வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

விமர்சனம்: 60 வயது மாநிறம்

By -ஜி.அசோக்| DIN | Published: 03rd September 2018 01:06 AM


மறக்க முடியாத அனுபவம்

தந்தையைத் தொலைத்துவிட்டு பரிதவிப்பாய் அலையும் மகன், அவரைத் தேடி அடைந்தாரா என்பதுதான் "60 வயது மாநிறம்' திரைப்படம்.
ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரான பிரகாஷ்ராஜுக்கு "அல்சைமர்' (ஞாபகமறதி) நோய். புற்றுநோய்க்கு காதல் மனைவியை பறிகொடுத்தவருக்கு மகன் விக்ரம் பிரபு மட்டுமே உலகம். அவரின் அன்பையும், பாச பரிதவிப்பையும் புரிந்து கொள்ளாத விக்ரம் பிரபுவுக்கு வேறு ஊரில் வேலை, அதனால் தந்தையை கேர் சென்ட்டரில் இந்துஜாவின் கண்காணிப்பில் விட்டுச் செல்கிறார். 
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவை பார்க்க வரும் விக்ரம் பிரபு, அவரை வெளியே அழைத்துச் செல்கிறார். அப்போது கவனக்குறைவால் பிரகாஷ்ராஜைத் தொலைத்துவிடுகிறார்.
இன்னொரு பக்கம் ரெளடியான சமுத்திரக்கனி ஒரு கொலை முயற்சியில் இறங்குகிறார். பார்க்கும் எல்லோரையும் மகனின் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்கிறார். இருவரும் ஒரு புள்ளியில் இணைந்து தொடரும் பயணத்தின் தாலாட்டுதான் மீதிப் படம். 
"கோதி பன்னா சாதாரண மைகட்டு' என்ற கன்னட படத்தின் தமிழாக்கம்தான் இந்தத் திரைப்படம். இருந்தாலும் அசல் திரைப்படத்தின் காட்சிகளுக்கு இணையான காட்சிகளை நமக்கான கலாசாரப் பின்னணியில் உருவாக்கி, மண் மணக்கிற மனிதர்களின் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்து, ஓர் இனிய பயண அனுபவம் ஏற்படுத்திய வகையில் இயக்குநர் ராதாமோகனுக்கு வாழ்த்துக்கள்!
பிரகாஷ்ராஜுக்கு இன்னுமொரு வாழ்நாள் சாதனைப் படம். அப்பாவித்தனமும், பரிதாபமும் மிக்க அபாரமான உழைப்பு. 60 வயதான அவரின் நடிப்புதான் மொத்த படத்தையும் உயிர்த்துடிப்புடன் தாங்கி நிற்கிறது. அன்பு, கருணை, ஈரம், கோபம் என காட்சிக்குக் காட்சி ததும்பி நிற்கிறார். நகரம் குறித்து, வசதி வாய்ப்புகள் குறித்து, எந்த பிரமிப்பும் ஏக்கமும் இல்லை. யார் குறித்தும் அச்சம் இல்லை. வாழ்க்கையைப் பற்றிய சிக்கலோ, குயுக்தியோ இல்லாமல் அன்பையும், பாசப் பரிதவிப்பையும் மட்டுமே மனதில் வைத்து நிற்கும் இடங்களில் கலங்கடிக்கிறார். 
கதையின் மனசாட்சியை தன் உடல் மொழியில் கொண்டு வந்திருக்கிறார். வெள்ளை, கறுப்பு நாய்க் கதை, தன் காதல் கதை என்று மனநிலை அலைபாயும் ஒரு நபரைக் கண்ணாடிப் பிம்பமாகப் பிரதிபலிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
விசுவாசத்தின் பக்கம் சாய்ந்து இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கைக்கு துணை போகும் கதாபாத்திரம் சமுத்திரக்கனிக்கு. வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாட இந்த வேட்கைதான் தடை என உணரும் நேரம் அசத்தலின் உச்சம். யாரையும் புறந்தள்ளி விடுகிற, கவிழ்த்து விடுகிற எத்தனிப்பு இல்லாமல்... ""அந்த கருப்பு நாய என்னால ஜெயிக்கவே முடியல...'' என்று கூறி அவர் மாறி நிற்கிற தருணம் அவ்வளவு அழகு. 
