பங்குச் சந்தையில் மூன்றாவது வாரமாக தொடர் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளன. இதையடுத்து, சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 11,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன.
பங்குச் சந்தையில் மூன்றாவது வாரமாக தொடர் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளன. இதையடுத்து, சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 11,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன.
 சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகளின் வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட நிகழ்வுகள் அடுத்தடுத்து பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த வார வர்த்தகத்திலும் மந்த நிலை தொடர இவையே அடிப்படை காரணங்களாகின.
 சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது. ஏற்கெனவே, சீன இறக்குமதிப் பொருள்களுக்கு இரு முறை வரி விதிப்பை அமல்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த திடீர் கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பு சீனாவின் ஏற்றுமதி நடவடிக்கைக்கு பேரிடியாக அமைந்தது.
 அமெரிக்காவின் இந்த செயலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று சீனாவும் சூளுரைத்துள்ளது. இது உலக பங்குச் சந்தைகள் மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
 கடந்த வாரத்தில் நான்கு நாள்கள் நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குகளை லாப நோக்கு கருதி விற்பனை செய்வதிலேயே முதலீட்டாளர்கள் அதிக முனைப்பு காட்டினர்.
 சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் பதற்றம் அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் காணப்படாத அளவில் வரலாற்றில் முதல் முறையாக 72.99-ஆக வீழ்ச்சியடைந்தது ஆகியவை கடந்த வார வர்த்தகத்தில் முதலீட்டாளர்களை மிகவும் அச்சுறுத்துபவையாக இருந்தன.
 வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களை மிகவும் பீதிக்குள்ளாக்கியது. முதலீட்டாளர்களின் நடவடிக்கையால் நிதி துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்ததையடுத்து, சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. இது, பங்கு முதலீட்டாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் பங்கு சந்தைகள் சகஜ நிலைமைக்கு திரும்பிய பிறகே முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்தனர்.
 கடந்த வாரத்தில் மட்டும் அந்நிய நிதி நிறுவனங்கள் சாதகமற்ற சூழ்நிலையை கருதி, ரூ.2,433.15 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
 பங்குச் சந்தைகளில் வங்கி துறை குறியீட்டெண் 6.27 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 6.14 சதவீதமும் அதிகபட்ச சரிவைக் கண்டன. இதையடுத்து, ஐபிஓ 5.88 சதவீதமும், மின்சாரம் 4.23 சதவீதமும், மோட்டார் வாகனம் 4.01 சதவீதமும், ஆரோக்கிய பராமரிப்பு 3.99 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 3.12 சதவீதமும், பொதுத் துறை 2.68 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 2.67 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 2.17 சதவீதமும், தொழில்நுட்பம் 1.68 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 1.13 சதவீதமும், உலோக துறை குறியீட்டெண் 0.96 சதவீதம் சரிவடைந்தன.
 அதேசமயம், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 1.17 சதவீதம் உயர்ந்தது.
 சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில் 25 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டன.
 சென்செக்ஸ் பட்டியலில் யெஸ் வங்கி பங்கின் விலை 29.73 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து டாடா மோட்டார்டிவிஆர் 8.40 சதவீதமும், எஸ்பிஐஎன் 7.01 சதவீதமும், மாருதி 6.87 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 6.10 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 5.79 சதவீதமும், இண்டஸ்இன்ட் வங்கி 5.97 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி 4.81 சதவீதமும், கோட்டக் வங்கி 4.78 சதவீதமும், அதானி போர்ட்ஸ் பங்கின் விலை 4.75 சதவீதமும் குறைந்தன.
 அதேசமயம், விப்ரோ 2.18 சதவீதமும், டிசிஎஸ் 1.96 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்கின் விலை 1.50 சதவீதமும் அதிகரித்தன.
 மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,249 புள்ளிகள் சரிந்து 36,841 புள்ளிகளில் நிலைபெற்றது. இதற்கு முந்தைய இரு வாரங்களில் சென்செக்ஸ் 554 புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.14,522.45 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 372 புள்ளிகள் குறைந்து 11,143 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் ரூ.1,60,416.94 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com