வர்த்தகம்

எங்கே செல்கிறது சென்செக்ஸ்?

DIN

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தள்ளாட்டத்தில் இருந்து வந்தது பங்குச் சந்தை. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் வலுவாக எதிரொலித்தது. உள்நாட்டு முதலீட்டாளர்களும், அந்நிய முதலீட்டாளர்களும் பங்குகளை மொத்தம் மொத்தமாக விற்கத் துணிந்ததால், சந்தையின் போக்கு அனைவரையும் நிலை குலையச் செய்தது. பின்னர் ஏற்பட்ட அமைதியைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகள் உற்சாகம் பெறத் தொடங்கின.
 இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாலாகோட் சம்பவத்துக்குப் பிறகு மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது. எப்படி இருந்தாலும், மீண்டும் வலுவான அரசு ஏற்படும் என்று பங்குச் சந்தையில் பேசப்பட்டு வருகிறது.
 தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் ஆகிய இரண்டும் அண்மையில் ஏற்பட்ட சரிவின் போது, முக்கிய இடத்தில் நல்ல நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது. எனவே, காளை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதையே சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் கடந்து வந்த பாதையை விளக்கும் வரைபடத்தின் மூலம் அறிய முடிகிறது.
 கடந்த வார இறுதியில் தேசிய பங்குச் சந்தைக் குறியீடு நிஃப்டி 11,000 புள்ளிகளைத் தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு முதல் முறையாக இது நிகழ்ந்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய உற்சாகம் வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படத் தொடங்கியுள்ளது. அதாவது, தேர்தலுக்கு முந்தைய "ரேலி'யில் நிஃப்டி முக்கிய இடர்பாட்டு அளவை முறியடித்துச் செல்லும் என்றே மார்க்கெட் வட்டாரம் நம்பிக்கை கொண்டுள்ளது.
 அடுத்த இலக்கு 42,000!
 கடந்த வார இறுதியில் சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி, இந்திய பங்குச் சந்தையின் போக்கு குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வரவிருக்கும் வாரங்களில் தேர்தல் தொடர்பான வலுவான கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் சந்தையின் போக்கில் மாற்றத்தைக் காண்பதற்கான அறிகுறி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
 அப்போது, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய குறியீடுகளை விட சிறு நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடும், நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடும் அதிகம் ஏற்றம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
 அந்த வகையில், இந்த வார இறுதியில் 36,671-இல் நிலை கொண்டுள்ள சென்செக்ஸ், இந்த ஆண்டு டிசம்பர்ல் 42,000 புள்ளிகளைத் தொடும் என்று மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணமாக எதிர்பார்ப்பு வருவாய் வளர்ச்சி விகிதத்தை கூறுகிறது. இந்த நிதியாண்டில் (2019-20) வருவாய் வளர்ச்சி விகிதம் 29 சதவீதம், அடுத்த நிதியாண்டில் 26 சதவீதமாக இருக்கும் என கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
 பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் கடந்த 2009-இல் தொடங்கி இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
 இதுதான் இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் காளையின் ஆதிக்கம் அதிகம் இருந்த வருடங்களாகக் கருதப்படுகிறது. கடந்த மாதம் பிப்ரவரில் 19-இல் 10,585 புள்ளிகளாகக் குறைந்த நிஃப்டி, சில நாள்களிலேயே சுமார் 400 புள்ளிகள் உயர்ந்து தற்போது 11,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.
 இதேபோல சென்செக்ஸýம் இதே கால கட்டத்தில் சுமார் 800 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டுள்ளது. மேலும், பொருளாதாரம், வாகன உற்பத்தி, ஜிஎஸ்டி வருவாய் உள்ளிட்டவை தொடர்பான தரவுகள் நேர்மறையாக வரத் தொடங்கியுள்ளன.
 இதுவும் சந்தையில் காளையின் பாய்ச்சலை உறுதி செய்கிறது என்கிறது மோர்கன் ஸ்டான்லி.
 தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், கடந்த 4 மாதங்களாக நிஃப்டி 10,600-11,000 புள்ளிகளுக்கிடையே வர்த்தகம் ஆகி வந்தது. இந்நிலையில், தற்போது 11,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் சென்செக்ஸ் அடுத்த இலக்கை குறிவைத்து நகரும் என்று சந்தை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

புள்ளிவிவரம் கூறும் உண்மை என்ன?
 தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முந்தைய 6 மாதங்களில் 6-க்கு 5 முறை பங்குச் சந்தை ஏற்றம்தான் கண்டுள்ளது என்பது வரலாறு கூறும் உண்மை. 1998-தேர்தலில் மட்டும் தேர்தலுக்கு முந்தைய 6 மாதங்களில் பங்குச் சந்தையில் 8 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
 அதன்பிறகு 1999 (31.90%), 2004 (8.30%), 2009 (29.70%), 2014 (17.20%) ஆகிய ஆண்டுகளில் காளையின் ஆதிக்கம்தான் இருந்துள்ளது. இதற்கு முன்பாக 1996-இல் தேர்தலுக்கு முந்தை 6 மாதங்களில் பங்குச் சந்தை 20.80 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.1999-இல் சந்தை அதிக அளவில் ஏற்றம் கண்டதற்கு தொழில்நுட்பப் புரட்சியும் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. 2009-இல் தேர்தலுக்கு முன்பு இரண்டே மாதங்களில் சந்தை வெகுவாக உயர்ந்ததற்கு சர்வதேச பொருளாதார நெருக்கடி பிரச்னை தீர்ந்ததே காரணம் என்று கூறப்பட்டது.
 சென்செக்ஸ் 52 வார குறைந்தபட்ச அளவாக 32,483.84 ஆக கடந்த 23-03-2018லும், அதிகபட்ச அளவாக 38,989.65 ஆக 20-01-2018லும் பதிவாகியுள்ளது. அதாவது கடந்த ஓராண்டில் சென்செக்ஸ் 4,187.59 புள்ளிகள் உயர்ந்துள்ளது. நிப்டி 52 வார அதிகபட்ச அளவு 11,760.20. குறைந்தபட்ச அளவு 9,951.90. கடந்த ஓராண்டில் நிஃப்டி 1,083.50 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
 இந்நிலையில், கடந்த சில நாள்களாக காளையின் ஆதிக்கத்தின் போது, சந்தையில் பங்கேற்காத முதலீட்டாளர்கள், பிரேக் அவுட்டுக்காக காத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களும் சந்தையில் குதிக்கும் போது, காளை மேலும் வலுப்பெறும் என்கிறது மார்க்கெட் வட்டாரம்.
 
 - மல்லி எம். சடகோபன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT