வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

உற்பத்தி பாதிப்பால் ஏலக்காய் விலை உயர்வு

DIN | Published: 10th September 2018 03:00 AM

கேரளத்தில் பலத்த மழையால் ஏலக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகை கால விலை உயர்வை எதிர்பார்த்து ஏலக்காய் வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் வாசனைப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில், அந்த மாவட்டத்தில் உள்ள குமுளி, புத்தடி மற்றும் தேனி மாவட்டத்தில் போடி ஆகிய இடங்களில் உள்ள 12 ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள் மூலம் "இ}டிரேடிங்' முறையில் விற்பனை செய்யப்படுகிறது. கேரளத்தில் விளையும் ஏலக்காய் வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், சவூதி அரேபியா, துபை, குவைத் போன்ற அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
 மழையால் பாதிப்பு
 கேரளத்தில் அண்மையில் பெய்த பலத்த பருவ மழையால் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பு ஏலக்காய் தோட்டங்களில் செடிகள் மற்றும் காய்கள் அழுகி சேதமடைந்தன.
 இதனால் கடந்த ஜூலை மாதம் ஏலக்காய் தோட்டங்களில் தொடங்கிய முதல் காய் எடுப்பு பருவத்தில், வழக்கத்தை விட 70 சதவீதம் குறைவாக மகசூல் கிடைத்தது.
 இந்நிலையில், தற்போது கேரளத்தில் மழை ஓய்ந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இதையடுத்து, வெயிலால் ஏலக்காய் செடிகளில் காய்கள் கருகியும், உதிர்ந்தும் மகசூல் மேலும் பாதிக்கும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
 வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 6 அல்லது 7 முறை கேரள ஏலக்காய் தோட்டங்களில் காய் எடுப்பு நடைபெறுவது வழக்கம். தற்போது இரண்டாம் சுற்று காய் எடுப்பு பருவம் தொடங்கியுள்ளது. இந்த காய் எடுப்பில் வழக்கமாக ஏக்கருக்கு சுமார் 150 கிலோ ஏலக்காய் கிடைக்கும். ஆனால் தற்போது ஏக்கருக்கு 50 கிலோவிற்கும் குறைவாகவே அறுவடை நடைபெற்றுள்ளது. மேலும், இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பால் ஏலக்காய் தோட்டங்களில் 3 }ஆவது சுற்றுக்கு மேல் காய் எடுப்பிற்கு வாய்ப்பு இல்லை என்று விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.
 ஏலக்காய் தோட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தாலும், ஏலக்காய் வர்த்தகம் கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. ஏலக்காய் ஏல விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் ஏலக்காய் அளவு கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், வியாபாரிகள், தாங்கள் கொள்முதல் செய்த ஏலக்காய்களை மறு விற்பனைக்கு அனுப்பாமல், தரம் பிரித்தும், சுத்தப்படுத்தியும் மீண்டும் ஏலக்காய் விற்பனை நிலையத்தில் விற்பனைக்குப் பதிவு செய்கின்றனர்.
 இதனால் கடந்த சில நாள்களாக ஏலக்காய் விற்பனை நிலையங்களில் தினமும் சாராசரி சுமார் ஒரு லட்சம் கிலோவிற்கும் மேல் ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதனால் ஏலக்காய் விலை இரு மடங்கு உயர்ந்து, தற்போது கிலோவுக்கு ரூ.2,227-ஆக உள்ளது.
 விலை சீராக உயர்வு
 ஏலக்காய் தோட்டங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இதனால் பண்டிகை காலத் தேவை மற்றும் விலை உயர்வை உத்தேசித்து, ஏலக்காய் விலை சீராக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும், வரும் மாதங்களில் ஏலக்காய் விலை புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்ப்பு உள்ளதால், வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்த ஏலக்காய்களை இருப்பு வைத்தும், மறு விற்பனைக்குப் பதிவு செய்தும் சீரான விலை உயர்வை உறுதி செய்து வருகின்றனர்.
 ஏலக்காய் விலை உயர்வால் ஏற்றுமதி முகவர்கள் தற்போது தேவையான அளவு மட்டும் ஏலக்காய்களை கொள்முதல் செய்கின்றனர். ஆனால், வரும் மாதங்களில் ஏலக்காய் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால், தங்களது கொள்முதலையும் அதிகரித்து ஏலக்காய்களை இருப்பு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி முகவர்கள் கூறுகின்றனர்.
 ஏலக்காய் விலை நிலவரம்
 வண்டமேடு, மாஸ் எண்டர்பிரைசஸ் ஏல விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை 1,50,328 கிலோ ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏலக்காய் சராசரி விலை கிலோவுக்கு ரூ.1,323.66-ஆகவும், அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.2,227 }ஆகவும் இருந்தது.
 -கோ. ராஜன்
 
 

More from the section

ஜெட் ஏர்வேஸை வாங்குவது குறித்து டாடா சன்ஸ் இன்று முடிவு?
இந்தியாவின் ஏற்றுமதி 17.86% அதிகரிப்பு
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஜிஐசி பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
3 புதிய மாடல்களில் மீண்டும் ஜாவா பைக்
வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.40 கோடி