புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிவு

DIN | Published: 12th September 2018 12:58 AM


சாதகமற்ற நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 509 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவில் சரிவைக் கண்டது.
அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு சர்வதேச சந்தைகளை பதம் பார்த்துள்ளது. இந்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவையும் இந்தியப் பங்குச் சந்தைகளை பாதிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தன. பல்வேறு சாதகமற்ற நிலவரங்களைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். 
இதையடுத்து, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை குறியீட்டெண் 2.25 சதவீதமும், தொலைத் தொடர்பு 2.20 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.78 சதவீதமும், உள்கட்டமைப்பு 1.71 சதவீதமும், உலோகம் 1.66 சதவீதமும், ஆரோக்கிய பராமரிப்பு 1.59 சதவீதமும், மோட்டார் வாகன துறை குறியீட்டெண் 1.52 சதவீதமும் சரிவடைந்தன.
மோட்டார் வாகன விற்பனை சரிவடைந்ததாக சியாம் அமைப்பு தெரிவித்ததையடுத்து, அத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகளின் விலை 3 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. மாருதி சுஸுகி பங்கின் விலை 1.56 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 1.24 சதவீதமும் குறைந்தன. இவைதவிர, ஹெச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல், யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளும் 3 சதவீதம் வரையில் விலை குறைந்தன.
அதேசமயம், இன்ஃபோசிஸ் பங்குளுக்கான தேவை அதிகரித்ததையடுத்து அவற்றின் விலை 0.31 சதவீதம் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிவடைந்து 37,413 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 11,287 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

More from the section

சாம்சங்கின் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்
3 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு உயர்வு
சென்செக்ஸ் 347 புள்ளிகள் அதிகரிப்பு
ஏர் இந்தியா-எல்ஓடி போலிஸ் ஏர்லைன்ஸ் கூட்டு
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு தேவையான மூலதனத்தை உறுதி செய்ய நடவடிக்கை: ஜேட்லி