6 நாள்களில் ரூ. 200 கோடி வசூல்: எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த சர்கார்!

மெர்சல், சர்கார் என விஜய் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூலை தமிழ்நாட்டில் மட்டுமே எட்டி...
6 நாள்களில் ரூ. 200 கோடி வசூல்: எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த சர்கார்!

மெர்சல் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைத் தாண்டியபோது இதேபோல இன்னொரு விஜய் படமும் ஹிட் ஆகுமா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் அடுத்தப் படத்திலேயே இதற்குப் பதில் கிடைத்துள்ளது. மெர்சலுக்கு அடுத்ததாக சர்கார் படமும் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியையும் உலகளவில் ரூ. 200 கோடியையும் அள்ளி சாதனை படைத்துள்ளது. 

தமிழ்நாட்டில் முதல் ஆறு நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது சர்கார் படம். மேலும் உலகளவிலும் 6 நாள்களில் இதன் வசூல்  ரூ. 200 கோடியைத் தொட்டுள்ளது. மெர்சல் படமும் உலகளவில் ரூ. 200 கோடியை அடைந்த நிலையில் சர்கார் படமும் எதிர்பார்த்தபடியே அந்த இலக்கை எட்டியுள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த எந்திரன், கபாலி ஆகிய படங்கள் ரூ. 200 கோடி வசூலைத் தொட்டன. தற்போது விஜய்யின் இரு படங்களுக்கும் அந்தக் கெளரவம் கிடைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படமும் ரூ. 200 கோடியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மெர்சல், சர்கார் என விஜய் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூலை தமிழ்நாட்டில் மட்டுமே எட்டி சாதனை படைத்துள்ளன. சென்னையில் சர்காருக்கு முதல் வார வசூலாக ரூ. 11 கோடி கிடைத்துள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சர்கார் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் படப் பிரச்னைகளுக்கு ஒரு முடிவு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com