புத்துயிர் பெறுமா செயற்கை வைரத் தொழில்!

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் சீன கற்கள் வந்ததையடுத்து
புத்துயிர் பெறுமா செயற்கை வைரத் தொழில்!

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் சீன கற்கள் வந்ததையடுத்து நலிவடைந்துவிட்டதால் இத்தொழில் புத்துயிர் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தொழிலையே நம்பியிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர்.
 செயற்கை வைரம்: கியூபிக் ஜிர்கோனியம் என்ற வேதிப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுவதே செயற்கை வைரம். 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்விட்சர்லாந்தில் இதன் மூலப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டு பர்மாவுக்கு (இன்றைய மியான்மர்)அனுப்பி வைக்கப்பட்டு அங்கு செயற்கை வைரங்கள் பட்டை தீட்டும் தொழில் நடந்து வந்துள்ளது. இதற்கு "ரங்கூன் டைமண்ட்' என்ற பெயரும் இருந்தது. நாம் அணிகிற எந்த தங்க நகையாக இருந்தாலும் அவற்றில் செயற்கை வைரகற்களே பதிக்கப்படுகின்றன. நகைகளில் செயற்கை வைரக் கற்கள் பதிக்கப்பட்டவுன் அவை பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், பிரகாசமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும். தேவைப்பட்ட வடிவிலும், பல வண்ணங்களிலும் கிடைப்பதால், இவற்றுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
 ஒரிஜினல் வைரக்கற்கள் ஒரு கேரட் ரூ.70 ஆயிரத்திலிருந்து விற்பனையாகிறது. செயற்கை வைரக் கற்களோ ஒரு கேரட் ரூ.20லிருந்து கிடைக்கிறது. செயற்கை வைரத்திலும் உயர்ந்தது, நடுத்தரம், குறைந்த தரமானது என 3 வகைகளும் உள்ளன.
 திருச்சிக்கு இத்தொழில் வந்தது எப்படி? பர்மாவில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் நன்றாக நடந்து வந்த நிலையில் திருச்சியிலிருந்து 10 பேர் பர்மாவுக்கு போய் அங்கேயே தங்கி இத்தொழிலை கற்றுக்கொண்டு இந்தியாவுக்கு அந்தத் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார்கள்.1930-இல் முதல்முதலாக திருச்சிக்கு வந்த இத்தொழிலானது கரூர்,திண்டுக்கல்,புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவடைந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலை செய்யத் தொடங்கினார்கள்.
 திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், காவல்காரன்பட்டி, உறையூர், திருவப்பூர், ஆர்.டி.மலை, இலுப்பூர் பகுதிகளில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இத்தொழில் பல கிராமங்களிலும் குடிசைத் தொழிலாக மிக வேகமாகப் பரவியது.
 கிராமங்களில் விவசாயப் பணிகளையும்,வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு ஏராளமான பெண்கள் பகுதிநேர செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிலை செய்து வந்தார்கள். தினசரி 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்து தினமும் ரூ.200 வரை(1930 ஆம் ஆண்டில்)சம்பாதித்து வந்தார்கள்.இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது மட்டுமின்றி பொருளாதாரத்திலும் வளரத் தொடங்கினார்கள்.
 குடிசைப்பகுதிகளில் தயாரிக்கப்பட்ட செயற்கை வைரங்களை வாங்குவதற்கென்றே திருச்சியில் டைமண்ட் பஜார் (அப்போதைய ஜாபர்ஷா தெரு) என்ற ஒரு தெருவும் உண்டானது. இப்பஜாரில் பட்டை தீட்டப்பட்ட கற்களை வாங்குவதற்காகவே 500-க்கும் மேற்பட்ட கடைகளும் இருந்தன. உற்பத்தியாளர்களும் வாரம்தோறும் சனிக்கிழமையன்று பட்டை தீட்டப்பட்ட கற்களை கொண்டு வந்து கொடுத்து அதற்குரிய தொகையையும்,மெருகு போடத் தேவையான பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.
 சீனக் கல் வருகை: கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் சீனாவில் சிறிய அளவில் இருந்து வந்த இத்தொழில், தொடர்ந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அந்நாட்டில் அசுரத்தனமாக வளர்ந்திருந்தது. இந்தியாவுக்கு சீனக்கற்கள் கொஞ்சம், கொஞ்சமாக வரத் தொடங்கின. சீன நாட்டு அரசும் அங்கு இத்தொழில் செய்வோருக்கு ஏராளமான சலுகைளை வாரி வழங்கியது. அதன் விளைவாக உற்பத்தி செலவும் குறைந்து, சீனக்கற்களின் விலையும் வெகுவாக குறைந்தது.
 சீனாவை சமாளிக்க முடியாமல் இந்தியாவில் உற்பத்தி முடங்கியது. திருச்சியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 5 லட்சம் பேர் செய்து வந்த இத்தொழிலில் இன்று 300 பேர் மட்டுமே தன்னம்பிக்கை இல்லாமல் செய்து வருகிறார்கள். இங்குள்ள மொத்த வியாபாரிகளும் சீனக்கற்களையே அதிகமாக வாங்கி விற்கத் தொடங்கினார்கள்.
 இதுகுறித்து அகில இந்திய செயற்கை வைரம் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.வேணுகோபால், செயலாளர் கே.பி.அண்ணாமலை ஆகியோர் கூறியது:
 சீனாவின் ஊடுருவலாலும், மாறி விட்ட தொழில்முறைகளாலும் வாங்கி விற்கும் வர்த்தகமே பலரது கவனத்தையும் ஈர்த்து விட்டதால் இத்தொழில் நலிவடைந்து விட்டது.
 சீனப் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டது போல சீனக் கற்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்ததுக்குப் பிறகு இத்தொழில் சீனாவின் ஊடுருவலால் பெருமளவில் நலிந்தே போய் விட்டது.சீனக்கற்கள் தரமில்லாதவை என்று நன்றாகத் தெரிந்தும் பொதுமக்களும்,வியாபாரிகளும் அதை வாங்கத்தான் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்கள்.

கல்வைத்த நகைகளை எப்படி வாங்க வேண்டும்? இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு செயற்கை வைரக்கல்லின் எடை 100 மி.கிராமாக இருந்தால் சீனக்கல்லின் எடை 300 மி.கிராம் வரை இருக்கும். சீனக்கற்களில் டபுள் வெயிட், டிரிபிள் வெயிட் என்ற அதிக எடையுள்ள கற்களும் விற்கப்படுகின்றன என்பைதயும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
 - சி.வ.சு.ஜெகஜோதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com