ரிசர்வ் வங்கி கூட்டம் எதிரொலி!: சென்செக்ஸ் 317 புள்ளிகள் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆலோசனை கூட்டம் குறித்த எதிர்பார்ப்பால்  இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 317 புள்ளிகள் அதிகரித்தது.
ரிசர்வ் வங்கி கூட்டம் எதிரொலி!: சென்செக்ஸ் 317 புள்ளிகள் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆலோசனை கூட்டம் குறித்த எதிர்பார்ப்பால்  இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 317 புள்ளிகள் அதிகரித்தது.
ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சந்தைக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டனர். 
குறிப்பாக, வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையிலும், பொதுத் துறை வங்கிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை தளர்த்தும் வகையிலும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. 
இதனிடையே அந்நிய முதலீட்டு வரத்தும் இந்திய பங்குச் சந்தைகளில் சிறப்பாக காணப்பட்டது. சர்வதேச நிலவரங்களைப் பொருத்தவரையில் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.  இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஆறு வாரங்களுக்குப் பிறகு உச்சத்தைத் தொட்டது.
மும்பை பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்கியதையடுத்து அத்துறை குறியீட்டெண் 1.45 சதவீதம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை குறியீட்டெண் 1.27 சதவீதமும், உலோகம் 1.16 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.05 சதவீதமும் உயர்ந்தன.
அதேசமயம், பொதுத் துறை மற்றும் எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண்கள் சரிவை சந்தித்தன. 
யெஸ் வங்கி பங்கின் விலை மூன்று வாரங்களில் இல்லாத அளவில் 7.19 சதவீதம் உயர்ந்தது. ஐடிசி, டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி, வேதாந்தா, சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுஸýகி, டாடா ஸ்டீல், எல் அண்டு டி, விப்ரோ, டிசிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை 2.77 சதவீதம் வரை உயர்ந்தன.
அதேசமயம், ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஏஷியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ பங்குகளின் விலை 1.37 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 317 புள்ளிகள் அதிகரித்து 35,774 புள்ளிகளில் நிலைத்தது. அக்டோபர் 3-க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவு இதுவாகும். 
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 81 புள்ளிகள் உயர்ந்து 10,763 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com