செய்திகள்

டி.ஆர்.பி. குறித்து ஒரு வார்த்தை பேசாமல் சுதந்தரம் அளித்த ராதிகா: ‘வாணி ராணி’க்கு வசனம் எழுதிய அனுபவம் குறித்து பா.ராகவன்

DIN

2013 ஜனவரி 21 அன்று ஆரம்பித்தது ராதிகா-வின் ‘வாணி ராணி’ நெடுந்தொடர். இதன் 1739-வது பகுதி நேற்று (டிசம்பர் 04) ஒளிபரப்பானது. இதையடுத்து 1750 எபிசோட்கள் வரை தொடர்ச்சியாக ஒளிபரப்பான ஒரே தொடர் என்கிற சாதனையை விரைவில் நிகழ்த்தவுள்ளது. ஓ.என் ரத்னத்தின் இயக்கத்தில் தொடர்ந்த இந்தத் தொடரைத் தற்போது,  சி.ஜே. பாஸ்கர் இயக்கி வருகிறார். 

விரைவில் முடிவடையவுள்ள இந்தத் தொடரில் வசனம் எழுதிய அனுபவம் குறித்து  எழுத்தாளர் பா. ராகவன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

ஒரு நெடும் பயணம்.

இன்று அதிகாலை இரண்டு மணிக்கு வாணி ராணியின் இறுதிக் காட்சிகளை எழுதி முடித்தேன். விரைவில் தொடர் நிறைவு பெறுகிறது.

சீசன் மாறுதல்கள் இல்லாமல் ஒரே கதையாக ஆறு ஆண்டுகள் (23.1.2013 முதல்), 1750 எபிசோடுகள் தொடர்ச்சியாக வெளியான ஒரே தொலைக்காட்சித் தொடர் இதுதான். இதில் ஒரு எபிசோட்கூட இன்னொருவர் இடையில் புகாமல் முழுக்க நானேதான் எழுதியிருக்கிறேன். [வாணிராணியின் திரைக்கதை ஆசிரியர் குமரேசன். அவரும் முதல் எபிசோடில் இருந்து இறுதிவரை பணியாற்றியிருக்கிறார். இவ்வகையில் 'உலகின் ஒரே' அடைமொழி அவருக்கும் உரியது.]

2011ம் ஆண்டின் இறுதியில் நான் ராடனுக்குள் நுழையக் காரணமாக இருந்தவர்கள் திருமதி சுபா வெங்கட், திரு. முரளிராமன். வாணி ராணிக்கு முந்தைய தொடரான செல்லமேவுக்காக அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் போன அதே சமயம் செல்லமேவுக்கு இயக்குநராக ஓ.என். ரத்னம் வந்தார். [அதற்குத் திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தவர்கள் குரு சம்பத்குமார் மற்றும் ஜோதி.] செல்லமே இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வாணி ராணிக்கான திரைக்கதைப் பணியைக் குமரேசன் ஆரம்பித்திருந்தார். செல்லமேவை முடித்துவிட்டு நானும் ரத்னமும் வாணி ராணிக்குள் நுழைந்தோம்.

குமரேசன், ஓ.என். ரத்னம், பா. ராகவன்

அடிப்படையில் எங்கள் மூவருக்கும் சரியான புரிதல் இருந்ததால் உரசல்கள் இல்லாமல் கொண்டு போக ஆரம்பித்தோம். அந்தக் காலக்கட்டத்தில் சின்னத்திரையில் வெளியே தெரியாத ஓர் அற்புதம் நிகழ்ந்தது. வாராவாரம் வியாழக்கிழமை டிஆர்பி வந்தால் கம்பெனிகளுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அல்சர் படுத்தும். பைல்ஸ் பயமுறுத்தும். ஒரு புள்ளி குறைந்தாலும் உடனே கதையை மாற்று என்று ஆரம்பிப்பார்கள். ஒரு மாறுதலுக்கு திருமதி ராதிகா டிஆர்பியைப் பற்றி எங்கள் மூவரிடமும் அப்போதெல்லாம் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார். [இதைச் சொன்னால் துறையில் யாரும் நம்பவே மாட்டார்கள். ஆனால் உண்மை.] டிஆர்பி ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, சரிந்தே விழுந்தாலும் சரி. பொருட்படுத்தமாட்டார். எங்களை எங்கள் இஷ்டத்துக்கு அன்று அவர் வேலை செய்ய விட்டதன் விளைவு, கௌரவமான எண்களுடன் 'நல்ல சீரியல்' என்ற பெயரையும் நான்காண்டுகளுக்கு மேலாகத் தக்க வைத்தோம்.

உலகம் சுழலும் தன்மை கொண்டதல்லவா? ரத்னம் விலகிச் சென்றார். ஆர்சி வந்தார். விசி ரவி வந்தார். மீண்டும் ரத்னம் வந்தார். அரவிந்த ராஜ் வந்தார். ராஜிவ் பிரசாத் வந்தார். எஸ்.என். சக்திவேல் வந்தார். சுகி மூர்த்தி வந்தார். அருள் ராய் வந்தார். சிஜே பாஸ்கர் வந்தார். [அவசரத்துக்கு ஓரிரு தினங்கள் செகண்ட் யூனிட் செய்ய வந்தவர்கள் தனி.] தொலைக்காட்சித் தொடர்களில் இயக்குநர்களின் மாற்றம் தவிர்க்க இயலாதது. எழுத்தாளர்களும் அப்படித்தான். ஆனால் தொடக்க ஆண்டுகளில் இந்தத் தொடருக்கு ஓ.என். ரத்னம் போட்ட மிக வலுவான அடித்தளம் அத்தனை எளிதில் அசைக்க இயலாததாக இருந்தது. அதற்குச் சமமான அளவு அழுத்தத்தைத் திரைக்கதையிலும் பாத்திரப் படைப்பிலும் குமரேசன் தந்திருந்ததால் மட்டுமே என்னாலும் சிறப்பாக எழுத முடிந்தது; இந்தத் தொடர் இத்தனை நீண்ட காலப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவு செய்ய முடிந்தது.

திருமதி ராதிகா, திருமதி சுபா வெங்கட், முரளிராமன், சுமி ரத்னம் - இவர்கள் அளித்த ஒத்துழைப்பும் ஆதரவும் மறக்க முடியாதது. சுமி, ராடனில் நான் கண்டெடுத்த ரத்னம். சீரியலுக்கு அப்பால் இலக்கியமும் உலக சினிமாவும் பேச இத்துறையில் உள்ள மிகச் சில நபர்களுள் ஒருவர்.

நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டுக் கதை பேசும் இவ்வுலகில் நாங்கள் வாணி ராணிக்காக இத்தனை வருடங்களில் அப்படியெல்லாம் செய்ததே இல்லை. ரத்னம் இருந்த காலத்தில் டீக்கடைகளிலும் கேகே நகர் சிவன் பார்க்கிலும் பிளாட்பார ஓரங்களில் நடந்துகொண்டும்தான் கதை பேசியிருக்கிறோம். விவாதங்களை குமரேசன் அலுவலகத்திலோ, என்னுடைய அலுவலகத்திலோதான் நடத்தியிருக்கிறோம். இறுதி வரையே அப்படித்தான். வேலையை வேலையென்று நினைக்காமல் ஜாலியாக செய்ததால் இதெல்லாம் முடிந்தது. மீண்டும் ஒரு காலம் அதைப் போல் வருமா என்று தெரியவில்லை.

இந்தத் தொடர் எனக்கு மூன்று விருதுகளைத் தந்தது. அண்டார்டிகா நீங்கலாக அனைத்துக் கண்டங்களிலும் ரசிகர்களையும், தொடரின் மூலம் என்னை 'எழுத்தாளனாகவும்' அறிந்துகொண்டு என் புத்தகங்களின் வாசகர்களான உத்தமர்களையும் நிறையவே தந்தது. உலகின் எந்த மூலைக்குச் சென்று இறங்கினாலும் ஹலோ சொல்ல ஒருவராவது உள்ளார் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை!

பார்த்து ரசித்தவர்கள், பார்த்து திட்டியவர்கள், பார்க்காமல் திட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி. அனைத்துக்கும் நன்றி என்று எழுதியுள்ளார்.

வாணி ராணி நெடுந்தொடரை இணையத்தில் காண:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT