காளையின் ஆதிக்கத்தில் பங்கு வர்த்தகம்: சென்செக்ஸ் 268 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் தொடர்ந்து ஏழாவது நாளாக ஏற்றம் காணப்பட்டது.  
காளையின் ஆதிக்கத்தில் பங்கு வர்த்தகம்: சென்செக்ஸ் 268 புள்ளிகள் அதிகரிப்பு


இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் தொடர்ந்து ஏழாவது நாளாக ஏற்றம் காணப்பட்டது.  
பணப்புழக்கம் அதிகரிப்பு, உள்நாட்டு நிலவரங்கள் சாதகமாக இருந்தது மற்றும் அந்நியச் செலாவணி வரத்து தொடர்ந்து அதிகரித்தது, ரூபாய் மதிப்பில் காணப்பட்ட நிலைத்தன்மை போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் காளையின் ஆதிக்கத்தில் இருந்தது. மேலும்,  சர்வதேச சந்தை சூழலும் இந்திய சந்தைகளுக்கு சாதகமாகவே இருந்தது. 
  இதனால், முதலீட்டாளர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் ஆர்வத்துடன் முதலீட்டை அதிகரித்தனர்.
அதிக தேவை காணப்பட்டதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளின் விலை 1.88 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, மின் துறை குறியீட்டெண் 1.32 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை 1.14 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 1.0 சதவீதமும், தொழில்நுட்பம் 1.03 சதவீதமும், தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 0.94 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், பொறியியல் சாதனங்கள், மோட்டார் வாகனம், உலோகத் துறை குறியீட்டெண்கள் சரிந்தன.
தொழில் நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஐடிசி நிறுவனப் பங்கின் விலை அதிகபட்சமாக 2.45 சதவீத ஏற்றத்தைக் கண்டது. இதையடுத்து, என்டிபிசி பங்கின் விலை 2.19 சதவீதம் உயர்ந்தது.
ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்த்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, யெஸ் வங்கி, பவர் கிரிட், ஆக்ஸிஸ் வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மா, ஏஷியன் பெயின்ட்ஸ், ஹெச்யுஎல், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ் இன்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோட்டக் வங்கி பங்குகளின் விலை 2.18 சதவீதம் வரை அதிகரித்தது.
மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டிசிஎஸ் பங்குகளின் விலையும் 1.66 சதவீதம் வரை உயர்ந்தது.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறாமல் லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதையடுத்து,  ஹீரோ மோட்டோகார்ப், எல் அண்டு டி, மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, வேதாந்தா, பஜாஜ் பைனான்ஸ் பங்குகளின் விலை 2.10 சதவீதம் வரை இழப்பை சந்தித்தது. 
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்ந்து 38,363 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த ஆறு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1,420 புள்ளிகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 11,509 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com