ஜெராக்ஸ் தொழில் லாபம் ஈட்டுவது எப்போது? 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாத கட்டணம்

பள்ளி, கல்லூரி மாணவர் உள்பட அனைத்துப் பிரிவு மக்கள் இடையே இன்று ஏதேனும் ஒரு வகையில் ஜெராக்ஸ் பயன்பாடு என்பது அத்தியாவசியமாகிவிட்டது.
ஜெராக்ஸ் தொழில் லாபம் ஈட்டுவது எப்போது? 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாத கட்டணம்

பள்ளி, கல்லூரி மாணவர் உள்பட அனைத்துப் பிரிவு மக்கள் இடையே இன்று ஏதேனும் ஒரு வகையில் ஜெராக்ஸ் பயன்பாடு என்பது அத்தியாவசியமாகிவிட்டது. இதனால் இந்தத் தொழிலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருப்பினும் இந்தத் தொழிலை மட்டும் நம்பி தொழில்புரிவோர், தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் தற்போது மிக மிகக் குறைவாகவே உள்ளது.
 1980களில் ஜெராக்ஸ் கடை வைத்தவர்கள் நல்ல லாபம் ஈட்டினர். அப்போதே ஒரு பக்கம் ஜெராக்ஸ் எடுக்க ஒரு ரூபாய் கட்டணம். லிக்விட் ஜெராக்ஸ், பவுடர் ஜெராக்ஸ் என இருவகைகளில் தொழில் நடைபெற்றது. நாளடைவில் பலரும் ஜெராக்ஸ் தொழிலில் இறங்கினர். தேவைக்கு மேல் கடைகள் பெருகப் பெருக தொழில் நலிவடையத் தொடங்கியது. செல்லிடப்பேசி வளர்ச்சி பெற ஆரம்பித்ததால், எஸ்டிடி பூத்துகளும் காற்றாடத் தொடங்கின. ஜெராக்ஸ் தொழிலில் காலத்துக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. இதனால் யாருக்குமே போதிய வருமானம் கிடைக்கவில்லை.
 இதற்கிடையே இத்தொழிலில் இறங்கிய புதிய தலைமுறையினர், ஒரு பக்கம் ஒரு ரூபாய் என்றிருந்ததை, படிப்படியாக பக்கத்துக்கு 75காசு, 50காசு, 45காசு, 35காசு என குறைத்து, இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் தொழிலை தாங்களே அழித்துக்கொண்டு வருகின்றனர். இதனால் ஜெராக்ஸ் கடை எப்போதும் கூட்டம் நிரம்பிக் காணப்படும். ஆனால் பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு பார்த்தால் லாபம் இருக்காது. பேப்பர் விலையே 40காசு என்ற நிலையில், எதையும் தாங்கும் சக்தி உள்ளவர்களே இத்தொழிலை தொடர்ந்து வருகின்றனர்.
 சுமார் 40 ஆண்டுகளாக ஜெராக்ஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியவில்லை. தொழில் என்றால் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி இருக்க வேண்டும். லாபம் கிடைக்க வேண்டும். ஆனால் இந்தத் தொழிலிலோ கடந்த 40 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை.
 இதுகுறித்து ஆலங்குளத்தைச் சேர்ந்த, ஏற்கெனவே ஜெராக்ஸ் தொழிலில் ஈடுபட்டு, தற்போது மாற்றுத் தொழில் செய்து வரும் பி.நாகராஜன் கூறியது:
 தேவையே இல்லாத இடங்களில் ஜெராக்ஸ் கடை வைப்பதால், பல கடைகள் நஷ்டமடைந்துள்ளன. ஜெராக்ஸ் மெஷினை பொருத்தஅளவில், "ரீசேல் வேல்யூ' கிடையாது. இதனால் சில மாதங்கள் மட்டுமே தொழிலை நடத்திவிட்டு, நஷ்டம் என மெஷினை விற்கப்போனால் அதன் விலை கணிசமாக குறைந்து, மேலும் நஷ்டத்தையே உருவாக்கும்.
 நான் இந்த தொழிலில் ஈடுபட்ட காலத்தில், லைசென்ஸ், ரேஷன் கார்டு, சான்றிதழ், பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் போன்ற சிலவற்றைத் தான் ஜெராக்ஸ் எடுப்பர். இன்றோ, புராஜெக்ட் ஒர்க் என்று பக்கம் பக்கமாக ஜெராக்ஸ் எடுக்கும் சூழல் உள்ளது. எனவே இப்போதும் இது லாபகரமான தொழில்தான்.
 ஆனால் தொழில் செய்யும் போது, பண சுழற்சி இருந்தால் போதும் என எண்ணி, போட்டி போட்டுக்கொண்டு கட்டணத்தை குறைக்காமல், தொழிலில் லாபமும் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில், அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணத்தை உயர்த்தி தொழில் செய்ய வேண்டும். நியாயமான விலை ஏற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
 ஜெராக்ஸ் சாதாரண மெஷின் ரூ.35 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கடைகளில் ரூ.3 லட்சம் வரையிலான மெஷின்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஜெராக்ஸ் மெஷின் வாடகைக்கும், லீஸýக்கும் கொடுக்கப்படுகிறது. புதிதாக மெஷின் வாங்க விரும்புகிறவர்கள் மாதத் தவணையிலும் பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.
 - வை. ராமச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com