செய்திகள்

முடிவுக்கு வந்த சிக்கல்: நகுல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

எழில்

நவம்பர் 16 அன்று வெளிவருவதாக இருந்த நகுல் நடித்துள்ள செய் படம் நவம்பர் 23 அன்று வெளிவரவுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் முதலில் தீபாவளியன்று வெளிவருவதாக இருந்தது. இதற்குத் தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி அளித்தது. ஆனால் திடீரென தீபாவளிப் போட்டியிலிருந்து விலகியது. அதேசமயம் தீபாவளிக்கு அடுத்ததாக நவம்பர் 16 அன்று வெளிவருவதற்கு காற்றின் மொழி, செய், உத்தரவு மகாராஜா, சித்திரம் பேசுதடி 2 என நான்கு படங்கள் வெளியாகத் தயாரிப்பாளர் சங்கம் அனுமதியளித்திருந்தது.  திடீரென நவம்பர் 16 அன்று திமிரு புடிச்சவன்  படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இதர நான்கு படங்களின் தயாரிப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

செய் படத்தின் கதாநாயகன் நகுல் ட்விட்டரில், இது மிகவும் சீரியஸான விஷயம். விதிமுறைகள் மீறப்படும் என்றால் அவை எதற்காக உள்ளன? தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு மதிக்கப்படவேண்டும் என்றார். இதற்கு ஒரு காரணம் உள்ளது. முதலில் செய் படத்துக்கு 150 திரையரங்குகள் கிடைப்பதாக இருந்தது. ஆனால் விஜய் ஆண்டனியின் அறிவிப்புக்குப் பிறகு பாதி திரையரங்குகள் செய் படத்துக்கு அளிக்கவிருந்த ஆதரவை விலக்கிக்கொண்டுவிட்டன.  இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்த அறிக்கையில், சிறிய படங்களுக்கு ஒதுக்கப்பட்ட நவம்பர் 16 தேதியில் வேறு படங்கள் வெளியானால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் ஆண்டனி படத் தயாரிப்பாளர் ஃபாத்திமா ஆண்டனியின் விளக்கம் வேறுவிதமாக இருந்தது. காற்றின் மொழி படம் நவம்பர் 8 அன்று தான் தணிக்கை செய்யப்பட்டது. ஆனால், திமிரு புடிச்சவன் படம் அக்டோபர் 28 அன்றே தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுவிட்டது. இதனால் காற்றின் மொழி படத்துக்குப் பதிலாக எங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்று கூறினார்.  

இறுதியில் சித்திரம் பேசுதடி 2 படம் நவம்பர் 16 அன்று வெளியாவதிலிருந்து பின்வாங்கியது. இதையடுத்து திமிரு புடிச்சவன் படத்தை நவம்பர் 16 அன்று வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதியளித்தது. பிரச்னையும் ஒருவழியாக ஓய்ந்தது. இதனால் செய் பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: செய் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தயாரிப்பாளர் சங்கம் அனுமதிக்காத ஒரு படம் அன்றைய தினம் வெளியாவதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது செய் படத்தின் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 2.0 படம் வெளிவருவதற்கு ஒருவாரத்துக்கு முன்பு அதாவது நவம்பர் 23 அன்று செய் படம் வெளிவரவுள்ளது. இதற்குத் தயாரிப்பாளர்கள் சங்கமும் அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT