ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ்... அமேசானுக்கு காத்திருக்கும் சவால்!

ரிலையன்ஸ் குழுமத்தின் 41-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் அக்குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்பு ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வரும் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட
 ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ்... அமேசானுக்கு காத்திருக்கும் சவால்!

ரிலையன்ஸ் குழுமத்தின் 41-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் அக்குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்பு ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வரும் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. 
ரிலையன்ஸ் நிறுவனமும் ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கப் போவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புதான் அந்த சவால்.
சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது வளர்ச்சிக்கு ஒரு பக்கம் தடையாக இருந்தபோதிலும், வர்த்தக ஜாம்பவான்கள் இந்தியாவை குறிவைப்பதற்கு முக்கிய காரணமாகியுள்ளது.
இந்தியாவில் வாங்கும் சக்தி அபரிமிதமாக  இருப்பதை உணர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு கடை விரிக்க போட்டி போடுகின்றன. இந்தியாவில் வணிகம் செய்யாமல் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்த   அமேசான், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கெனவே களமிறங்கி விட்டன.
தற்போதைய நிலையில், இந்திய ஆன்லைன் வர்த்தக சந்தையின் மதிப்பு ரூ.2.29 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துறையில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை கருத்தில் கொண்டு தற்போது ரிலையன்ஸ் குழுமமும் இதில் களமிறங்குவதாக அறிவித்துள்ளது ஏற்கெனவே போட்டியில் இருக்கும் அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு துறை என்றாலும் அதில் தடாலடியாக இறங்கி சாதிப்பதைத்தான் ரிலையன்ஸ் வழக்கமாக கொண்டுள்ளது. அப்படித்தான் தொலைத் தொடர்பு துறையிலும் ஜியோ நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் கால் பதித்தது. தொடக்கத்தில் ஜியோ சற்று பின்னடைவுகளை சந்தித்தாலும், தற்போது ஒரு காலாண்டிலேயே  ரூ.1,000 கோடி அளவுக்கு  லாபம் ஈட்டும் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே கோடிக் கணக்கில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது நிறுவனங்களுக்கு வெறும் கனவாக உள்ள சூழ்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே 28 கோடி வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்த்து ஜியோ சாதனை படைத்துள்ளது. 
தற்போது அதே உற்சாகத்துடன்,   ஆன்லைன் வர்த்தக துறையிலும் களமிறங்கவுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இது, இத்துறையில் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ரீடெயிலுக்கு தற்சமயம் நாடு தழுவிய அளவில் உள்ள 6,500 நகரங்களில் 10,000 விற்பனை மையங்கள் உள்ளன. இது அந்நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் தடம் பதிப்பதற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. 
ஏற்கெனவே லாபகரமாக இயங்கி வரும் ரிலையன்ஸ் ரீடெயிலையும், ஜியோவையும், ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்து ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குஜராத்தில் மட்டும் உள்ள 12 லட்சம் சிறு வணிகர்கள் பயன்பெறுவர் என முகேஷ் அம்பானி கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மட்டும் அத்தனை லட்சம் வணிகர்கள் பயனடைவர் என்றால் நாடு முழுக்க உள்ள கோடிக்கணக்கான சிறு வணிகர்களின் வாழ்க்கையில் ரிலையன்ஸ் வரவு மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
ஆன்லைன் வர்த்தக நெறிமுறைகளை மீறி அமேசான், ஃபிளிப்கார்ட் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இதனால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி, ஒரு குறிப்பிட்ட பொருள் எங்களது வலைதளத்தில்தான் கிடைக்கும் என்று விளம்பரம் செய்யக்கூடாது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கவர்ச்சிகர விலையில் விற்பனை என்று விளம்பரம் செய்யக்கூடாது,  தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கும்போது வாடிக்கையாளரிடம் பாரபட்சம் காட்டக் கூடாது, ஒரே விற்பனையாளரிடமிருந்து 25 சதவீதத்துக்கும் மேல் பொருள்களை கொள்முதல் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு  அறிவித்துள்ளது. இது, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. 
மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளால், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில்,  ஏற்கெனவே  வலுவான அடித்தளத்தைக்  கொண்டுள்ள உள்நாட்டைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமம் ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்குவது சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களை கவர ரிலையன்ஸ் பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்த போட்டியை எதிர்கொள்வதில், அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு கடும் சவாலாகவே இருக்கும்.  
நடப்பாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ஆன்லைன் வர்த்தகத்தை ரிலையன்ஸ் தொடங்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில்  உள்ளூர் நிறுவனத்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஓரம் கட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com