நீண்ட கால சேமிப்பு

பல மாதாந்திரச் செலவுகளுக்கு இடையில் சேமிப்புக்கும் கட்டாயமாக ஒரு சிறு தொகையையாவது ஒதுக்குபவர்கள் பலர் உள்ளனர்.
நீண்ட கால சேமிப்பு

பல மாதாந்திரச் செலவுகளுக்கு இடையில் சேமிப்புக்கும் கட்டாயமாக ஒரு சிறு தொகையையாவது ஒதுக்குபவர்கள் பலர் உள்ளனர். வருவாய்க்குள் செலவு செய்யும் இவர்கள், கடனை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவார்கள் என்றே கூறிவிடலாம். 

சேமிப்பு என்பது நமது எதிர்கால வருவாயை உறுதி செய்து கொள்வதற்கான வழிமுறை என்றால் மிகையல்ல. அதாவது முதுமைக் காலத்துக்கான இன்றைய சிறு முதலீடு.

மாத வருவாய் உள்ளவர்கள் சேமிப்பதற்கென்று பல வழிகள் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்க்கலாம். அதிக வட்டி வருவாய் என்ற கண்ணோட்டத்தில், வங்கி சேமிப்புக் கணக்கு வைத்து சிறு தொகை சேமிப்பதால் பயனில்லை. அதில் கிடைக்கும் வட்டித் தொகை மிகவும் குறைவு. நீண்ட கால அளவில், ஆயுள் காப்பீடு, அஞ்சலகத்தில் பி.பி.எஃப்., தனியார் சேம நல நிதிக் கணக்கு, பரஸ்பர நிதித் திட்டங்கள் போன்ற நமது சேமிப்புக்கு அதிகமான வட்டி வருவாய் ஈட்டித் தருகின்ற பல திட்டங்கள் உள்ளன.

சேமிப்புப் பழக்கத்தினால் மாத வருவாய் உள்ளவர்களுக்கு இரட்டை லாபம். இவர்களது சேமிப்புப் பழக்கம் எதிர்காலத் தேவைக்கு உதவுவதோடு, உடனடிப் பலனாக வருமான வரிச் சலுகையையும் அளிக்கிறது. எந்த சேமிப்புத் திட்டத்தின்படி நாம் சேமிக்கிறோமோ, அதைப் பொருத்து,  வருமான வரிச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வெவ்வேறு விகிதத்தில் வருமான வரிச் சலுகை பெறலாம். இதில் மிகப் பிரபலமான பிரிவு - 80-சி. இந்தப் பிரிவின் கீழ் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை சேமித்து, வருமான வரிச் சலுகை பெற முடியும். 

குடும்பத் தலைவர், அவரது மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால், அதன் பிரீமியம் தொகையை சேமிப்பாக கருதி வருமான வரி சட்டம் 80-சி பிரிவின் கீழ் சலுகை அளிக்கப்படுகிறது. 

  உங்கள் பிள்ளைகளின் பள்ளிக் கல்விக் கட்டணத் தொகைக்கும் இந்தப் பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை உண்டு. வருவாயை திட்டமிட்டு செலவு செய்து, நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்க இது வழிவகுக்கிறது. 

தபால் நிலையங்களிலும், பொதுத் துறை வங்கிகள் மூலமாகவும் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கு (பி.பி.எஃப்.) தொடங்கி அதில் சேமித்து வரலாம். அதுபோன்ற சிறந்த நீண்ட கால சேமிப்புத் திட்டம் வேறு எதுவுமே இல்லை. அஞ்சலக பி.பி.எஃப். திட்டத்தில் சேர வெறும் நூறு ரூபாய்தான் தேவை!  உங்கள் வசதியைப் பொருத்து, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். ஆண்டுக்கு ஆண்டு வசதிக்கு ஏற்ப உங்கள் சேமிப்புத் தொகையை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். தற்போது பி.பி.எஃப். திட்டத்தில் வட்டி விகிதம் 8 சதவீதம். இத்திட்டத்தின் கால அளவு 15 ஆண்டுகள். கூட்டு வட்டி முறையில், ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் முதலும் வட்டியும் திரண்டு,  நமது சேமிப்புக்கு நல்ல வருவாயை பி.பி.எஃப். திட்டம் அளிக்கிறது. அவசரத் தேவை எழும்பட்சத்தில், மூன்றாம் ஆண்டிலிருந்து,  அதுவரை சேமிக்கப்பட்ட தொகையிலிருந்து கடன் பெற முடியும். கணக்கு தொடங்கிய 7-ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட அளவு தொகையைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். பதினைந்து ஆண்டுகள் நிறைவடையும்போது, வரிப் பிடித்தம் எதுவுமின்றி மொத்த சேமிப்புத் தொகையை நாம் எடுத்துக் கொள்ளலாம். அல்லது, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சேமிப்புக்  கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம்.

