யாஷிகாவை வெளியேற்ற விரும்பிய ரசிகர்கள்! ஆனால் வெளியேறியதோ நித்யா! என்ன நடக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சியில்?

61% பேர் நடிகை யாஷிகா, இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள்...
யாஷிகாவை வெளியேற்ற விரும்பிய ரசிகர்கள்! ஆனால் வெளியேறியதோ நித்யா! என்ன நடக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சியில்?

கடந்த ஜூலை 9 அன்று விஜய் டிவி ட்விட்டர் கணக்கில் ஓர் இணைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

அதில் கடந்த வார நிகழ்ச்சியில் யார் வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்பட்ட பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், யாஷிகா ஆகிய நான்கு பேரிலிருந்து யாரை வெளியேற்றவேண்டும் என்று ரசிகர்கள் தீர்ப்பளிக்க வேண்டும். 

இன்றுவரை அந்த வாக்கெடுப்புக்கு 27,500-க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. அதில் ஆச்சர்யமாக, 61% பேர் நடிகை யாஷிகா, இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள்.

ஆச்சர்யமாக என்று குறிப்பிட்டதற்குக் காரணம், இதே மக்கள் அளித்த தீர்ப்பு என்று சொல்லி நேற்றைய நிகழ்ச்சியில் நித்யாவை வெளியேற்றியுள்ளார்கள்!

இது எப்படிச் சாத்தியம்?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்களிக்கும் பெரும்பாலானவர்கள் இணையம் வழியாகவே வாக்களிக்கிறார்கள். இதனால் ட்விட்டரில் வைக்கப்பட்ட இந்தக் கேள்விக்கான விடையையே நிகழ்ச்சியில் யாரை வெளியேற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்ததாகவும் கருதலாம். ட்விட்டரில்  61% பேர் யாஷிகா வெளியேற வேண்டும் என்றும் 22% பேர் பொன்னம்பலம் வெளியேற வேண்டும் என்றும் வாக்களித்துள்ளார்கள். ஆனால் நிகழ்ச்சியில் அதிக வாக்குகள் வாங்கியவராகச் சொல்லப்பட்டவர் பொன்னம்பலம். ட்விட்டரில் 7% பேர் மட்டுமே பாலாஜி வெளியேற வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பொன்னம்பலத்துக்கு அடுத்ததாகவே பாலாஜி அதிக வாக்குகள் வாங்கியவராகச் சொல்லப்பட்டது. 

ட்விட்டர் தேர்தலில் 10% பேர் மட்டுமே நித்யா வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள். அதாவது யாஷிகா வெளியேற வேண்டும் என்று நினைத்தவர்களில் ஆறில் ஒரு பங்கு தான் நித்யா வெளியேற வேண்டும் என்று எண்ணியுள்ளார்கள். ஆனால் நிகழ்ச்சியில் நடந்ததோ அப்படியே தலைகீழ். யாஷிகாவுக்கு நித்யாவை விடவும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகச் சொல்லப்பட்டு நித்யா நிகழ்ச்சியிலிருந்து ஒரேடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனால் விஜய் டிவியின் இந்த முடிவு சமூகவலைத்தளங்களில் விமரிசனத்துக்கு ஆளாகியுள்ளது. ட்விட்டரில் பலர் யாஷிகா வெளியேற வேண்டும் என்று விரும்பிய நிலையில் யாஷிகாவுக்கு மட்டும் எப்படி நித்யாவை விடவும் அதிக வாக்குகள் கிடைத்தன என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. 

கடந்த சில வாரங்களாக பொன்னம்பலம் தொடர்பான சர்ச்சையில் அதிகம் அடிபட்டவர் யாஷிகா. இதனால் ஆரம்ப நாள்களில் யாஷிகாவுக்கு ரசிகர்கள் கூடினாலும் கடந்த சில வாரங்களாக அவருடைய நடவடிக்கைகளுக்கு விமரிசனங்களும் எழுந்துள்ளன. ட்விட்டரில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலும் அதைத்தான் வெளிப்படுகிறது. யாஷிகாவின் நடவடிக்கைகளை ரசிகர்கள் ஏற்கவில்லை என்பது ட்விட்டர் வாக்கெடுப்பில் தெரியவருகிறது.

ஆனாலும் கடைசியில் நித்யா தான் வெளியேற்றப்பட்டுள்ளார். 

ட்விட்டரில் வாக்களித்தவர்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையா என்கிற கேள்வியும்  எழுகிறது. ட்விட்டரில் ஆர்வத்துடன் வாக்களித்தவர்கள், அதற்கு மேலும் மெனக்கெட்டு யாஷிகா வெளியேற்ற வேண்டும் என்று முனைப்புடன் செயல்படவில்லை என்று தெரிகிறது. அதேபோல ட்விட்டர் வாக்கெடுப்பில் நித்யாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாக்கெடுப்பில் தங்கள் ஆதரவை நித்யாவுக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார்கள் போல! 

முதல் வாரத்தில் ரசிகர்களின் விமரிசனங்களுக்கு ஆளான நித்யா, கடந்த சில வாரங்களாக ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். முக்கியமாக பாலாஜி அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியபோது பலரும் நித்யா மீது பரிதாபம் கொண்டார்கள். எனினும் தொடர்ந்து நாமினேஷனில் இடம்பெற்றது நித்யாவுக்குப் பின்னடைவை உருவாக்கிவிட்டது. ட்விட்டரில் யாஷிகா வெளியேற வேண்டும் என்று விரும்பிய ரசிகர்களின் ஆதரவு பிக் பாஸ் நடத்திய வாக்கெடுப்பில் நித்யாவுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

எனினும் யாஷிகாவுக்குப் பதிலாக நித்யா வெளியேறியுள்ளது பிக் பாஸ் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வாக்குகள் குறித்த விவரங்களை பிக் பாஸ் நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், இந்தத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. 

நித்யாவை வெளியேற்ற மக்கள் விரும்பினார்கள் என்று கமலின் மூலம் முடிவைச் சொன்னால் மட்டும் போதாது, அதற்கான ஆதாரத்தை வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். அப்போதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவுகளில் ரசிகர்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும். இல்லாவிட்டால் எப்போதும் ஒருவித சந்தேகத்துடனே இந்நிகழ்ச்சியை அணுகவேண்டியிருக்கும். அப்படியொரு நிலைக்கு விஜய் டிவியும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் இடம்கொடுக்கக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com