ஹீரோயிசம் விட்டு முழுநீள சென்டிமென்ட் படத்தில் விக்ரம்பிரபு. ஒரு சில காட்சிகளில் தடுமாறி சமாளிக்கிறார். இந்துஜா டாக்டர் கதாபாத்திரத்துக்கு பொருத்தம். இயல்பைத் தாண்டிய மேக்கப் உறுத்துகிறது. குமரவேல், "விஜய் டிவி புகழ்' சரத் இருவரும் பொருந்தி வருகிற காமெடி சிரிக்க வைக்கிறது. 
படத்தின் மிகப் பெரும் பலம் விஜியின் வசனங்கள். வாழ்க்கையை அதன் பக்குவத்தில் புரிந்து கொண்டு, அதையே கதையாக்கி வசனங்கள் மூலமாகக் கலையாக்குகிற வித்தைக்காரர் விஜி. 
இந்தப் படத்திலும் கதைக்கு வசனங்கள் எழுதாமல், எழுதுகிற வசனத்தில் வாழ்க்கையை சொல்லி விடுகிறார். ""கடன் வாங்கிகிட்டு காணாமல் போயிருந்தா தேடி கண்டுபிடிக்க மாட்டாங்க...'' என முதல் பாதியில் குறும்பு கொப்பளிக்கும் வசனங்கள். "" ஒரு ஆணும், பெண்ணும் காதலோடு பார்க்கும் போது, இறைவன் ஒரு தலைமுறைக்கான விதைகளை எடுத்து வைக்கிறான்...'' என ஆங்காங்கே நெகிழ வைக்கிறார்.
படத்தின் இன்னொரு நாயகன் இளையராஜாவின் இசை. ஆரம்பக் காட்சியில் சலசலத்துத் தொடங்கும் ராஜாவின் பின்னணி ஓசை, சின்னதொரு தண்ணீர் கீற்றாய், தூவானம் பொழியும் மெல்லிய மழைச் சாரலாக, குளிரின் இதமாக, பெய்யெனப் பெய்யும் மழையாகப் படம் முழுக்க நிரம்பித் ததும்புகிறது. பிரிவின் தீராத் தேடலை உணர்த்த... ராஜாவின் பின்னணி இசையும் மறைந்திருந்து மகத்துவம் புரிகிறது.
ராம் - மரியா - ஜானி மூவருக்குள் இருக்கும் வித்தியாச உறவு, பிரகாஷ் ராஜின் காதல் கதை என ஒருசில இடங்கள் நிஜமாகவே அத்தனை அழகு. ஆனால், அதுமட்டுமே போதாதே? அன்பை பேசுகிறேன் என ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கெட்டிருப்பது ஒரு கட்டத்தில் அளவை விஞ்சி விடுகிறது. திரைக்கதைக்கு செயற்கை சாயம் பூசி விடுகிறது. 
எந்தக் கட்டத்திலான மனநோயின் பாதிப்பில் பிரகாஷ்ராஜ் இருக்கிறார் என்பதை சில காட்சிகளில் அவர் காட்டும் 'தெளிவும் முதிர்ச்சியும்' சற்றே குழப்பியடிக்கிறது. குறிப்பாக, தொடர்ந்து தன் மகனின் சிறு வயது நேர ஞாபகமும், அதைத் தொடரும் பரிதவிப்பான பாசப் பரிமாற்றமும்.
குபுக்கென இதயத்தைப் பொங்க வைப்பதையும், க்ளுக்கெனச் சிரிக்க வைப்பதையும் கேமரா கோணங்களோடு கூட்டணி போட்டு வெகு சுலபமாக சாதித்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். 
ஆரம்ப காட்சி முதல் இறுதி வரை சின்ன சின்ன இடங்களிலும் கவிதை பாட வைத்து விட்டார் விவேக் ஆனந்த். மாஸ், ஹீரோயிசம், கமர்ஷியல் என வழக்கமான தன் தயாரிப்புகளிலிருந்து தனித்துவம் காட்டியிருக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. 
விதவிதமான பயணத்தில் துவங்கி பிரகாஷ்ராஜின் கெந்தலான ஓட்டம் வரையில் அதே ஏற்ற இறக்கங்களோடு கேமரா பின் தொடர்கிறது. சிற்சில இடங்களில் திரைக்கதையில் காணப்படும் தொய்வை மறந்து படத்தோடு நம்மை ஒன்ற வைப்பதில் கேமராவுக்குப் பெரும் பங்கு.
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஒரு அனுபவம்... இந்த 60 வயது மாநிறம். 

More from the section

நடிகை நிலானி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி!
கமர்ஷியல் படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிட்டால்.. நடிகை சமந்தாவின் ஆசை இதுதான்! (விடியோ)
96 படம் உருவான கதை! மனம் திறக்கிறார் இயக்குநர் பிரேம்! (விடியோ)
'சீமராஜா’ இயக்குநர் பொன்ராம் பேட்டி
சூர்யா தயாரிக்கும் உறியடி 2