அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணங்களும், தீர்வுகளும்..!

உலக அளவில் வறுமையை ஒழிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபம், இந்தியாவின் பொருளாதார நிலவரம் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் உண்மையில் அதிர
அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணங்களும், தீர்வுகளும்..!

உலக அளவில் வறுமையை ஒழிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபம், இந்தியாவின் பொருளாதார நிலவரம் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் உண்மையில் அதிர வைப்பவைகளாக உள்ளன.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் வசிக்கும் 10 சதவீத மக்களிடம் நாட்டின் 77.4 சதவீத சொத்துகள் குவிந்துள்ளன.

அதிலும், 51.53 சதவீத சொத்துகள், அதாவது நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட சொத்து வெறும் 1 சதவிகிதத்தினரிடம் குவிந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது!

கடந்த ஆண்டில் மட்டும் நாட்டின் ஒரு சதவீத மக்களின் சொத்து மதிப்பு 39  சதவீதம் அதிகரித்திருக்கிறது. எஞ்சிய மக்களின் சொத்து மதிப்போ வெறும் 3 சதவீதம்தான் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பெரும்பான்மையான மக்களிடம் - ஏறத்தாழ 60 சதவீதத்தினர் - நாட்டின் சொத்து மதிப்பில் வெறும் 4.8 சதவீதம்தான் உள்ளதாக ஆக்ஸ்ஃபம் அறிக்கை தெரிவிக்கிறது.

அதுமட்டுமன்றி, நாட்டின் மிகப் பெரிய 9 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும், இந்திய மக்கள் தொகையின் 50 சதவீதத்தினரின் சொத்துக்கு இணையாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இப்படி மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது, கடந்த ஆண்டு மட்டும் நடந்த நிகழ்வல்ல.

ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.

முந்தைய 2017-ஆம் ஆண்டின் ஆக்ஸ்ஃபம் அறிக்கையிலும் பணக்காரர்கள் - ஏழைகள் இடையிலான பொருளாதார இடைவெளி மிக அதிகமாகத்தான் காணப்படுகிறது.

அந்த ஆண்டில், நாட்டின் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் 73 சதவீத சொத்துகளைக் கைவசம் வைத்திருந்தனர். ஏழ்மை நிலையைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பு வெறும் 1 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது.

இப்படி பொருளாதார ஏற்றத்தாழ்வு காலம்  காலமாக அதிகரித்து வருவது இந்தியாவில் மட்டும் நடப்பதல்ல. உலகின் முன்னேறிய, முன்னேறிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளிலும் இந்த ஏற்றத்தாழ்வுகளை கண்கூடாகக் காண முடியும்.

இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்னவென்று கேட்டால், அதற்கு நிபுணர்கள் பல்வேறு பதில்களைத் தருகின்றனர்.

பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி அதிகரித்து வருவதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், ஒவ்வொரு துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்குமான ஊதியங்களில் வித்தியாசம் அதிகரித்து வருவதைத்தான்.

அதிலும், கடந்த 15 ஆண்டுகளில் அந்த இடைவெளி வெகுவாக அதிகரித்து வருவதை கண்கூடாகக் காண முடியும். குறிப்பாகச் சொல்லப்போனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்த 2004-05 ஆண்டுகளில்தான் இந்தப் போக்கு ஆரம்பித்தது.

பிற துறைகளைச் சேர்ந்தவர்களின் ஊதியத்தோடு ஒப்பிடுகையில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களின் ஊதியம் பல மடங்காக இருந்தது. அந்த இடைவெளி மேலும் மேலும் அதிகரித்து வருகிறதே தவிர, அது குறையும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

அதேபோல், அதிக வருவாய் கொண்டவர்களைச் சார்ந்து நடைபெறும் தொழில்களும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. ஆனால், குறைந்த வருவாய் கொண்ட சாமானியர்களைச் சார்ந்த தொழில்கள் ஆமை வேகத்தில்தான் வளர்ச்சியடைந்து வருகின்றன. வீடு மனை வணிகம் போன்ற துறைகளும் இந்த இடைவேளியை அதிகரித்து வருகின்றன.

பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள  இடைவெளி பெருநகரங்களில் மிக அதிகமாக இருப்பதற்கும், கிராமங்களில் மிகக் குறைவாக இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது.

துறைவாரியான ஏற்றத்தாழ்வுகள் ஒருபுறமிருக்க, முறைசார் பணியாளர்களுக்கும், முறைசாராத தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்திலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

அலுவலகத்தில் பணியாற்றும் நபருக்கு கிடைக்கும் ஊதிய உயர்வைப் போல, அன்றாட கூலித் தொழிலாளியின் ஊதியம் உயர்த்தப்படுவதில்லை.

நன்மையா? தீமையா?

பல்வேறு காரணங்களால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், அது நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மையா? அல்லது தீமையா? என்று கேள்வி எழுப்புவோரும் உள்ளனர். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, பொருளாதார நிபுணர்கள் நீண்ட காலமாகவே எதிரெதிர் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்பது ஒரு வகையில் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது என்பது ஒரு தரப்பினரின் வாதமாக உள்ளது.

எந்த ஒரு வளரும் நாட்டிலும், குறிப்பிட்ட சதவீதத்தினரிடம் அதிக சொத்துக்கள் சேர்வது தவிர்க்க முடியாதது; இயல்பானது என்கிறார்கள் அவர்கள்.

இதன் காரணமாக, ஒரு தரப்பில் தொழில் முனைவோரின் பலம் அதிகரிப்பதாகவும், மற்றொரு தரப்பில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மனித வளம் பெருகுவதாகவும் கூறும் அவர்கள், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்கிறார்கள். ஆனால், பொருளாதார நிபுணர்களில் மற்றொரு தரப்பினரோ இந்தக் கருத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதால் காலப்போக்கில் அதிகார வர்க்கமும், அவர்கள் அடக்கப்படுகிற சமுதாயமும் உருவாகும்; அதனால் ஒரு நிலைக்கு மேல் புரட்சிகள் வெடித்து சமுதாய சீர்குலைவு ஏற்படும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

எப்படி இருந்தாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டே ஆக வேண்டும் என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு சர்வதேச நிதியத்தின் நிபுணர்கள் பல்வேறு தீர்வுகளை முன்வைக்கின்றனர்.

அவற்றில் ஒன்று, விவசாய உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகும். இந்தியாவின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கான முறைப்படுத்தப்பட்ட சந்தை இல்லாத காரணத்தால் அவர்களால் அந்தத் தொழிலில் இருந்து பூரண லாபம் பெற முடிவதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தினால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறையும் என்று அவர்கள் யோசனை கூறுகிறார்கள்.

அதுமட்டுமன்றி, அடிநிலைத் தொழிலாளர்கள் அதிகம் சார்ந்திருக்கும் துறைகளில் அதிக முதலீடுகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தி மேம்படச் செய்வது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக்  குறைக்கும்.

தொழிலாளர்களின் பணித் தேர்ச்சியை அதிகரிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது ஆகியவையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com