மார்ச்சில் பங்குச் சந்தை: வரலாறு கூறும் உண்மை என்ன?

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த மாதத் தொடக்கம் முதல் காளையின் ஆதிக்கத்தால் முதலீட்டாளர்களிடம் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
மார்ச்சில் பங்குச் சந்தை: வரலாறு கூறும் உண்மை என்ன?

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த மாதத் தொடக்கம் முதல் காளையின் ஆதிக்கத்தால் முதலீட்டாளர்களிடம் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி முக்கிய இடர்பாட்டு அளவான 11,000 புள்ளிகளுக்கு மேலேயும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 36,500 புள்ளிகளுக்கு மேலையும் தற்போது நிலை கொண்டுள்ளன. கடந்த 2018, செப்டம்பருக்கு பிறகு தற்போதுதான் இந்த நிலையை இரண்டு குறியீடுகளும் எட்டியுள்ளது.
 கடந்த பல மாதங்களாக இந்திய பங்குச் சந்தையிலிருந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய முதலீட்டாளர்கள், தற்போது மீண்டும் நுழைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோக, உள்நாட்டு நிதி நிறுவனங்களும் முதலீடுகளை துணிச்சலாக மேற்கொண்டு வருவதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய "ரேலி'யாக இது பார்க்கப்படுகிறது. மேலும், பொருளாதார தரவுகளும் சாதகமாக உள்ளதாகக் கூறுகின்றனர்.
 இதற்கு முக்கிய ஆதரவாக கடந்த கால வரலாற்று புள்ளிவிவரங்களை நிபுணர்கள் முன்வைக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாதங்களில் பங்குச் சந்தை 6 முறை ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த 2009, மார்ச்சில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் தலா 6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோன்று நிஃப்டி 2016-இல் அதிகபட்சமாக 10.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2011-இல் 9.3 சதவீதமும், 2010-இல் 6 சதவீதமும் உயர்ந்துள்ளது.
 மார்ச் மாதம் 2018-2019 நிதியாண்டு முடிவுக்கு வருகிறது. மேலும், இந்த ஆண்டுதான் உலகமே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதவிர புவிசார் அரசியல் சூழ்நிலைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணிகள் சந்தையின் போக்கை பாதிக்கக்கூடும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். சந்தை ஸ்திர நிலைமை அடைந்து வரும் வேளையில், உள்நாட்டு முதலீடுகள் வந்து கொண்டிருப்பது நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 31) சந்தை சாதகமாக முடிவுக்கு வரும் என பங்குத் தரகு நிறுவனங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.
 தற்போதைய நிலையில், பொதுத் தேர்தல் மற்றும் புவிசார் அரசியல் இறுக்கம் ஆகிய இரண்டு காரணிகள் மீது உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை. இவை சந்தையின் போக்கை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும். இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் கருத்துக் கணிப்பு முடிவுகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதலீட்டாளர்கள்இந்த மாத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

வரைபடம் கூறுவது என்ன?
 பாலாகோட் சம்பவத்தைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் புவிசார் அரசியல் இறுக்கம் நிலவிய போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தைக்கு ஆதரவு கிடைத்தது. இதனால், அந்த உத்வேகம் தொடர்வதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக சார்ட் (வரைபடம்) ரீதியிலான கணிப்புகள் கூறுகின்றன. இதையொட்டி, சில நாள்களாக காளையின் ஆதிக்கம் இருந்து வரும் போது முதலீட்டாளர்கள் சிலர் சந்தைக்கு வெளியே இருந்தனர். அவர்கள் பிரேக் அவுட்டுக்காக காத்திருப்பதாகவும் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com