தேர்தல் ஆண்டுகளில்தான் ரூபாய் மதிப்பு 19% வரை வீழ்ச்சி!

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இந்திய பங்குச் சந்தைகள் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் புதிய புதிய உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், செப்டம்பரில் இதுவரை கடும் சரிவைக் கண்டு வருகிறது.
தேர்தல் ஆண்டுகளில்தான் ரூபாய் மதிப்பு 19% வரை வீழ்ச்சி!

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இந்திய பங்குச் சந்தைகள் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் புதிய புதிய உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், செப்டம்பரில் இதுவரை கடும் சரிவைக் கண்டு வருகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததும் ஒரு முக்கியக் காரணம் என பங்குச் சந்தை வல்லுநர்கள் கூறி வருகின்றனர். மேலும், டாலர் மட்டுமின்றி யூரோ, பவுண்டுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சற்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
 அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.
 ஆனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இந்த ஆண்டு மட்டுமல்லாமல், 1984-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பொதுத் தேர்தல் ஆண்டிலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பதுதான் நிதர்சன உண்மை என்பதை புளூம்பெர்க் புள்ளி விவரத்திலிருந்து அறிய முடிகிறது.
 1984 முதல் ஒவ்வொரு தேர்தல் ஆண்டுகளிலும் இந்த வீழ்ச்சி, குறைந்தபட்சமாக 2.7% முதல் அதிகபட்சமாக 19.2% வரை ஏற்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. ஆனால், 2004 மக்களவைத் தேர்தல் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. மாறாக 6.4% ஏற்றம் கண்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு மட்டும்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கருதுவது முற்றிலும் தவறான தகவல் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 12.5% வீழ்ச்சி கண்டு 72.975 வரை சென்றது. அதன் பிறகு கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டுள்ளது.
 கருப்புப்பணத்தை ஒழிக்க, 2016 நவம்பரில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, வங்கிகளுக்குப் பணம் திரும்ப வந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
 ஆனால், புளூம்பெர்க் புள்ளி விவரத் தகவலை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒவ்வொரு தேர்தல் ஆண்டிலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. 1984 முதல் 2014 வரையிலான காலத்தில் 2004 தவிர்த்து மற்ற 5 தேர்தல் ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு இரட்டை இலக்க அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 2009 தேர்தல் ஆண்டில் அதிகபட்சமாக 19.2% வீழ்ச்சி கண்டது. ஆனால், 2004 தேர்தல் ஆண்டில் மட்டும்தான் ரூபாயின் மதிப்பு 6.4% ஏற்றம் பெற்றது. அதே சமயம் 1999 நவம்பர் தேர்தல் ஆண்டில் 2.7%தான் வீழ்ச்சி ஏற்பட்டது. மற்ற ஆண்டுகளில் 5-19% வரை வீழ்ச்சி ஏற்பட்டது என புளூம்பெர்க் புள்ளிவிவரம் கூறுகிறது.
 இது ஒரு புறம் இருக்க சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை எகிறி வருவதும், நம் நாட்டில் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதும், ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படுத்துவது இயல்பு என்கின்றனர் வல்லுநர்கள்.
 இதன் மூலம் தற்போதைய ஆட்சியில்தான் ரூபாய் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்துள்ளதாக கருத முடியாது. முந்தைய ஆட்சியாளர்களின் தேர்தல் ஆண்டுகளிலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பதே நிதர்சன உண்மை என புளூம்பெர்க் புள்ளி விவரத் தகவலில் இருந்து அறிய முடிகிறது.


- எம்எஸ்ஜி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com