வர்த்தகம்

பங்குச் சந்தையில் திடீர் மந்தநிலை

DIN


சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
சீனாவின் ஏற்றுமதி பலவீனமடைந்துள்ளதாக வெளியான புள்ளிவிவரம் சர்வதேச பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள 19 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் குறித்த மதிப்பீட்டை ஐரோப்பிய மத்திய வங்கி குறைத்தது. இதுவும், பங்குச் சந்தைகளின் மந்த நிலைக்கு முக்கிய காரணமாகியது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.
இருப்பினும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீட்டு வரத்துக்கு ஆதரவாக இருந்தது. இதைத் தவிர, கச்சா எண்ணெய் விலை நிலவரமும் இந்திய பங்குச் சந்தைகளுக்கு சாதகமாகவே காணப்பட்டது. இதுபோன்றவற்றால், இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்படவிருந்த கடும் சரிவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் 1.57 சதவீதம் என்ற அளவில் மோசாமான சரிவைக் கண்டது. இதைத்தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப துறை குறியீட்டெண்களும் பின்னடைவைச் சந்தித்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை அதிகபட்சமாக 3.99 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதைத் தவிர, ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், வேதாந்தா, இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, ஏஷியன் பெயின்ட்ஸ், மாருதி சுஸுகி மற்றும் எல் அண்டு டி பங்குகளின் நிறுவன பங்குகளின் விலையும் 2.53 சதவீதம் வரை குறைந்தன.
அதேசமயம், தேவை அதிகரித்ததையடுத்து என்டிபிசி பங்குகளின் விலை 4.28 சதவீதம் உயர்ந்தது. இதைத்தவிர, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், சன்பார்மா, ஐடிசி, ஹீரோ மோட்டோகார்ப், டிசிஎஸ், யெஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ பங்குகளின் விலை 1.38 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 53 சரிந்து 36,671 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 22 புள்ளிகள் குறைந்து 11,035 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT