு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடன் வாங்க வேண்டிய நிலையும், ஏல நிறுவனங்களில் பதிவு செய்யாமல் வியாபாரிகளிடம் நேரடியாக குறைந்த விலைக்கு ஏலக்காய் விற்பனை செய்யும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
 மறு பதிவு வர்த்தகத்தால் பாதிப்பு: இந்த நிலையில், கேரளத்தில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்த பலத்த மழையால் ஏலக்காய் தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, 60 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏலக்காய் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், ஏலக்காய் விற்பனையில் நிலவும் மறு பதிவு வர்த்தக முறை அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 தற்போது, ஏல வர்த்தக நிறுவனங்களில் கொள்முதல் செய்யும் தனியார், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் முகவர்கள், தாங்கள் கொள்முதல் செய்த ஏலக்காயை விற்பனைக்கு அனுப்பாமல், ஏல விற்பனை நிலையங்களில் மீண்டும் விற்பனை செய்வதற்குப் பதிவு செய்கின்றனர். இவ்வாண்டு உற்பத்தி 40 சதவீதமாக குறைந்துள்ள நிலையிலும், இதுபோன்ற மறுபதிவு வர்த்தகத்தால் ஏல விற்பனை நிலையங்களில் தினமும் சராசரி 70 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்படுகிறது.
 இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உற்பத்தி இயல்பாக இருந்தபோது, மொத்தம் 61 லட்சத்து 12 ஆயிரத்து 150 கிலோ அளவு ஏலக்காய் பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டது. கேரளத்தில் மழை பாதிப்பால் ஏலக்காய் உற்பத்தி 40 சதவீதமாக குறைந்துள்ள நிலையிலும், ஏல விற்பனை நிறுவனங்களில் கடந்த ஆண்டைவிட அதிகமாக, 63 லட்சத்து 4 ஆயிரத்து 729 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு வர்த்தகம் நடந்துள்ளது.
 ஏலக்காய் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்த மறு பதிவு வர்த்தக யுக்தி பயன்படுத்தப்படுகிறது. இந்த சீசனில் மகசூல் இழப்பால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை, விலை உயர்வால் ஓரளவேனும் சமாளிக்கலாம் என்ற ஏக்கத்தில் இருந்த விவசாயிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 மீண்டும் பழைய நடைமுறை வருமா?
 ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் மற்றும் பாதிப்புகளை தவிர்க்கவும், விற்பனை செய்த பொருளுக்கு ஒரு வாரத்திற்குள் பணம் பட்டுவாடா கிடைப்பதற்கு வாய்ப்பாகவும், மறு பதிவு சுழற்சி வர்த்தகத்தை தவிர்க்கவும், முன்னர் இருந்த ஏல நடைமுறையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என ஏலக்காய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதன்படி, புத்தடி, போடி ஆகிய இடங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை, காலை மற்றும் பிற்பகலில், இரு ஏல விற்பனை நிறுவனங்கள் சார்பில் ஏலக்காய் மின்னணு வர்த்தகம் நடத்த வாசனைப் பொருள் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
 மறுபதிவு முறை
 ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்களுக்கு ஏலக்காய் வரத்து குறைவாக இருந்தால், விற்பனை விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
 இதை தவிர்ப்பதற்கு தனியார், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் முகவர்கள் ஏல விற்பனை நிறுவனங்களில் ஏற்கெனவே கொள்முதல் செய்த ஏலக்காயை, சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பாமல் இருப்பு வைத்து, மீண்டும் ஏல விற்பனை நிறுவனங்களில் விற்பனைக்காக மறு பதிவு செய்கின்றனர்.
 இதனால், ஏலக்காய் விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, வியாபாரிகள் சீராக லாபம் பெறுகின்றனர். ஆனால், விவசாயிகள் உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் ஏமாற்றமடைகின்றனர்.
 நாளொன்றுக்கு ரூ.10 கோடி வர்த்தகம்
 வாசனைப் பொருள் வாரியம் (ஸ்பைஸஸ் போர்டு) கட்டுப்பாட்டில் 12 தனியார் ஏலக்காய் ஏல வர்த்தக நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், தற்போது நாளொன்றுக்கு சராசரி 70 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனை செய்யப்படுகிறது.
 கடந்த நவ. 9-இல் ஹீடர் சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் ஏல விற்பனை நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில், ஏலக்காய் சராசரி ரகம் கிலோ ஒன்று ரூ.1,243.94-க்கும், உயர் தரம் கிலோ ஒன்று ரூ.1,448-க்கும் விற்பனையானது. இந்த விலை நிலவரப்படி, ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனம் மூலம் தற்போது நாளொன்றுக்கு ரூ.9 கோடி முதல் ரூ.10 கோடி வரை ஏலக்காய் வர்த்தகம் நடைபெறுகிறது.
 ஏலக்காய் மகசூல் இயல்பாக இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 1.50 லட்சம் கிலோ வரை விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ. 15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவது உண்டு.
 
 - கோ. ராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com