பிஎஸ்யு வங்கிப் பங்குகளை பதம் பார்த்த இணைப்பு நடவடிக்கை அறிவிப்பு!

கடந்த ஆண்டு மத்தியில் இருந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத் துறை நிறுவன (பிஎஸ்யு) பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தன.
பிஎஸ்யு வங்கிப் பங்குகளை பதம் பார்த்த இணைப்பு நடவடிக்கை அறிவிப்பு!

கடந்த ஆண்டு மத்தியில் இருந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத் துறை நிறுவன (பிஎஸ்யு) பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தன. வாராக் கடன் வசூல் பிரச்னை தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கிடுக்கிப்பிடி போட்டது இதற்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டது. அப்போது பெரும்பாலான பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை தங்களது 52 வார குறைந்தபட்ச அளவை முறியடித்து கீழே சென்றது.
 அதன் பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத் துறை வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி மூலதனத்தை ரிசர்வ் வங்கி விடுவித்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக சரிவிலிருந்து வந்த பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை ஓரளவு ஏற்றம் கண்டது. அவை நேர் கோட்டில் சென்று கொண்டிருந்ததால் முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்று பங்குச் சந்தை வல்லுநர்களும், ஆலோசகர்களும் பரிந்துரைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிந்துரைத்தது போலவே பொதுத் துறை வங்கிப் பங்குகள் செப்டம்பர் 15 வரை காளையின் பிடியில் இருந்து வந்தது.
 இந்நிலையில்தான் பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளும் இணைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வாரம் அறிவித்தார். இந்த அறிவிப்பு பங்குச் சந்தையில் பொதுத் துறை வங்கிப் பங்குகளில் கடும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வர்த்தக நிறைவு நாளான வெள்ளிக்கிழமை வரையிலும் பொதுத் துறை வங்கிப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஜேட்லியின் வங்கி இணைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா வங்கிப் பங்கின் விலை கடந்த 2004 மே மாதத்துக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 16% வீழ்ச்சி கண்டது. இதனால், ஒரே நாளில் முக்கிய பொதுத் துறை வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்யு பேங்க் இண்டெக்ஸ் ஒரே நாளில் 5.5% வீழ்ச்சி கண்டது. இது 2016-க்குப் பிறகு ஒரே நாளில் கண்ட மிகப் பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
 மேலும், விஜயா பேங்க் 6% சரிவைச் சந்தித்தது. இதேபோன்று மற்ற பொதுத் துறை வங்கிப் பங்குகளான கனரா வங்கி (-7%), யூனியன் வங்கி (-9%), பிஎன்பி (4.5%) ஆகியவற்றின் விலையும் ஒரே நாளில் அதிக அளவு வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால், தேனா வங்கிப் பங்கின் விலை ரூ.20 வரை உயர்ந்து உச்சபட்ச உறை (அப்பர் ப்ரீஸ்) நிலையை எட்டியது.
 மேலும், முன்னணி பொதுத் துறை வங்கிகளான கனரா வங்கி, யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றுடன் சில குறிப்பிட்ட சிறிய பொதுத்துறை வங்கிகள் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பங்குச் சந்தையில் பரவி வருகிறது. இதனால், இந்த வங்கிப் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் அதிக அளவு வீழ்ச்சியை சந்தித்தன. மேலும், புரோக்கிங் நிறுவனங்களான கிரெடிட் சுவிஸ், ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் உள்ளிட்டவை பேங்க் ஆஃப் பரோடாவின் மதிப்பீட்டைக் குறைத்து அறிவித்துள்ளது. இதன் தாக்கம் அந்த வங்கிப் பங்கில் எதிரொலித்துள்ளது.
 இச்சூழ்நிலையில், எஸ்பிஐ, ஐடிபிஐ, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க், ஓரியண்டல் பேங்க், அலகாபாத் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய 12 பொதுத் துறை வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்யு வங்கிக் குறியீடு (பிஎஸ்யு பேங்க் இன்டெக்ஸ்), கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த ஒரு மாதத்தில் மட்டும் 14% வீழ்ச்சியை சந்தித்தது. இதே போல இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ள வங்கிப் பங்குகளும் ஒரு மாதத்தில் 8 முதல் 26% வரை வீழ்ச்சி கண்டன. இதில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி அதிகபட்சமாக முறையே 26% மற்றும் 22% வீழ்ச்சியை சந்தித்தன. கடந்த வார இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை மட்டும் வங்கிப் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், எஸ்பிஐ, ஐடிபிஐ, இந்தியன் வங்கி ஆகிய மூன்றைத் தவிர்த்து இந்தப் பட்டியலில் உள்ள மற்ற அனைத்துப் பங்குகளின் விலை கடந்த வார இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த ஓராண்டில் 30-50% வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com