வில்லனா நடிக்க லஞ்சம் தரவும் முன் வந்தாங்க! நடிகர் ஆதி கலகலப்பான பேட்டி!

நடிகர் ஆதி கோடம்பாக்கத்தின் ஸ்டைலிஷ் ஹீரோக்களில் ஒருவர். சாக்லெட் பாய் போன்ற தோற்றத்தில் மென்மையாக இருக்கும்
வில்லனா நடிக்க லஞ்சம் தரவும் முன் வந்தாங்க! நடிகர் ஆதி கலகலப்பான பேட்டி!

நடிகர் ஆதி கோடம்பாக்கத்தின் ஸ்டைலிஷ் ஹீரோக்களில் ஒருவர். சாக்லெட் பாய் போன்ற தோற்றத்தில் மென்மையாக இருக்கும் அவர், அதிரடி போலீஸாகவும் அசத்தக்கூடியவர். அவருடைய சினிமா க்ராஃபைப் பார்த்தால் தனக்கான படங்களை அவர் கவனமாகத் தேர்ந்தெடுத்திருப்பது தெரியும். அதற்கு அவரது முதல் இரண்டு படமே சிறந்த உதாரணங்கள். மிருகம் படம் ஒரு கிராமத்து த்ரில்லர், அதே சமயம் ஈரம் படம் சிட்டியில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டது. இந்தப் படங்களைத்  தொடர்ந்து அரவான், யாகாவராயினும் நா காக்க உள்ளிட்ட அவரது மற்ற படங்களும் வித்யாசமான பேக் ட்ராப்பில் உருவானவை. இப்படி கதை நாயகனாக அசத்திக் கொண்டிருந்த ஆதி, திடீரென்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சரைனோடு படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின் டோலிவுட்டில் கொஞ்சம் பிஸியாகவிட, தமிழில் அதிகம் காணப்படவில்லை. கடந்த ஆண்டு மீண்டும் மரகத நாணயம் மூலம் தமிழுக்கு வந்தார். 

அண்மையில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ள யூடர்ன் படத்தில் ஆதியின் அட்டகாசமான நடிப்பு பரவலாக கவனப்பட்டுள்ளது. இப்படத்தில் மீண்டும் அவர் விரைப்பாக காக்கி யூனியார்ம் அணிந்து போலீஸாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான  'ஈரம்’ படத்தை இது நினைவு படுத்துகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் நிருபர் நவீன் தர்ஷனுடன் ஆதியின் நேர்காணலின் சில துளிகள்:

யூ டர்ன் படத்தில் நீங்கள் பங்கேற்றது எப்படி?

இயக்குநர் பவன் தன் முதல் படமான லூசியாவை மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வெறும் 70 லட்சத்தில் ஒரு முழு நீள படத்தை எடுத்து, அதில் ஜெயிப்பது சாதாரணமான ஒரு விஷயம் இல்லை. இப்படிப்பட்ட திறமையான இயக்குநருடன் இணைந்து பணி புரிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது அதை எப்படி தவற விட முடியும். அவரோட ரெண்டு படமும் சூப்பர் ஹிட்டான நிலையில், இந்த படத்துல என்னோட ரோலில் எதாவது மாத்தணுமா, எனக்கு அறிமுகக் காட்சி வேணுமான்னு கேட்கற அளவுக்கு எனக்கு முக்கியத்துவம் தந்தார் பவன். அந்தக் காரெக்டர் எப்படி இருக்கணுமோ, நீங்க எப்படி அதை உருவாக்கியிருக்கீங்களோ அதுக்குள்ள நான் வந்துடுவேன்னு சொன்னேன். அந்த கதாபாத்திரத்தை அவர் ரொம்ப அழகா மெருகேத்தியிருக்கார். 

ஈரம் படத்துல பார்த்த போலீஸை விட யூ டர்ன் பிரதீப் நாயக் எப்படி வித்யாசப்படறார்?

இதுல நான் ரொம்ப இயல்பா நடிச்சிருக்கேன். இந்தப் படத்திலேயும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியா வருவேன். படத்தோட தன்மைக்கு ஏத்தபடிதான் என்னோட நடிப்பும் நீரோட்டமா இருக்கும். என்னோட வசனங்களை முன்கூட்டியே கேட்டு வாங்கிக்கலை. ஷூட்டிங் வரும் போதுதான் அன்னிக்கு நான் பேசப் போகிற டயலாக் எனக்கு தெரியும். தமிழ், தெலுங்கு ரெண்டு மொழியும் நல்லா தெரியும்ங்கறதால ஈஸியா புரிஞ்சிக்கிட்டு டயலாக் டெலிவரி பண்ண முடிஞ்சுது.

மரகத நாணயம் வெற்றிப் படம் தானே, ஆனா அதுக்கடுத்து ரங்கஸ்தலம், நீவெவரோன்னு மறுபடியும் டோலிவுட் பக்கம் போயிட்டீங்க?

நான் எதையும் ப்ளான் பண்ணலை. ஒரே மொழியில கவனம் செலுத்து, இப்படி அங்க பாதி இங்க மீதின்னு நடிக்காதேன்னு என் ப்ரெண்ட்ஸ் கூட சொல்றாங்க. ஆனா அது அப்படித்தான் அமையுது. சரையனொடு படத்தில வில்லனா நடிச்சதிலேர்ந்து தெலுங்கு ரசிகர்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருச்சு. அந்தப் படத்துக்கு அப்பறம் நிறைய வில்லன் ரோல் தமிழ்லயும் தெலுங்குலயும் குவிஞ்சுது. முதல்ல என்கிட்ட ரிக்வெஸ் பண்ணி கேட்டாங்க. ஒரு கட்டத்துல லஞ்சம் கொடுத்தாவது நடிக்க வைக்கலாம்ங்கற அளவுக்குப் போயிட்டாங்க. ஆனால் நான் பிடிவாதமாக மறுத்துட்டேன். 

ரங்கஸ்தலதுல ராம் சரண், யூ டர்ன்ல சமந்தா இப்படி உங்க கூட நடிக்கறவங்களுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் நடிக்க ஒப்புக்கறீங்க, எப்படி?

நான் எப்பவுமே அப்படித்தான். முதல் படம் ஈரத்துல நந்தாவுக்கு முக்கியமான வேடம். கதாநாயகிக்கும் வலுவான ரோல். ஆனாலும் அந்தப் படத்துல நான் கவனப்பட்டிருந்தேன். ரங்கஸ்தலம், சரையனோடு படங்கள்ல நான் ஹீரோ இல்லை. ஆனால் அந்தப் படங்கள் டோலிவுட்ல நல்ல பேரை எனக்கு வாங்கித் தந்துச்சு. என்னோட கதாபாத்திரம் தனித்துவமா இல்லாட்டா அந்தப் படத்துல நடிக்கறதில்லைங்கறதுல நான் உறுதியா இருக்கேன்.

அரவான், மிருகம் தவிர்த்து உங்க எல்லா படத்திலயும் கெட்டப்பில் அதிக மாற்றம் இருந்ததில்லையே?

ஆமா. இது உண்மைதான். நானே கூட இதுபத்தி யோசிச்சிருக்கேன். ரசிகர்கள் என்னோட அடுத்த படமான  RX 100-ல என்னைப் பாத்து ஷாக் ஆனாலும் ஆவாங்க. அதுல நீங்க கேட்ட மாதிரி சில கெட்டப் மாற்றங்கள் இருக்கு.

உங்களோட தோற்றம் சில ரோல்களை தவிர்த்திருக்குன்னு நினைச்சிருக்கீங்களா?

இல்லவே இல்லை. இயக்குநர் ஒரு கதாபாத்திரத்தை அருமையா உருவாக்கி அதுக்கு ஷூட்டிங்ல உயிர் கொடுக்கும் போது, அதுல ஆதி பிச்சைக்காரனாவோ இல்லை கார் ட்ரைவராகவோ இல்லை விஞ்ஞானியாகவோ நடிக்க வைக்கணும்னு நினைச்சு எழுதியிருந்தா நிச்சயம் அதுக்கு நான் பொருந்துவேன். இப்ப இருக்கற மேக்கப் தொழில்நுட்பம் எதையும் சாத்தியப்படுத்திடும். என்னை 80 வயசுக் கிழவனா மாத்தணும்னாலும் அது சுலபம்தான். ஒரு ரோலில் நடிக்கும் போது முதல்ல நான் கன்வின்ஸ் ஆகணும் அப்பத்தான் என்னால் ரசிகர்களை திருப்திபடுத்த முடியும்.

இப்பத்தான் யூடர்ன் ரீமேக் படத்துல நடிச்சீங்க.. உங்க அடுத்த படமான  RX 100 படமும் ரீமேக்கா?

என்னைப் பொருத்தவரையில் ரீமேக் படங்களை உருவாக்கறது ஆரோக்கியமான விஷயம். மத்த மொழிப் படங்களை ஆர்வமா பாக்கறவங்க ஒரு பத்து சதவிகதம் தான் இருப்பாங்க. நல்ல படங்களை எல்லா ரசிகர்களுக்கும் தர்றதுதான் பொறுப்பான செயல்பாடு. அதனால ரீமேக் படங்கள்ல நடிக்கறது எனக்கு பிடிக்கும். ஆனா ஒரு ரீமேக் படம் எடுக்கறாங்கன்னு அறிவிப்பு வந்தா, ஏனோ அதை யாரும் பெரிசா கண்டுக்கறதில்லை. சில சமயம் ஒரிஜினல் படம் எடுக்கப்பட்டதை விட ரீமேக் படங்கள்ல அதிக சிரமங்கள் இருந்திருக்கு. அதையும் மீறி தான் இங்க அது மாதிரி நல்ல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரசிகர்கள் கிட்ட வந்து சேர்ந்திருக்கு. இன்னும் இது போன்ற முயற்சிகளுக்கு நல்லாதரவு கிடைச்சு பெருவாரியா அவை வெற்றி பெறணும்ங்கறது என்னோட ஆசை.

உங்க குடும்பமே திரை வல்லுநர்கள் நிறைந்த குடும்பம். எதிர்காலத்துல படம் இயக்கும் எண்ணம் இருக்கா?

படம் டைரக்ட் பண்றது சவாலான விஷயம். அதுக்கு திரைக்கதை மற்றும் மேக்கிங் தொழில்நுட்பம் தெரிஞ்சிருக்கணும். எனக்கு அது சரியா வருமான்னு தெரியலை. ஒரு நடிகனாகவே இன்னும் நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு. அதனால எனக்கு இது போதும், இதையே தொடர்ந்து நல்லவிதமா செய்ய ஆசைப்படறேன்.

அடுத்து தமிழ் படத்துல எப்ப நடிக்கப் போறீங்க?

தமிழ் படங்கள் நடிக்கறது எனக்கு ரொம்ப ஆத்மார்த்தமானது. நிறைய ரசிகர்கள் தமிழ்லதான் இருக்காங்க. மிருகம் படத்துல ஒரு நடிகனா என்னை அங்கீகரிச்சாங்க. எனக்கே கூட சில சமயம் என்னோட நடிப்பு எடுபடுமான்னு தோணறப்போ, தமிழ் ரசிகர்கள் தான் என்னுள்ள இருக்கற நடிகனை வெளிக் கொண்டு வர வைச்சாங்க. தொடர்ந்து நான்கைந்து தமிழ் படங்கள்ல நடிக்கணும்னு ஆசைதான். அடுத்து ஒரு கிராமப்புற சப்ஜெக்ட் பண்ண இருக்கேன். அதுக்கப்பறம் வட சென்னையை மையமா வைச்சு ஒரு படத்துல நடிக்கறேன். இந்தப் படங்கள் இன்னும் உறுதியாகலை. ஆனா நிச்சயம் கூடிய விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்புக்கள் வெளிவரும்னு நம்பறேன்.

- நவீன் தர்ஷன் (தமிழில் உமா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com