நீண்ட காலமாக இருந்து வரும் மற்றொரு சேமிப்புத் திட்டம் தேசிய சேமிப்பு பத்திரங்கள் (நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் என்கிற என்.எஸ்.சி.). இது தபால் நிலையங்கள் வழியாகப் பெறக் கூடிய சேமிப்பு வழிமுறையாகும். இன்றைய அளவில் இதற்கு 8 சதவீத வட்டி. நூறு ரூபாய்க்கும் கூட தேசிய சேமிப்பு பத்திரம் பெற முடியும். என்.எஸ்.சி. சேமிப்புக்கு உச்ச வரம்புத் தொகை கிடையாது. இந்தப் பத்திரம் 5 ஆண்டுகளில் முதிர்வடையும்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கு முதலீட்டுடன் தொடர்புள்ள சேமிப்புத் திட்டங்கள் (இ.எல்.எஸ்.எஸ்.) கீழ் சேமிக்கும் தொகைக்கும் 80-சி பிரிவின் கீழ் வருமான வரி விலுக்கு உண்டு. பொதுவாக இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு காலம் மூன்றாண்டுகள் எனலாம். அத்திட்டத்தில் சேமிக்கும்போது, மூன்றாண்டுகள் நிறைவடையும் முன்னர் அதிலிருந்து விலக முடியாது. 

நமது சேமிப்புத் தொகை அரசுப் பத்திரங்கள், பங்குச் சந்தை என வெவ்வேறு முறைகளில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச் சந்தை, அரசு பத்திரங்களில் எந்த விகிதத்தில் நமது சேமிப்பை முதலீடு செய்ய வேண்டும் என்று நாமே தீர்மானித்து பரஸ்பர நிதி நிறுவனத்துக்குத் தெரிவிக்கலாம். இதில் அனுபவம் உள்ளவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

பெண் குழந்தையைப் பெற்றவர்கள், தங்கள் செல்வ மகளின் பெயரில் தொடங்கக் கூடிய மற்றொரு சேமிப்புத் திட்டம் "சுகன்யா சம்ருத்தி திட்டம்'. பெண் குழந்தை பிறந்த தேதி முதல் அந்தக் குழந்தை பத்து வயதை அடையும் வரையில் இத்திட்டத்தில் சேர இயலும். இதில் ஓராண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 சேமித்தாலும் போதும். பெண் 18 வயதை அடையும்போது, சேமித்துள்ள தொகையில் பாதியளவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

செல்வ மகள் 21 வயதை அடையும்போது சேமிப்புக் கணக்கை முடித்துக் கொண்டு சேமித்த தொகையை திரும்பப் பெறலாம். தற்போது இந்த திட்டத்திற்கான வட்டித் தொகை 8.5 சதவீதம். பெண் குழந்தையைப் பெற்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த திட்டம் இது. 

இவை நமது வருவாயிலிருந்து ஒரு தொகையை திட்டமிட்டு சேமிக்க வழி வகுக்கின்றன. நடுத்தர மக்களுக்கு குழப்பம் எதுவுமின்றி நேரடியாக ரொக்கத்தை சேமிக்கும் வழிமுறைகள் இவை. இது தவிர, பரஸ்பர நிதி, பங்குச் சந்தை முதலீடு போன்ற சேமிப்பு வழிமுறைகளும் உள்ளன. பங்குச் சந்தை முதலீட்டுக்கு சொந்த அனுபவமும், அல்லது நம்பகமான ஆலோசனைகள் இருத்தல் வேண்டும்.

இந்த சேமிப்புகள் எதிர்காலத்துக்கான வருவாயாக இருப்பதுடன், வருமான வரி விலக்கையும் பெற்றுத் தருகின்றன. எனினும், சேமிப்பு என்பது நமது முதுமைக் காலத்துக்கான பாதுகாப்பு என்பதை உணர்ந்து, நீண்ட கால அளவிலான சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- டி.எஸ். ஆர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com