கார் உற்பத்தி: சர்வதேச களமாகிறது இந்தியா!

வளரும் நாடுகளில் கோலோச்ச விரும்பும் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களின் முதல் தேர்வு இந்தியா.
கார் உற்பத்தி: சர்வதேச களமாகிறது இந்தியா!

வளரும் நாடுகளில் கோலோச்ச விரும்பும் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களின் முதல் தேர்வு இந்தியா. சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக வேகமான பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானம் உயர்வு, நகரமயமாதல், மேற்கத்திய நவீன கலாசாரத்தின் தாக்கம்,  மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல சாதகமான அம்சங்கள் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் காந்தமாக மாறியுள்ளன.


உலகளவில் கார் விற்பனையில் இந்தியா நான்காவது மிகப் பெரிய சந்தையாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மோட்டார் வாகன துறை 7.1 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.

எதிர்கால வளர்ச்சியை கணித்து தெரிந்துள்ள சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கெனவே இந்திய சந்தைகளை வலம் வரத் தொடங்கி விட்டன. பெரும்பாலான நிறுவனங்கள் இங்கேயே ஆலைகளை அமைத்து வாகனங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கி விட்டன.

குறிப்பாக,  தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், வளைகுடா நாடுகள் ஆகியவற்றுக்கான வாகன ஏற்றுமதி முனையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் பணிகளில் அவை களமிறங்கி விட்டன. 
வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் வாகன சந்தையில் இந்தியாவை மூன்றாம் இடத்துக்கு கொண்டு வருவதே மத்திய அரசின் இலட்சியம். மேலும், உள்நாட்டு உற்பத்தியில் மோட்டார் வாகன துறை பங்களிப்பை 12 சதவீதமாக அதிகரிக்கவும், கூடுதலாக 6.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுமே அதன் கனவு. அதற்கேற்ற வகையில், பல்வேறு திட்டங்களை வகுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்துறையைப் பொருத்தவரையில், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாகனங்கள் உருவாக்கம், வடிவமைப்பு, தொழில்நுட்பம், எடை குறைந்த வாகனங்களை தயாரிப்பது ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்திய சந்தைகளை நன்கு உணர்ந்த பன்னாட்டு-உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் 2018-ஆம் ஆண்டின் ஒன்பது மாதங்களில் மட்டும் பல்வேறு நிறுவனங்கள் நவீன ரக தொழில்நுட்பங்களில் தங்களது புதிய  தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.மேலும், சில நிறுவனங்கள் தாங்கள் ஏற்கெனவே விற்பனை செய்து வரும் மாடல்களில் புதிதாக பல்வேறு வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.

ஹுண்டாய்-சான்ட்ரோ

ஹுண்டாய் நிறுவனம் அதன் பிரபலமான சான்ட்ரோ விற்பனையை கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே நிறுத்திக் கொண்டு விட்டது. இருப்பினும், இந்திய வாடிக்கையாளர்களிடையே அதற்குள்ள ஆதரவை கண்டு அவற்றின் விற்பனையை அக்டோபர் 23 முதல் தொடங்கியுள்ளது. 


அறிமுகத்துக்கு முன்பாகவே அந்த காருக்கான முன்பதிவு 25,000 தாண்டிவிட்டது என்பது அதற்கான வரவேற்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அடிப்படை மாடல்  ரூ.3.89 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5. 64 லட்சம் என்ற சலுகை விலையில் முதல் 50,000 வாடிக்கையாளர்களுக்கு சான்ட்ரோ விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இப்புதிய காரில் நான்கு சிலிண்டர் 1,086 சிசி பெட்ரோல் என்ஜின் இடம்பெறும். ஹுண்டாயின் முதல் ஏஎம்டி தொழில்நுட்பத்தை தாங்கி வரும் மாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான்ட்ரோ மீண்டும் களமிறங்குவதையொட்டி ஐ-10 உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தவுள்ளது.

இசுஸý-எம்யூ-எக்ஸ் 
ஜப்பானைச் சேர்ந்த இசுஸý நிறுவனம் எம்யூ-எக்ஸ் என்ற எஸ்யுவி காரை புதிய பொலிவுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஏற்கெனவே சர்வதேச சந்தைகளில் அதிக வரவேற்பைப் பெற்றதாகும். எல்இடி விலக்குகள், புதிய அலாய் வீல்கள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், தொடுதிரை பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இப்புதிய காரில் இடம்பெற்றுள்ளன. 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட இக்காரின் விலை ரூ.26.34 லட்சம் முதல் ரூ.28.31 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெயோட்டா பார்ச்சூன் காருக்கு இது கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மெர்சிடிஸ் பென்ஸ்


சொகுசு கார் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் மாடலில் உள் மற்றும் வெளிப்புற டிûஸன்களில் சிறிய மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஏஎம்ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு சிலிண்டர்களுடன் கூடிய  புதிய 2.0 லிட்டர் என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. சி220டி பிரைம், சி220 புராக்ரஸிவ், சி300 டி ஏஎம்ஜி லைன் மாடல்களின் விலை முறையே ரூ.40 லட்சம், ரூ.44.25 லட்சம், ரூ.48.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போக்ஸ்வேகன்-டிகுவான்

எம்கியூபி தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட டிகுவான் காரை போக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது.  2 லிட்டர் டிடிஐ என்ஜின், நான்கு சிலிண்டர் ஆயில் பர்னர், ஏழு வகையான தானியங்கி வேக அமைப்புகளை உள்ளடக்கிய இப்புதிய கார் இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கம்போர்ட்லைன் மாடலின் விலை ரூ.27.98 லட்சமாகவும், ஹைலைன் மாடலின் விலை ரூ.31.38 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டிகுவான் மாடல் கார் லிட்டருக்கு 17.06 கி.மீ. வரை தரக்கூடியது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோர்டு எண்டவர், ஹுண்டாய் சான்டா ஃபே ஆகியவற்றுக்கு போட்டியாகவே  போக்ஸ்வேகன் டிகுவான் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்கின்றனர் சந்தை வட்டாரத்தினர்.

பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் இந்திய சந்தைகளை கழுகு கண் கொண்டு கண்காணித்து வருகின்றன. அதன் எதிரொலியாகவே இதர நிறுவனங்களுக்கு போட்டியாக தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் ஒரு கணமும் தாமதிக்காமல் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், இந்திய சந்தைகளில் அந்நிறுவனங்கள் தனது பிடியை தளரவிடாமல் இருப்பதில் அதிக அக்கறை கொண்டு செயல்படுவது புலனாகிறது. இந்த நிலை தொடர்ந்தால், வரும் 2021-ஆம் ஆண்டுக்குள்ளாகவே உலகளவில் பயணிகள் வாகன சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்பதில் துளியும் ஐயமில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com