பதஞ்சலி பராக்... பராக்!

உடல் நலம் பேணும் ஆயுர்வேத தயாரிப்புகள் மூலம் அகில இந்திய சந்தையை அடைந்தது பதஞ்சலி நிறுவனம். இதையடுத்து, பதஞ்சலி பற்பசை, நூடுல்ஸ் உள்பட பல்வேறு நுகர்வோர் சாதன விற்பனையில் இறங்கி,
பதஞ்சலி பராக்... பராக்!

உடல் நலம் பேணும் ஆயுர்வேத தயாரிப்புகள் மூலம் அகில இந்திய சந்தையை அடைந்தது பதஞ்சலி நிறுவனம். இதையடுத்து, பதஞ்சலி பற்பசை, நூடுல்ஸ் உள்பட பல்வேறு நுகர்வோர் சாதன விற்பனையில் இறங்கி, சந்தையில் மேலும் தனது இறக்கைகளை விரித்தது அந்நிறுவனம். இந்த இரு துறைகளிலும் நீண்ட காலமாக கோலோச்சி வரும் பழைய ஜாம்பவான்களைத் தனது குறைந்த விலை யுக்தி மூலம் ஆட்டம் காண வைத்தது.
 அண்மையில் பசும்பால் மற்றும் பால் பொருள் விற்பனையைத் தொடங்கியது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பால் பொருள் விற்பனை மூலம் மட்டுமே ரூ. 1,000 கோடி வர்த்தகத்தை ஈட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்ததாக, பதனிடப்பட்ட பட்டாணி, காய்கறி வகைகள் ஆகியவற்றின் விற்பனையிலும் குதிக்க ஆர்வம் தெரிவித்திருக்கிறது. சூரிய மின் தகடு உற்பத்தியில் இறங்கவுள்ளதாகவும் பதஞ்சலி ஏற்கெனவே அறிவித்திருக்கிறது!
 உணவுப் பொருள் விற்பனையில் எய்திய வெற்றியையடுத்து, இப்போது ஆயத்த ஆடைகள் துறையில் துணிந்து இறங்கியிருக்கிறது பதஞ்சலி. இரண்டு ஆண்டு காலமாகவே இது பற்றி கூறி வந்தாலும், இவ்வாண்டு தீபாவளி சீசனில் இத் துறையில் களமிறங்கிவிட்டது. "பரிதான்' என்ற பெயரில் ஆயத்த ஆடை விற்பனையகங்களைத் தொடங்கியிருக்கிறது.
 அதில் ஆண், பெண் இருவருக்கும் ஆயத்த ஆடைகள்; இதுதவிர, "லிவ்ஃபிட்' பிராண்டில் ஸ்போர்ட்ஸ் கேஷுவல் ஆடைகள் பரிதான் விற்பனையகங்களில் கிடைக்கும். ஜீன்ஸ் உள்ளிட்ட நவீன ரகங்கள் முதல் பாரம்பரிய உடைகள் வரை அனைத்து விதமான ஆயத்த ஆடைகளும் "பரிதான்' விற்பனையகங்களில் உள்ளன. ஆயத்த ஆடைத் துறையிலும் குறைந்த விலை என்ற யுக்தியுடனே களமிறங்கியுள்ளது பதஞ்சலி. லீவைஸ் உள்ளிட்ட வெளிநாட்டு டெனிம் ஜீன்ஸ் பிராண்டுகளின் தரத்தில் - ஆனால் அதன் பாதி விலையில் - தங்களுடைய ஜீன்ஸ் ரகங்கள் இருக்கும் என்று பதஞ்சலி மூத்த அதிகாரியொருவர் கூறுகிறார்.
 புது தில்லியில் சலுகை விலையுடன் தடபுடலாக தீபாவளி விற்பனையைத் தொடங்கியது பரிதான். அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு தழுவிய அளவில் 100 பரிதான் கிளைகள் திறக்கப்படும். அடுத்த நிதியாண்டுக்குள் ரூ. 1,000 கோடி வருவாய் உள்ள பிரிவாக பரிதான் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் கிளை எண்ணிக்கை 500-ஆக விரிவுபடுத்தப்படும்.
 கடந்த 1997-இல் ஆயுர்வேத மருந்துகளுடன் தனது விற்பனையைத் தொடங்கிய பதஞ்சலி, அடுத்த சில ஆண்டுகளில் புதிய சாதனங்களுடன் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வந்துள்ளது. பற்பசை முதல் நூடுல்ஸ் வரை புதிய சந்தைகளில் தயக்கமின்றி இறங்கி, வெற்றியும் பெற்றுள்ளது. அனைத்துப் பொருள்களுமாகச் சேர்த்து, தற்போது நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ. 10,500 கோடியாக உள்ளது.
 பதஞ்சலியின் நுகர்வோர் சாதன அதிரடி விலைக்கு எதிராக சில ஆண்டுகள் பன்னாட்டு நிறுவனங்கள் துவண்டது போலத் தெரிந்தாலும், அதை வெற்றிகரமாக சமாளித்துவிட்டதாகக் கூறி வருகின்றன. அதனால்தான் முதல் சில ஆண்டுகளில் 100 சதவீத வளர்ச்சியைக் கண்டபோதிலும், பதஞ்சலியின் வளர்ச்சி விகிதம் தற்போது குறைந்துள்ளது. எனினும், புதிய துறைகளில் இறங்க பதஞ்சலி சற்றும் தயங்குவதில்லை என்று தெரிகிறது. பால் பொருள்களும், ஆயத்த ஆடைகளுமே அதற்கு சாட்சி!
 - டி.எஸ்.ஆர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com